குருவைத் தேடி – 22

கதிரவன் மறைந்ததும் உபமன்யுவும் பசுக்களும் வீடு திரும்பாததால் அவர்களைத் தேடிக்கொண்டு குரு காட்டிற்கு வந்தார். அங்கு ஒரு பாழுங் கிணற்றினருகே பசுக்கள் அழுது கொண்டு நிற்பதைக் கண்டு சஞ்சலமடைந்து உபமன்யுவைப் பெயரைச் சொல்லி கூப்பிட்டார். குருவின் குரலைக் கேட்ட உபமன்யு கிணற்றிலிருந்தவாறே, இங்கிருக்கிறேன் குருவே! என்று பதிலளித்தான்.

கருணையின் வடிவமான குரு அவனிடம் நடந்த விவரங்களைக் கேட்டு அசுவினி தேவதைகளைத் தியானிக்கும்படி சொன்னார். அவன் அவ்வாறு தியானிக்க, இழந்த பார்வையைத் திரும்பப் பெற்றான். உடனே மேலே ஏறிவந்து குருவை வணங்கிப் போற்றினான். அன்பே உருவான குரு அவனைக் கட்டித் தழுவி உச்சி மோர்ந்து, குழந்தாய் உன்னை நான் மிகவும் சோதித்து விட்டேன். உன் பக்தியை நான் மெச்சுகிறேன்! என்று சொல்லித் தன் வரத பூர்வ கரத்தை அவன் சிரசின் மீது வைக்க, அதே கணத்தில் எல்லா ஞானமும் பெற்று பண்டிதன் ஆனான். பசுக்களுடன் அவனையும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்த குரு அவனுக்கு உரிய ஆசிர்வாதங்களை வழங்கி, இனி நீ உன் தாய் தந்தையரை அடைந்து அவர்களுக்குப் பணிவிடைகளை செய்து, நல்லமுறையில் திருமணம் செய்து கொண்டு சுகமாய் வாழ்வாய்! என்று கூறி அவனை வழியனுப்பி வைத்தார்.

மேலும் அவர், உபமன்யு! நீ சிறந்த ஆச்சாரியனாக விளங்குவாய்! உனக்கு உத்தங்கன் என்னும் சீடன் அமைந்து அவனால் உனது புகழ் நான்கு திசைகளிலும் பரவும். அந்த உத்தங்கன் என்னும் சீடன் ஆதிசேடனை வென்று, ஜனமேஜயன் என்ற அரசனுக்கு சர்ப்ப யாகம் செய்ய உதவியளித்து, யாகத்தில் தட்சகனை இந்திரனுடன் கொண்டு வருவான். அதன் மூலம் உனது சாமர்த்தியத்தையும், புகழையும் பரப்புவான்! என்றும் சொல்லி ஆசி வழங்கினார்.

இந்த வரலாறுகளையெல்லாம் குரு நரஸிம்ம ஸரஸ்வதி அந்த முனிவரிடம் சொல்லி, குருத் துவேஷம் செய்கிறவர்களுக்குப் பரலோகமில்லை. கும்பி பாகம் என்ற நரகத்தை அவர்கள் அடைய நேரிடும். குருவின் மனதில் நிறைவு ஏற்பட்டால் அந்த சீடனுக்கு ஒரு கணத்தில் ஞானம் ஏற்பட்டு, சகல சாஸ்திரங்களையும் அறிய முடியுமென்று சொன்னார்.

பிறகு அந்த முனிவரிடம், உன் தகுதி என்னவென்று உன்னை விட உன் குருவிற்குத் தான் தெரியும். நீ மீண்டும் உனது குருவிடம் சென்று அவருக்குப் பக்தியுடன் பணிவிடை செய்து அவர் மனதைக் குளிரச் செய்! என்று உத்திரவிட்டார்.

