குருவைத் தேடி – 21

இவ்வாறு ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபரின் புனர் ஜன்மத்தில் நரஹரி என்ற பாலகனாக இருந்து அந்த பால பருவத்திலேயே ஒரு குருவின் மூலம் சந்நியாச தீட்சை பெற்று ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி என்ற திருநாமத்தையும் பெற்றார் நமது குருநாதர். அதோடு அவர் காசி மாநகரில் தங்கி அங்குள்ள சந்நியாசிகளுக்கு வேதாந்தத்தைச் சொல்லி வணங்கப் பெற்றார். காசியில் இவருடைய புகழ் எங்கும் பரவியது. செல்லுமிடமெல்லாம் அவருக்கு அனேக சீடர்கள் வந்து சேர்ந்தனர்.

அவர் காசியிலேயே தங்கியிராமல் சந்நியாச தர்மப்படி அனேக சீடர்களுடன் வடக்கில் பதிரி வனம் சென்று அப்பகுதியிலுள்ள புண்ணியத் தலங்களைத் தரிசித்துக்கொண்டு மேரு பர்வதத்தை வலம் வந்து பூமிப் பிரதட்சணமாக யாத்திரை மேற்கொண்டார். அவர் போகாத ஊர் இல்லை என்றே சொல்லலாம். அவ்வகையில் கங்கா சாகரத்தைக் கடந்து அங்கிருந்து பிரயாகைக்கு வந்தார். அங்கு தங்கியிருந்தபோது மாதவர் என்ற ஒரு பிராமணனை சந்தித்தார். அவனுக்கு சந்நியாசம் அளித்துப் பிரம்ம ஞானத்தைப் புகட்டி, மாதவ சரஸ்வதி என்று பெயரிட்டுத் தனது பிரியமான சிஷ்யனாக்கிக் கொண்டார்.

கொஞ்ச காலம் பிரயாகையில் குரு வசித்தபோது அவருக்கு அனேக சீடர்கள் வாய்த்தனர். அவர்களில் ஏழு பேர் மிக முக்கியமானவர்களாய்த் திகழ்ந்தனர். அதில் ஏழாவது சிஷ்யன் தான் நாமதாரகனுக்குக் காட்சி கொடுத்து குரு சரித்திரத்தைச் சொல்லிக்கொண்டு வருகின்ற தான் என்று சித்தரே அவனிடம் கூறினார். ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி இப்படிப்பட்ட தன் மாணவர்களை அழைத்துக்கொண்டு தெற்கே வந்து காஞ்ஜா என்ற நகரத்தை அடைந்தார்.

அங்குதான் அவரது தாயும் தந்தையும் தம் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வந்து எல்லோரும் சந்தித்தனர். குருவின் நான்கு சகோதரர்களும் தங்கையும் அவரை வணங்கினர். அனைவரையும் அவர் ஆசீர்வதித்தார். அப்பொழுது அவரது தாயும் தந்தையும் அவரை வணங்கி, இந்த சம்சாரக் கடலிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி வேண்ட, ஸ்ரீ நரஸிம்ம சரஸ்வதி அவர்களிடம், ஒருவன் சந்நியாசம் வாங்கினால், அவன் தந்தையின் 21 தலைமுறைகளும், தாயின் 21 தலைமுறைகளும் நற்கதி பெறுவார்கள். அவரது குலத்தில் பிறக்கிறவர்கள் பிரம்மபதம் அடைகிறார்கள். அந்த சந்ததியினருக்கு யம பயம் கிடையாது. பித்ருக்கள் யாராவது நரகத்திலிருந்தாலும் அவர்களும் முக்தி பெறுவார்கள். நான் சந்நியாசியாகி விட்டபடியால் உங்களுக்குப் பிரம்மபதம் சத்தியமாகக் கிடைக்கும். மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து பேரன் பேத்திகளை அடைந்து இறுதியில் முக்தித் தலமான காசிக்குச் சென்று அங்கு நற்கதி அடைவீர்கள் என்று விவரித்துக் கூறினார்.

அப்பொழுது ஊர் மக்களெல்லாம் ஒன்று கூடி மகிழ்ந்து வரவேற்பு தந்தனர். அவரைப் பலவாறு போற்றித் துதித்தனர். அங்கு ரத்னாபாய் என்ற பெண்மனி குருவை வணங்கி, தனக்குக் குடும்ப வாழ்க்கை சலித்து விட்டதென்றும், தன்னை தவம் செய்ய அனுமதிக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டாள். அவர் அவளை நோக்கிப், பதிசேவை செய்வது தான் பெண்களுக்கு முதல் கடமை. குடும்பத்தைக் கருத்துடன் பாதுகாத்து சேவையாக எல்லாம் செய்து வந்தால் நற்கதி கிடைக்கும் என்றார்.

