குருவைத் தேடி – 26

மலட்டு எருமை பால் கறந்த கதை

சித்தர் குரு தேவரின் கருணை உள்ளத்தையும், அவரது மகிமையையும் விளக்கும் மற்றொரு சம்பவத்தை, நாமதாரகனுக்குக் கூறினார். குரு தேவர் அமராபுரத்தை விட்டுக் காணகாபுரம் வந்து அக்கிராமத்திற்கு அருகில் பீமா நதி உத்திரவாஹினியாக ஓடுமிடத்திலும் அமரஜா சங்கமத்திலும் மறைந்திருந்து வசிக்கலானார்.

அந்த சங்கமமானது பிரயாகைக்கு சமமான இடம். அவர் அங்கே வசித்ததால் தீர்த்த மகிமை ஏற்பட்டது. எவர் பாத கமலங்களில் எல்லா தீர்த்தங்களும் உள்ளன என்று வேத சாஸ்திரம் சொல்கின்றதோ, அப்படிப்பட்ட குருநாதர் பக்தர்களை ரட்சிக்கும் பொருட்டு, ஓரோர் புண்ணியத் தலமாகப் போய்க் கொண்டிருக்கிறார். செல்லுமிடங்களில் எல்லாம் அவர் மறைந்து வாழ்ந்தாலும், சூரியனை யாராலும் மறைக்க முடியாது என்பதைப் போல், அவரது பெருமையை ஒளிக்க முடியாமல் தானாகவே பத்து திசைகளிலும் பரவலாயிற்று.

அவர் காட்டில் வசித்துக்கொண்டு காணகாபுரத்திற்கு மதிய வேளையில் பிட்சைக்குப் போவது வழக்கம். அவ்வூரிலே வேத அத்யயனம் செய்யும் நுhறு பிராமணக் குடும்பங்கள் இருந்தன. அவர்களில் ஒரு சீலப் பிராமணனும் அவனுக்கேற்ற மனைவியும் மிக ஏழ்மையான நிலையில் வசித்து வந்தனர். மிகவும் தரித்திரர்களான அவர்களிடம் வயதான மலட்டு எருமை ஒன்று இருந்தது. அந்த எருமையை ஆற்றங்கரையிலுள்ள உப்பு மண்ணைக்கொண்டு வர தினமும் வாடகைக்கு விட்டு அதனால் கிடைக்கும் திரவியத்தால் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் ஒருநாள் குருநாதர் மிகுந்த விருப்பத்துடன் அவர்களது வீட்டிற்குப் பிட்சை ஏற்கச் சென்றார். அதைக்கண்டு அங்குள்ள சில பிராமணர்கள் நமது வீட்டில் விசேடமான ஏற்பாடுகளுடன் பிட்சை அளிக்க நாங்கள் தயாராய் இருக்கையில், இந்த சந்நியாசி அந்தத் தரித்திர வீட்டிற்கு ஏன் பிட்சைக்கு செல்கிறார்? என்று ஏளனமாப் பேசிச் சிரித்தனர்.

ஆனால் பக்தவத்சலனான குரு நாதர், பரமாத்மாவான கண்ணபிரான் ஆடம்பரமான துரியோதனனின் அரண்மனையை விட்டு பக்தரான விதுரரின் குடிசைக்குள் சென்று தங்கியதைப்போல, சாத்வீகப் புத்தியுடைய, குருவின் மீது மாறாத பக்தி கொண்ட சீலர்களின் வீட்டிற்குத் தான் செல்வார். அப்படிப்பட்டவர்களுக்குத் தான் இகபர சுகத்தை அருளுவார். பரம புருடரான சற்குருவிற்கு, ஏழைக்கு ராச்சியமளிக்கும் சக்தி உண்டு. கோபம் வந்தாலோ எல்லாவற்றையும் பஸ்மம் செய்துவிடுவார். பிரம்மன் தன் கையினால் எழுதிய கர்மவினைப் பயனை ஸ்ரீகுரு தனது இடது காலினால் தேய்த்து, அதை நல்ல எழுத்தாக மாற்றிவிடுவார். இந்தக் காரியங்கள் குருவைத் தவிர யாராலும் முடியாது. அவர் ஒருவரால் தான் ஒருவனது தலைவிதியையும் மாற்ற முடியும். ஸ்ரீ சற்குருவின் மகிமையை இதற்குமேல் என்னவென்று வர்ணிப்பது?

