குருவைத் தேடி – 15

கோகர்ணம் என்னும் ஊரின் பெருமை

சிவபெருமான் மனமுவந்து அளித்த ஆத்மலிங்கம் பூமியில் பதிந்துவிட்ட இடமே கோகர்ணம் என்னும் திருத்தலமாயிற்று என்று சித்தர் கூறியதும், நாமதாரகன் அந்தத் திருத்தலத்தின் பெருமையைப் பற்றி மேலும் அறிய விரும்புவதாகச் சொன்னான். தீர்த்த சேத்திரங்களின் சிறப்பைப் பற்றி கேட்டால் குரு கிருபை ஏற்படுமென்று கூறி, சித்தர் சொல்ல ஆரம்பித்தார்.

week15முன் யுகத்தில் இஷ்வாகு வம்சத்தில் எல்லாவித சாஸ்திர அறிவும் விவேகமும் பலமும் பெற்ற மித்ரஸஹன் என்ற அரசன் ஒருவன் இருந்தான். ஒரு நாள் அவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மனித சஞ்சாரமில்லாத அந்தக் காட்டில் ஓர் அசுரனைக் கண்டு அவனோடு யுத்தம் ஏற்பட்டுத் தன் பாணங்களால் அவ்வசுரனைக் கொன்று விட்டான். அப்போது அவ்வசுரன் சமீபத்திலிருந்த தன் சகோதரனை அழைத்து அந்த அரசனைப் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு தன் பிராணனை விட்டான்.

தன் சகோதரனின் மரணத்தால் கோபம் கொண்ட அந்த அசுரன் ஒரு சாது மனிதனைப்போல் மாய வேடம் தரித்து அந்த அரசனின் அரண்மனைக்கு வந்து மிக நல்லவன் போல் நடித்து, ஒரு வேலைக்காரனாக மிகப் பணிவுடன் வேலை செய்து வந்தான். சில காலம் சென்றது. மித்ரஸஹன் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்த தினம் வந்தது. அந்த சிரார்த்தத்தில் கலந்து கொள்ள குலகுருவான வசிஷ்டரும் மேலும் பல ரிஷிகளும் வருகை புரிந்தனர்.

மிகவும் நம்பிக்கைக்கு உரியவனான அந்த மாயாவி வேலைக்காரனை அரசன் சமையலுக்குத் தேவையான பொருட்களைக் கொடுக்கும் மேற்பார்வையாளனாக நியமித்திருந்தான். அசுரன் இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு சமையற்காரன் ஒருவனைக் கைக்குள் போட்டுக்கொண்டு திருட்டுத்தனமாக நர மாமிசத்தை சமைத்து திவசச் சாப்பாட்டில் அதைக் கலந்து பரிமாறி விடும்படி ஏற்பாடு செய்து விட்டான்.

குலகுருவான வசிஷ்டர் உணவில் நரமாமிசம் கலந்திருப்பதை உணர்ந்து, சினம் கொண்டு அரசனை, நீ இப்படிச் செய்துவிட்டபடியால் பிரம்ம ராட்சதனாகக் கடவது! என்று சாபமிட்டார். அரசனும் உடனே கோபமுற்று, ‘இதை யாரோ செய்திருக்கிறார்கள். எனக்கு எதுவுமே தெரியாது. நான் பொறுப்பாளி அல்ல. அப்படி இருக்க ஏன் இப்படி சபித்தீர்கள்? என்று கையில் நீரை ஊற்றிக்கொண்டு வசிஷ்டருக்கு சாபம் கொடுக்கத் தயாரானான்.

