குருவைத் தேடி – 25

ஜனங்கள் அவளை சமாதானப்படுத்தி, எதுவும் நம் கையில் இல்லை. பிரம்மதேவன் தலையில் எழுதிய எழுத்துப்படி தான் எல்லாம் நடக்கும். தேவர்கள், தானவர்கள், முனிவர்களுக்கும் கூட பிராப்தம் என்பது விடுவதில்லை என்றால் மனிதர்களாகிய நாம் என்ன செய்ய முடியும்? வருவது வந்தே தீரும். எனவே துக்கப்பட்டுப் பயனில்லை என்று ஆறுதல் கூறித் தேற்றினர்.

அதற்கு அவள், சற்குரு நரசிம்ம ஸரஸ்வதி வரமாகக் கொடுத்த பிள்ளையாயிற்றே. அவர் உன் குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து உன் சந்ததி வளரும் என்று வாக்களித்தாரே, அவர் வாக்கு பொய்யாகுமா? மும்மூர்த்திகளின் அவதாரமாகிய குருதேவர், சத்தியத்திலிருந்து விலக முடியுமா? இனி யார் அவரை நம்புவார்கள்? அத்திமரத்தைச் சுற்றி வந்து பூஜை முதலியன செய்து வேண்டிக்கொள்;கிறார்களே! நானும் அப்படி விரதமிருந்து தானே இந்தக் குழந்தையைப் பெற்றேன்? இந்தக் குழந்தையோடு நானும் என் பிராணனை விட்டு விட்டால், இனி இந்த ஸங்கம ஸ்தானத்தையும் அத்திமரத்தையும் யார் நம்புவார்கள்? குருவின் வரத்தால் குழந்தை பிறந்து இருவரும் குருவாலேயே மாண்டனர் என்ற அபகீர்த்தி அவரைச் சேருமல்லவா?

புலிக்குப் பயந்து ஓடின பசு மிலேச்சன் வீட்டை அடைய, அங்கு அவன் அதைக் கொன்ற கதைபோல, அந்தப் பிசாசுக்குப் பயந்து குழந்தையைக் குருவிற்கு பறி கொடுத்தேனே. தெய்வத்தை வணங்க வேண்டும் என்று கோவிலுக்குப் போகும்போது, அந்தக் கோபுரமே இடிந்து தலையில் விழுந்தது போலாகிவிட்டதே! என்றெல்லாம் ஏதோ சொல்லிக்கொண்டு சற்றும் ஆறுதலடையாமல் இரவு முழுவதும் கதறி அழுதுகொண்டிருந்தாள்.

மறுநாள் காலை ஊராரும் கணவனும் இறந்த குழந்தைக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய முற்பட்டபோது, அவள் அதை விடாமல் தன் மார்போடு அணைத்துக்கொண்டு, தன்னையும் அதோடு சேர்த்து அக்கினியில் சேர்த்துவிடும்படியும், குழந்தையைப் பிரிந்து இருக்க முடியாதென்றும் அழுது புரண்டாள்.

ஊரார், இது என்ன, விபரீதமாக இருக்கிறதே! குழந்தை இறந்தால் இப்படியும் மூர்க்கத்தனமாக நடப்பார்களா? நீ ஆத்மஹத்தி செய்து கொண்டால் தோஷம் ஏற்படுமே! இதை விட நூறு பங்கு துன்பம் அனுபவிக்க நேருமே! என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். நேரமோ போய்க்கொண்டிருந்தது. அவளை எவ்வளவு தேற்றியும் குழந்தையைத் தர இணங்கவில்லை. அச்சமயத்தில் ஒரு பிரம்மச்சாரி அங்கே தோன்றி அவளைத் தேற்றி ஆத்மஞானத்தைப் போதிக்கத் தொடங்கினார். அந்த பிரம்மச்சாரி ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்.