அவள் தன் இரு கைகளையும் கூப்பி, குருவே! தாங்கள் ஞான திருஷ்டியால் இரு காலங்களையும் அறிய முடியுமாதலால், எனது முன் ஜென்ம வரலாற்றையும், எதிர் வரும் பிறப்பில் என்ன நடக்கும் என்பதையும் தயவு செய்து சொல்ல வேண்டும் என்றும் கேட்டாள். குரு, அவளுடைய முன் ஜன்ம வாசனையால் தான் அவளுக்குத் தவம் செய்யும் ஆவல் ஏற்பட்டதென்றும், அவளது கர்மாவை அனுபவித்துத் தீர்த்தபின் தான் நற்கதி கிடைக்கும் என்று சொல்லி, மேலும் அவள் போன ஜன்மாவில் ஒரு பசுவைக் காலால் எட்டி உதைத்தாலும், பக்கத்து வீட்டில் வசித்த தம்பதிகளுக்கிடையில் சண்டையை மூட்டி அவர்களுக்கு இடையில் விரோதம் ஏற்படும்படி செய்ததாலும், இனி அவள் வாழ்விலும் சில கஷ்டங்கள் ஏற்படும். அவள் பசுவை உதைத்த பாவத்தால் பெருநோய் ஏற்பட்டு வருந்துவாளென்றும், தம்பதியரைக் கலைத்து விட்டதால் அவளது கணவன் அவளை வெறுத்து ஒதுக்கி எங்கோ சென்று விடுவானென்றும் கூறினார்.

இதைக்கேட்ட ரத்னாபாய் துக்கமடைந்து அதற்குப் பரிகாரம் கேட்க, குருதேவர் அவள் உடம்பிற்கு வியாதி ஏற்பட்டு குஷ்டரோகம் வந்ததும், பாபநாசம் என்னும் ஊரில் சென்று இறைவனை வழிபட்டால் அது நிவர்த்தியாகுமென்றும் அல்லது பீமா நதியும் அமரஜா நதியும் சங்கமமாகும் காணகாபுரம் சென்றாலும் நோய் நீங்குமென்றும், முடிவில் தம்மை சந்திக்க எல்லாப் பாவங்களும் தொலையும் என்று கூறினார்.

அதன்பின் நகர மக்கள் மிகுந்த அன்புடன் இவரை பிட்சைக்கு அழைத்தனர். எல்லோருமே தத்தம் வீட்டிற்கு அழைத்ததால் அவர் அனேக ரூபங்களைப் பெற்று ஒரே சமயத்தில் எல்லா இடங்களிலும் இருந்தார். இந்த ஆச்சர்யத்தைக் கண்டு, இவர் மானிடரல்லர். மும்மூர்த்திகளின் அவதாரம். இவரை மனிதன் என்று யாராவது நினைத்தால் அது பாபம்! என்றெல்லாம் ஊர் மக்கள் பேசிக்கொண்டார்கள்.

பிறகு குருதேவர் அனைவரிடமும் விடைபெற்றுத் தென்திசையை நோக்கி யாத்திரை புறப்பட்டார். திரியம்பகம் என்று அழைக்கப்பட்ட கோதாவரியின் உற்பத்தி ஸ்தானமாகிய நாஸிக் என்ற ஊரை அடைந்தார்

குருவும் சீடர்களும்

முன்னொரு காலத்தில் துவாராவதி என்ற திருத்தலத்தில் தௌம்மியர் என்ற பிரம்ம ரிஷி இருந்தார். சிறந்த ஞானியும் தவசீலருமான அவருக்கு அருணி பாஞ்சாலன், பைதன், உபமண்யு என்று மூன்று சீடர்கள் இருந்தனர். அந்த காலத்தில் குருசேவை என்றால் மிகுந்த பக்தியுடனும், திட வைராக்கியத்துடனும், குரு சொல்லே வேத வாக்கு என்ற மனப்பாங்குடன் சீடர்கள் செயல்படுவார்கள். அப்படிப்பட்ட அந்த சீடர்களின் உண்மையான குருபக்தியை உணர்ந்து அவர்கள் மீது கருணை கூர்ந்து குரு அவர்களுக்கு அனுக்கிரகம் செய்வார்.