அந்த முனிவர் குருவைப் பக்தியுடன் வணங்கி, ‘சத்குருவே! உம்முடைய விளக்கத்தால் நான் குருத்துரோகி என்ற உண்மையை அறிந்தேன். குருவின் பெருமையை அறியாமல் பெரிய அபராதம் செய்து விட்டேன். இப்போது என் பிழையை உணர்ந்தேன். தங்கம், இரும்பு முதலிய உலோகங்கள் உடைந்து விட்டால், அவற்றைக் காய்ச்சி உருக்கி ஒன்று சேர்த்து விடலாம். முத்து உடைந்து விட்டால் அதை எப்படி மீPண்டும் ஒன்று சேர்க்க முடியும்? குருவின் மனம் உடையும்படி செய்து விட்டேனே! நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்? என்று சொல்லிக் கண்ணீர் விட்டார். பிறகு வைராக்கியத்துடன் தன் பிராணனை மாய்த்துக்கொள்ள எண்ணிப் புறப்பட்டான்.

அவன் தன் பிழையை உணர்ந்து வருந்தியதால் அவனது எல்லாக் குற்றங்களும் மறைந்து போயின. வைக்கோல் போரில் தீ பட்டவுடன் எப்படி அது உடனே எரிந்து சாம்பலாகின்றதோ, பருத்தி மூட்டையில் நெருப்புப் பட்டதும் அது எப்படி எரிந்து விடுகிறதோ அதுபோலத் தன் பிழையை உணர்ந்து ஒருவன் மனப்பூர்வமாக வருத்தப்பட்டால், அவனது நுhறு ஜென்மப் பாவங்களும் கூடத் தொலைந்து விடும் என்பது ஆன்றோர் வாக்கு.

குரு தேவர் அந்த முனிவனின் திட வைராக்கியத்தைக் கண்டு அவரைக் கூப்பிட்டு அவருக்கு அளவற்ற ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லித் தன் குருவை அவன் மனதில் நினைத்து, அவருடைய சரணங்களில் வணங்கும்படி சொன்னார். அதைக் கேட்டு, தங்களின் கிருபையால் தான் நான் திருந்தினேன். எனக்குத் தாங்கள் நல்வழி காட்டினீர்கள்! என்று அந்த முனிவர் மேலே பேச முடியாமல் தழுதழுத்து அவரை நமஸ்கரித்தான். அதே சமயம் தன் குருவையும் மனதில் தியானித்து அவரது திருவடிகளையும் வணங்கினார். ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி அவனது மனமாசு நீங்கிற்றென்று சொல்லி அவரது தலையில் தன் கரத்தை வைக்க, மறுகணம் அவர் எல்லா ஞானமும் பெற்று, வேதம், சாஸ்திரம், மந்திரம் முதலியவற்றில் பண்டிதனானான். மேலும் ஸத்குரு, நீ உனது குருவிடம் போய்ச் சேர்ந்து, அவரை மனப்பூர்வமாக வணங்கு. நிச்சயம் அவர் உன்னை மன்னித்து ஏற்றுக் கொள்வார்! என்று விடை கொடுத்து அனுப்பினார்.

பிறகு ஸ்ரீ குருதேவர் அந்த ஊரை விட்டு நீங்கிக் கிருஷ்ணா நதி மேற்குத் திக்கை நோக்கிப் பாயுமிடமான புவனேஸ்வர் என்ற புண்ணிய தலத்திலுள்ள பில்லவடி என்ற கிராமத்தில் ஔதும்பரம் என்று அழைக்கப்படுகின்ற அத்தி மரத்தடியில் மறைவாகத் தங்கி வசிக்கலானார்.

