குருவைத் தேடி – 18

ஒரு நாள் மும்மூர்த்தியான ஸத்குரு அந்த வண்ணானைப் பார்த்து, நீ ஏன் இப்படி என்னை மூன்று வேளையும் நமஸ்கரிக்கின்றாய்? உனக்கு ஒரு கஷ்டமும் வராது. அரசன் போல் வாழ்வாய்! என்று ஆசீர்வதித்தார். வண்ணான் இதைக்கேட்டு ஆச்சர்யமடைந்து, குருவின் எண்ணம் அப்படி இருந்தால் சத்தியமாக அது நடக்கும் என்று சொல்லி தன் வேஷ்டியில் ஒரு முடிச்சு போட்டுக் கொண்டான்.

அது முதல் அவன் தன் குடும்பக் கவலைகளை மறந்து அங்கேயே குருவுடன் இருந்து பக்தியுடன் சேவை செய்யலானான். சில காலம் சென்றது. கடுங் கோடைக்காலமான வைகாசி மாதம் வசந்த ருதுவில் ஒரு மிலேச்ச அரசன் தன் பரிவாரங்களோடு அவ்வூருக்கு அருகில் நதிக்கரையில் வந்து தங்கினான். அவர்கள் அனைவரும் மிகுந்த ஆரவார மகிழ்ச்சியுடன் அலங்கரித்துக்கொண்டு நதிக்கரையில் பலவித விளையாட்டுகளுடன் பொழுதைக் கழித்தனர். பிறகு அரசன் தன் பட்டத்து ராணியுடன் பணிப் பெண்கள் பணிவிடை செய்ய நதியில் இறங்கி ஆனந்தமாக நீராடினான்.

week18கரையில் இருந்து அரசனின் ஜலக்கிரீடையைப் பார்த்துக் கொண்டிருந்த வண்ணான், அந்த அரசனின் யானை, குதிரைகளையும், ஆடை ஆபரணங்களையும் கண்டு வியந்து, பிறந்தாலும் இப்படியல்லவா பிறந்து அனுபவிக்க வேண்டும்! என்னுடைய வாழ்வும் ஒரு வாழ்வா? இந்த நிலையை அடைய அரசன் எந்த தெய்வத்தை வழிபட்டானோ? எந்த ஸத்குரு அருளாசி வழங்கினாரோ? என்றெல்லாம் அவன் மனதில் எண்ணங்கள் ஓடின. அவன் அவ்விடத்தை விட்டு நீங்கிக் குருவிடம் சென்று அவரை நமஸ்கரித்தான்.

அவ்வேளையில் ஸ்ரீ பாதர் அவனது உட்கருத்தை அறிந்தவராய், ‘உன் ஐம்புலன்களும் உன் வசத்தில் இல்லை போலிருக்கிறது. எல்லாவித சுகங்களையும் அனுபவித்த பிறகு தான் புலன்களை அடக்க முடியும். ஆசைகளை உள்ளே வைத்துக்கொண்டு புலன்களை அடக்கினால் அது முக்தி பெறும் முயற்சிக்குத் தடையாகப் போய்விடும். இடையூறு ஏற்படும். எனவே நீ குருசேவையை விட்டு விட்டு விடைபெற்றுப் போகலாம்!” என்றார்.

அதற்கு வண்ணான் பதைபதைத்துத் தன்னை இப்படி ஒதுக்கிவிட வேண்டாம் என்றும், தனக்குக் குருவின் சேவையும் சரணாகதியும் தான் முக்கியமென்றும், நான் மீண்டும் எப்போது தங்களை தரிசித்து ஞானம் பெற முடியும் என்றும் குரு அனுக்கிரகம் செய்ய வேண்டுமென்றும் கெஞ்சி மன்னிப்பை வேண்டினான்.

குருதேவர், உனக்கு ராஜபோகத்தில் ஆசை இருக்கிறது. எனவே அடுத்த ஜன்மத்தில் நீ மிலேச்ச குலத்தில் பிறந்து அரசனாவாய். அப்போது சில காரணங்களுக்காக நான் நரசிம்ம ஸரஸ்வதி என்னும் அவதாரம் எடுக்கக்கூடும். அப்போது அரசனான உன்னைச் சந்திக்க நேரிடும். அச்சமயத்தில் உனக்கு அனுக்கிரகித்து ஞானம் அளிப்பேன்! என்று கூறினார்.

மீண்டும் அவனிடம், நீ இப்போதே ராஜபோகம் அனுபவிக்க விரும்புகிறாயா? அல்லது மறு ஜன்மம் எடுத்து அனுபவிக்க விருப்பமா? என்று குரு கேட்க, வண்ணான் அவரிடம், எனக்கு இப்போது அதிக வயதாகிவிட்டது. நான் சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே ராஜ சுகங்களை அனுபவிக்க விரும்புகிறேன்! என்று கூறினான். பிறகு அவன் மனவருத்தத்துடன் குருவை விழுந்து வணங்கி விடைபெற்றுச் சென்றான். சில நாட்களில் மரணமடைந்து விட்டான்.

