குருவைத் தேடி – 20

குருதேவரின் தீர்த்த யாத்திரை

நரஹரி என்னும் சிறுவனான குருதேவர் தன் தாயை நோக்கிப் பின்வருமாறு சொல்லத் தொடங்கினார். ‘அம்மா! இந்த சரீரம் அநித்யம். இதன் மேல் ஆசை வைத்தல் ஆகாது. தேகமானது நீர்க்குமிழி போல் வெகு சீக்கிரம் பங்கமடையக்கூடியது. எமன் எப்போதும் நம் கூடவே இருக்கிறான் ஆகவே கால தாமதம் செய்யாமல் செய்ய வேண்டிய தான தர்மங்களை உயிருடன் இருக்கும்போதே செய்து விட வேண்டும். நாளுக்கு நாள் நமது ஆயுள் குறைகிறது. சூரியன் ஒரு நாளில் இருபத்திரண்டாயிரம் ஊர்களைச் சுற்றி ஓடுகிறான். அதுபோல் நம் ஆயுளும் அதி வேகமாக ஓடுகிறது.

ஓர் இலையின் மேல் விழுந்த மழைத்துளி எவ்வளவு நேரம் அதன் மேல் தங்குமோ அவ்வளவு தான் நம் வாழ்வு. பழுத்த இலை மரத்தை விட்டு எப்போது கீழே விழுமென்று சொல்ல முடியாது. அதே விதமாக இந்த தேகம் எப்பொழுது கீழே சாயுமென்று சொல்வது கடினம். யமன் நம் வாழ் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். நதிகளின் ஜலம் கடலில் சங்கமமான பிறகு எப்படித் திரும்புவதில்லையோ அதுபோல வாழ்நாட்களும் திரும்பாது. இந்த சத்தியத்தை அறிந்து எவன் தானம் செய்யவில்லையோ அவன் மிருகத்திற்குச் சமமாகிறான்.

குழந்தைகள், மனைவி, தனம், பசுக்கள் முதலிவை நம் ஆயுளை அபகரிக்கின்றன. வயோதிகம் என்ற முதுமை ஒரு முதலையைப்போல் நம்மை நமக்குத் தெரியாமல் புசித்து வருகிறது. இதை நன்கு அறிந்து சிறு வயதிலிருந்தே ஒருவன் தர்மத்தைச் செய்ய வேண்டும். இந்த சம்சார சுகம் ஒரு நீண்ட கனவு. மின்னலைப்போல் மறையக்கூடியது. வாழ்க்கையின் போக்கு இப்படியிருக்கையில் என்னை தவம் செய்ய வேண்டாம் என்று ஏன் தடை செய்ய வேண்டும்? என்று கேட்டான்.

நரஹரி உரைத்த நல்லுரைகளைக் கேட்ட ஊர் மக்கள் மிக வியந்து அவரைக் கைகூப்பி வணங்கினர். என்றாலும் அவரது தாய் மட்டும் பாசத்தால் குழம்பியவளாய் தன் மகனென்று குருதேவரைப் பார்த்து ‘மகனே! எனக்கு நான்கு குழந்தைகள் பிறக்கும் என்று நீ சொன்ன சொல்லில் நம்பிக்கையில்லை. எனவே ஒரு குழந்தை பிறக்கும் வரையிலாவது என் தெய்வக் குழந்தையான நீ எங்களுடன் எங்களை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும். நீ பிரிந்து போனால் கட்டாயம் என் உயிருக்கு ஆபத்து நேரிடும்!” என்று சொல்லி அழுதாள்.

சிறுவனான நரஹரி புன்சிரிப்புடன், ‘அம்மா! என் சொல்லை சத்தியமாக நம்பு! உன் விருப்பப்படியே ஒரு குழந்தையல்ல, இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை நான் உன்னுடனேயே இருக்கிறேன். ஒரு வருடம் வரை இருந்து உன் ஆசையைப் பூர்த்தி செய்கிறேன். அதற்குப் பிறகுத் தடை சொல்லாமல் எனக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டும்!” என்று கேட்டுக்கொண்டார்.

தன் தாய்க்குக் கொடுத்த வாக்குப்படி ஏழு வயதுப் பையன் நரஹரி வீட்டில் தங்கியிருந்து எல்லோரும் பிரமிக்கும்படி நான்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும் சொல்லி, மற்றவருக்கும் கற்பித்துக்கொண்டு இருந்தார். தாயும் தந்தையும் அவரைக் கடவுளாகப் பாவித்து மகிழ்வுடன் சேவை செய்தனர்.

