குருவைத் தேடி – 19

ஸ்ரீ நரஹரி நரஸிம்ம ஸரஸ்வதி பிறப்பு

ஸித்தர் சொல்லி வந்த கதைகளால் பரவசமடைந்த நாமதாரகன், அற்பமான தன்னைத் தேடி வந்து இத்தகைய அற்புதமான கதைகளைச் சொல்லி நான் காண விரும்பிய குருதேவரின் பெருமைகளை அடியேன் அறியச் செய்கிறீர்களே! என் மீது உங்களுக்கு எவ்வளது கருணை? என்று மனமுருகிச் சொல்லி அவரை வலம் வந்து வணங்கினான். பிறகு அடுத்த அவதாரம் பற்றிச் சொல்லும்படி வேண்டினான்.

குரவபுரத்தில் ஸ்ரீ பாதர் இருந்தபோது ஒரு விதவைத் தாய் தன் செவிட்டு மகனோடு கிருஷ்ணா நிதியில் மூழ்கி உயிர் விட நினைத்தபோது குருநாதர், அவளைத் தடுத்துப் பிரதோஷ விரதம் இருக்கும்படி சொல்லி, மகனையும் பண்டிதனாக ஆக்கினார் அல்லவா? அந்தப் பெண்மணி சதா குருவைத் தியானித்தும், பிரதோஷ விரதத்தை விடாமல் கடைப்பிடித்தும் நற்கதி தேடினாள். பின்னர் வயதாகி அப்பெண்மணி மரணமடைந்தாள். அடுத்த ஜன்மத்தில் குருதேவரைப் போன்ற ஒரு ஞானச்செல்வன் தனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று அவள் ஸ்ரீ பாதரிடம் வரம் கேட்டபடியால் மீண்டு; அவள் உத்திரப் பிரதேசத்தில் காஞ்சா நகரத்தில் வாஜஸநேயம் என்ற சாகையில், பிரம்ம குலத்தில் அம்பா பவானி என்ற பெயருடன் பிறந்தாள்.

பூர்வஜென்ம வாசனையால் அவள் சிறந்த சிவபக்தையாகத் திகழ்ந்தாள். அவள் கன்னியானவுடன் அதே கிராமத்தில் சிவ பக்தனான மாதவன் என்ற வரனுக்;குக் கன்னிகாதானம் செய்து கொடுக்கப்பட்டாள். இருவருமாக சிரத்தையுடன் பிரதோஷ பூஜை செய்து விரதம் அனுஷ்டித்து அதிலும் சனிப் பிரதோஷ விரதத்தை அதி விசேஷமாக நடத்தி ஈஸ்வரனை ஆராதித்தனர்.

பதினோரு வருடங்களுக்குப்பின் அம்பா பவானி கர்ப்பம் தரித்தாள். மகிழ்ச்சியடைந்த வீட்டினர் மூன்றாம் மாதம், ஐந்தாம் மாதம் முதலியவற்றில் செய்ய வேண்டிய சடங்குகளை முறையாகச் செய்தனர். மசக்கையால் அவள் அவதியுற்றாலும் பிரம்ம ஞானத்தைப் பற்றியே அவள் பேசிக்கொண்டிருந்தாள். ஏழாம் மாதம் சீமந்தம் நடைபெற்றது. ஒன்பது மாதங்கள் முடிந்ததும் ஒரு சுப தினத்தில் புத்திர ஜனனம் ஏற்பட்டது.

