குருவைத் தேடி – 17

முன்னொரு காலத்தில் உஜ்ஜயினி என்னும் ஊரில் சந்திரசேனன் என்ற அரசன் தர்மமாக அரசு புரிந்து வந்தான். அவனுடைய ஆத்ம நண்பன் மணி பத்ரன். இருவரும் சிறந்த சிவ பக்தர்கள். அரசனான சந்திரசேனன் தனது உயிர்த்தோழனுடன் சேர்ந்து சிவனுக்கு வெகு சிரத்தையாகப் பிரதோஷ பூஜை செய்து விரதமும் இருந்து வந்தான். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷ வேளையை வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வான். அன்று உஜ்ஜயினிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று முறைப்படி அபிஷேகம், பூஜை, நந்தி வழிபாடு, ஆராதனை போன்ற அனைத்தையும் செய்து விரதம் காத்து மகேஸ்வரனையே நினைத்தபடி இருப்பான். அவனது சிவபக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் சிந்தாமணி என்னும் ரத்தினத்தைப் பரிசாக அளித்தார். அந்த ரத்தினக் கல் சூரியனைப் போல் பிரகாசமாகவும் அந்தக் கல்லால் இரும்பைத் தொட்டால் அவை பொன்னாக மாறுகின்ற விந்தையைக் கொண்டதாகவும் இருந்தது.

அரசனுக்கு சிந்தாமணி என்னும் அரும் பொக்கிஷம் கிடைத்த செய்தியை அறிந்து பிற நாட்டு அரசர்கள் மனம் புழுங்கினர். பொறாமை கொண்டனர். அதைத் தமக்குத் தரும்படி சந்திரசேனனைப் பலவிதமாக வற்புறுத்தினர். மிரட்டினார்கள். கெஞ்சியும் கேட்டனர். அரசன் இறைவன் தந்த பரிசான அதனைத் தரமுடியாதென உறுதியாகக் கூறி மறுத்துவிட்டான். இப்படி அரசன் எதற்கும் இணங்காததால் கோபம் கொண்ட எல்லா அரசர்களும் ஒன்றாகச் சேர்ந்து கூடிப்பேசி உஜ்ஜியினியின் மீது படையெடுத்து வந்து முற்றுகையிட்டனர்.

இது இப்படி இருக்க உஜ்ஜியினி அரசரான சந்திரசேனன் அன்று சனிப்பிரதோஷ நாளாக இருந்தபடியால் மிக விமரிசையாகத் தனது ஊரிலுள்ள சிவ ஆலயத்திற்குச் சென்று பரமேஸ்வரனை 4 வகை உபசாரங்களுடன் முறைப்படி பூசித்தான். அந்த நகரத்திலுள்ள இடையர் குலத்தைச் சேர்ந்த பாலகர்கள், மன்னன் பிரதோஷ நாளன்று சிவ பெருமானைப் பூசிக்கும் முறையை நீண்ட பல நாட்களாக மிகக் அக்கறையாகக் கவனித்துக் கொண்டு வந்தனர். அதனால் அவர்களுக்குத் தாங்களும் அதே விதமாகப் பரமேஸ்வரனைப் பூஜித்து வணங்க வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று.

இன்று சனிப்பிரதோஷம் என்ற விபரம் அவர்களுக்குத் தெரிந்ததும் அச்சிறுவர்கள் தாங்களும் மன்னனைப் போலவே சிவனைப் பூஜை செய்ய விரும்பி விளையாட்டாகக் கல்லாலும் மண்ணாலும் அவர்களது வீதிக்கருகில் ஓர் விளையாட்டுக் கோவிலை அமைத்து அதில் ஒரு கல்லை சிவலிங்கமாகப் பிரதிஷ்டை செய்து, அவர்களுக்குக் கிடைத்த தழைகளாலும், புஷ்பங்களாலும் அரசன் செய்வது போலவே பதினாறு விதமான உபசாரங்களுடன் வழிபாடு செய்வதாக பாவனை செய்து நீரை வைத்து நிவேதனம் செய்தனர்.

அந்த நேரத்தில் இருட்டிவிட்டபடியால் இடைக்குலப் பெண்கள் அவரவர் பிள்ளைகளை வீட்டிற்கு அழைக்க சிறுவர்கள் ஓடிவிட்டனர். ஆனால் அவர்களில் ஒருவன் மாத்திரம் எழுந்து போகாமல் சிவனையே தியானித்தபடி இருந்து விட்டான். நடுநிசி ஆன பின்பும் தன் பிள்ளை வராததைக் கண்டு அவனது தாய் அவனைத் தேடி வந்து கூப்பிட்டாள்.