கொஞ்ச காலத்தில் தாய் கர்ப்பம் தரித்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள். குழந்தைகளுக்கு மூன்று மாதங்கள் ஆனவுடன் நரஹரி தாயை வணங்கி முன் சொன்னபடி தான் தீர்த்த யாத்திரை போக அனுமதி கேட்டார். தாய் தந்தை அவரை நமஸ்கரித்து, இதுவரை தங்களை ஒரு குழந்தை என்று பாவித்து, குருவிற்குச் செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்யத் தவறிவிட்டோம். மாயை என்ற பாசத்தால் தங்களுடைய நிஜசொரூபத்தை உணர முடியவில்லை. சகரர்களுக்குக் கங்கையைக் கொண்டு வர பகீரதன் பிறந்தது போல் நீர் எமக்குப் பிறந்து நம்முடைய நாற்பத்திரண்டு தலைமுறைகளைக் கரையேற்றி விட்டீர்கள். நீங்கள் நம்முடைய குலதேவதை என்றே நாங்கள் கருதுகின்றோம். இப்படி எம்மை விட்டுப் பிரிந்தால் எங்களுக்கு என்ன கதி? உன்னைப் பிரிந்து நாங்கள் எப்படி வாழ முடியும்? என்று சொல்ல குரு ஆறுதல் கூறினார்.

“நீங்கள் எப்போது என்னை நினைக்கிறீர்களோ அப்போது நான் உங்கள் முன் தோன்றுவேன். உங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண்ணும் பிறக்கும். வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். பிரதோஷ விரத பலத்தினால் ஒருவித குறையும் வராது” என்று சொன்னார். மேலும் அவரே தொடர்ந்து, ‘ முன் ஜன்மத்தில் பரமசிவனை ஆராதனை செய்ததால் என்னைப் புத்திரனாகப் பெற்றீர்கள். இந்த ஜன்மத்தில் சுகத்தை அனுபவித்து இறுதியில் நல்லகதியும் கிட்டும்” என்று சொல்லி, இன்னும் ஒரு வருடத்தில் தரிசனம் தருவதாக வாக்களித்து விடைபெற்று பத்திரி வனத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

நரஹரி சொன்னபடி தீர்த்த யாத்திரை புறப்பட்டு விட்டதை அறிந்த நகர மக்கள் மிகுந்த பிரியத்துடன் மரியாதையுடனும் அச்சிறுவனை பரப்பிரம்மம் என்றே பாவித்து நமஸ்கரித்தனர். இவர் தெய்வாம்சம் பெறாமல் இப்படிச் சிறுவயதில் எல்லா வேதங்களையும் சொல்லி வீட்டை விட்டுத் தபஸ்வியாகப் போக முடியுமா? என்று பலவாறாகப் போற்றினார். முன்பு ஊமைப் பிள்ளை என்று பரிகசித்தவர்கள் இப்போது வாயடைத்து நின்றனர்.
week20

எல்லோரும் வாழ்த்தி விடை கொடுத்துச் சென்ற பின்பும் தாயும் தந்தையும் புத்திரனைப் பிரிய மனமின்றி அவரைப் பின் தொடர்ந்து வந்தனர். அதைக் கண்ட குருதேவர் மும்மூர்த்திகள் ஒன்று சேர்ந்து தெரிகின்ற தன் சுயரூபத்தைக் காண்பித்தார். அதைக் கண்ட இருவருமே பூர்வ புண்ணிய பலனால் இந்த தரிசனம் கிடைத்ததென்று ஆனந்தக் கண்ணீர் வழியத் துதித்தனர். மீண்டும் சிறுவனாகக் காட்சியளித்த நரஹரியைக் கட்டித் தழுவி முத்தமிட்டு வழியனுப்பி வைத்து வீடு திரும்பினர்.

பத்ரி வனத்திற்கு வந்த வரத மூர்த்தியான குரு சில நாட்களுக்குப் பிறகு காசி நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். முக்தி கொடுக்கும் தலமாக மூவுலகங்களிலும் பிரசித்தியான அந்த ஊரில் ஆத்ம ராமனாகிய விச்வேஸ்வரனைத் தரிசித்துக்கொண்டு அட்டாங்க யோகத்தை சாதனை செய்து தவம் செய்து வந்தார்.

அந்தச் சமயத்தில் காசியில் அனேக தபஸ்விகள், ஸந்யாசிகள், யதிகள் என்று பல அவதூதர்கள் அனுஷ்டானம் செய்து வந்தனர். அவர்களெல்லாம் இந்த ஒன்பது வயது பிரம்மச்சாரி மணிகர்ணிகை கட்டத்தில் மூன்று வேளை ஸ்நானம் செய்வதையும், அவனது வைராக்கியத்தையும், நிஷ்டைகளையும் கண்டு ஆச்சர்யமடைந்து தினமும் அவரைத் தரிசித்து மகிழ்ந்தனர்.

அவர்களில் கிருஷ்ண சரஸ்வதி என்ற வயதான யதி (சந்நியாசி) ஒருவர் இருந்தார். அவர் மற்றவர்களை நோக்கி, இந்த பிரம்மச்சாரியைச் சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். இவர் ஓர் அவதார புருஷர். மூன்று உலகத்தாலும் பூஜிக்கத் தகுந்தவர். இருந்தாலும் நாம் வயதில் பெரியவர்களாகவும், ஸந்நியாச ஆசிரமமும் பெற்றிருப்பதால் நாம் இவரை மக்கள் காண வணங்கக்கூடாது. அதனால் இவரை மனதிற்குள் தான் வணங்க வேண்டும். இந்தப் பிரம்மச்சாரி சந்நியாச ஆசிரமம் வாங்கினால் அதன் பின் நாம் அவரைப் பூஜித்து வணங்கலாம். உலக நன்மைக்காகவும், பாமரர்களைப் புனிதப் படுத்துவதற்காகவும், நான்காவது ஆசிரமத்தை வாங்க அவர் சம்மதிக்கிறாரா என்று கேளுங்கள்! என்றார்.

