குருவைத் தேடி – 23

week23
ஒருநாள் குருதேவர் இந்தப் பிராமணனுடைய வீட்டிற்குப் பிட்சைக்குச் சென்றார். தன் ஏழ்மையான நிலையிலும் வருகின்ற அதிதிகளை ஆதரிக்கும் இயல்பைக் கொண்டிருந்த பிராமணன் குருவைத் தன் மனைவியுடன் வரவேற்று வணங்கினான். மிகுந்த பக்தியுடன் அவரைப் பூஜித்து உரிய உபசாரங்களைச் செய்து, அன்று அவன் மனைவி வெறும் அவரைக்காய் கறியை மட்டும் சமைத்திருந்தபடியால் அதை மட்டும் வெட்கத்துடன் அவருக்கு உணவாகப் படைத்தான்.

குரு அவனுடைய பக்தி சிரத்தையால் மகிழ்ந்து அவனுடைய வறுமையைக் கண்டு மனமிரங்கினார். இனி உன்னுடைய தரித்திரம் ஒழிந்து போய் விடும் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். அப்படிப் போகும்போது அவர் வீடு முழுவதும் வளர்ந்து படர்ந்திருந்த அவரைக் கொடியை வேருடன் பிடுங்கி எறிந்துவிட்டுப் போனார். அவர் செய்கையைக் கண்டு அந்தப் பெண் பதறி விட்டாள்.

அவர் சென்ற பிறகு அவள் மிகவும் வேதனைப்பட்டு ‘ இந்த சந்நியாசிக்கு நாம் என்ன தீங்கு செய்தோம்? நம்முடைய உணவைத் தட்டிப் பறித்து விட்டுப் போகிறாரே. இந்த அவரைக்கொடி என்ன செய்தது?” என்றுகோபத்துடன் புலம்பினாள். இதைக்கேட்டு அவள் கணவன் அவளைக் கண்டித்து, ஆண்டவன் என்ன செய்வான்? சந்நியாசி தான் என்ன செய்வார்? நம்முடைய பிராரப்தம் இப்படி இருக்கிறது. அவனுடைய ஆணை இல்லாமல் ஓர் அணுவும் அசையாது. முத்தொழிலுக்கும் அவனே காரணமாக இருக்க ஒருவரை ஏன் நிந்திக்க வேண்டும்? எறும்பு முதல் யானை வரையிலுள்ள 84 லட்ச ஜீவராசிகளுக்கும் ஆகாரம் நிர்ணயம் செய்த பிறகு தான் அவற்றைப் படைத்திருக்கிறான்.

மேலும் யாரையும் நாம் குறை சொல்லிப் பழிக்கக்கூடாது. அரசனும் பிச்சைக்காரனும், கடவுளுக்குச் சமமானவர்கள். முன் ஜன்மத்தில் செய்த புண்ணிய பாவங்களை அனுசரித்து, நாம் பலனை அடைகிறோம். அவரை விதைத்தவர்க்குத் துவரை கிடைக்குமா? கடவுளை நிந்தித்து என்ன பயன்? அந்த சத்குரு நம்மைக் காப்பாற்றுவார். அவர் சொன்னபடி நம்முடய ஏழ்மை நிலையை அவர் நிச்சயம் அகற்றுவார். கவலைப்படாமல் வேலையைப் பார்! என்று ஆறுதல் சொன்னான்.

இருவரும் சமாதானம் அடைந்து வாடிக்கிடந்த அவரைக்கொடியை அப்புறப் படுத்துவதற்கான வேலையில் ஈடுபட்டனர். கணவன் அந்த அவரைக் கொடியை வேருடன் பிடுங்கி எறியும் பொருட்டுத் தோண்டினான். அப்படித் தோண்டிய இடத்தில் ஒரு பானை தட்டுப்பட்டது. ஆச்சர்யப்பட்டு மேலும் தோண்டி அந்தப் பானையை வெளியில் எடுத்துப் பார்த்தபோது அது புதையல் என்பது தெரிந்தது. இருவரும் அப்படியே திகைத்துப் போய்விட்டனர்.

வந்த குருதேவரின் அருள்தான் இது என்று கண்ணீர் விட்டு அழுது கரம் கூப்பித் துதித்தனர். பிறகு அந்தப் பானையை ஒருவருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துவிட்டு சங்கமஸ்தானத்திற்கு ஓடினார்கள். அங்கு அத்தி மரத்தடியில் அமர்ந்திருந்த குருவின் திருவடிகளில் விழுந்து வணங்கி, நிகழ்ந்தவற்றைக் கூறினார்கள்.