அந்த பிராமணனின் புண்ணிய வசத்தால் மிகவும் கோடைக்காலமான வைகாசி மாத மதிய வேளையில் ஸ்ரீ நரஹரி, அவனது வீட்டிற்குப் பிட்சைக்குச் சென்றார். அன்றைய தினம் அவனது எருமையை யாரும் வாடகைக்கு ஓட்டிச் செல்லாததால், பிராமணன் யாசகத்திற்காக வெளியில் சென்றிருந்தான். அச்சமயத்தில் குருதேவர் வந்ததும், அந்தப் பதிவிரதா சிரோமணி அவரை சாஷ்டாங்கமாய் வணங்கி, மிகவும் வினயத்துடன் தன் கணவன் யாசகத்திற்குச் சென்றிருப்பதாகவும், கொஞ்ச நேரத்தில் அனேக தானியங்களுடன் வருவார் என்றும், அதுவரை தயவு செய்து காத்திருங்கள்! என்று சொல்லி அவர் உட்காருவதற்கு ஒரு பீடத்தையும் போட்டாள்.

சிரித்த முகத்துடன் அதில் அமர்ந்த ஸ்ரீகுரு தனக்கு மிகவும் தாகமாக இருப்பதால் அந்த எருமை மாட்டின் பாலை ஏன் பிட்சையாகத் தரக்கூடாது? ஏன் ஒன்றுமில்லை என்று சொல்கிறாய்? என்று கேட்டார். உடனே அப்பெண்மணி, ‘அந்த எருமை பிறவி முதல் மலடு, வயதாகிப் பல்லும் விழுந்து விட்டது. அதை எருமைக்கடா என்று நினைத்துக்கொண்டுதான் வளர்த்து வாடகைக்கு விடுகிறோம். அதுதான் எங்களது வருவாய்க்கு உதவியாக இருக்கிறது. அதில் பால் கறக்க இயலாது!” என்று மறுமொழி சொன்னாள்.

அதற்கு குருதேவர், ‘நீ சொல்வது முற்றிலும் பொய். உடனே போய் அந்த எருமையைக் கறந்தால் பால் கிடைக்கும்” என்று சொல்ல, அவள் குருவின் வாக்கை சத்தியமென்று நம்பிக்கை வைத்து, ஒரு பாத்திரத்தை ஏந்திக் கறக்க ஆரம்பித்தாள். உடனே அந்த மாட்டிற்கு பால் சுரந்து ஏராளமாக நிரம்பி விட்டது. அந்தப் பெண்ணிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.. மிகுந்த மகிழ்ச்சியடைந்து, வந்திருப்பவர் ஈசுவரராய்த் தான் இருக்க வேண்டும் என்று நினைத்து, ஓடிப்போய் அந்தப் பாலை சுட வைத்துக் குருவிற்கு பிட்சையாக அளித்தாள்.

ஸ்ரீகுரு அந்தப்பாலை மிகுந்த விருப்பத்துடன் பருகிவிட்டு, இனி இந்த வீட்டில் எந்தக் குறையுமே இருக்காது. அட்டலட்சுமிகளும் வாசம் செய்வார்கள். புத்திர பாக்கியம் உண்டாகி நீண்ட ஆயுளோடு இருவரும் வாழ்வீர்கள்! என்று வரமளித்து விட்டுத் திரும்பிச் சென்றார்.

யாசகத்திற்குச் சென்ற பிராமணன் வீட்டிற்குத் திரும்பி வந்து நடந்தவைகளைக் கேட்டு அதிசயித்துப் போனான். மானிட ரூபத்தில் இங்கு வந்தது, நாம் அன்றாடம் வழிபடும் பரந்தாமனே என்று சொல்லித் தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு பூஜைக்குரிய பொருட்களை சேகரித்துக்கொண்டு, குருதேவர் தங்கியிருக்கும் சங்கம ஸ்தானத்தை அடைந்தான். அங்கே குருவிற்கு விதி பூர்வமாய் பூஜை செய்து வணங்கி நன்றியுடன் பக்தி செய்தான். குருநாதர் இருவரையும் புன்னகையுடன் ஆசீர்வதித்தார்.

அரக்கனுக்கு முக்தி அளித்த கதை

மறுநாள் காலை வழக்கம்போல் ஒருவர் வந்து பிராமணனிடம் இருந்த எருமையை மண் சுமக்க வாடகைக்குக் கேட்டபோது, அவன் எருமையை இனி வாடகைக்குக் கொடுப்பதில்லை என்று கூறினான். வந்தவர் காரணத்தை விசாரிக்க, அந்த எருமை இப்போது பால் கறக்க ஆரம்பித்து விட்டதால், அதை இனி சுமை இழுக்க அனுப்ப இயலாது என்று பதில் சொன்னான்.