அரசனின் பக்கத்தில் நின்றிருந்த மதயந்தி என்ற மகாராணி, அரசனின் கால்களில் விழுந்து தம் குருவான வசிஷ்டருக்குத் தாங்கள் சாபம் கொடுக்கக்கூடாது, அதனால் நம் குலத்திற்கே தோஷம் ஏற்படும். குரு தான் நம்மை ரட்சிப்பவர் என்று சொல்லி வணங்க, அரசன் அவள் கூற்றில் இருந்த உண்மையை உணர்ந்து, தன் கையில் ஏற்திய நீரைத் தன் பாதங்களின் மீதே கொட்டிக் கொண்டான். சாபமிட்ட நீரைத் தானே அவன் ஊற்றியவுடன் அவன் பிரம்மராட்சதனாகி நாட்டை விட்டு அலைந்து திரிந்தான். ராஜபத்தினியான மதயந்தி கண்ணீருடன் குரு வசிஷ்டரின் பாதங்களில் வணங்கி குழந்தைகள் தெரியாமல் செய்த குற்றத்திற்கு முனிவரான தாங்கள் இவ்வளவு கடுமையான சாபம் இடலாமா? என்று வேண்டினாள். முனிவர் சாந்தமடைந்து, பன்னிரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் அவன் தன் சுய ரூபத்தை அடைந்து அரசனாகத் திரும்பி வருவான் என்று சாப விமோசனம் தந்தார்.

நாட்கள் கடந்தன. ஒரு நாள் பிரம்ம ராட்சதனாக அந்த அரசன் திரிந்துகொண்டிருந்த கானகத்தில் ஒரு பிராமணத் தம்பதிகள் கால் நடையாகப் போய்க்கொண்டிருந்தனர். திடீரென்று அவர்கள் முன்னால் வந்த பிரம்மராட்சதன் பிராமணனைத் தூக்கிக்கொண்டு ஓடினான். அதைக் கண்டுத் திடுக்கிட்ட அவனது மனைவி ராட்சதனைக் கைகூப்பி வணங்கித் தன் கணவனை ஒன்றும் செய்து விட வேண்டாம் என்றும் அவனை விட்டுவிடும்படியும், அதற்குப் பதிலாக தன்னைக் கொன்று புசிக்கும்படியும் வேண்டினாள். தனது மாங்கல்யத்தைக் காப்பாற்றும்படியும், தன் கணவன் இறந்த பின்பு ஒரு பெண்ணிற்குக் கௌரவமில்லையென்றும், தாங்கள் கிருபை செய்து என் கணவரை விடுதலை செய்தால் எங்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு உங்கள் பெயரை வைத்து நாங்கள் கூப்பிடுவோம்! என்றும் பலவிதமாகக் கெஞ்சிக்கேட்டு அழுதாள்.

ஆனால் அந்த ராட்சதன் எதற்கும் இணங்காமல் பிராமணனைக் கொன்று புசித்தான். மகா பதிவிரதையான அந்தப் பெண் ராட்சதனைப் பார்த்து, ‘ஏ! மூடா! சூர்ய வம்சத்தில் பிறந்த அரசனான நீ முதலிலேயே குலகுருவின் சாபத்தைப் பெற்றதால்தான் இப்படி நீச பிரம்மராட்சதனாக அலைகிறாய். மேலும் பிழை செய்து ஏன் பாவத்தைத் தேடிக்கொண்டாய்? என் கணவனை என்னிடமிருந்து பிரித்த நீ பன்னிரண்டு ஆண்டுகள் ஆன பின் மீண்டும் அரசனாக மாறுவாய். அப்போது நீ உன் மனைவியுடன் உடல் உறவு கொண்டாயானால் மறுகணமே உன் உயிர் போய்விடும்!” என்று ஆவேசத்துடன் சாபமிட்டாள். உடனே அந்த இடத்தில் தீ மூட்டித் தன் கணவனின் உடல் பகுதிகளை எல்லாம் ஒன்று சேர்த்துத் தன் மடியில் வைத்துக்கொண்டு நெருப்பில் விழுந்து உயிரை விட்டுவிட்டாள்.

பன்னிரண்டு ஆண்டுகள் சென்றன. பிரம்ம ராட்சதனின் சாபம் நீங்கியது. அவன் அரசனாக மாறி மறுபடியும் ராஜ்யத்திற்கு வந்தான். கண்ணீர் விட்டபடி இறைவனை வழிபட்டுக்கொண்டு கணவனுக்காகக் காத்திருந்த மதயந்தி, சகலவிதமான மரியாதைகளுடனும் தன் பிராண நாதனை வரவேற்றாள். மக்களும் அரசப் பிரமுகர்களும் மகிழ்ந்தனர்.