தாய் கூப்பிடக் கூப்பிடச் சிறுவன் எழவுமில்லை. தாயுடன் செல்லவும் இல்லை. அதனால் சினங்கொண்டு அவள் அந்த விளையாட்டுக் கோவிலை உடைத்துக் கற்களைக் கலைத்துவிட்டு மகனையும் கடுமையாகப் பேசிவிட்டு உடனே வரும்படி கூறிச் சென்றாள். தாங்கள் அருமையாக பூஜை செய்து போற்றி வணங்கும் தெய்வத்தைத் தாய் அலட்சியமாகத் தள்ளி விட்டதைப் பார்த்ததும் சிறுவன் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்து விட்டான். கல்லை லிங்கமாக நினைத்து வழிபட்ட பலனுக்குத் தனது பக்தி பாவத்தால் சுவாமியை அம்மா இப்படி அலட்சிப்படுத்திவிட்டாளே என்ற எண்ணம் உயிரையே பறிப்பது போன்ற துன்பத்தைத் தந்தது. அதனால் அவன் மயங்கிச் சாய்ந்தான்.

அடுத்த கணம் நீலகண்டன் அவன் முன் காட்சியளித்து அவனது மயக்கத்தைத் தெளிவித்தார். கண் விழித்த சிறுவன் தன் முன் உமாபதியைக் கண்டதும் பிரமித்து வணங்கினான். அதோடு தன் கோவில் இடிந்துபோய்விட்டதை நினைத்து அழுதான். உடனே பரமேஸ்வரன் அவன் கண்ணீரைத் துடைத்து ஒரு காட்சியை அவனுக்குக் காட்டினார். ஆச்சர்யம்! அச்சிறுவர்கள் சேர்ந்து பக்தியுடன் உருவாக்கிய சிறு கோயில் அந்த இடத்தில் பொற்கோயிலாக மாறி அமைந்து ஒளி வீசியது.

அதைப் பார்த்த பாலகனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவன் மலர்ந்த முகத்துடன் சிவனாரை வணங்கி, ஐயனே! என் தாய் செய்த பிழையை தாங்கள் மன்னித்து விட வேண்டும்! அவள் தெரியாமல் சிவபூஜையைக் கலைத்து விட்டாள்! என்று மனமுருகிச் சொன்னான். சிவபெருமானும் அச்சிறுவனை அள்ளி அணைத்து ஆசீர்வதித்து, அவள் தன் அறியாமையால் பிழை செய்தாலும் உன் பிரார்த்தனையால் அவளை மன்னித்து விட்டேன். நீ செய்த பூஜையை அவள் கண்ணால் கண்டதால் அவளுக்கு சத்புத்திரன் கிடைப்பான் என்று கூறி, மேலும் அவனுக்கு சகல செல்வங்களையும் அளித்துக் கோவிலிலிருந்த லிங்கத்தில் மறைந்தார்.

எல்லாம் சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டன. அந்த நடுநிசியில் இருளின் நடுவே ரத்தினமயமான அந்தச் சிவாலயம் கோடி சூரியனைப் போல் பிரகாசித்தது.

நகரத்தை முற்றுகையிட்டு சுற்றி வளைத்திருந்த பகை அரசர்கள் அந்த ஒளியைக் கண்டவுடன், என்ன ஆச்சர்யம்! இங்கு இரவில் சூரியன் பிரகாசிக்கின்றானே! இந்த அதிசயத்தை நாங்கள் எங்குமே கண்டதில்லையே! இந்த அரசன் புண்ணியசாலியாய் இருக்க வேண்டும். ஆகவே இறையருள் பெற்ற இவனை எதிர்ப்பது தகாது! என்று எண்ணினார்கள்.

அனைவரும் பகை உணர்வை நீக்கி ஒரு சேவகனை அழைத்து சந்திரசேன மன்னனிடம் தங்களை மன்னிக்கும்படியும், நண்பர்களாகத் தங்களை ஏற்கும்படியும் சமாதானத் தூது அனுப்பினர்.