அதைக்கேட்ட வந்தவர் ஆச்சர்யமடைந்து திரும்பிப் போய் பார்த்தவர்களிடமெல்லாம் கேட்டீர்களா? மலட்டு எருமை பால் கறக்கிறதாம், அதனால் வண்டி இழுக்க அதை அனுப்ப மாட்டாராம், இது என்ன நம்பும்படியாகவா இருக்கிறது? என்று சொல்ல, உடனே செய்தி பரவி ஊர் மக்களெல்லாம் ஒன்றுகூடி பிராமணனின் வீட்டை அடைந்து அவர் சொன்னது உண்மையா என்று வினவினர்.

பிராமணன் முந்தின நாள் நம் ஊர்க் காட்டில் பீமா நதிக்கரையில் வசித்து வரும் சந்நியாசி, தங்கள் வீட்டிற்குப் பிட்சை கேட்டு வந்ததையும், வீட்டில் தானியமேதுமில்லாததாலும் தான் யாசகம் பெற்று வர வெளியில் சென்றிருந்ததாலும், தன் மனைவி என்ன செய்வது என்று தவிக்க, அவ்வேளையில் அந்த சந்நியாசி அந்த மாட்டின் பாலைக் கறந்து பிட்சையாக அளிக்கலாமே! என்று கேட்டதாகவும், அதற்கு என் மனையாள், அது கறவை மாடு அல்ல என்று பதில் சொன்னாள். உடனே அந்த யதி அதைக் கறந்து பார்க்கும்படி சொன்னார். என் மனைவியும் அதை ஏற்றுப் பாலைக் கறக்க காமதேனுவைப் போல பால் சுறக்க ஆரம்பித்தது என்று பரவசத்துடன் சொன்னான்.

அவன் சொன்னதை ஊரார் நம்பாமல் ஏதேதோ பேச, அவர்களது சந்தேகம் தீர அவர்களெதிரில் ஏராளமாகப் பால் கறந்து காண்பித்தான். இந்தச் செய்தி காட்டுத் தீ போல ஊர் முழுவதும் பரவியது. அவ்வூரின் சிற்றரசனுக்கும் இது எட்டியது. அவன் உடனே தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு சகல பரிவாரங்களுடனும், ஊர் மக்களுடனும் ஒன்று சேர்ந்து சகலவிதமான மரியாதைகளுடன் குருவைக் காணப் புறப்பட்டான்.

அனைவரும் சங்கமத்திற்குச் சென்று குருவை நமஸ்கரித்து, ‘ஐய ஜயாதி ஸத்குருவே! நாங்கள் அஞ்ஞானமென்னும் கடலில் மூழ்கிக் கிடக்கிறோம். அவித்யை, மாயை என்ற இருளிலிருந்து எம்மைக் கடைத்தேற்ற வேண்டும். மந்த புத்தியுடைய எங்களுக்கு நீங்கள் மும்மூர்த்திகளின் அவதாரமான வியோம கேசன், சின்மய ஆத்மா, பரமகுரு என்று அறிய முடியவில்லை. நாங்கள் ஏதும் பிழை செய்திருந்தால் மன்னித்து எங்களைக் காத்தருள வேண்டும்!” என்று பலவிதமாகத் துதித்தனர்.

குருதேவர் மகிழ்ந்து, ‘ நான் ஒரு தபஸ்வி. நான் காட்டில் வசிக்கிறேன். என்னால் உங்களுக்கு என்ன செய்ய முடியும்? இவ்வளவு பரிகாரங்களுடன் இங்கு வந்த காரணம் யாது? என்று வினவினார்.

அரசன் குருவை வணங்கி, ‘எங்களுக்குத் தாங்கள் ஒரு வரம் அளிக்க வேண்டும். எங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி ஊருக்குள் வந்து அங்கு ஓர் மடத்தை அமைத்துக்கொண்டு எங்களுக்கெல்லாம் நல்வழி காண்பிக்க வேண்டும்!” என்று பக்தியுடன் வேண்டினான். குரு சிறிது நேரம் யோசித்து, பக்தர்களின் ஆசைக்கு இணங்கி, நாம் சில காலம் பிரபலமாய் வாழவேண்டியிருக்கிறது என்று நினைத்து ராஜாவினுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டார்