கோலாகல வரவேற்பு முடிந்து அந்தப்புரத்தில் தன் பத்தினியான மதயந்தியிடம் வந்த மன்னன் மீண்டும் தான் பெற்றுவிட்ட சாபத்தை அவளிடம் எடுத்துரைத்தான்.

மதயந்தி தன் வம்சம் புத்திர சந்தானமில்லாமல் தவிப்பதையும், பன்னிரண்டு வருடங்கள் காத்திருந்தும் பிராரப்தம் தன்னை விடாததையும் அறிந்து சோக மடைந்தாள். அதைக்கண்டு அரசனும் துக்கப்பட்டான். பிறகு அரசன் மந்திரிகள், புரோகிதர்கள், வயதானவர்கள் ஆகியோரைக் கூப்பிட்டுத் தனக்கு நேர்ந்ததைக் கூறி அதற்கு விமோசனம் கேட்டான்.

எல்லோரும் ஒன்றுகூடிப் பலவிதமாக யோசித்துக் கடைசியில் அரசனிடம் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும் என்றும், அப்படிப் பல புண்ணியத் தலங்களுக்குச் சென்றால் அந்த இடங்களின் புனிதத்தன்மையால் அவனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கலாம் என்றும் ஆலோசனை கூறினர்.

அரசனும் அவர்களின் ஆலோசனையை ஏற்றுப் புறப்பட்டான். மிகக் கிரமமாகத் தீர்த்த யாத்திரை செய்து சென்ற இடங்களில் புண்ணிய நதிகளில் நீராடி, அன்னதானம் செய்து, அங்குள்ள கோவில்களைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்தான். அவனது தோஷம் விட்டபாடில்லை. இப்படி அலைந்துகொண்டே மிதிலை என்னும் நகரத்தின் எல்லையை அடைந்து ஓர் மரத்தின் அடியில் களைத்துப்போய் உட்கார்ந்தான்.

அந்த சமயத்தில் தவத்தால் ஒளிர்கின்ற தோற்றத்துடன் கௌதமர் என்ற ரிஷி யதேச்சையாக அங்கு வந்தார். அவரது தேஜஸ் அரசனைக் கவர்ந்தது. உடனே அவன் எழுந்து சாஷ்டாங்கமாக அவர் கால்களில் விழுந்து வணங்கினான். தனது முழு வரலாற்றையும் அவரிடம் எடுத்துரைத்துத் தனக்கு உரிய வழி காட்டும்படி வேண்டினான்.

கருணைக் கடலான கௌதமர் அபயமளித்து மிருத்யுஞ்சயனாகிய பரமசிவன் உன்னைக் காப்பாற்றுவார்! என்று ஆசீர்வதித்தார். இந்த பிரம்மஹத்தி போன்ற சகல பாபங்களும் கோகர்ண சேத்திரம் சென்றால் தீரும். அங்கே கைலாசபதியான பரமசிவன் வாசம் செய்கிறார். அங்குசகல தேவர்களும் தவம் செய்கின்றனர். அந்தப் புண்ணிய பூமியில் நாம் எந்த தானம், தவம் செய்தாலும் லட்சம் மடங்கு பலனுண்டு. அந்த இடம் விஷ்ணுவின் ஆணையை ஏற்று விநாயகரால் கைலாயபதியின் ஆத்மலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம். ஆகையால் கைலாஸத்திற்குச் சமமானது.

அந்த இடத்தின் பெருமையைச் சொல்லி மாளாது. நகரத்தின் கிழக்கு வாயிலிலே சகல தேவர்களும், பிரம்மா, விஷ்ணு, இந்திரன், விஸ்வதேவர்கள், மருத்கணங்கள், சூரியன், சந்திரன் முதலியோர் இருக்கின்றனர். அக்னி, யமன், சித்ரகுப்தன், பதினோரு ருத்திரர்கள், பித்ருக்கள் ஆகியோர் தெற்கு வாயிலில் வசிக்கின்றனர். குபேரன், வாயு, பத்ரகாளி, மாதுரு தேவதை, சண்டி முதலானவர்கள் வடக்கு வாசலில் அமர்ந்து மூன்று வேளையும் மஹாபலேஸ்வரரைப் பூஜிக்கின்றார்கள். வசிஷ்டர், கண்வர், விசுவாமித்திரர், பரத்வாஜர், ஜைமினி முதலிய ரிஷிகளும், கந்தர்வர்கள், யட்சர்கள், நாகலோகத்திலுள்ள ஆதிசேஷன், தட்சன், பைசாசங்கள், முதலிய எல்லா கணங்களும் பரமசிவனை ஆராதிக்க அங்கு செல்கிறார்கள்.