அதைக்கேட்டு அனைவருமே நரஹரியிடம் வந்தனர். ஒரு முனிவர் சிறுவனான குருவை நோக்கி, பரமசிவனாராகக் காணப்படும் தபோதனரே! நமக்கு ஓர் இச்சை இருக்கிறது. தாங்கள் நான்காவது ஆச்சிரமமான ஸந்நியாசத்தைப் பெற்று லோகத்தையும் நம்மையும் காத்தருள வேண்டும். நாங்கள் தங்களைப் பூஜித்து வணங்க விரும்புகின்றோம். கலி காலத்தில் ஸந்நியாசிகளுக்கு மதிப்பில்லை. போலித்தனமாக சிலர் வேடமிட்டுச் செயல்படுவதால் உண்மையான ஸந்நியாசிகளை இழிவாகப் பேசுகின்றனர். சந்யாச ஆசிரமத்தை ஸ்தாபிக்க ஒருவரையும் உலகத்தில் காணோம். கலியுகத்தில் அக்னிஹோத்ரம் செய்பவர்கள் (மூன்று வேளையும் அக்னியைஆராதிப்பவர்கள்) தானம், தர்மம், வேள்வி, தேவ காரியம், பித்ரு காரியம் செய்பவர்கள், ஸந்நியாச தருமத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஆகியோரை மக்கள் மிகக் கேவலமாக நினைத்துத் தவறாகவும் இழிவாகவும் பேசிப் பரிகசிக்கிறார்கள். முன்னொரு காலத்தில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. அச்சமயத்தில் பரமாச்சார்யரான ஸ்ரீமத் சங்கர பகவத் பாதாள் அவதரித்து சூழ்நிலையைச்; சரிசெய்து இந்து தர்மத்திற்கும் சந்நியாசிகளுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தித் தந்தார். ஆனால் மறுபடியும் இப்போது கௌரவம் இழந்த நிலைக்குப் போய் விட்டது. எனவே அந்த ஆசிரமத்தைப் புனிதமாக்கும் பொருட்டும், மக்களைக் காப்பாற்றும் பொருட்டும் தாங்கள் சந்நியாச ஆசிரமத்தை மேற்கொள்ள வேண்டுமென விபரமாகக் கூறி வேண்டுகோள் விடுத்தனர்.

முனிவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கிப் பிரம்மச்சாரியான நரஹரி அவர்களின் விருப்பத்திற்கேற்ப உடன் சென்று முதியவரான கிருஷ்ண சரஸ்வதியை வணங்கி அவரிடம் ஸந்நியாச தர்மத்தை ஏற்றுக்கொண்டார். அதுவரை கதையைக் கேட்டுக்கொண்டு வந்த நாமதாரகன் சட்டென்று சித்தரிடம், ‘ஸ்வாமி! நரஹரி மும்மூர்த்திகளின் அவதாரம், ஜகத்குரு என்றெல்லாம் கூறினீர்களே! இவருக்கு ஒரு குரு வேண்டுமா? இவர் ஒரு குருவின் மூலம் ஸந்நியாச தர்மத்தை ஏற்க வேண்டும்” என்று கேட்டான்.

அதற்கு ஸித்தர், ‘அப்பா! நாமதாரகா! ராமர் அவதார புருடர் தான் என்றாலும் அவர் வசிட்டரைத் தன் குருவாக ஏற்றார். எட்டாவது அவதாரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் சாந்தீபனியைக் குருவாகக் கொண்டார் இல்லையா! தெய்வமே என்றாலும் மானிட ஜென்மம் எடுத்த பிறகு அதன்படி தானே நடந்துகொள்ள வேண்டும்? அதன்படி நரஹரியும் மிகவும் வயதான கிருஷ்ண ஸரஸ்வதி என்ற யதிகளிடம் ஸந்நியாசம் பெற்றார்!” என்று விடையளித்தார்.

இந்த இடத்தில் சித்தர் நரஹரிக்கு சந்நியாச தீட்சையளித்த கிருஷ்ண சரஸ்வதி என்னும் குருநாதரின் குரு பரம்பரை பற்றிய வரிசையை அப்படியே ஒன்று விடாமல் நாமதாரகனுக்கு அவர்களின் பெயர்களைக் கூறுகிறார். அது அவசியமில்லை என்று தோன்றுவதால் அவர்களின் பெயர்களை இங்கு நான் எழுதவில்லை. ஆனால் மூல நூலில் அந்தப் பட்டியல் இருக்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s