தௌம்மிய முனிவர் ஒருநாள் தன் முதல் சீடனை அழைத்துத் தமது வயலில் உள்ள நெற்பயிருக்கு நீர் பாய்ச்சி விடும்படி சொன்னார். அருணி பாஞ்சாலன் என்னும் பணிவான அந்த சீடன் குருவின் உத்தரவை சிரமேற்கொண்டு வயலை நோக்கிச் சென்றான். குருவினது வயல் மேடான பகுதியில் இருந்தது. நீர் ஓடி வரும் கால்வாய் அதற்குச் சற்றுத் தாழ்வான பகுதியில் அமைந்திருந்தது.

week21
பள்ளத்தில் ஓடும் நீரை மேட்டு நிலத்திற்கு எப்படி ஏற்றுவதென்று சீடன் சிந்தித்தான். பிறகு ஆங்காங்கே கிடந்த பெரிய கற்களைக் கொண்டு வந்து கால்வாயில் போட்டு மேடாக்க முயன்றான். எவ்வளவோ கற்களைக் கொண்டு வந்து போட்டும், நீர் மேடேறவில்லை. அதற்கு மேல் கற்களும் கிடைக்கவில்லை.

வெகுநேரம் யோசித்துப் பார்த்த அருணி பாஞ்சாலன் குருவின் வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்து, அவன் தானே கரையில் கிடந்த ஒரு கல்லைப் பிடித்துக்கொண்டு அந்த கால்வாயின் குறுக்காகக் குருவைத் தியானித்த வண்ணம் நீரினுள் படுத்துக்கொண்டான். அதனால் நீரோட்டம் தடைப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீர் மேட்டிலுள்ள வயலுக்கு ஏற ஆரம்பித்தது. வெகு நேரம் இவன் இப்படிப் படுத்திருந்ததால் நீர், குருவின் வயலுக்கு நன்றாகப் பாய்ந்தது.

இருட்டத் தொடங்கி விட்டது. அருணி பாஞ்சாலன் ஆசிரமத்திற்குத் திரும்பவில்லை. சீடனைக் காணாத குரு தேடிக்கொண்டு கிளம்பி வயலை அடைந்தார். பயிர்களுக்குப் பூரணமாக நீர் பாய்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்து, சீடனைத் தேடினார். எங்கு தேடியும் காணாததால் காட்டு மிருகங்கள் ஏதேனும் அவனைத் துhக்கிச் சென்று விட்டதோ என்று பயந்து, ஏ, அருணி பாஞ்சாலா! என்று சத்தம் போட்டுக் கூப்பிட்டார்.

குருவின் குரல் காதில் விழுந்ததும் கால்வாய் மடையிலிருந்து சொட்ட சொட்ட ஈரத்துடன் எழுந்து ஓடிவந்து, குருவைப் பக்தியுடன் வணங்கினான். தௌம்மியர் விவரம் அறிந்து மகிழ்ந்து சீடனைக் கட்டித் தழுவி ஆசிர்வதித்தார். அவனை ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று உரிய உதவிகள் செய்து குளிர் போக்கி அன்புடன் தன் அருகில் அழைத்து, அவன் தலையில் கரம் வைத்து குரு ஆசி வழங்க, மறுகணம் அவன் சகல சாஸ்திர அறிவும் பெற்ற ஞானியாக ஆகிவிட்டான். குரு அவனை வாழ்த்தி விடை கொடுத்து அவனது ஊருக்கு அனுப்பி வைத்தார்.

மற்றொரு நாள் இரண்டாவது சிஷ்யனாகிய பைதனைக் கூப்பிட்டு, களத்தில் கொட்டி வைத்திருக்கும் நெல்லைத் திருட்டுப் போகாமல் இரவும் பகலும் காவல் காத்து நெல் காய்ந்ததும், அதை வீட்டிற்குக் கொண்டு வரும்படி சொல்லி ஓர் இரட்டை மாட்டு வண்டியையும், ஓர் எருமையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

உடனே சீடன் குருவின் கட்டளையை ஏற்று களத்திற்குச் சென்று காவலிருந்து, நெல்லை நன்றாகக் காய வைத்து அள்ளி மூட்டைகளாகக் கட்டி அந்த மூட்டைகளை வண்டியில் அடுக்கினான். வண்டியில் பூட்ட ஓர் எருது தான் இருந்தது. இன்னொரு மாட்டிற்கு என்ன செய்வது? பைதன் சிந்தித்தான். பிறகு நுகத்தடியில் ஒரு பக்கம் அந்த எருதைக் கட்டிவிட்டு, அடுத்த பக்கத்தைத் தான் பிடித்துத் துhக்கிக்கொண்டு நடந்தான்.