இவ்வாறு ஸ்ரீ பாதரின் பெருமையும் உயர்வும் குரவபுரம் முழுதிலும், அதன் சுற்றுப் புறத்திலும் பரவியது. அந்த ஊரே ஒரு புண்ணியத்தலமாக மாறியது. குருவைத் தரிசித்தவர்கள் அனைவரும் தமது பிரார்த்தனைகள் எல்லாம் நிறைவேறி மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் குருவான ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் ஒரு சுப தினத்தில் நதியில் மூழ்கித் தியானத்தில் ஆழ்ந்து ஜலசமாதியாகி மறைந்து விட்டார். மக்களின் கண் பார்வையிலிருந்து அவரது உருவம் மறைந்தாலும், உருவமற்ற நிலையில் அவர் அங்கு இருந்து பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை இன்னும் அளித்து வருகின்றார்.

பக்தனைக் காத்தருளிய கதை

ஸித்தர் பக்த சிரோன்மணியான நாமதாரகனிடம் ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் ஜல சமாதி ஆன பின்பும் அவ்வூர் மக்களுக்கு உதவி வந்ததாகச் சொல்ல உடனே நாமதாரகன், தன் தேகத்தைத் துறந்து மறைந்து போனவர், மேலும் மற்றொரு அவதாரம் எடுக்கப் போவதாகக் சொன்னவர் எப்படிக் குரவபுர மக்களுக்குத் தரிசனம் அளிக்கவோ, உதவி செய்து அருளவோ முடியும்? எனக் கேட்டான்.

அதற்கு ஸித்தர், குருவின் சக்தியை என்னவென்று விவரிப்பது? அவதார புருஷரான அவர் எங்கும் நிறைந்;தவரான விஷ்ணு அல்லவா? பரமாத்மா அனேக ரூபங்களை எடுக்க வல்லவர். எவ்வளவோ அவதாரங்களை அவர் எடுத்திருக்கிறார். பரசுராம அவதாரம் ஏதோ ஒரு யுகத்தில் முடிந்து விட்டது என்றாலும் இன்னும் அவர் பூமியில் பரசுராம சேத்திரத்தில் வசிக்கிறார் என்பது ஐதீகம். அதேபோல் பரமாத்மன் மூன்று தெய்வங்களாக இருந்து படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்கின்றார். அப்படிப்பட்ட நாராயணன் அம்பரீஷனுக்கு துர்வாசர் அளித்த சாபத்தைத் தான் ஏற்றுப் பலவிதமான பிறப்புக்களை எடுக்கவேண்டி நேர்ந்தது. இந்த விதத்தில் தான் குருநாதர் குரவபுரத்தில் அருளுருவமாக மறைந்திருந்து அருளினார். இந்தக் கதை இதை நன்கு விளக்கும்! என ஒரு வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

காஸ்யப கோத்திரத்தில் பிறந்த வல்லபேசன் என்பவன் சிறு வியாபாரம் ஏதோ செய்து வந்தான். அவன் ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ பாத சேத்திரத்திற்கு தவறாமல் யாத்திரை செய்து வருவான். வல்லபேசன் குருநாதரின் சரண கமலங்களில் பக்தி செய்து அவரை மிகவும் மதித்துப் போற்றுபவனாக விளங்கினான். குருவின் அருளால்தான் தனது வாழ்க்கை நிம்மதியாக இருக்கிறதென்றும், தனது வியாபாரம் நன்றாக நடக்கிறதென்றும், தனது உயர்விற்கெல்லாம் குரு அருளே காரணம் என்றும் அவன் திடமாக நம்பினான்;.

இந்நிலையில் ஒரு சமயம் அவனுக்குத் தொழிலில் நுhறு மடங்கு லாபம் கிடைத்தது. அந்த லாபத்தால் மகிழ்ச்சியடைந்த அவன், குரு அருளால் தான் இது நடந்தது என்று பரிபூரண பக்தியுடன் குரவபுரத்திற்குச் சென்று, அங்குள்ள மக்களுக்கும், பிராமணர்களுக்கும், குரு பக்தர்களுக்கும் அவர்கள் விரும்பிய வண்ணம் இச்சா போஜனம் அளிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டு குரவபுரத்திற்குப் புறப்பட்டான். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று நினைத்து, அதற்குரிய ஏற்பாடுகளுடன், தன, தான்யங்களுடன் பயணம் செய்தான். இவன் இப்படிப் பொன்னும் மணியுமாக விசேடமாகப் புறப்பட்டு யாத்திரை செய்வதை அறிந்து, சில திருடர்கள் மாறுவேடம் பூண்டுக் கபடமான எண்ணத்துடன் அவனுடன் வந்து சேர்ந்து கொண்டனர். தாங்களும் ஸ்ரீ பாத சேத்திரத்திற்கு ஒவ்வொரு வருடமும் செல்பவர்கள் என்றும், குரு பக்தியால் அவனுடன் வர விரும்புவதாகவும் சொல்லி அவனுடன் புறப்பட்டனர்.