இதற்குள் சந்திரசேனனும் இந்த இருளில் சூரிய உதயம் எப்படி ஏற்பட்டது என்று பார்க்க அந்தக் கோவில் இருந்த இடத்திற்குத் தன் மந்திரி பிரதானிகளுடன் வந்தான். அங்கு அந்தச் சிறுவனும் அவனது தாயும் பரவசத்துடன் நின்றிருந்தனர். அரசனிடம் எல்லா விபரங்களையும் எடுத்துரைத்தனர். அரசன் வியந்துபோய் கோவிலுக்குள் சென்று சிவபெருமானைத் தொழுது மகிழ்ந்தான்.

இவ்வாறு சனிப் பிரதோஷ மகிமையால் அந்த அரசன் பகை நீங்கி அனைத்து நாடுகளுடன் நட்பு பூண்டான். அந்த கோபாலனுக்கு அவனது பக்தியை மெச்சி இடையர்களின் அரசனாக அவனை ஆக்கி அனேக ஊர்களை அவனுக்கு வழங்கினான். சிவனருள் அந்த ஆலயத்தில் பரிபூரணமாக விளங்கி அந்த நாட்டையே செழிப்படையச் செய்தது.

இப்படிப்பட்ட உயர்வான பிரதோஷ விரத பூஜையை நீயும் முறையாகச் செய்து வா! உன் துன்பமெல்லாம் நீங்கும். நீ விரும்பியபடியே சத்புத்திரனும் பிறப்பான்! அதை விடுத்து இப்படி நதியில் மூழ்கி உயர் துறந்து பாவத்தை சம்பாதிக்க முயல வேண்டாம் என்று அறிவுரை கூறிய ஸ்ரீ பாத சற்குரு, மேலும் அந்த அசட்டுப் புத்திரனைத் தன் அருகில் அழைத்து அவன் தலை மீது தன் கரத்தை வைக்க, உடனே அவன் தன் அசட்டுத்தனம் செவிட்டுத்தன்மை போன்ற குறைகளெல்லாம் நீங்கி மூன்று வேதங்களின் ஞானம் பெற்ற பண்டிதனாக மாறிவிட்டான். அவனது தாய் மிகுந்த ஆச்சர்யமடைந்து முன் ஜன்மத்தில் செய்த புண்ணியத்தால் தான் தனக்கு சற்குருநாதன் காட்சியளித்ததாகக் கூறி அடிக்கடி நமஸ்கரித்தாள்.

மன நிறைவுடன் புதல்வனை அழைத்துக்கொண்டு வீடு திரும்பிப் பிரதோஷ விரதத்தையும் விடாமல் அனுஷ்டித்தாள். அந்தச் சிறுவனும் நன்கு வளர்ந்து மணம் புரிந்து நல்ல மக்களைப் பெற்றுத் தாயுடன் சிறக்க வாழ்ந்தான்.

வண்ணான் பெற்ற வரம்

குரவபுரம் என்னும் சிற்றூரில் தங்கி அங்கு ஒரு விதவைத் தாயின் தற்கொலை முயற்சியைத் தடுத்து, அவளுக்குபிரதோஷ பூஜையின் உயர்வை எடுத்துச் சொல்லி அவளது அசட்டுப் புத்திரனைத் தன் கிருபையால் சிறந்த கல்விமானாக்கிய ஸ்ரீபாத சற்குரு அந்த ஊரிலேயே தொடர்ந்து வசித்தார். அவரது உன்னதமான தவ வலிமையை அறிந்து ஊரார் அவருக்குப் பக்தியுடன் சேவை புரிந்து வந்தனர்.

அந்த கிராமத்திலிருந்த அனேக பக்தர்களில் ஒரு வண்ணானும் இருந்தான். அவன் நதியில் அழுக்குத் துணிகளைத் துவைக்க தினமும் காலையில் கிருஷ்ணா நதிக்குச் செல்வது வழக்கம். அவன் ஸ்ரீ பாதர் கிருஷ்ணா நதிக்கு நீராட வரும் ஒவ்வொரு தரமும், அவரைத் தரிசித்து வணங்கிப் பக்தியுடன் நமஸ்கரித்து வந்தான்.

யாருடைய தரிசனம் கிடைத்தால் கங்கா ஸ்நான பலன் கிடைக்குமோ அப்படிப்பட்ட அந்த குரு மகான், உலகத்தை அனுசரித்து வழிகாட்டும் பொருட்டுத் திரிகால ஸ்நானம் செய்து ஆசாரத்தைக் கடைப்பிடித்து நடந்து கொண்டார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s