எருது வேகமான நடக்கவே இவனும் அதற்கு இணையாக வேகமாக பாரத்தையும் இழுத்துக்கொண்டு நடந்தான். மாடு விரைவாக ஓடத் தொடங்கவே இவன் நுகத்தடி கயிற்றில் தன் கழுத்தை மாட்டிக்கொண்டு ஓடலானான். வழியில் வண்டியும் மாடும் சேற்றில் சிக்கிக் கொண்டன. மாடு ஒரு பக்கம் மேலே இழுக்க, இவன் மற்றொரு பக்கம் இழுக்க தும்பு இறுகிக் கழுத்தில் சுருக்கு விழுந்து இறுக ஆரம்பித்துவிட்டது.

அத்தருணத்தில் குரு அங்கு தோன்றி சட்டென்று சீடனின் கழுத்தில் இறுக்கிய கயிற்றைத் தளரச் செய்து பைதனைக் காப்பாற்றினார். குருவே! என்று அவன் குருவின் கால்களில் விழுந்து வணங்கினான். குரு அவனது திட சித்தத்தை மெச்சி அவனைப் பாராட்டி அவன் தலையைத் தொட்டு ஆசிர்வதித்தார். நீ என்னிடம் கற்றவை எல்லாம் உனக்குப் பயன்படட்டும் என்று வரமளித்தார். பைதன் குருவை வலம் வந்து மீண்டும் வணங்கி விடைபெற்றுத் தன் இருப்பிடம் சென்று பெரிய பண்டிதனாக ஊர் மக்களுக்கு உதவியாக வாழ்ந்தான்.

மூன்றாவது மாணவனின் பெயர் உபமன்யு. அவன் வெகு சிரத்தையுடன் குரு சேவைசெய்து வந்தாலும், அதிக உணவை உண்பவனாக இருந்ததால் அவனுக்கு வித்தை ஏறவில்லை. அதனால் தௌம்மியர் அவனை அழைத்து வீட்டிலுள்ள பசு மாடுகளைக் காட்டிற்கு ஓட்டிச் சென்று மேய்த்து வரும்படி சொன்னார். சீடன் குருவை வணங்கிப் பசுக்களைக் காட்டிற்கு ஓட்டிச் சென்றான். கொஞ்ச நேரத்தில் அவனுக்குப் பசி எடுத்து விட்டது. அதனால் அவன் உடனே மாடு கன்றுகளை ஓட்டிக்கொண்டு ஆசிரமத்திற்குத் திரும்பி வந்துவிட்டான்.

இவ்வளவு சீக்கிரம் ஏன் வந்தாய் என்று குரு கேட்கத் தனக்குப் பசிப்பதாக அவன் சொன்னான். குரு அவன் இனி மாலையில் தான் திரும்பி வரவேண்டும் என்று உத்தரவிட்டார். அவனும் அதனை ஏற்றுக்கொண்டு அடுத்த நாள் மாடுகளை ஓட்டிக்கொண்டு காட்டை அடைந்தான். கொஞ்ச நேரமானதும் அவனைப் பசி வாட்டத் துவங்கிற்று. மாடுகளை ஆற்றங்கரையில் மேய விட்டு விட்டு, குருவைத் தியானித்து விட்டுப் பக்கத்தில் இருந்த சில வீடுகளுக்குச் சென்று பிட்சை கேட்டு வாங்கிச் சாப்பிட்டுப் பசி தீர்த்தான்.

சில நாட்கள் சென்றன. இரவு ஒரு வேளை சாப்பிட்டும் உபமன்யு திடமாகக் காட்சியளிப்பதைக் கண்ட குரு, அவனை விசாரித்தார். அவன் பிட்சை வாங்கி சாப்பிடும் விபரத்தைக் கூறினான். குரு உடனே தன்னை விட்டு விட்டு எப்படிச் சாப்பிடலாம் என்று கேட்டு, இனி அவன் அப்படி வாங்கும் பிட்சையை இங்கு கொண்டு வந்து தன்னிடம் கொடுத்து விட்டு மறுபடியும் மாடுகளைக் கவனிக்கச் செல்ல வேண்டும் என்று சொன்னார்.