குரு புன்சிரிப்புடன் அவர்களை ஆசீர்வதித்து இந்த சமாச்சாரத்தை எவரிடமும் சொல்ல வேண்டாமென்றும், அப்படிச் சொன்னால் லட்சுமி வீட்டில் தங்கமாட்டாளென்றும், இனி அவர்களுக்கு ஒரு குறையுமில்லை என்றும் கூறினார். குரு சொன்னவற்றை பக்தியுடன் தலை வணங்கி ஏற்றுத் தம்பதியர் வீடு திரும்பி அந்த செல்வத்தைப் பயன்படுத்தி நிறைவுடன் வாழ்ந்தனர்.

குரு கிருபை ஏற்பட்டால் அவருடைய தயவால் நம்முடைய எல்லாக் குறைகளும் தீரும். எவனுக்குத் தெய்வபலம் குறைவாக இருக்கிறதோ அவன் குருவை வணங்கி பூஜித்தால் இகத்திலும் பரத்திலும் சுகமடைந்து அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் நிறைவாய் வாழ்வான்.


ஒற்றன் பக்தனாகிய கதை

ஓர் ஏழை பிராமணன் குரு கிருபையால் செல்வ வளத்தைப் பெற்று சுகமாய் வாழ்ந்த கதையை சித்தர் சொல்லக் கேட்ட நாமதாரகன், சுவாமி! வேத சாஸ்திரங்களில், அஸ்வத்த மரம் என்று குறிப்பிடப்படுகின்ற அரசமரத்தைத் தான் மரங்களின் அரசன் என்று சொல்வார்கள். ஆனால் குருதேவர் ஔதும்ப மரத்தின் அடியில் ஏன் தங்கி அங்கு வசித்தார்? என்று வினவினான்.

சித்தர் அதற்குரிய விளக்கத்தை எடுத்துரைத்தார். முன்பு ஒரு காலத்தில் மகா விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து, அசுரனான ஹிரண்யகசிபுவை வதம் செய்தார் அல்லவா? அச்சமயத்தில் அவன் கேட்ட வரத்தின்படி எந்த வித ஆயுதத்தையும் பயன்படுத்தாமல் தன் கை நகங்களையே ஆயுதமாகப் பயன்படுத்தி, அவனது வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி எடுத்துக் கொன்றார். அச்சமயத்தில் அவ்வசுரனின் வயிற்றில் இருந்த காளகூடம் என்ற விஷம் நரசிம்மரின் நகங்களில் பட்டு விரல்களின் வழியே உடலில் உக்கிரமான வெப்பத்தைக் கொடுத்தது. அத்தருணத்தில் மகாலட்சுமி அதைக் கவனித்து உடனே அத்திப்பழங்களைப் பறித்து வந்து நாராயணனின் நகங்களிலே புதைத்து வைத்தாள். அத்திப்பழம் பட்டதும் விஷமுறிவு ஏற்பட்டு, நகக் கண்களிலும் உடலிலும் ஏற்பட்ட எரிச்சல் அடங்கி உக்கிர நரசிம்மமூர்த்தி சாந்தமடைந்தார். அப்பொழுது மகா விஷ்ணுவும், லட்சுமியும் சமயத்தில் உதவிய அத்திமரத்திற்குப் பல வரங்களை அளித்தனர்.

கலியுகத்தில் அத்தி மரத்தைக் கற்பகத்தரு என்று கருத வேண்டும் என்றும் அந்த மரத்தில் தாங்கள் இருவரும் வாசம் செய்வதாகவும் இந்த மரத்தை எவர் பக்தியுடன் பூஜிக்கிறார்களோ, அவர்களது பிரார்த்தனைகள் எல்லாம் நிறைவேறும். சகல விஷங்களும் நீங்கும். மலடிகளுக்குப் புத்திரப் பேறு கிடைக்கும். இந்த மரத்தடியில் தியானம் செய்தால் ஞானமும், பக்தியுடன் வலம் வந்தால் சகல செல்வங்களும் வாய்க்குமென்று வாழ்த்தினர்.

இப்படிப்பட்ட மிகச் சிறப்பான அத்தி மரத்தின் அடியில் மும்மூர்த்திகளின் அவதாரமான ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி குரு தேவர் வந்து தங்கியதால் அதன் மகிமை மேலும் பெருகியது. அவர் அவ்விடத்தை விட்டு நீங்கிப் பிறகு வேறு இடங்களுக்குச் சென்றாலும் கூட அவரது சக்தி அங்கு நிறைந்து விளங்;கியது. அந்த ஊரும் அத்தி மரமும் மிகுந்த பிரசித்திப் பெற்ற புண்ணியப் பிரதேசமாக மாறி விட்டன.