மூடன் ஞானம் பெற்ற கதை

ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி ஸத்குருவின் சரித்திரத்தை ஸித்தர் இப்படி விவரமாகச் சொல்லிக்கொண்டே வர, வழிப்போக்கனான நாமதாரகன் தணியாத தாகத்துடன் மிகுந்த அக்கறையுடன், அதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனது சிரத்தையைக் கவனித்த ஸித்தர் மகிழ்ந்து, குரு பக்தி சிகாமணியான நாம தாரகா! உனக்குக் குரு கிருபை சீக்கிரமே கிடைக்கும். எப்படி மழை வருவதற்கு முன்பு குளிர்ந்த காற்று வீசுகிறதோ, அதுபோலக் குரு கிருபை ஏற்படும் முன், குரு சரித்திரத்தைப் படிக்கவோ, கேட்கவோ ஒருவனுக்கு ஆர்வம் ஏற்படும். அப்படிப்பட்ட ஆர்வமே உன்னிடம் காணப்படுகிறது! என்று அவனைப் பாராட்டினார்.

பிறகு குருவின் கதையைத் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார். முன்பு இருந்த ஊரில் அவர் புகழ் பரவ ஆரம்பித்து விட்டபடியால், குரு தொடர்ந்தும் அங்கிருக்க விரும்பாமல் முன் சொன்ன பில்லவடி கிராமத்திற்குச் சென்று தங்கினார். சந்நியாசிகள் சாதுர் மாஸ்ய விரத காலத்தில் எங்கும் செல்லாமல் ஓரிடத்திலேயே தங்கி இருந்து விரதமிருப்பார்கள். அதன்படி குரு அந்த ஊரிலேயே ஒருவரும் அறியா வண்ணம் எளிமையாக வசித்து வந்தார். இருந்தபோதிலும் அவர் அங்கு தங்கியதாலேயே அந்த இடத்திற்கு மகிமை வந்தது.

உலகில் சூரியனை ஒளித்து வைக்க முடியாது. கஸ்தூரியை மூடி மறைத்தாலும் அதன் வாசனை வெளி வராமல் இருக்காது. அதுபோல் குரு மறைவாக இருந்தாலும், ஊர் மக்களுக்கு இவர் ஒரு மகான் என்பது தெரிந்து விட்டது. கொஞ்சம் கொஞ்சமாகப் பக்தர்கள் தேடி வந்து வணங்க ஆரம்பித்தனர். தாங்கள் நினைத்ததையெல்லாம் வரமாகக் கேட்டனர்.

இது இப்படி இருக்கக் கரவீரம் என்ற ஊரில் ஒரு பண்டிதன் மிகப் பிரசித்தமாக இருந்தான். அவன் கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கி புகழ் பெற்றிருந்தாலும், அவனது ஒரே மகன் நேர் விரோதமாக மூடனாக இருந்தான். தந்தை எவ்வளவோ முயற்சி செய்து அவனுக்கு வேதங்களைக் கற்பிக்க முயன்றும் அவனுக்கு ஏறவேயில்லை. மூடன் மகனாக வாய்த்தானே என்ற ஏக்கத்திலேயே பண்டிதன் இறந்து போனான். தாய் முன்பே இறந்துவிட்டாள்.

இந்நிலையில் அனாதையாகிவிட்ட சிறுவனை ஊரார் நிந்திக்கத் தொடங்கினர். “ஏ! மூடனே! எதைக் கற்றுக்கொண்டாலும் மறந்து விடுகிறாயே! உன் தந்தை இருந்த இருப்பென்ன? அவருக்கு இப்படி ஒரு பிள்ளையா? நீ வாழ்ந்து என்ன பயன்? வித்தை இல்லாவிட்டால் உன்னை யார் மதிப்பார்கள்? செல்வனுக்கு அவனது ஊரில் மதிப்பு. பண்டிதனுக்கோ சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். மன்னரும் படித்தவர்களத் தான் கொண்டாடி சபையில் வைப்பார்கள். நீ இப்படி மூடனாய் இருக்கிறாயே!” என்று ஏசிப்பேசி கேலி செய்ய, அவன் மனம் உடைந்தவனாய், இனி வித்தை கற்காமல் ஊர் திரும்புவதில்லை என்று வைராக்கியம் கொண்டு புறப்பட்டான்.

