குருவைத் தேடி – 24

அதனால் குருவிற்கு சங்கடங்கள் அதிகரிக்கவே அமரேஸ்வரரை வணங்கிவிட்டு, அந்த ஊரை விட்டுப் புறப்பட்டுவிட்டார். இப்போது அறுபத்து நான்கு யோகினிகளும் வந்து குருவை வணங்கி, தாங்கள் இந்த இடத்தை விட்டுச் சென்றால் நாம் எப்படி வசிப்பது? தங்களை தரிசித்து தங்களுக்குப் பணிவிடை செய்தாலல்லவோ எங்கள் தவம் பலிக்கின்றது. இனி நாங்கள் பூஜித்து வரும் அன்னபூரணி எங்கே தங்குவாள்? என்றெல்லாம் பக்தியுடன் வினவினர்.

குரு அவர்களின் அன்பை மதித்து அவர்களை ஆசிர்வதித்துப் பின்வரும் தகவல்களை எடுத்துக் கூறினார். ‘நான் இந்த இடத்தைவிட்டுச் சென்றாலும் என் சாந்நித்தியம் இந்த இடத்தில் இருக்கும். இந்த அத்திமரத்தடியில் நான் எப்பொழுதும் இருப்பேன். அதற்கு அடையாளமாக எனது பாதுகைகள் இங்கு இருக்கும். இந்த அத்திமரத்தையும் இந்த அமரபுரத்தின் மேற்கில் பிரதிஷ்டை செய்யப்படும் அன்னபூரணியையும், என் பாதுகைகளையும் யார் பக்தியுடன் வணங்கி பூஜை முதலியவற்றை செய்கிறார்களோ அவர்களுக்கு யோகினிகளாகிய நீங்கள் அருள் செய்து உதவி வர வேண்டும்.

மேலும் இந்த ஊரிலுள்ள புனித குளங்களில் ஸ்நானம் செய்தால் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு விதப் புருஷார்த்தங்களும் கிடைக்கும் என்றும், அமாவாசை, பௌர்ணமி, கிரஹண தினம் போன்ற நாட்களில் இங்கு வந்து ஸ்நானம் செய்து பூஜை செய்தால், மிகுந்த புண்ணியமும், நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் பசுக்களைக் கங்கைக் கரையில் தானம் கொடுத்த பலனும், இந்த இடத்தில் ஒரு பிராமணனுக்கு அன்னதானம் செய்தால் கோடிப் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், இந்த அத்தி மரத்தின் அடியில் அமர்ந்து ஒரு ஜபம் செய்தாலும் அது கோடி ஹோமம் செய்ததற்கு சமமாகும் என்றும், பதினோரு தடவை ருத்ரம் ஜபித்து மானசீகமாக சிவபூஜை செய்தால் அதிருத்ர யாகம் செய்த பலனும், இந்த அத்தி மரத்தை ஒரு தடவை அடிப் பிரதட்சணம் செய்தால் ஒவ்வொரு அடியும் வாஜபேயம் என்னும் மஹாயாகம் செய்த பலனும், இரண்டு அல்லது நான்கு முறை சுற்றி வந்து நமஸ்கரித்தால் பெரு வியாதி முதலான சகல நோய்களும் நீங்குமென்றும், லட்சம் தரம் பிரதட்சணம் செய்தால்,

தேவர்களுக்கு ஒப்பான சரீரம் ஏற்படுமென்றும் குரு அந்த யோகினிகளிடம் விவரமாகக் கூறி அந்த இடத்திலேயே அவர்களைத் தங்கி இருக்கும்படி சொன்னார். அந்த யோகினிகளும் குருவின் வார்த்தையை ஏற்று அவரை வணங்கினார். குரு யோகினிகளிடம் விடைபெற்று பீமா நதிக்கரையிலுள்ள காணகாபுரம் என்ற இடத்திற்குப் புறப்பட்டார். குரு எல்லா இடங்களிலிருந்தாலும் இங்கு இன்று வரை விசேஷமாக வசிக்கிறார். அந்த யோகினிகளும் அவருக்கு உரிய சேவைகளைச் செய்து வருகின்றனர்.

