குருவைத் தேடி – 16

சில காலத்திற்கு முன் ஒரு முறை நான் தீர்த்த யாத்திரையாக அங்கு சென்றேன். ஒரு நாள் மதிய நேரத்தில் நிழலுக்காக ஒரு மரத்தடியில் நான் உட்கார்ந்திருந்தேன். அப்போது குஷ்டரோகத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, அழுக்கடைந்து நாற்றமடிக்கின்ற தேகத்துடன், ஆடைகளற்று மண்ணில் புரண்டுகொண்டிருந்த ஒரு கிழவியைக் கண்டேன். தன் துன்பங்களைப் பொறுக்க மாட்டாமல் அழுது புரண்ட அவள் திடீரென்று எழுந்து தள்ளாடி நடந்து வந்து மரத்தடியில் விழுந்து பிராணனை விட்டாள். உடனே சிவ தூதர்கள் சூலம் முதலிய ஆயுதங்களுடன் வந்து, அவளுக்குச் சந்திரனைப்போல் பிரகாசிக்கும் தேகத்தைத் தந்து விமானத்தில் உட்கார வைத்தார்கள்.

இந்த அதிசயத்தைக் கண்டு பிரமித்த நான், சிவதூதர்களைப் பார்த்து, ‘ஒரு நாயை சிம்மாசனத்தின் மீது அமர்த்துவதைப் போல இந்தப் பாவியான கிழவியை இப்படிப்பட்ட விமானத்தில் ஏற்றும்படி இவள் அப்படி என்ன செய்தாள்? இவள் ஒருபோதும் சிவபூஜையோ, தவமோ, தானமோ, சாதனையோ செய்ததில்லையே! மாறாக பசு மாமிசத்தைப் புசித்து, எந்த வித அனுஷ்டானமுமின்றித் துர்நாற்றமும், நோயும் பிடித்தவளாக மிகக் கேவலமாகத் திரிந்த இவள் சிவபதவி அடைய என்ன செய்தாள்?” என்று கேட்டேன், அதற்கு சிவதூதர்கள் அவளைப் பற்றிச் சொன்னார்கள். “பூர்வ ஜன்மத்தில் இவள் சௌமினி என்ற அழகு வாய்ந்த பிராமணக் கன்னிகை. பத்து வயதில் இவளை இவளது மாதா பிதாக்கள் ஒரு சாதாரண பிராமணனுக்குத் திருமணம் செய்து தந்தார்கள். முன் வினைப் பயனால் அவளது கணவன் நோயுற்று மரணமடைந்தான். இளம் வயதிலேயே விதவையாகிவிட்ட இவள் புலனடக்கமில்லாமையால் இழி தொழிலில் ஈடுபட்டாள். கொஞ்ச காலத்தில் விஷயம் வெளிப்பட்டு ஊரார் இவளையும் தாய் தந்தையாரையும் தூற்றத் தொடங்கினர். அதைச் சகிக்க முடியாத பெற்றோர் இவளைக் கண்டிக்கவும் இயலாமல் வீட்டை விட்டுத் துரத்திவிட்டனர். அதனால் பயம் தெளிந்துவிட்ட இப்பெண் ஒரு அழகிய பையனை மறுவிவாகம் செய்து கொண்டு அவனோடு வசிக்கலானாள்.

பெண்கள் காமமென்ற ஆசையாலும், பிராமணர் தாழ்வான பணிகளில் ஈடுபடுவதாலும், ராஜ்ஜியங்கள் பிராம்மணர்களின் சாபத்தாலும், சந்நியாசிகள் புலனின்பங்களை விரும்புவதாலும் கெடுகின்றனர். அந்தப் பெண் தன் குல ஆசாரங்களை விட்டொழித்து மது, மாமிசம் பழகி வைசியனுடன் வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டாள். இப்படிக் கேவலமாக வாழ்ந்து இறந்து போனாள். யம தூதர்கள் அவளை அழைத்துச் சென்று நரகத்தில் வதைத்து மறுபடியும் சண்டாளக் குடும்பத்தில் பிறக்கும்படிச் செய்தனர். பிறக்கும்போதே குருடாகவும், அமாவாசையைப் போல் கறுப்பாகவும் பிறந்தாள். பிறந்த சிறிது காலத்திலேயே பெற்றோரை இழந்து பூர்வ ஜென்ம வினையினால் குஷ்டநோயையும் அடைந்தாள். ஊர் ஊராகப் பிச்சையெடுத்துத் திரிந்து கொண்டிருந்தாள்.

இந்நிலையில் மாசி மாதம் கிருஷ்ணபட்சம் திரயோதசியில் மகா சிவராத்திரி வந்தது. எல்லா நாடு நகரங்களிலிருந்தும் யாத்திரிகர்கள் மகா பலேஸ்வரரைத் தரிசிப்பதற்காக யாத்திரை செய்தனர். இந்தச் சண்டாளியும் மற்ற பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு இங்கு வந்து கோயிலுக்குப் போகிற வருகிறவர்களிடம் பிச்சை கேட்டாள். கூட்டத்தில் ஒருவன் தன்னிடமிருந்த வில்வதளங்களை அவள் கையில் போட்டான். அவள் குருடியாதலால் கையில் விழுந்த பொருளை முகர்ந்து பார்த்து சாப்பிடும் பொருள் இல்லை என்றறிந்து இலைகளை வீசி எறிந்தாள்.

