குருவைத் தேடி – 27

ஞானஸ்வரூபியான குருநாதர் அந்த தபஸ்வியின்; மனதிலுள்ளதை அறிந்தார். உடனே அரசனை அழைத்துக் கும்சி என்ற கிராமத்தில் வசிக்கும் தபஸ்வியை தான் சந்திக்க விரும்புவதாகக் கூறி உரிய ஏற்பாடுகளைச் செய்யும்படி உத்திரவிட்டார். மன்னனும் குருவின் ஆணையை ஏற்று, நான்கு விதப் படைகளுடனும், வாத்தியங்களுடனும் மிக ஆடம்பரமான அலங்காரங்களுடனும் குருவைப் பல்லக்கில் அமர்த்தி ஊர்வலமாகப் புறப்பட்டான்.

அச்சமயத்தில் திரிவிக்கிரமபாரதி நரசிம்ம மூர்த்தியை மானச பூஜை செய்து கொண்டிருந்தார். ஆனால் எவ்வளவு முயன்றும் உபாசன மூர்த்தி அவர் உள்ளத்தில் தோன்றவில்லை. எவ்வளவு சிரமப்பட்டும் மனம் ஒன்றுபடாததைக் கண்டு, இதற்கு என்ன காரணம்? எனது தபோ பலம் குறைந்துவிட்டதா? ஏன் நரஹரி என்னை ஒதுக்குகின்றார்? என்றெல்லாம் அவர் சிந்தித்துக்கொண்டிருக்கும் போது, குருவின் ஊர்வலம் தூரத்தில் வருவதைக் கண்டார்.

என்ன என்று அவர் பார்த்தபோது பல்லக்கில் அவரது மானச மூர்த்தியின் உருவம் அமர்ந்திருப்பதைக் கண்டார். நடந்து வருபவர்களெல்லாம் அவர் கண்களுக்கு சந்நியாசிகளாகக் காட்சியளித்தனர். இக்காட்சியைக் கண்டு வியந்தார். தன்னையும் அறியாமல் வணங்கினார். உடனே பல்லக்கில் இருப்பவரும், அவருடன் ஊர்வலமாய் வந்தவர்களும் எல்லோருமே ஒரே தோற்றமாக குருநாதராகவே காட்சியளித்தனர். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

வேகமாக வந்து குருதேவரின் சரணங்களில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். யார், எவர் என்று ஒன்றுமே புரியாமல் திகைத்து, ஸ்வாமி! பிரம்மா, விஷ்ணு, சிவனாகிய திரிமூர்த்தி தாங்கள் என்பதை நான் தெரிந்துகொள்ளவில்லை. அவித்யையினால் சொரூபஞானத்தை இழந்தேன். புறக் கண்ணால் உம்மை எப்படி அறிய முடியும்? நீரே எல்லா இடங்களிலும் வியாபித்து இருப்பதை நிரூபித்து விட்டீர்கள். இதில் யார் உண்மையான குரு நரஸிம்ம ஸரஸ்வதி என்று கண்டு பிடித்து வணங்கி, மன்னிக்கும்படி கேட்பது என்று எனக்குத் தெரிவில்லை. கருணைகூர்ந்து தாங்களே தங்களை எனக்குக் காண்பிக்க வேண்டும், என் பிழை பொறுத்துத் தாங்கள் எனக்குக் காட்சியளிக்க வேண்டும். உங்களின் மேன்மை தெரியாமல் நான் பழித்துப் பேசி விட்டேன். மன்னித்தருள வேண்டும்! என்றெல்லாம் பாரதி துதித்தார்.

குருநாதர் மனம் கனிந்து தனது உண்மையான வடிவத்தில் தோன்றினார். மற்ற சைன்யமெல்லாம் தத்தம் வடிவங்களில் தென்பட்டனர். குரு திரிவிக்கிரம பாரதியை நோக்கி, என்னை டாம்பீக சந்நியாசி என்று தினமும் நிந்திக்கிறாயே, உன்னைப் பரீட்சிக்கவே இங்கு வந்தோம். நீ என்னை மனதில் நினைத்து பூஜை செய்துகொண்டு, நிந்தனையும் செய்யலாமா? என்று வினாவினார்.

திரிவிக்கிரமபாரதி மிகவும் துக்கப்பட்டு குருவை வணங்கி, ‘சத்குருவே! நான் மாயை மோகமென்ற இருட்டில் கிடந்தேன். கண்களிருந்தும் ஆந்தை போலானேன். தங்கள் தரிசனத்தால் இருள் நீங்கி ஜோதியைக் கண்டேன். குழந்தையை மன்னிக்க வேண்டும். அவித்யை என்னும் கடலில் மூழ்கும்போது ஞானமென்ற கட்டையின்மீது ஏறி, கருணை என்ற காற்றினால் தள்ளப்பட்டு உம்முடைய கால்களில் விழுந்தேன். முன்பு மகா பாரதத்தில் அர்ச்சுனனுக்குக் கண்ணபெருமான் விஸ்வரூப தரிசனம் அளித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று நீங்கள் அப்படிப்பட்ட ஒரு தரிசனத்தை எனக்கு அருளினீர்கள்.