குழந்தை பிறக்கும்போதே ஓம் என்ற சப்தத்துடன் பிறந்தது. அதைக் கண்ட அங்கிருந்த பெண்டிர் மற்றவரிடம் இந்த அதிசயத்தைக் கூறினர். தாய் தந்தையர் மகிழ்ந்தனர். ஊர் முழுவதும் தகவல் பரவியது. நகர மக்கள் ஆச்சர்யமடைந்தனர். குழந்தைக்கு ஜாதகர்மா செய்த சோதிடர், குழந்தை பிறந்த நேரத்தில் இருந்த கிரக நிலைகளைப் பார்த்து, இவன் பிற்காலத்தில் ஒரு ரிஷியாக விளங்குவான் என்றும், அட்டமாசித்திகளும் இவன் வசமிருக்கும் என்றும், இவனுக்கு விவாகம் நடக்காது. ஆனால் மூன்று உலகத்தினராலும் வணங்கப்படுவான் என்றும், இவனை தரிசனம் செய்தால் எல்லாப் பாவங்களும் போய்விடும் என்றும் சொன்னார்.

இதைக்கேட்டுப் பெற்றோர் மட்டில்லா மகிழ்வுடன் தான தர்மங்கள் செய்து குழந்தையை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தனர். ஊர் மக்கள் எல்லாம் ஓம் என்னும் ஒலியுடன் பிறந்த குழந்தையைத் தரிசிக்க வேண்டுமென்று வந்து வந்து பார்த்த வண்ணம் இருந்தனர்.

அதனால் குழந்தைக்குத் திருஷ்டி படும் என்று திருஷ்டி சுற்றிக் கருப்புக் கயிற்றைக் கழுத்தில் கட்டினர். எல்லோருக்கும் கண்களாய் விளங்கும் பரமாத்மாவிற்குக் கண் திருஷ்டி படுமா? எல்லாம் லௌகீகம், அறியாமை.

பத்து நாட்கள் முடிந்ததும் புண்ணியாவசனம் செய்து, நாமகரணம் செய்து குழந்தைக்கு நரஹரி என்னும் திருநாமத்தைச் சூட்டினர். தாய் குழந்தையை மிகுந்த சிரத்தையுடன் பாதுகாத்து வந்தாள்.

ஒரு நாள் அம்பா பவானி, தன் கணவனிடம் குழந்தைக்குத் தாயப்;பால் போதவில்லை. பசியால் மிகவும் அழுகிறது. பால் கொடுக்க ஒரு தாதியையாவது ஆட்டுப்பாலையாவது ஏற்பாடு செய்யலாமா என்று கேட்டாள். அதைக் கேட்டுக்கொண்டிருந்த குழந்தை கலகலவென சிரித்துத் தன் இடது கையால் தாயின் மார்பகத்தைத் தொட்டவுடனேயே அவளுக்குப் பால் பெருகியது. இதைக் கண்ட தாய் வியந்து, இது தெய்வீகக் குழந்தை. என் தவப்பயனால் வந்து வாய்த்திருக்கிறது என்று நினைத்து இறையை வணங்கினாள்.

ஒரு வருடம் ஆயிற்று. குழந்தை வளர்ந்தாலும் ஓங்காரத்தைத் தவிர வேறு ஒரு சொல்லும் பேசவில்லை. ஒரு வயது ஆகியும் பேசாததால் ஊமையோ என்று எண்ணிப் பெற்றோர் கவலைப்பட்டனர். தெய்வங்களை வேண்டினர். குழந்தையை வந்து பார்த்த சிலர் ஞாயிற்றுக் கிழமைகளில் அரச இலையில் அன்னத்தை வைத்து அதை எடுத்து, ஊட்டும்படி சொன்னார்கள். இவன் ஓங்காரத்தை உச்சரிப்பதாலும், இவனுக்குக் காது கேட்பதாலும், ஊமையில்லை. பேசுவான் என்று சிலர் தைரியம் கூறினர்.

என்ன சொன்ன போதிலும் ஏழு வருடங்கள் வரை குழந்தை பேசவில்லை. பெற்றோர் துக்கமடைந்து நாம் பரமசிவனை ஆராதித்ததன் பலன் இது தானா? அவன் இப்படி ஊமைக் குழந்தையைக் கொடுப்பதா? சனிப்பிரதோஷ விரதத்திற்குப் பலனில்லாமல் போகுமா? என்றெல்லாம் புலம்பினர்.