இப்படி அந்தப் புனித மரத்தடியில் குரு நாதர் வாழ்ந்து வந்தபோது, அந்த கிராமத்திலிருந்த சில வேலையற்றவர்களுக்கு இவர் எப்படி சாப்பிடுகிறார், என்ன செய்கிறார், இவருக்கு என்ன பெருமை? என்றெல்லாம் வேண்டாத சந்தேகங்கள் ஏற்பட்டன. இதனைக் கண்டறிய வேண்டுமென்று ஓர் ஆளை ஏற்பாடு செய்தனர்.

அவன் ஒருநாள் மத்தியான வேளையில் சங்கம ஸ்தானத்தை அடைந்து, ஓரிடத்தில் மறைந்து நின்றபடி அத்திமரத்தடியில் அமர்ந்திருந்த குரு என்ன செய்கிறார்? என்பதைக் கண்டறிந்தான். அப்பொழுது அவன் மனதில், ஒருவன் குருவின் செயல்களைக் கண்காணிக்க ஆரம்பித்தால், அவனுக்கு யமலோகம் தான் போக வேண்டியிருக்கும். அவன் அதோ கதிதான். எனக்கு இப்படி ஒரு சோதனை ஏற்பட்டதே என்று ஒரு பயம் உதித்தது. இருந்தாலும் வயல்புறமாகப் பதுங்கியிருந்து பார்த்தான்.

அச்சமயத்தில் அந்த பஞ்சகங்கா சங்கம ஸ்தானத்திலிருந்து அறுபத்து நான்கு யோகினிகள் வெளிப்பட்டு வந்து குருவை அடைந்து, அவரைக் கைகூப்பி வணங்கினர். முறைப்படி பலவிதமாகப் பூஜைகள் செய்தனர். பின்னர் அவரை நதிக்கரைக்கு அழைத்துச் சென்று நதியில் இறங்கி மறைந்து விட்டனர். சிறிது நேரம் சென்றதும் மறுபடியும் நதி இரண்டாகப் பிரிய, அதிலிருந்து குரு வெளியே வந்து அத்தி மரத்தடியை அடைந்தார்.

எல்லாவற்றையும் கவனித்த அந்த மனிதனுக்கு ஒன்றும் புரியவில்லை. நதி எப்படி வழி விட்டது? எப்படி இவர் மீண்டும் வெளியில் வர முடிந்தது? என்றெல்லாம் எண்ணிக் குழம்பினான். பிறகு யாரிடமும் எதுவும் சொல்லாமல் வீட்டிற்குச் சென்றுவிட்டான். மறுநாள் சீக்கிரமாகவே நதிக்கரைக்கு வந்து மறைந்துகொண்டு என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

மதிய வேளை வந்தது. முதல் நாளைப் போலவே அந்த யோகினிகள் நதியிலிருந்து வெளிப்பட்டு குருவை பூஜை செய்து அழைத்து வந்தனர். குரு அவர்களுடன் நதிக்கரையை அடைந்ததும் அங்கு ஒளிந்துகொண்டிருந்த மனிதன் மேலும் நெருக்கமாக வந்து மறைந்து நின்றான். அவ்வேளையில் அந்த நதி இரண்டாகப் பிரிந்தது. குருவை அழைத்துக்கொண்டு அவர்கள் உள்ளே நுழையும்போது சட்டென்று அந்த மனிதனும் திருட்டுத்தனமாக நுழைந்து விட்டான்.

அந்த நதியின் உள்ளே தேவேந்திரப் பட்டணமான அமராவதியைப் போல் பிரகாசிக்கும் நகரம் ஒன்று தென்பட்டது. அந்த ஊரிலுள்ளவர்கள் இவர்களைக் கண்டவுடன் ஆரத்திகொண்டு சுற்றி வரவேற்றனர். குருவை ஒரு ரத்தின சிம்மாசனத்தில் அமர்த்திப் பதினாறு விதமான பூஜைகளைச் செய்தனர். பிறகு அவருக்கு அறுசுவைகளுடன் கூடிய பிட்சையளித்தனர். மறைந்திருந்து எல்லாவற்றையும் கவனித்து வந்த மனிதன் குருதேவர் இறைவனின் அவதாரமானதால்தான் இத்தகைய அற்புதங்கள் நடக்கின்றன என்று நினைத்து வியந்தான்.