நான் எவ்வித முயற்சியையும் செய்யாமலிருக்கும்போதே, தாங்கள் அனைத்துமாகக் காட்சியளித்து என்னைத் தெளிவித்தீர்கள். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? விதுரன்; வீட்டிற்குக் கோபாலன் வந்தது போல, கங்கை நதி பூலோகத்தை அடைந்தது போலக் கிருபாமூர்த்தியான தாங்கள் எனக்குத் தரிசனமளித்தீர்கள்! என்று பலவிதமாகத் துதித்தார்.

குரு அவரை ஆசுவாசப்படுத்தி அவரது இல்லத்திற்கு வருகை புரிந்து அவரது பூஜைகளை ஏற்றுக்கொண்டு பலவிதமான ஆசிகளை வழங்கினார். பிறகு அவரை அங்கேயே இருக்கும்படி சொல்லித், தனது பரிவாரங்களுடன் குரு காணகாபுரத்திற்குப் புறப்பட்டார். இவ்வாறு மகிமை அறியாமல் அவரைப் பழித்துப் பேசிய தபஸ்வியான திரிவிக்கிரம பாரதி அவரது பக்தரானார்.

கர்வம் பிடித்த பண்டிதர்களின் கதி

குருவைப் பற்றிய வரலாற்றினை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்த நாமதாரகன் மேலும் அவரது லீலைகளை விவரிக்கும்படி வேண்டினான். சித்தரும் சொல்லத் தொடங்கினார்.

அந்தக் காலத்தில் விதுரா என்ற நகரத்தில் ஒரு குரூரமான, கெட்ட புத்திகொண்ட மிலேச்சன் ( இந்து அல்லாத வேற்று நாட்டினன் – முகமதியன்) அரசு புரிந்து வந்தான். அவன் எப்போதும் பிராணிகளை வதை செய்து, மது, மாமிசம் அருந்தி முறையற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தான். ஊரிலுள்ள பிராமணர்களை அழைத்து வரச் செய்து, தன் முன்னால் வேதங்களைக் கூறி அவற்றின் அர்த்தங்களைச் சொல்லும்படி வற்புறுத்தினான். அவனது தண்டனைக்கு பயந்து ராஜசபையில் வேதம் ஓதிய பிராமணர்களுக்குத் திரவியங்களைக் கொடுத்தான்.

மிலேச்சன் எதிரில் வேதம் சொல்வது சாஸ்திரப்படி பிழையானது என்பதால், ஞானிகளும், பண்டிதர்களும் தமக்கு வேதம் தெரியாது என்றும், சாஸ்திர ஞானம் எங்களுக்கு இல்லை என்றும் சொல்லிவிட்டனர். ஆனால் பணத்தில் ஆசையுள்ள சில மூடர்கள் அரசன் முன்பு வேதத்தைச் சொல்லி அர்த்தத்தையும் தெரிவித்தனர்.

வேதத்தில் சொல்லப்பட்டுள்ள சில சடங்குகiளைப் பற்றி அறிந்து மிலேச்சன் பிராமணர்களை நிந்தித்தான். கண்டபடி பேசினான். இருந்தாலும் தமது குலத்தொழிலையும், தமது மேன்மைகளையும் மறந்து, பணத்தின் மீது கொண்ட ஆசையால் பல ஊர்களிலிருந்தும் வேதாப்பியாசம் செய்திருந்த பிராமணர்கள் அரச சபைக்கு வந்து, அவன் முன்பு வேதத்தைச் சொல்லி, பரிசுகளைப் பெற்றுச் சென்றனர். இப்படிப்பட்டவர்கள் இறுதியில் யமபுரத்திற்குத் தான் செல்ல நேரிடும். மேலும் இவர்கள் கலிபுருடனுக்கு நெருங்கிய நண்பர்களாகவும் ஆனார்கள்.

இந்நிலையில் பேராசையும், வித்யா கர்வமும் கொண்ட இரண்டு மூட பிராமணர்கள், அந்த மிலேச்ச அரசனிடம் வந்து வேதம் சொல்லி தங்களைப் போல் வேத விற்பன்னர்கள் அவனது நாட்டில் வேறு யாருமே இருக்க முடியாது என்றும், இறுமாப்புடன் தங்களைத் தாங்களே புகழ்ந்து பேசினர். அரசனிடம், அவனது ஊரில் எவராவது பண்டிதர் இருந்தால் அவர்களுடன் வாதம் செய்யத் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள். உடனே அந்த அரசன் தன் சபையினரை அழைத்து அந்த இரண்டு பிராமணர்களுடன் வாதம் செய்து ஜெயித்தால் ஏராளமான செல்வம் தருவதாகச் சொன்னான்.