அந்த வில்வதளங்கள் பக்கத்திலிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. பிச்சை கிடைக்காததால் உபவாசமும், இரவு முழுவதும் பசியினால் கண் விழித்த பலனும், எதேச்சையாக சிவபூஜை செய்ததாலும் இவளுடைய நூறு ஜன்ம பாவங்கள் தொலைந்தன. அடுத்த நாள் காலையான இன்று அவள் நோயையும் பசியையும் பொறுக்க முடியாமல் மரத்தடியில் விழுந்து உயிரிழந்தாள்.

சிவன் ராத்திரி விரதம் செய்த புண்ணியத்தால் சிவதூதர்களான நாங்கள் இவளுக்கு திவ்விய தேகம் தந்து மேலான நிலையை அடைய இந்த விமானத்தில் அமர்த்துகின்றோம்!” என்றனர். “இந்த பூமியில் அறியாமல் செய்கின்ற செயல் கூடப் புண்ணியமாக ஆகி விடுகின்றதே! என்று எண்ணி நான் வியப்படைந்தேன்” என்று ராஜனிடம் கௌதம ரிஷி கூறினார்.

மேலும் அவர், ராஜனே! நீங்கள் எந்தவித சந்தேகமும் கொள்ளாமல் கோகர்ண திவ்விய பூமிக்குச் சென்று, அங்கு நதியில் மூழ்கி, மகாபலேஸ்வரரை வழிபடுங்கள். உங்களது சகல பாபங்களும் தொலைந்து சாப விமோசனம் பெறுவீர்! என்று ஆசீர்வதித்தார். மித்ரஸாஹன் என்ற அந்த அரசனும் சோர்வு நீங்கி நம்பிக்கை பெற்றுப் பக்தியுடன் கோகர்ணம் சென்றடைந்தான். அங்கு மகாபலேஸ்வரரைத் தொழுது வணங்கித் தன் பாவங்களைப் போக்கிக் கொண்டான்.

இவ்வளவு பெருமையுடைய கோகர்ணத்தின் தெய்வீகத் தன்மையை உணர்த்தத்தான் ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் அங்கு சென்று தங்கினார் என்று ஸித்தர் நாமதாரகனுக்கு விளக்கினார்.

பிரதோஷ மகிமை

ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி என்னும் மகானின் பெருமைகளைக் கேட்டறிந்து, தன் மனத்துயரத்தையும் சந்தேகங்களையும் போக்கிக்கொள்வதற்காகவும், குரு தேவரான அவரது திருப்பாதங்களைச் சரணடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்துடனும் தன் சொந்த ஊரை விட்டுப் புறப்பட்ட நாமதாரகன் என்னும் பக்தன், பயணத்தின் இடையில் ஒர் அபூர்வ சித்தரைத் தரிசிக்க நேரிட்டது. தன்னை அந்த குரு நாதரின் சிஷ்யன் என்று கூறிக்கொண்ட அந்த சித்தர் நாமதாரகனுக்குத் தம் குருநாதரின் முற்பிறப்புகளைப் பற்றிய வரலாறுகளை ஒவ்வொன்றாகச் சொல்லத் துவங்கினார். குரு மகிமைகளை அறியும் ஆவலுடன் நாமதாரகனும் அவற்றைச் சிரத்தையுடன் கேட்டான். அதன்படி அன்று சித்தர் சனிப்பிரதோஷ மகிமை பற்றிய கதையைச் சொல்லத் தொடங்கினார்.

கோகர்ண திருத்தலத்தில் சில காலம் வசித்த ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் மீண்டும் சாதுக்களுக்கு தீட்சை அளிப்பதற்காக யாத்திரை செய்யப் புறப்பட்டார். பல இடங்களுக்குச் சென்று, பிறகு கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள குரவபுரம் என்னும் ஊரை அடைந்து அங்கு தங்கினார். அவ்வூர் மக்கள் குருநாதரை வரவேற்று, வணங்கி, உபசரித்துத் தங்களது கஷ்ட நஷ்டங்களைக் கூறி வழிவகைகளையும் வரங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அந்த கிராமத்தில் வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த ஒரு பிராமணன், அம்பிகா என்ற தன் மனைவியுடன் வசித்து வந்தான். அவர்களுக்குப் பிள்ளைகள் பிறந்து இறந்து போய்விடுவதாகவே இருந்தது. கடைசியில் ஒரு செவிட்டுப் பிள்ளை பிறந்தது. காது கேட்காததோடு மட்டுமின்றிப் பூர்வ கர்ம வசத்தால் அசடாகவும் வளர்ந்தான். சிறுவனானதும் உபநயனம் செய்து வைத்தனர். ஆனால் அந்தச் சிறுவனிடம் குலத்திற்கேற்ப வேதம், சாஸ்திரம் என்ற எதுவுமே அவன் புத்தியில் ஏறவில்லை.