வேண்டுவோர் வேண்டியவற்றை வழங்கும் தன்மையுடைய இந்த ஸ்தலத்திற்கு அகஸ்தியர், சனத்குமாரர், அக்னி, ராட்சத குலத்தில் பிறந்த ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் போன்றோர் தினமும் ஆராதிக்கச் செல்கின்றனர். அந்த இடத்திற்கு சமமாக எந்த இடத்தையும் ஒப்பிட முடியாது. பிரம்மதேவன், விஷ்ணு, கார்த்தவீரியன், விநாயகர் முதலியவர்கள் தங்கள் பெயரால் லிங்கங்களை அங்கு ஸ்தாபித்திருக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால் அந்த ஊரில் உள்ள கற்களெல்லாம் லிங்கங்களாகவும், நீரெல்லாம் புனித தீர்த்தங்களாகவும் திகழ்கின்றன என்றே கூறலாம்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த அந்த ஸ்தலத்தில் இருக்கின்ற மகா பலேஸ்வரர் என்னும் பெயருடைய ஆத்ம லிங்கமானது, கிருத யுகத்தில் வெண்மை நிறமாகவும், திரேதா யுகத்தில் இரும்பின் வர்ணமாகவும், துவாபர யுகத்தில் மஞ்சள் வர்ணமாகவும், கலியுகத்தில் கருப்பாகவும், ஏழு பாதாளங்களிலிருந்தும் கிளம்பி மேலே சூட்சுமமாகத் தென்படுகின்றது. அப்படிப்பட்ட இந்த லிங்கத்தைத் தரிசித்து விட்டால் உடனே பிரம்மஹத்தி முதலான ஆறு விதக் கொடிய பாவங்களும் போய், நாம் வரும்புபவை எல்லாம் நிறைவேறி நல்ல நிலையை அடைய முடியும். ஒரு வேளை அந்த லிங்கத்தைப் பூஜை செய்தால் சிவபதம் கிட்டும். ஞாயிறு, திங்கள், புதன் கிழமைகளிலும் அமாவாசை முதலிய பருவ காலங்களிலும், சங்கராந்தி, மகா பிரதோஷம், திரயோதசி முதலிய தினங்களில் ஒரு வேளை சமுத்திரத்தில் ஸ்நானம் செய்து பூஜித்தாலும் அவர்கள் ருத்திர அம்சம் பெறுகிறார்கள்.

மாசி மாத சிவராத்திரித் தினத்தன்று ஒரு வில்வதளத்தைக் கொண்டு பூஜை செய்தாலும், பரமசிவன் மகிழ்ந்து எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்கின்றார்! என்று கோகர்ண சேத்திரத்தின் மகிமையைக் கௌதம ரிஷி மிக விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

முனிவர் சொன்னவற்றை மிகுந்த சிரத்தையுடன் கேட்டுக்கொண்ட மன்னன் அவரை வணங்கி, முனிவரே! இப்படிப்பட்ட இந்த புண்ணிய ஸ்தலத்தில் யாராவது பாப விமோசனம் பெற்ற வரலாறு இருந்தால் அதனை அடியேன் கேட்க விரும்புகிறேன்! என்று சொன்னான்.

முனிவர், ‘அதற்கு அனேக அத்தாட்சிகள் இருக்கின்றன. நான் என் கண்முன் கண்ட ஒரு வரலாற்றை இப்போது நான் உனக்கும் சொல்கிறேன்!” என்று சொல்ல ஆரம்பித்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s