ஊரிலுள்ள ஞானிகளும், பண்டிதர்களும், அவர்களுடன் வாதம் புரியும் தகுதி தங்களுக்கு இல்லை என்று தட்டிக் கழித்தனர். இதைக்கேட்ட அரசன் அவர்கள் இருவருக்கும் ஏராளமான சன்மானங்களை அளித்து யானை மீது அமர வைத்து ஊர்வலம் நடத்திப் பாராட்டினான்.

அவர்களைத் தன்னுடனேயே வைத்துக்கொண்டு ஆதரித்தான். மேலும் அவன் தன்னை யவனர்களுக்கு அரசன் என்றும் அந்த இரண்டு மூடர்களை பிராமணர்களுக்கு அரசர்களென்றும் சொல்ல ஆரம்பித்தான். அவர்களும் அரசனின் ஆதரவில் இருந்துகொண்டு மற்ற பிராமணர்களை அவமரியாதை செய்து வாழ்ந்தனர்.

ஒருநாள் அவர்கள் அரசரிடம், ‘அரசே! நாம் இந்த ஓர் இடத்திலேயே இருந்தால் நமது யோக்யதை எப்படி மற்றவர்களுக்குத் தெரியும்? நாங்கள் இவ்வளவு வேத சாஸ்திரங்களைப் படித்ததும் வீணாகப் போய்விடும். ஆகையால் நாங்கள் ஊர் ஊராகப் போய் வாதம் செய்து ஜெயித்து வர தாங்கள் அனுமதி தரவேண்டும்! என்று கூறினர். அதை அந்த அரசன் ஏற்றுக்கொண்டு தகுந்த ஏற்பாடுகளுடன் அவர்களை அனுப்பி வைத்தான்.

அந்த அகம்பாவம் பிடித்த பிராமணர்கள் இருவரும் அறியாமையால் பலப்பல ஊர்களுக்கும் சென்று அங்கிருந்தவர்களை வம்புக்கு இழுத்து வாதம் செய்து வென்றனர். அப்படி வென்றதற்கு அடையாளமாக அவர்களிடமிருந்து நாங்கள் இவர்களிடம் தோற்றுவிட்டோம் என்று ஜய பத்திரங்களை எழுதி வாங்கிக் கொண்டனர். இப்படி இவர்கள் ஊர் ஊராகச் சென்று வேதத்தை மாதாவாக நினைத்து மதித்துப் போற்றாமல், வேதம் படித்தவர்களை வாதத்திற்கு அழைத்து வேதனைக்கு உள்ளாக்கினர்.

இப்படி இவர்கள் தெற்கில் பீமாநதி திரத்திலுள்ள கும்சி என்ற கிராமத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னரான திரிவிக்கிரமபாரதி இருப்பதை அறிந்து அவருடன் வாதம் செய்யச் சென்றனர்.

அவரிடம் சென்ற அவர்கள், ‘முனிவரே! உமக்கு மூன்று வேதங்களும் வருவதாகக் கேள்விப்பட்டோம். உம்முடன் சர்ச்சை செய்ய ஆவலாயிருக்கிறோம். அதற்கு மறுத்தால் எம்மிடம் தோல்வி அடைந்ததாக எழுதிக் கொடுத்து விட வேண்டும்” என்றனர்.

அதைக்கேட்டு முனிவர், எனக்கு ஒரு வேதமும் தெரியாது. சாஸ்திரங்களையும் அறியேன். வேத சாஸ்திரங்களை நன்றாய்ப் படித்திருந்தால் உம்மைப் போல ராஜாக்களாலும் ஜனங்களாலும் பூஜிக்கப்பட்டிருப்பேன். ஒன்றும் தெரியாததால் காட்டில் ஒரு சந்நியாசியாக இருந்து பிட்சை வாங்கிப் பிழைக்கிறேன். வெற்றி, தோல்வி இரண்டும் எனக்குச் சமம். உங்களைப் போன்ற மேலான பிராமணர்களுடன் எனக்கு என்ன வாதம் வேண்டிக்கிடக்கிறது” என்று சொன்னார்.