உயிரிழந்த குழந்தைக்கு உயிர் தந்த கதை

துக்க வீட்டில் இனி என்ன செய்வது என்று புரியாத நிலையில் அங்கிருந்த அனைவரும் துக்கத்துடன் திகைத்திருக்க, அவ்வேளையில் குரு பிரம்மச்சாரி ரூபத்தில் அங்கு தோன்றினார். அவர் அந்தப் பெண்ணிடம் வந்து, நீ ஏன் இப்படி மூடத்தனமாகத் துன்பப்படுகிறாய்? இந்த உலகத்தில் எவன் என்றும் பிழைத்திருக்கிறான்? எவன் பிறக்கிறான்? எவன் இறக்கிறான்? நீரில் தோன்றும் நீர்க்குமிழி போல் நமது தேகம் நாசமடையக்கூடியது. பஞ்சபூதங்களால் ஆன இந்த உடல் ஒரு வடிவத்தைப் பெறுகிறது. அந்த பூதங்கள் விலகியவுடன், இந்த சடவுடல் சரிந்து விடுகிறது. உள்ளிருப்பவன் அவ்யக்தமாகி விடுகிறான். அவன் இருந்தாலும் தெரிவதில்லை. பஞ்சபூதங்கள் மாயையுடன் சேர்ந்து அழியக்கூடிய இந்த உடல் மீது பற்றை ஏற்படுத்துகின்றது. அதனால் தான் மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர் என்று சம்பந்தம் ஏற்படுகிறது.

குணங்கள் மூன்று. அவை சத்யம், ரஜஸ், தமஸ் என்பவையாகும். தேவர்கள் சத்வ குணமுடையவர்கள். மானிடர் ரஜோ குணத்தையும், அசுரர்கள் தமோ குணத்தையும் கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த முக்குணங்களின்படி அவரவர் கர்மாக்களை அனுசரித்து பலனைப் பெறுகின்றோம்.

ஒருவனுடைய குணங்களின்படி அவனது இந்திரியங்களும் (புலன்கள்) ஆடுகின்றன. பூமியில் மேற்சொன்ன மூன்று குணங்களை வைத்து மக்கள் பிறக்கின்றனர். அவரவர் முன் செய்த கர்ம விளைவாக சுக துக்கங்களை அனுபவிக்கிறார்கள். அவனவன் செய்ததை அவனவனே அனுபவித்துத் தீர வேண்டும்.

தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் கல்பகோடி ஆண்டுகள் ஆயுள் என்று இருந்தாலும், அவர்கள் செய்த கர்மா அவர்களை விடுவதில்லை. இப்படி நியதி இருக்கும்போது மனிதனைப்பற்றிச் சொல்ல வேண்டுமா? மானிடர்கள் தேகத்தின் மீது பற்றுடையவர்களாதலால் அதன் குணப்படி எல்லாக் காரியங்களையும் செய்கின்றனர். அதனால் அவர்களுக்கு எல்லாமே துக்கத்தில் முடிகிறது.

ஞானிகள் சந்தோஷப்படுவதுமில்லை. துக்கப்படுவதுமில்லை. அவர்கள் பிறப்பையும் இறப்பையும் சமமாகப் பாவிக்கின்றனர். கர்ப்பமுறுதல் நிகழ்கின்றபோது ஆகாரமில்லாதது (கரு) கர்ப்பப் பையில் உருவாகின்றபோது ஆகாரம் பெறுகின்றது. உருவமில்லாத ஒன்று உருவமாகக் காணப்படுகின்றது. வளர்கின்றது, வாழ்கின்றது, தேய்கின்றது. மரணத்தில் மீண்டும் உருவமற்றதாக மாறி விடுகின்றது. இதனிடையில் அவரவர் செய்த கர்மாவின்படி அவரவர் வாழ்கின்றனர். எவருமே நிலைத்திருப்பதில்லை. சிலர் சிறு வயதிலும், சிலர் முதுமையடைந்தும் மரணமடைகின்றனர். ஆனால் ஒருவன் பிறந்தால் சாவு என்பது சத்தியமாக உண்டு. நாம் மாயையால் சூழப்பட்டுத் தாய், தந்தை, குழந்தை முதலியவற்றை எனது, எனது என்று கருதுகிறோம். இந்தத் தேகமானது மாமிசம், உதிரம், மல மூத்திரம் சேர்ந்ததாய்ப் பிறந்து, பிரம்மதேவன் தலையில் எழுதியபடியும், பாப புண்ணியங்களுக்குத் தகுந்தபடியும், அவற்றிற்குரிய பலனை அனுபவிக்கின்றது. யமனை இதுவரை யாரும் ஜெயித்ததில்லை. தேகம் நிம்மதியானது என்று சொல்ல முடியாது. உடல் அழியக்கூடியதே.