ஒருநாள் இவர்கள் இப்படிப் புலம்பி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தபோது அதைக் கேட்ட சிறுவன் நரஹரி வீட்டினுள் சென்று, ஓர் இரும்புத் துண்டை எடுத்து வந்து தாயின் கையில் கொடுக்க அது பத்தரை மாற்றுத் தங்கமாயிற்று. அவள் மிகுந்த ஆச்சர்யத்துடன் தன் கணவரிடம் அதைக் காண்பித்தாள். அவர்கள் மறுபடி ஓர் இரும்பை அவன் கையில் கொடுக்க, அதை அச்சிறுவன் தன் அமிர்தப் பார்வையால் பார்த்தான். உடனே அது தங்கமாக மாறியது.

தாயும் தந்தையும் ஒருவரையொருவர் வியப்புடன் பார்த்துக்கொண்டனர். ஒரு சிறந்த புருஷர் ஏதோ ஒரு காரணத்தால் நமக்குப் புத்திரனாக பிறந்து இப்படி பால லீலைகள் செய்கிறார் என்று நினைத்துக் குழந்தையைக் கட்டியணைத்துக் கொஞ்சி, அப்பா நரஹரி! நீ எங்களுக்கு இவ்வளவு சந்தோஷமளித்து என்ன பயன்? உன் மழலைச் சொற்களைக் கேட்டு மகிழ எங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லையே! என்று கேட்டனர்.

உடனே நரஹரிஅவளின் விழிநீரைத் துடைத்து சாடை செய்து ஏதோ கூறினான். அதாவது, எனக்கு உபநயனம் செய்து மௌஞ்சி என்ற புல்லை இடுப்பில் கட்டி, யக்ஞோபவீதம் என்னும் பூணுலை என் கழுத்தில் அணிவித்தீர்களென்றால் அப்போது நான் பேசுவேன்! என்று ஜாடை காட்டினான். அவன் குறிப்பிட்டதைப் புரிந்துகொண்ட இருவரும் உபநயனத்திற்கு ஒரு நல்ல நாளைப் பார்த்து அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய முனைந்தனர்.

ஊர் ஜனங்களில் சிலர் இந்த ஊமையனுக்கு என்ன உபநயனம் வேண்டியிருக்கிறது என்றனர். என்னதான் ஓஹோ என்று ஏற்பாடுகள் செய்தாலும் காயத்ரி மந்திரத்தைச் சொல்ல வாய் இல்லையே என்றனர் சிலர். எது எப்படியிருந்தாலும் நமக்கு நல்ல விருந்தும் தட்சிணையும் கிடைக்கும் என்றனர் சிலர். இப்படிப் பேசிக்கொண்டே அத்தனை பேரும் அந்த வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நல்ல முகூர்த்தம் பார்த்து சௌசம், குமார போஜனம் முதலிய சடங்குகளைச் செய்தனர். பிறகு சுபவேளையில் நரஹரிக்கு காயத்ரி மந்திரம் உபதேசிக்கப்பட்டு பூணுhல் அணிவித்து, மௌஞ்சி பந்தனமும் நடைபெற்றது. தந்தை மாதவன் முறையாய் காயத்ரியை மகன் காதில் உச்சரித்து உபதேசித்தார். அதனை அடுத்து தாய் தன் மகனுக்கு முறைப்படி பிட்சை இட்டாள். பவதி பிட்சாந்தேஹி! என்று மகனுக்காகத் தந்தை சொன்னதும், பிட்சை இடுகிறோம் என்று சொல்லி பவானி முதல் முறை பிட்சை இட்டாள். அன்னை முதன் முறை பிட்சை அளித்தவுடன், அக்னி மீளே….என்று ஆரம்பிக்கும் வேத மந்திரத்தைப் பிள்ளை நரஹரி அட்சர சுத்தமாகக் கூறினான். இரண்டாம் தடவை பிட்சை வாங்கியதும், ஈஷேத்துவா…என்று ஆரம்பிக்கும் யஜூர் வேதத்தையும் சொல்லி பிட்சை வாங்கினான்.