அந்த அரசன் குருநாதரை ஒரு பெரிய ரதத்தில் அமர்த்தி, அனேக வித வாத்யங்களுடனும், யானை, குதிரை பரிவாரங்களுடனும் வேத மந்திரங்கள் ஒலிக்க அதி விமரிசையாகப் பவனியாக அழைத்து வந்தான். அதற்குள் ஊரிலிருந்த பெரியவர்களும் பெண்களும் பலவிதப் பூஜைப் பொருட்களுடன் பூரண கும்பத்துடனும், ஆரத்திகளுடனும் குருவை எதிர்கொண்டு வரவேற்கப் புறப்பட்டனர். கிராமத்தின் எல்லையில் குருவை முறையாக வரவேற்றனர்.

week26அந்த இடத்தில் ஒரு மிகப் பெரிய அரச மரமும், பாழடைந்த ஒரு வீடும் இருந்தது. அந்த மரத்தின் மீது பயங்கரமான ஒரு பிரம்மராட்சதன் இருந்துகொண்டு அந்தப் பக்கத்தில் வருகின்றவர்களையெல்லாம் பிடித்து அடித்துத் துன்புறுத்தி வந்தான். அதனால் அந்த இடமே பாழடைந்து போயிருந்தது. அப்படிப்பட்ட இடத்திற்குக் குரு ஊர்வலமாக வருவதைக் கண்டு, அந்த பிரம்மராட்சதன் மனித உருவெடுத்து மரத்தை விட்டு இறங்கி வந்து குருவை வணங்கித் தான் பெரிய பாவியென்றும், தன்னைக் குரு காப்பாற்ற வேண்டும் என்றும் குருவைத் தரிசித்து விட்டதால் இனி தனது சகல பாபங்களும் தொலைந்து தான் விடுதலையடைய வேண்டுமென்றும் அழுது வேண்டி அவரது சரணக் கமலங்களில் விழுந்து வணங்கினான்.

சற்குரு அவனது பிரார்த்தனையை ஏற்று, ‘ஸங்கமத்திற்குச் சென்று நதியில் ஸ்நானம் செய்! உனக்கு நற்கதி கிடைக்கும்!” என்று கூறினார். அவன் அப்படியே செய்தான். பார்த்தவர்கள் பிரமிக்கும்படி அவன் ஒளியுடன் முக்தியடைந்தான்.

அங்கு சூழ்ந்திருந்த மக்களும் அரச பரிவாரங்களும், ஜய, ஜய போற்றி! என்று குருநாதரின் மகிமையைப் போற்றிப் புகழ்ந்தனர். பிறகு எல்லோரும் கிராமத்தை அடைந்தனர்.அந்த அரசனின் ஏற்பாட்டின்படி குருவிற்கு ஒரு மடம் கட்டித்தரப்பட்டது. அரசன் தினமும் அந்த மடத்திற்கு வந்து குருவைப் பல்லக்கில் ஏற்றி சகலவிதமான பரிவாரங்களுடன் அவரை ஸ்நானம் செய்ய ஸங்கமத்திற்கு அழைத்துச் செல்வான். அங்கு பூஜை மரியாதைகள் எல்லாம் செய்து அவரைப் போற்றி ஆராதனை செய்து, மீண்டும் மத்தியானத்தில் ஆடம்பரமான ஊர்வலமாக மடத்திற்கு அழைத்து வருவான். விருப்பு வெறுப்பு அற்றவரான குருநாதர் அவனது பக்திக்குக் கட்டுப்பட்டு அவனது உபசாரங்களை ஏற்று வந்தார். ஊர் மக்களும் அவரது அருளால் உயர்வடைந்தனர். குருவின் புகழ் நான்கு திசைகளிலும் பரவியது.

அந்த கிராமத்திற்கு அருகில் கும்சி என மற்றொரு கிராமம் இருந்தது. அங்கே ஸ்ரீ நரஸிம்மமூர்த்தியைத் தியானித்து வழிபட்டு வந்த ஒரு தபஸ்வி வாழ்ந்து வந்தார். அவரது பெயர் திரிவிக்கிரம பாரதி, அவர் வேத பண்டிதராயும், பற்றற்ற தவ முனிவராயும் திகழ்ந்தார். அவர் காணகாபுரத்திலுள்ள சந்நியாசியைப் பற்றியும், அவருடைய ஆடம்பரங்களைப் பற்றியும் கேள்விப்பட்டார். ஒரு சன்னியாசிக்கு ஏன் இந்த ஆசை? அவருக்கு எதற்கு இந்தப் பல்லக்கு, சைன்யம், ஆடம்பரம் எல்லாம்? நான்காம் ஆசிரமத்திற்கு வந்தவருக்கு டம்பமே கூடாது, இவரெல்லாம் என்ன சன்னியாசி? என்றெல்லாம் சொல்லிக் குருவைப் பழித்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s