அனாதையான அந்தச் சிறுவன் ஊர் ஊராக அலைந்து திரிந்து கடைசியில் பில்லவடி கிராமத்தை வந்தடைந்தான். அங்கு புவனேச்வரி அம்மன் கோவிலுக்குச் சென்று சந்நிதியில் அமர்ந்து விட்டான். ஊண், உறக்கமின்றி, ஸ்நானம், சந்தி என்ற எவ்வித நியமமுமின்றி ஒரே பிடிவாதமாக அம்பாளிடம் தனக்கு ஞானம் தரும்படி சத்தியாக்கிரகம் செய்தான். மூன்று நாட்களாகியும் அவனுக்கு அம்பாள் தரிசனம் தராததால், தன் நாக்கை அறுத்து சமர்ப்பணம் செய்தான். அம்பாள் அவனுக்குக் காட்சி தரவில்லை. கோபம் கொண்ட அவன் தன் தலையை வெட்டி அம்பாளுக்குக் காணிக்கை செலுத்தப் போவதாக சபதம் செய்து வாளை ஓங்கினான்.

அவனது பக்தியையும் வைராக்கியத்தையும் கண்ட ஜகன்மாதா அவனைத் தடுத்து நிறுத்தி, உனக்கு என்னால் எதுவும் செய்ய இயலாது. கிருஷ்ணாநதியின் எதிர்க்கரையில் ஓர் அத்தி மரம் இருக்கிறது. அந்த மரத்தடியில் ஒரு மகான் எளிய தோற்றத்தில் வாசம் செய்கிறார். அவரிடத்தில் சென்று ஞானத்தைப் பெற முயற்சி செய்! அவர் மனம் வைத்தால் உன் கோரிக்கை நிறைவேறும்! என்று சொன்னாள்.

அவன் உடனே அக்கோயிலிலிருந்து வெளியேறிக் கிருஷ்ணா நதியில் குதித்து நீந்தி அக்கரையை அடைந்தான். அங்கே மரத்தடியில் அமர்ந்திருந்த குருவின் சரண கமலங்களில் நமஸ்கரித்து தன் வேண்டுதலைத் தெரிவித்தான். அம்பாள் அனுப்பி வைத்ததைக் கூறினான். அவன் சொன்னவற்றைச் செவி மடுத்த குரு அவனைத் துhக்கி நிறுத்தி ஆசீர்வதித்தார்.

மானசரோவரில் மூழ்கி எழுந்த காகம் அன்னமாக மாறிவிட்டதைப் போல, ஜம்புநாதமென்ற தெய்வீக நதியில் உள்ள மண்ணாங்கட்டி தங்கமாக மாறிவிட்டதைப் போல, குருநாதரின் கரம் பட்டதும் இந்த மூடச் சிறுவன் சகல வேத சாஸ்திரங்களிலும் வல்ல பண்டிதனாக மாறிவிட்டான். உடனே மந்திரங்களைச் சொல்லி குருநாதரைத் துதிக்கத் தொடங்கினான்.

வறுமையை ஒழித்த கதை

சித்தர் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, நீ இப்படிக் கேட்கக் கேட்கத்தான் எனக்கு ஒவ்வொரு கதையாக நினைவிற்கு வருகிறது என்று சொல்லிச் சிரித்தார். நாமதாரகன் மகிழ்ந்து சத்குருவின் சரித்திரத்தை எவ்வளவு கேட்டாலும் திருப்தி ஏற்படவில்லை, நீங்கள் சொல்லிக்கொண்டே இருங்கள்! என்று அவரை வணங்கினான்.