ஊமைப்பிள்ளை வேதம் உரைக்கின்ற அதிசயத்தைக் கண்டு தாயும் தந்தையும் அங்குக் கூடியிருந்த அனைவரும் மிகவும் ஆனந்தம் அடைந்து நரஹரியை ஓர் அவதார புருஷன் என்று போற்றினர். நரஹரி தன் தாயை வணங்கி, அம்மா! நான் பிரம்மச்சாரியாக மாறிவிட்டேன். நீங்கள் என்னைப் பிட்சை எடு! என்று சொல்லித்தான் நான் பவதி பிட்சாந்தேஹி! என்று கேட்டேன். நான் உங்கள் சொல்லைக் கடைப்பிடிக்க வேண்டும். இனி வேதங்களைப் படித்து வீடு வீடாகப் பிட்சை வாங்கிப் பிழைக்க வேண்டியது என் கடமை! என்றான்.

இதைக்கேட்ட தாய் மிகுந்த துக்கத்துடன், அப்பா! நீ இப்போது தான் பேச ஆரம்பித்தாய். இதற்குள் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்கிறாயே, அதை நான் எப்படிப் பொறுப்பேன்? என்று சொல்லிப் பாசத்துடன் மகனைக் கட்டிப் பிடித்துக் கண்ணீர் வடித்தாள்.

சிறுவன் தாய்க்கு ஞானத்தை எடுத்துரைத்தான். கவலைப்பட வேண்டாமென ஆறுதல் கூறினான். நான் உன்னை விட்டுப் பிரிந்தாலும் உனக்குப் பிறகு நான்கு பிள்ளைகள் பிறக்கும். அவர்கள் உங்களை விட்டுப் பிரியாமல் சேவை செய்வார்கள் என்ற வரத்தையும் அளித்துத் தேற்றினான். பிறகு நரஹரி தன் தாயின் தலை மீது கையை வைத்தான். உடனே அவளுக்குப் பூர்வஜென்ம ஞானம் ஏற்பட்டுத் தனக்குப் புத்திரனாகப் பிறந்தவர் ஸ்ரீ பாத வல்லபர் என்றும், அவரிடம் போன ஜென்மத்தில் தான் வேண்டிக்கொண்டபடி தனக்கு மகனாக அவதரித்திருக்கிறார் என்றும் உணர்ந்து கொண்டு விட்டாள். உடனே மகனின் சரண கமலங்களில் வணங்கினாள்.

குழந்தை நரஹரி தன் தாயைத் தேற்றி, நீ உண்மையைப் புரிந்து கொண்டு விட்டாய். இனி வருந்தத் தேவையில்லை. நான் இனி தீர்த்த யாத்திரை செய்ய அனுமதி கொடு! என்று கேட்டான். தாயாரும் மறுபடியும் அவனைப் பார்த்து, இதற்குள் சந்நியாசியாக வேண்டுமென்கிறாயே! சந்நியாசிகள் தானே தீர்த்த யாத்திரை போவார்கள். நீயோ பாலகன். கிரமப்படி அல்லவா சந்நியாசம் வாங்க வேண்டும். முதலில் பனிரெண்டு வருடம் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்துப் பிறகு கிரஹஸ்தாச்ரமம்; (இல்லறம்) மேற்கோண்டு, புத்திர சந்தானம் பெற்று, யாகம், யக்ஞம் முதலிவற்றைச் செய்து, இறுதியில் அல்லவா சந்நியாசம் பெற வேண்டும்? புலன்களெல்லாம் அனுபவிக்க வேண்டிய சுக துக்கங்களைப் பெற்று அனுபவித்துச் சலித்து பிறகு தவத்திற்குச் சென்றால் தானே சந்நியாசம் சித்திக்கும்? என்று வினவினாள். தன் மகன் பிரிவைத் தாங்க மாட்டாமல் பாசத்துடன் இப்படிப் பேசிய தாயிடம் நரஹரி தத்துவ ஞானத்தை எடுத்துரைத்தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s