ஆனால் அவர்களோ அவரை விடாமல், வாதம் செய்ய வேண்டும் அல்லது ஜய பத்திரம் எழுதித் தரவேண்டும் என்று வற்புறுத்தினர். மேலும் அவர்கள் பெற்ற வெற்றிப் பத்திரங்களைக் காட்டி பெருமையடித்தனர். இதைக்கண்டு திரிவிக்கிரமபாரதி அவர்கள் மிகவும் கர்வமடைந்திருப்பதையும், அனேக அறிஞர்களை அவமரியாதை செய்து வருவதையும் புரிந்துகொண்டு அவர்களைத் தண்டிக்க எண்ணினார்.

அதன்படி, அந்தத் திமிர்பிடித்த பண்டிதர்களைப் பார்த்து, ‘உங்களுக்கு வெற்றிப் பத்திரம் வேண்டுமென்றால், என் குருநாதர் இருக்கின்ற காணகாபுரத்திற்கு வாருங்கள். அவர் முன்னிலையில் கொடுக்கின்றேன். அல்லது உங்களது வாதம் செய்ய வேண்டுமென்ற ஆசையைப் பூர்த்திப் செய்கிறேன்! என்று சொல்ல, அதற்கு இருவரும் இசைந்தனர். தவமுனிவரான திரிவிக்கிரமபாரதி நடந்து வர, அந்த மூடர்கள் பல்லக்கில் ஏறி அமர்ந்துகொண்டு எல்லோருமாகக் காணகாபுரத்தை வந்து அடைந்தனர்.

தன் குருவின் இருப்பிடத்தை அடைந்ததும், முனிவர் குரு நரஸிம்ம ஸரஸ்வதியை நோக்கி, ‘ஜய ஜயாதி ஜகத்குருவே! தங்களை தரிசிப்பதால் எல்லா தாபங்களும் அகல்கின்றன. அனாதையான என்னைக் காத்தருள வேண்டும்!” என்று மனம் உருகி வணங்கினார். பிறகு அந்த மூட பிராமணர்களின் பிடிவாதத்தைப் பற்றி விபரமாக குருவிடம் எடுத்துரைத்தார்.

குருதேவர் அவர்களைக் கூப்பிட்டு, ‘நீங்கள் ஏன் இப்படி அலைந்து திரிகிறீர்கள்? விருப்பமில்லாதவர்களை வாதத்திற்கு அழைத்து ஏன் வற்புறுத்துகிறீர்கள்? சந்நியாசிகளுடன் வாதம் செய்து ஜெயிப்பதால் உமக்கு என்ன பயன்? நாங்களோ காட்டில் பிச்சையெடுத்துப் பிழைப்பவர்கள். நம்முடைய ஜய பத்திரம் எதற்கு உதவும்?” என்று வினவினார்.

அவர்கள், ‘நாங்கள் உலகைச் சுற்றி வருகின்றோம். அதி பண்டிதர்களாகிய எங்களுடன் வாதம் செய்து இதுவரை எவரும் ஜெயிக்கவில்லை. வேத பண்டிதர்களே தோற்று விடுகின்றபோது, சந்நியாசிகளுக்கு என்ன வேதம் தெரியும்? அதனால் நீங்களிருவரும் தோல்வி அடைந்ததாக எழுதிக் கொடுத்து விடுங்கள்!” என்றனர்.

week27உடனே குரு அவர்களைப் பார்த்து, ‘உங்களுக்கு இவ்வளவு கர்வம் கூடாது. கர்வத்தினால் தான் தேவர்களும், அசுரர்களும் கூட நாசமடைய நேர்ந்தது. தன் கர்வத்தினால் பலிச் சக்கரவர்த்தி அனைத்தையும் இழந்து பாதாளத்தில் அழுந்த நேரிட்டது. பாணாசுரன், லங்கேஸ்வரன், கௌரவர்கள் போன்றோர் அடைந்த கதியை நினைவில் வைத்திருங்கள் அழிவையே தரக்கூடிய கர்வத்தையும், அகம்பாவத்தையும் உடனடியாக விட்டொழித்து விடுங்கள்! பிரம்மாவிற்குக் கூட வேதத்தின் முடிவு புலப்படாமலிருக்கும் போது, நீங்கள் எப்படி வேதங்களை அறிந்து விட்டதாகச் சொல்ல முடியும்? முழு வேதங்கள் இன்னவை என்று பிரம்மாவிற்கே தெரியாது. மேலும் ஸ்ரீமந் நாராயணனே வியாச முனிவராக அவதரித்து, வேதங்களை கொஞ்சம் சொல்லி வெளிப்படுத்தினார். அந்த வியாசருக்கு நான்கு சீடர்கள் இருந்தனர். அவர்களிடம் சொல்வதற்கு அரிதான வேதங்களைப் பற்றி வியாச முனிவர் விவரித்த வரலாறே நமக்குப் பிரமிப்பைத் தரக்கூடியது! அதை விவரிக்கின்றேன், கேளுங்கள்!” என்று சொல்லத் தொடங்கினார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s