எப்படிக் கனவில் ஒருவன் புதையலைக் கண்டு மகிழ்கிறானோ, வானவில் கண்ணைக் கவர்வதாகத் தோன்றினாலும், சில கணங்களில் எப்படி மறைந்து விடுமோ அது போலத்தான், நம் வாழ்க்கையும். நீ போன ஜன்மத்தில் யாருக்குத் தாயாகவும், மனைவியாகவும் இருந்தாய் என்பதை அறிவாயா? நமக்கு எவ்வளவு ஜன்மம், எவ்வளவு தாய் தந்தையர் என்று தெரியுமா? அதையெல்லாம் நினைத்துப் பார்த்துத் துக்கப்படுகிறோமா? அப்படியிருக்க இந்தக் குழந்தை போனதைப்பற்றி நீ துக்கப்பட என்ன காரணம்?

தேகம் பஞ்சபூதங்களால் ஆனது என்று முன்பு சொன்னேன். மேலும் இது தோல், மாமிசம், எலும்பு, மஜ்ஜை முதலியவற்றுடன் கூடிய மலமூத்திரப் பை. இதன் மீது ஆசை வைக்கலாமா? உண்மை இப்படி இருக்கும்போது மகனாவது, மரணமாவது? எல்லாம் மாயை செய்வது. இது புரியாமல் நீ ஏன் வீணாகத் துக்கப்படுகிறாய்? உண்மையைப் புரிந்துகொள். மேற்கொண்டு செய்ய வேண்டிய சம்ஸ்காரங்களுக்காகக் குழந்தையை இவர்களிடம் கொடுத்து விடு! என்று அந்தப் பிரம்மச்சாரி கூறினார்.

இதைக்கேட்டு அந்தப் பெண், ‘ஸ்வாமி! தாங்கள் இவ்வளவு நேரம் ஞானோபதேசம் செய்தீர்கள். ஆனால் என் மனம் சமாதானமடையவில்லையே! பிராரப்தம் என்று சொன்னீர்களே. அது அப்படியே நடக்கும் என்றால் பிறகு தெய்வம் எதற்கு? அதனை நாம் ஏன் வழிபட வேண்டும்? இரும்பை சிந்தாமணியோடு சேர்த்தால் அது பொன்னாகிவிடும் என்கிறார்கள், அப்படி அது மாறாவிட்டால் எதைப் பழிப்பார்கள்? சிந்தாமணி ரத்தினத்தைத் தானே!

நான் முதலில் தெய்வ பலம் இல்லாதவளாய் இருந்ததால் தான் அந்தப் பிசாசாக அலைந்து கொண்டிருந்த பிராமணனிடம் பயந்து ஸ்ரீகுருவைத் தஞ்சம் அடைந்தேன். அவரும் அபயமளித்து எனக்குப் பிள்ளை வரம் அளித்தார். மும்மூர்த்திகளின் அவதாரமான ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி கொடுத்த வரம் பொய்யாகுமா? அவர் கொடுத்த வாக்கு வீண் போகாது என்று நான் பூர்ணமாக நம்பியிருந்தேனே! இப்போது அந்த நம்பிக்கை வீணாகிவிட்டதே! நீங்கள் என்னை மூடப்பெண் என்று சொன்னாலும் பரவாயில்லை. நான் இந்தக் குழந்தையுடனேயே என் பிராணனை விடப்போகிறேன். குருநாதர் நலமாக வாழட்டும்!” என்று சொன்னாள்.