சித்தரும் சொல்லத் துவங்கினார். பில்லவடி கிராமத்திலும் குருவின் மகிமை வெளிப்பட்டுப் பிரசித்தமாகி விட்டது. எனவே அவர் இந்த இடத்தை விட்டு வெளிப்பட்டு, தட்சிணகாசி என்று புகழப்பட்ட வருணா சங்கமத்தை அடைந்தார். நீர் வளம் மிகுந்து காணப்பட்ட பஞ்சகங்கா என்ற இடத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் வசிக்கலானார். குரு தங்கிய இடம் காசி, பிரயாகை போன்று மிகவும் புண்ணியத்தலம். அங்கு இருந்த குரவபுரம் என்ற கிராமம் குரு சேத்திரம் போன்ற சிறப்பு பெற்றது. அங்கு சிவா, பத்ரா, போகவதி, கும்பி நதி, சரஸ்வதி என்ற ஐந்து நதிகள் ஒன்றாகச் சேர்கின்றன. பொதுவாக ஒரு நதி கடலில் சங்கமமாகின்ற இடமே புனிதமானது என்று சொல்வார்கள். அந்த இடத்தில் ஐந்து நதிகள் ஒன்றாக இணைந்து ஒரு நதியாக மாறிக் கடலை நோக்கிச் செல்லுகின்றன என்றால் இதன் சிறப்பைச் சொல்லவும் வேண்டுமா? இந்த இடத்தில் ஒருதரம் ஸ்நானம் செய்தாலும் எல்லாப் பாவங்களும் நசித்துப் போகும்.

அப்படிப்பட்ட சங்கம ஸ்தானத்தில் அமராபுரம் என்றொரு புனித கிராமமும் இருந்தது. அந்த ஊரிலே கற்பக மரத்தைப் போன்ற ஒரு புண்ணிய அத்தி (ஔதாம்பரம்) மரம் இருந்தது. மேலும் அவ்வூரில் இருக்கும் அமரேஸ்வரன் என்னும் சிவன் கோவில் அவ்விடத்தின் மகிமையால் பிரசித்தி பெற்றது. அந்த ஊரிலே ஏராளமான தீர்த்தக் குளங்கள் இருந்தன. அவற்றிலே அத்தி மரத்தின் எதிரிலே அமையப் பெற்ற மூன்று முக்கிய தீர்த்தங்கள் மனோகரத் தீர்த்தம், பாபவிநாசத் தீர்த்தம், சித்த வரத தீர்த்தம் என்பவை. இவை தவிர பிரயாகை தீர்;த்தம், சக்தி தீர்த்தம், அமர தீர்த்தம், கோடி தீர்த்தம் முதலியவையும் முக்கியமானவை. இப்படி அமைந்த ஓர் அருமையான புண்ணியத்தலத்தைத் தேர்ந்தடுத்து அங்கு குரு ஸ்ரீ நரஸிம்ம சரஸ்வதி 12 வருடங்கள் வாசம் செய்தார்.

குரு குரவபுரத்திலும் அமரபுரத்திலும் நடமாடிக்கொண்டு இருந்தபடியால் அவ்வூர் மக்களுக்கு அவரிடத்தில் பக்தியும் பணிவும் உண்டாயிற்று. அவ்வூர் மக்கள் குருவிற்குப் பிட்சையளித்து அவரது தேவைகளைக் கவனித்து அனுக்கிரகத்தைப் பெற்றனர். இப்படி இருக்கும்போது அவ்வூரிலே ஓர் ஏழைப் பிராமணன் தன் மனைவியுடன் வசித்து வந்தான்.

அவன் பிராமண தர்மப்படி பிட்சையெடுத்து அதைக்கொண்டு வாழ்;ந்து வந்தான். அவன் வீட்டில் ஒரு பெரிய அவரைக்கொடி வளர்ந்து ஏராளமாய்க் காய்த்தது. பிட்சை சரியாகக் கிடைக்காத காலங்களில் இந்த அவரைக் காய்களைப் பறித்து சமைத்து அவர்கள் உண்பார்கள். அவன் குருபக்தி மிகுந்தவன். ஆகையால் எத்தகைய உணவு என்றாலும் குருவைப் பிரார்த்தித்து அவரை பூஜை செய்து அதை நிவேதனம் செய்துவிட்டுப் பிறகுதான் சாப்பிடுவான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s