சாபம் தீர்த்த கதை

சித்தர் சொன்ன கதையைக் கேட்ட நாமதாரகன், குரு நரசிம்ம ஸரஸ்வதி அந்த ஊரை விட்டுச் சென்ற பின்பு அந்த அத்திமரத்தின் மகிமையும், குரு தேவரின் அருளும் அமராபுரத்தின் சங்கம ஸ்தானத்தில் நிலை பெற்று இருந்ததா? அதற்குரிய சான்றாக ஏதேனும் நிகழ்ந்ததா? என்று வினவினான்.

ஆம்! அதைப்பற்றி நான் உனக்குச் சொல்கிறேன்! என்று சித்தர் சொல்ல ஆரம்பித்தார். கங்காதரன் என்ற சீலப் பிராமணன் சீராள என்ற கிராமத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தான். அந்தப் பெண்மணி நற்பண்புகள் வாய்ந்த பதி விரதை. இப்படிப்பட்ட இவர்களுக்குக் குழந்தைகள் பிறந்து, இறந்துகொண்டே இருந்தன. ஐந்து குழந்தைகள் பெற்றும் ஒன்றாவது பிழைக்கவில்லை. மிகவும் துயரமடைந்த தம்பதியர் வேதமறிந்த பெரியவர்களை அணுகி, அவர்களிடம் தங்களின் வேதனையை எடுத்துரைக்க, அவர்கள் எல்லாவற்றையும் கேட்டு ஆராய்ந்து பார்த்து, இது முன் ஜென்மப் பாவத்தின் பலன் என்றும், பெண்கள் கர்ப்பத்தைக் கலைத்தாலும், குதிரை, பசு முதலியவற்றைக் கொன்றாலும், மலடியாகி விடுவார்கள். ஒருவருடைய பணத்தை அபகரித்தாலே, வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டாலோ அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பிழைக்க மாட்டா.

போன ஜன்மத்தில் இந்தப் பெண்மணி சௌனகக் கோத்திரத்தில் பிறந்த ஒரு பிராமணனிடம் கடன் வாங்கினாள். ஆனால் அந்தப் பணத்தை இவள் திருப்பிக் கொடுக்காததால், அந்த மனிதன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான். அதற்கு இவள் காரணமானதால் அந்தப் பாவம் இவளைச் சூழ்ந்து கொண்டது. அவன் தான் பிசாசு ரூபமாக இருந்து குழந்தைகளைக் கொன்று விடுகிறான்! என்று எடுத்துச் சொன்னார்கள். இதைக் கேட்டு அந்தப் பெண்மணி மிகவும் பயந்து, ஐயோ! நானே என் குழந்தைகளுக்கு யமனாகிவிட்டேனே! பூர்வ ஜன்மப் பாவத்தால் எனக்கு இப்படி ஆகி விட்டதே! இனி நான் என்ன செய்வேன்? நீங்கள் தான் இதற்கு ஒரு வழி கூற வேண்டும்! என்று பரிதாபமாகக் கெஞ்சினாள்.

அவர்களும் அவனுடைய செல்வத்தை நீ அபகரித்துவிட்ட காரணத்தால் அவன் இறந்து பிசாசு ரூபம் பெற்று அலைகிறான். அவன் இறந்த பிறகு அபரக் கிரியைகளை யாருமே செய்யவில்லை. ஆகவே நீங்கள் இருவரும் அவனுக்குரிய ஈமக்கிரியைகளை முறைப்படி செய்து, நுhறு ரூபாய்களை அவனது கோத்த்pரத்தில் பிறந்திருக்கும் ஒரு பிராமணனுக்குக் கொடுத்தால் இந்தத் தோஷம் நீங்கும். அதோடு அமராபுரத்திற்குச் சென்று, அங்குள்ள பாபவிநாசம் என்ற தீர்த்தத்தில் ஏழு தரம் ஸ்நானம் செய்து, மறுபடி காம்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, அத்திமரத்தை ஆராதனை செய்து, குரு பாதுகைகளுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு மாதம் ஆராதித்தால் ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி உன்னுடைய தோஷங்களை நீக்கி, நீண்ட ஆயுளையுடைய புத்திரர்களை அளிப்பார்! என்று உரிய பரிகாரத்தைச் சொன்னார்கள். மேலும் அவர்கள், குரு பாதுகைகளைப் பூஜித்தால் பிரம்மஹத்தி தோஷம் முதலிய பாவங்கள் பறந்து போய்விடும்! என்றனர்.