அவளுடைய தைரியமான சொற்களைக் கேட்டு அந்தப் பிரம்மச்சாரி, அவளது திட சித்தத்தைப் புரிந்து கொண்டவராய், ‘அம்மா! நான் ஒரு உபாயம் சொல்கிறேன். முடியுமானால் அதன்படி செய்து பார்!” என்று சொன்னார். பிறகு அவர், ‘குரு உனக்கு எந்த இடத்தில் நீண்ட ஆயுளுடன் கூடிய குழந்தைகள் பிறக்கும் என்று வரமளித்தாரோ, அந்த அமரபுரத்தில் பஞ்சகங்கைக் கரையிலுள்ள ஔதும்பர (அத்தி) மரத்தடியில் சவத்துடன் போய், அவரிடம் முறையிட்டுப் பிரார்த்தனை செய்!” என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

அந்தப் பிரம்மச்சாரியின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து, அந்தப் பெண்மணிதிட வைராகக்கியத்துடன், இறந்த குழந்தையை ஒரு துணி மூட்டையில் வைத்து முதுகில் கட்டிக்கொண்டு, தன் கணவனையும் அழைத்துக்கொண்டு குரு ஸ்தானமாகிய அத்திமரத்தை அடைந்தாள். பிணத்தை சடங்குகள் செய்யக் கொடுக்காததால் ஊராரும், உற்றாரும், சாஸ்திரிகளும் அவளை மிகவும் கடிந்து, சாகஸக்காரி இவள். இவளது பிடிவாதத்தால் நாம் ஒரு நாள் முழுவதும் உபவாச் இருக்கும்படி ஆயிற்று. இனியும் இவளோடு நாம் அலைய முடியாது. இவள் பின்னால் சென்று யாருமில்லாத அந்தக் காட்டுப்பகுதியில் சிக்கித் தவிக்க முடியாது. அப்படிச் சென்றால் வழியில் திருடர்களுக்கும், காட்டு மிருகங்களின் பயத்திற்கும் ஆளாகும்படி நேரிடும்! என்று சொல்லி அவளுடன் வர மறுத்து விட்டனர்.

மனித நடமாட்டமே இல்லாத அந்த இடத்தில் தனியாகத் தன் கணவனுடன் துணிவாகச் சென்ற அந்தப் பெண், குரு ஸ்தானத்தை அடைந்தவுடன், பிணத்தைக் கீழே வைத்துவிட்டு ஓடிப்போய் மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த குரு பாதுகைகளில் தலையை மோதிக்கொண்டு, அந்த இடத்தை ரத்தமயமாகச் செய்து விட்டாள். இரண்டு நாட்களாக உணவு, உறக்கமில்லாததால் மிகுந்த களைப்புடன் அன்றிரவு மூன்றாம் ஜாமத்தில் அவள் சற்றே கண் அயர்ந்தாள். அவள் அயர்ந்த நிலையில் ஒரு ஜடாதாரி யோக தண்டத்தையும், திரிசூலத்தையும் கையில் ஏந்தி, ருத்திராட்சங்களை அணிந்து, புலித்தோலை ஆடையாக அணிந்து, உடல் முழுவதும் சாம்பலைப் பூசியவராய் அந்த (ஔதும்பர) அத்தி மரத்திலிருந்து தோன்றினார். அவர் அவளை நோக்கி, ‘பெண்ணே! நீ ஏன் இங்கு வந்து அழுது கோபித்துப் பிரலாபிக்கிறாய்? உனக்கு என்ன வேண்டுமென்று சொல். பரிகாரம் செய்கிறேன்!” என்று அபயமளித்தார். பிறகு ‘அந்த சிசுவின் மீது பஸ்மத்தைப் பூ+சு!’ என்று கொடுக்க அவள் அதை வாங்கி அதன் உடல் முழுவதும் பூசினாள். பின்பு அதன் வாயில் காற்று வரும்படி ஊத ஆணையிட்டார். ‘பிராணன் என்பது ஒரு வாயு. அது வெளியேறிவிட்டதால் தான் இந்த விபரீதம் ஏற்பட்டது. அதை மறுபடியும் உட்செலுத்தினால் ஜீவன் வரும்;!’ என்று உரைத்தார்.