அவன் அப்படி அசடாயிருப்பதைப் பொறுக்க முடியாமல் தந்தை எவ்வளவோ அடித்துச் சொல்லிக் கொடுத்த போதிலும் ஒன்றும் பயனளிக்காததால், மாதா பிதா இருவருமே மிக வருந்தினர். பிள்ளை படிக்காவிட்டாலும், மூடனாக இருந்தாலும் உயிரோடு இருந்தாலே போதும் அவனை அடித்துக் கொல்ல வேண்டாம் என்று தன் புத்திர பாசத்தினால் பதியை வேண்டினாள் அம்பிகா. இருக்கும் ஒரே பிள்ளையும் இப்படிப் பயனற்றுப் போய் விட்டானே என்ற ஏக்கத்தில் தகப்பன் மரணமடைந்தான்.

வாழ வழியற்ற தாயும், பிள்ளையும் வேறு வழியின்றிப் பிச்சை எடுத்துக் காலம் கழித்தனர். ஆனால் ஊரார் அவர்களை நிம்மதியாய் இருக்க விடாமல் ஏசிப் பேசினர். ‘எப்பேர்ப்பட்ட வேத சாஸ்திர நிபுணனுக்கு இப்படி ஒரு பிள்ளை பிறந்ததே! என்றும், அவன் பெயரைக் கெடுக்க இவன் பிறந்திருக்கிறான் என்றும், பிச்சையெடுத்துப் பிழைக்க வெட்கமாக இல்லையா? இப்படி மிருகத்தைப்போல் வயிறு வளர்ப்பதைக் காட்டிலும் பிராணனை விடலாமே!” என்றும் பலவாறாகத் தூற்றினர்.

இந்த வார்த்தையைக் கேட்டு மனம் உடைந்து போன தாய் தன் பிள்ளையுடன் கிருஷ்ணா நதியில் விழுந்து உயிரை விட்டுவிடுவதென்று தீர்மானித்து விட்டாள். அதன்படி இருவரும் துக்கத்துடன் கிருஷ்ணா நதி தீரத்திற்கு வந்தனர்.

அத்தருணத்தில் யோகியான ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் ஸ்நானம் செய்வதற்காகக் கி;ருஷ்ணா நதியில் இறங்கியிருந்தார். தாயும் பிள்ளையும் குருவைக் கண்டு அவரை வணங்கித் தாங்கள் இருவரும் இந்த நதியில் மூழ்கி இறந்து விட முடிவு செய்திருப்பதையும், அதனால் ஏற்படப்போகும் ஆத்மஹத்தி என்னும் பாவம் தங்களைச் சேராமல் குரு தான் ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் கண்ணீருடன் துதித்தனர்.

குருதேவர் உயிரை விட என்ன காரணம்? என வினவினார். அம்பிகா என்னும் அந்தத் தாய், தனக்கு அனேகப் பிள்ளைகள் பிறந்தும் அவை இளம்பிராயத்திலேயே இறந்து விட்டன என்றும் கடைசியாகப் பிறந்த இந்தப் பிள்ளையும், செவிடனாகவும், அசடனாகவும் பிறந்திருப்பதாகவும், மூடனான பிள்ளையைப் பெற்றுவிட்டேனே, குலதர்மத்தைக் காப்பாற்ற சந்ததி இல்லாமற் போயிற்றே என்ற ஏக்கத்திலேயே இவனது தந்தை இறந்துவிட்டதாகவும் சொன்னாள். மேலும் அவள், நாங்கள் இருவருமே பிறந்ததிலிருந்தே எந்த வித சுகத்தையும் அனுபவி;த்ததில்லை. இந்நிலையில் ஊரிலுள்ள ஜனங்கள் இந்தப் பிள்ளையை மிகவும் நிந்திக்கிறார்கள். அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இனி எந்த ஜன்மத்திலும் எனக்கு மூடக் குழந்தைகள் பிறக்காமலிருக்கக் குருதேவர் அருள வேண்டும் என்றும், பூரண ஞானத்துடன் கூடிய சத் புத்திரன் பிறக்க வேண்டும் என்றும் தங்கள் ஆசியுடன் நாங்கள் நதியில் விழுந்து இறக்கச் சித்தமாக இருக்கிறோம் என்று கூறி அழுதார்.

கருணையே வடிவான குருநாதர் அவளைத் தேற்றி அமைதிப்படுத்தினார். தற்கொலை செய்து கொள்வது பாவம் என உணர்த்தினார். மேலும் அவர், ‘அம்மா! உனக்குப் பிரம்மஞானியான புத்திரன் வேண்டுமென நீ விரும்பினால் பரமசிவனைக் குறித்துப் பிரதோஷ விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அதிலும் சனிப்பிரதோஷ விரதம் மிகச் சிறந்த பலனை அளிக்கக்கூடியது” என்று கூறினார்.

அந்தப் பெண் அதைப்பற்றி எனக்கு விபரமாகக் கூறுங்கள் என குருநாதரை வேண்டினாள். அவரும் சொல்லத் தொடங்கினார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s