காட்டு வழியே பயணம் போகின்ற சமயத்தில் ஓரிடத்தில் ஓய்வெடுக்க அமர்ந்தபோது, திடீரென்று அந்தத் திருடர்கள் வல்லபேசனின் மீதும் அவனது ஆட்களின் மீதும் பாய்ந்து அவர்களது தலையை வெட்டிக் கொன்றுவிட்டு செல்வத்தைக் கொள்ளையடித்தனர்.

அந்த நிமிடத்தில் ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் கையில் திரிசூலம், கத்தி முதலிய ஆயுதங்களை ஏந்தி, விபூதி, ருத்திராட்சத்துடன் ஜடாதாரியாக அந்தத் திருடர்கள் முன் தோன்றி, சண்டை செய்து எல்லோரையும் கொன்றார். ஆனால் அவர்களில் ஒருவன், நான் திருடனல்ல: நான் நிரபராதி: இவர்கள் கபடத்துடன் வந்து இந்த ஆளைக் கொல்வார்கள் என்பது எனக்குத் தெரியாது என்றும், தன்னை மன்னிக்கும்படியும் கெஞ்சினான். ஸ்ரீ பாதர் அது உண்மை என்பதை அறிந்து அவனை மன்னித்தார். மேலும் அவர் அவனிடம் விபூதியைக் கொடுத்து, வல்லபேசனுடைய தலையை அவன் உடலுடன் சேர்த்து வைத்து அந்த இடத்தில் விபூதியைப் பூசச் சொன்னார். அதன்படி அவன் செய்ய வல்லபேசன் உயிர் பெற்றான்.

இதற்குள் சூரியன் உதிக்க ஸ்ரீ பாதர் மறைந்து விட்டார். வல்லபேசன் கண்களைத் திறந்து பார்க்க, ஒரு பிரயாணியைத் தவிர மற்ற எல்லோருமே மரணமடைந்ததைக் கண்டு அதிர்ந்துபோய், இவனிடம் என்ன நடந்தது? என்று விசாரித்தான். அதற்கு அந்த மனிதன் மாறுவேடம் பூண்டு வந்த திருடர்கள் அவனையும், மற்றவர்களையும் வெட்டிக் கொன்றுவிட்டு செல்வத்தைக் கொள்ளையடித்ததையும், அந்த நேரத்தில் ஒரு யோகி சூலத்துடன் தோன்றித் திருடர்களைக் கொன்றதையும், தான் அவரிடம் மன்னிப்பு கேட்டு வணங்கியதால் தன்னை மட்டும் காப்பாற்றி
அவன் மூலம் வல்லபேசனையும் உயிர் பிழைக்கச் செய்த அதிசயத்தையும் பற்றிக் கூறினான்.

எல்லாவற்றையும் கேட்டு வியப்படைந்த வல்லபேசன், ஆபத்தில் வந்து தன்னைக் காப்பாற்றி அருளிய குருதேவருக்குப் பலமுறை நன்றி தெரிவித்து வணங்கி மகிழ்வுடன் பொருள்களை எடுத்துக்கொண்டு நண்பனாக மாறியவனையும் அழைத்துக்கொண்டு குரவபுரத்தை நோக்கிப் புறப்பட்டான்.

அவன் மனதில் குரு கிருபையும், அவர் மறைந்து விட்டார் என்று சொன்னாலும் அவர் மறையவில்லை, மகானாகிய அவர் உடலுக்குத் தான் மறைவே ஒழிய சாகா நிலை அடைந்த நிலையில் உள்ள அவர் அழிவில்லா சாஸ்வத நிலையில் இருப்பவர், அவரால் தோன்றவோ, மறைந்திருக்கவோ, பல இடங்களில் வெளிப்படவோ முடியும் என்றும் பலவிதமான எண்ணங்கள் தோன்றின. மனப்பூர்வமான பக்தியுடன் உண்மையாக வழிபடுபவர்களுக்கு நிச்சயம் குரு நாதர் உற்ற துணையாக இருந்து காப்பாற்றுவார் என்று திடமாக நினைத்தபடி அவன் வழிபாட்டுடன் வழி நடந்தான்.

குருவபுரத்தை இருவரும் அடைந்து அங்கே குருவின் பாதுகைகளுக்கு அனேக வித பூஜைகளைப் பக்தி சிரத்தையுடன் செய்து நாலாயிரம் பேர்களுக்கு இச்சா போஜனம் அளித்தான். அப்போது அவனை குருநாதர் காப்பாற்றிய வரலாற்றை நண்பனாக மாறியவன் சொல்ல அனைவரும் கேட்டு மகிழ்ந்து குருபக்தி செய்தனர். இதனால் ஸ்ரீ பாதரின் பெருமை மேலும் பரவியது.

இவ்வாறு நாமதாரகனின் சந்தேகத்திற்கு, நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கதையாகக் சொல்லிப் பதில் அளித்தார் ஸித்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s