இதைக்கேட்ட தம்பதியர் ஒருவரையொருவர் ஏக்கத்துடன் பார்த்து, எம்மிடத்தில் ஏது நுhறு ரூபாய்? இதை ஒரு காலத்திலும் சேர்த்து நாம் பார்த்தது கூடக் கிடையாதே! இனி எப்படி அவ்வளவு தொகையைச் சேர்க்க முடியும்? நமது ஏழ்மைத்தனத்தில் இந்த கர்மாவை எப்படி நிறைவேற்றுவது? ஆனால் உடலை வருத்தி உபவாசம் இருந்து ஒரு மாதத்தில் செய்ய வேண்டிய விரதத்தை மேற்கொள்ள முடியும்! என்று மிக மனவருத்தத்துடன் அந்தப் பெரியவர்களிடம் கூறினார்கள்.

அவர்களுக்கு ஒன்றும் சொல்லத் தெரியாமல், விதி பூர்வமாக உரிய ஆராதனை செய்யுங்கள். கடைசியில் உங்களுக்கு கிடைக்கின்ற பொருளை குருவின் ஆணையென்று ஏற்று ஒரு பிராமணனுக்குக் கொடுங்கள்! என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.

பெரியவர்கள் சொன்ன வார்த்தைகளை சிரமேற்கொண்டு இருவரும் அமராபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்று, குரு பாதுகை இருந்த இடத்தை அடைந்தனர். முதலில் சங்கமத்தில் ஸ்நானம் செய்து, அத்தி மரத்தைப் பிரதட்சிணம் செய்தாள் அந்தப் பெண். பிறகு காமிய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, பாதுகைகளைப் பக்தியுடன் பூஜித்து உபவாசம் இருந்தாள்.

week24மூன்றாம் நாள் அவளுடைய கனவில் அந்தக் கடன் கொடுத்த பிராமணன் வந்து தன் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படியும், அப்படிக் கொடுக்காத வரையில், அவளையும் அவளது வம்சத்தையும் நான் விடப்போவதில்லை என்றும் கூறி, அவளைப் பயமுறுத்தித் துரத்தினான்.

பயந்துபோன அந்தப் பெண் கனவிலேயே ஓடிப்போய் அத்திமரத்தைச் சரணமடைந்தாள். உடனே அந்த மரத்திலிருந்து குருநாதர் வெளிப்பட்டு அவளுக்கு அபயமளித்து, அந்தப் பிராமணனிடம், ஏன் இந்தப் பெண்ணைத் துன்புறுத்துகிறாய்? என்று கேட்டார். அதற்கு அவன் போன ஜன்மத்தில் தான் அவளுக்குக் கடன் கொடுத்த சமாச்சாரத்தைச் சொல்லி, நீங்கள் ஒரு தவசீலர். ஆகையால் நடுநிலையில் நின்று கடனை வாங்கிக் கொடுக்க வேண்டும்! என்று சொன்னான்.

என் பக்தர்களை உபத்திரவம் செய்தால், கட்டாயம் நான் தண்டிப்பேன். ஆனால் நான் சொல்வதைக் கேட்டால், உனது பிசாசு ரூபம் நீங்கி நற்கதி பெறுவாய். அந்தப் பெண் எவ்வளவு கொடுக்கிறாளோ அதைப் பெற்றுக்கொள். இல்லையேல் இந்த இடத்தை விட்டுச் சென்றுவிடு. நான் என் பக்தர்களைக் காப்பாற்றியே தீருவேன். இனி நீ அவளை ஹிம்சை செய்தால் என் தண்டனைக்குள்ளாவாய்! என்று சற்குரு அவனைக் கடிந்து பேசி எச்சரித்தார்.