இந்த இடத்தில் அந்தத் தாய்க்கு விழிப்பு வந்து விட்டது. அந்தப் பிணத்தின் மீது தான் கிடப்பதைக் கண்டு, அவளுக்கு பயம் ஏற்பட்டது. குருவையே தியானித்ததால் தான் அப்படிப்பட்ட கனவு தனக்கு வந்தது. இனி குழந்தை பிழைப்பதாவது? என் பிராரப்தம் இப்படி என்று இருக்கும்போது, பாவி நான் குருவைப் பழித்தேனே? அது தவறல்லவா! என்றெல்லாம் யோசித்துப் பதற்றமுற்றாள்.அந்த வேளையில் அந்தப் பிணம் அசையலாயிற்று. அதைக் கண்ணுற்ற தாய் தன் மனப்பிரமையோ என்று சந்தேகித்து மீண்டும் பார்த்தாள். குழந்தையோ எழுந்து உட்கார்ந்துகொண்டு எனக்குப் பசிக்கிறது என்று அழ ஆரம்பித்தது. அவளுக்கு உடனே மார்பகத்தில் பால் தாராளமாக சுரக்க ஆரம்பித்தது.

அவளுக்கு அதுவரை ஏற்படாத பயமும் சந்தேகமும் மனதில் தோன்றி துhரத்தில் துhங்கிக் கொண்டிருந்த தன் கணவனிடம் ஓடி நடந்த சங்கதியெல்லாம் கூறி, இது கனவா? நிஜமா? என்று கேட்டாள். அவன் குழந்தையைத் துhக்கி அணைத்து எல்லாம் குரு கிருபையால் நிஜம் தான்! என்று சொல்லி அவளிடம் கொடுத்தான் இருவரும் குரு மகிமையைக் கண்டு அத்திமரத்தை வலம் வந்து வணங்கினர். பிறகு மூவருமாகப் பஞ்ச கங்கையில் நீராடி, அந்தப் பாதுகைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, அபிஷேக ஆராதனைகளைச் செய்தனர்.

week25bw‘குரு மூர்த்தியே! எம்மை மன்னிக்க வேண்டும். அஞ்ஞானத்தால் உம்மை பழித்தோம். பக்த வத்சலனான தங்களின் கருணையை எப்படி வர்ணிப்பது? குழந்தை தாயாரைக் கடிந்து பேசினால் தாயார் எப்படி கோபிக்க மாட்டாளோ, அப்படி பிழையாகப் பேசிய எங்களைக் கோபிக்காமல் காப்பாற்ற வேண்டும்!” என்று பலவாறாகத் துதித்து தீபாராதனை செய்தனர். அதற்குள் பொழுது நன்றாக விடிந்து விட்டது. மறுநாள் சென்றால் பிணம் நாற்றமடித்து அவளாகவே அதைக் கொடுத்து விடுவாள் என்று தீர்மானித்து அவளது உறவினர்களும், கர்மா செய்பவர்களும், ஊரிலிருந்து புறப்பட்டுக் குழந்தையை சம்ஸ்காரம் செய்யும் பொருட்டு சங்கம ஸ்தானத்தை அடைந்தனர். அப்போது அந்தக் குழந்தை உயிரோடு இருப்பதையும், தம்பதியர் குரு பாதுகைக்கு பூஜை செய்ததையும் கண்டு மிக்க ஆச்சர்யமும் ஆனந்தமும் அடைந்தனர்.

குருவின் மகிமை இந்த அதிசயித்தால் திக்கெட்டும் பரவியது. ஔதும்ப மரத்தை வலம் வந்து பாதுகையைப் பூஜித்ததால் மலடிக்குப் புத்திர சந்தானமும், வியாதிக்காரர்களுக்கு உடல் நலமும், தரித்திரக்காரர்களுக்கு அளவிலா செல்வமும், மரண பயம் கொண்டவரை யம பயம் இல்லாமலும் செய்வது இந்தக் குருபீடம். யார் யார் என்னென்ன நினைக்கின்றார்களோ அவை எல்லாம் பூர்த்தி செய்யக்கூடிய இடம் அது. ஆனால் ஸ்ரீ நரஹரியின் மீது, பூரண நம்பிக்கை வைத்து பக்தியுடன் சேவை செய்து வணங்க வேண்டும், இச்சரித்தி;ரத்தைக் கேட்டாலே எல்லா விருப்பங்களும் நிறைவேறும்! என்று ஸித்தர் மிக்க உணர்ச்சி பூர்வமாக இக்கதையை நாமதாரகனுக்குச் சொன்னார். பக்தி சிரத்தையுடன் நாமதாரகனும் வணங்கிக் கேட்டான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s