உபசாரங்களும் உணவும் முடிந்த பின் மீண்டும் அந்த யோகினிகள் குருவை அழைத்து வந்து நதியிலிருந்து வெளியில் கொண்டு வந்து விட்டுச் சென்றனர். அவர்களுடன் அந்த மனிதனும் வெளியில் வந்து விட்டான். அப்படி அவன் வந்ததைக் குரு பார்த்து விட்டார். உடனே அவனை வன்மையாகக் கண்டித்தார். அவனோ அவர் காலில் விழுந்து வணங்கித் தன்னை மன்னிக்கும்படியும், அவரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலுடனேயே தான் வந்ததாகவும் கூறினான். மேலும் அவன் குருவை நோக்கி தாங்கள் மும்மூர்த்திகளின் அவதாரம். எனக்கு ஞானமில்லை. அறியாமையால் செய்த பிழையைத் தாங்கள் பொறுத்தருள வேண்டும். தங்களை தரிசித்தால் எல்லா விருப்பங்களும் நிறைவேறி நினைத்ததெல்லாம் நடக்கும் என்ற எண்ணத்தில் தங்களை சாதாரணமாகத் தரிசிக்கவே நான் வந்தேன். ஆனால் அப்படி வந்த இடத்தில் இந்த வைபவங்களெல்லாம் காணக்கூடிய பாக்கியம் கிடைத்தது. இந்த சம்சார பந்தங்களிலிருந்து தாங்கள் தான் என்னை விடுவிக்க வேண்டும் என்று பக்தியுடன் கூறி மீண்டும் வணங்கினான்.

அவன் உண்மையிலேயே மனம் மாறி வருந்துவதை உணர்ந்து கொண்ட குரு மகிழ்ந்து அவனை ஆசிர்வதித்தார். பிறகு அவர் நீ இன்று பார்த்த அதிசயங்களை யாரிடமாவது சொன்னால் உடனே உன் உயிருக்கு ஆபத்து நேரிடும், ஜாக்கிரதை! என்று எச்சரித்தார். தனக்கு அந்த எண்ணமே இனி இருக்காது என்று கூறியவன் பிறகு தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் தினமும் குரு ஸ்தானத்திற்கு வந்து அவருக்குப் பூஜைகள் செய்தும் பணிவிடைகள் செய்தும் வந்தான். குருவின் ஆசியால் அவனுக்கு வயலிலிருந்து புதையல் கிடைத்து சுக வாழ்வுடன் வாழலானான்.

இப்படியிருக்க ஒருநாள் அந்த மனிதன் குருவிடம், இன்று மாசி மாதப் பௌர்ணமி தினமாக இருக்கிறது. மாசி மாதத்தில் பிரயாகையிலும் காசியிலும் ஸ்நானம் செய்தால் சிறப்பு என்று சொல்கிறார்களே, அது ஏன்? என்று கேட்டான். அதற்குக் குரு, அவற்றையெல்லாம் விட இந்த பஞ்சகங்கைளைப் பிரயாகை என்றும், குரு வசிக்குமிடத்தைக் காசி என்றும் கருத வேண்டும். கோல்ஹாபூர் என்ற ஊரைத் தட்சிணப் பிரயாகை என்றே சொல்லலாம் என்று அவற்றை விட சிறப்பானவை இவை என்பதை அந்த பக்தனுக்கு உணர்த்தினார்.

பிறகு, அந்த இடங்களை இன்று நீ பார்க்கவேண்டுமென்று விரும்பினால் ஒன்று செய். நான் அமர்ந்திருக்கின்ற இந்த புலித்தோலைப் பிடித்துக்கொள்.! என்று சொன்னார். அவனும் அவ்வாறே செய்தான். ஒரு கணப் பொழுதில் இருவரும் பிரயாகையை அடைந்தனர். காலை ஸ்நானத்தை அங்கு முடித்து உடனே மத்தியானத்தில் காசிக்கு வந்தனர். அங்கு விசுவநாதரைத் தரிசித்து உடனே கயா சென்றனர். அங்கு இறைவனை ( ஸ்ரீ விஷ்ணு பாதம்) வணங்கிவிட்டு மீண்டும் காசி வந்து பிரயாகையையும் அடைந்து இரவு தங்களது சங்கம ஸ்தானத்திற்குத் திரும்பி விட்டனர். இந்த அதிசயத்தை நடத்திக் காட்டிய குருவின் பெருமை எப்படியோ ஊர் முழுவதும் பரவலாயிற்று.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s