அந்த பிராமணன், குருவின் பாத கமலங்களைத் தரிசிக்கும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததால், இனி ஒரு குறையும் இல்லை என்றும், என்னுடைய பிசாசுத் தன்மை நீங்கி நற்கதி கிடைக்குமென்றால், அந்தப் பெண் கொடுக்கும் எதையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் கூறினான்.

குருதேவர் அந்தப் பெண்ணைப் பார்த்து, நீ இன்று முதல் வரும் பத்து நாட்களுக்கு அஷ்ட தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, இந்த அத்தி மரத்தை வலம் வந்து ஆராதித்தால், உன் பிரார்த்தனையால் இந்தப் பிராமணனின் பிசாசு உருவம் நீங்கி அவன் நற்கதி பெறுவான். நீயும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிப் பூரண ஆயுளுடன் கூடிய குழந்தைகளைப் பெறுவாய்! என்று சொல்லி மறைந்தார். அத்துடன் அந்தக் கனவு மறைந்தது.

உடனே அந்தப் பெண் கனவிலிருந்து விழித்துக்கொண்டு எழுந்து தன் கணவனிடம் தான் கனவில் கண்டதைச் சொல்லி பயப்பட்டாள். இருந்தாலும் குரு கனவில் சொன்னபடி செய்ய வேண்டும் என்று இருவரும் தீர்மானித்து, அதன்படியே பத்து நாட்கள் முறையாக எல்லாம் செய்தனர். குரு கனவில் சொன்னபடியே அந்தமனிதன் நற்கதி அடைய, இவளுக்குப் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிற்று.

பத்தாம் நாள் இரவு அவள் துhங்கும்போது, சொப்பனத்தில் குரு தோன்றி, கவலைப்பட வேண்டாம்! குழந்தைகள் பிறந்து, இனி உன் சந்ததி வளரும்! என்று சொல்லி, அவள் மடியில் இரண்டு தேங்காய்களை இட்டு மறைந்தார். அவள் மிகுந்த நன்றியுடனும் மகிழ்வுடனும் கண் விழித்துக் குருவை நினைத்து வணங்கினாள். மறுநாள் தம்பதியர் விரதம் முடித்துப் பாரணை செய்து, மரத்தையும், பாதுகைகளையும் வணங்கிப் போற்றிவிட்டு அந்த ஊரை விட்டுப் புறப்பட்டனர்.

காலம் சென்றது. நாளடைவில் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தன. இருவரும் மகிழ்வுடன் அவர்களைப் போற்றி வளர்த்தனர். இரண்டாவது பிள்ளைக்கு மூன்று வயது ஆனவுடன் உபநயன கர்மா செய்ய வேண்டுமென்று, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தனர். ஆனால் எதிர்பாராதபடி திடீரென்று அந்தக் குழந்தைக்கு தனுர் வாதம் என்னும் நோய் கண்டு கைகால்களில் இழுக்க ஆரம்பித்தது. மூன்று நாள் அவஸ்தைப்பட்டு குழந்தை மரணமடைந்து விட்டது.

தாயார் துக்கம் தாளாமல் குழந்தையின் சவத்தின் மீது, புரண்டு அழுது, என் கண்மணியே! எப்படி என்னை விட்டுப் பிரிந்தாய்? உன் மழலைச் சொற்களைக் கண்டு மகிழ்ந்தேனே. எல்லாம் கனவாகப் போய் விட்டதே. சற்குரு தந்த வரத்தாலல்லவோ, நீ என் வயிற்றில் வந்தாய். எனக்கு ஒரு குறையுமில்லை என்று வாழ்ந்தேனே. இப்படி என்னை ஏமாற்றி விட்டுச் செல்லலாமா? என்று அனேகவிதமாகச் சொல்லிப் புலம்பி அழுதாள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s