அவன் அதற்கும் இணங்கி ஒவ்வொரு நாளும் வாங்கிய பிட்சையை குருவிடம் தந்து அவர் சாப்பிட்ட பிறகு அவன் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் காட்டிற்குச் சென்றான். ஆனால் அந்த உணவு அவனுக்குப் போதவில்லை. எனவே தினமும் இரண்டு பிட்சை எடுக்கத் தொடங்கினான். ஒரு பிட்சையைக் குருவிடம் கொடுத்துவிட்டு மற்றதை இவன் புசித்து வந்தான்.

கொஞ்ச நாட்களில் குரு அவன் இன்னமும் கொழுகொழுவென்றே இருப்பதைக் கவனித்தார். விசாரித்தார். அவனும் உள்ளதைச் சொன்னான். அதைக் கேட்ட குரு கோபித்து இனி இரண்டு பிட்சையுமே இங்கு கொண்டு வந்து கொடுத்து விட வேண்டும் என்று உத்திரவிட்டார். அப்பொழுதும் உபமன்யு சஞ்சலப்படாமல் வழக்கம் போல் மாடுகளை மேய்த்து வந்தான். இரண்டு பிட்சைகளையும் கொண்டு வந்து குருவிற்கு அர்ப்பணம் செய்தான்.

சிறிது காலம் கழிந்தது. அவன் உடல் வாடவில்லை. மாறாக தேஜசுடன் திகழ்ந்தது. குரு கவனித்து கூப்பிட்டுக் கேட்டார். உபமன்யு பணிவுடன் அவரிடம் சாப்பாட்டிற்கு என்ன வழியென்று எனக்குத் தெரியவில்லை. சாப்பிடாமலும் என்னால் இருக்க முடியவில்லை. எனவே கன்றுகள் பாலைக் குடித்த பிறகு பசுவின் மடியில் மிச்சமிருக்கும் பாலை அவை சுரக்கின்றபோது அது பூமியில் சிந்தி வீணாகாமல், நான் என் கைகளில் ஏந்தி;க் குடித்தேன். அதனால் என் பசி தீh;ந்தது! என்றான்.

குருவிற்குக் கோபம் வந்துவிட்டது. இனி நீ அப்படி அந்தப் பாலைக் குடித்தால் உள் புத்தி மழுங்கிப் போய்விடும். இனி அதைச் சாப்பிடக்கூடாது என்று கண்டித்தார். உபமன்யு குருவின் ஆணையை ஏற்றான்.

அடுத்த நாள் காட்டிற்குச் சென்றபோது பசியினால் மிகவும் துடித்தாலும் ஒரு வழியும் தெரியாமல் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான். அப்போது எருக்கஞ்செடியிலிருந்து வெண்மையான பால் வடிவதைக் கண்டான். அது செடியிலிருந்து வருவதால் எச்சில் பட்டது இல்லை என்று தீர்மானித்து இலையைப் பறித்து, அதைத் தொன்னையாகக் கிண்ணம்போல் செய்து அந்தப் பாலை அதில் சேகரித்துக் குடித்தான்.

அப்போது எருக்கம்பாலின் சில துளிகள் அவன் கண்களில் பட்டு அதனால் பார்வை பறி போய்விட்டது. அவன் துடிதுடித்துப் பார்வை இழந்து வழி தெரியாமல் தன் மாடுகளைத் தேடிக்கொண்டு அங்குமிங்கும் அலையும்போது ஒரு பாழுங் கிணற்றில் விழுந்து விட்டான். அவன் குருவின் பசுக்களைப்பற்றி மிகவும் வருத்தப்பட்டு, குரு தேவர் கோபிப்பாரே! கடமை தவறி விட்டேனே! இந்தப் பசி என்னை இப்படி ஆட்டி வைத்துவிட்டதே! குரு வாக்கை மீறியவனாகி விட்டேனே! என்றெல்லாம் புலம்பினான்.

அவன் மீது அன்பு கொண்டிருந்த பசுக்கள் அவனைத் தேடி அவன் பாழுங் கிணற்றில் விழுந்து கிடப்பதைக் கண்டு அவனை மீட்க வழியின்றி அப்பாவிகளாய்க் கண்ணீர் விட்டுக்கொண்டு அங்கேயே நின்றன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s