குருவைத் தேடி – 14

விஷ்ணு கோபத்துடன் சிவனிடம் சென்று, ‘என்ன காரியம் செய்தீர்? தங்களின் பிராணனாக பாவிக்கும் ஆத்ம லிங்கத்தை அந்த அசுரனுக்குக் கொடுக்க என்ன காரணம்? நீங்கள் இப்படிச் செய்ததால் ஸ்வர்க்கலோகம் அவன் வசமாகி விடுமே! அவன் தேவர்களை இன்னும் பாடாய்ப் படுத்தி விடுவானே! நீங்கள் இப்படிச் செய்யலாமா?” என்று கேட்டார்.

அதற்குப் பரமசிவன், ‘இராவணன் என் பக்தன். தன் தலையை அறுத்து நரம்புகளால் வீணை செய்து சாம வேதத்தை சுபஸ்வரமாக அவன் பாடியதைக் கேட்டுப் பரவசமடைந்தேன். அந்த வேளையில் என் அர்த்தநாரியான பார்வதியைக் கேட்டிருந்தாலும் அவனுக்கே கொடுத்திருப்பேன்!” என்றார்.

‘தாங்கள் பாத்திரமறியாமல் வரங்களை இப்படி அசுரர்களுக்குக் கொடுப்பதால் அவர்கள் அகங்காரம் கொண்டு தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தத் தொடங்குகின்றனர். அதை முன்னிட்டு நான் அவதாரம் எடுக்க நேரிடுகிறது!” என்று விஷ்ணு உமா காந்தனை நோக்கிச் சொன்னார். மேலும் “ஆத்ம லிங்கத்தைக் கொடுத்து எவ்வளவு நேரம் ஆகிறது! இதற்குள் இராவணன் இலங்கையை அடைந்திருப்பானா?” என்றும் வினவினார். ‘ஐந்து நாழிகை தான் ஆயிற்று” என்றார் சிவன். உடனே விஷ்ணு நாரதரையும் விநாயகரையும் அழைத்தார். விஷ்ணு நாரதரைப் பார்த்து, “நீ உடனே போய் இராவணனைக் தடுத்து நிறுத்தி எதையாவது பேசி இடையூறு செய்” என்று அனுப்பி வைத்தார்.

விநாயகரை நோக்கி, ‘விக்னேச்வரா! அனைவரும் ஒரு காரியத்தை ஆரம்பித்தால் உன்னை பூஜிக்கிறார்கள். ஆனால் இராவணனோ உனக்குத் தெரியாமல் சிவனுடைய பிராணனான ஆத்மலிங்கத்தைத் தூக்கிச் சென்றுவிட்டான். ஆகையால் நீர் சிறுவனாக வேடம் தரித்து இராவணன் வழியில் குறிக்கிட வேண்டும். அவன் சந்தி வேளையில் தவறாமல் ஸ்நானம், சந்தியாவந்தனம் போன்ற நியமங்களைச் செய்கின்றவன். அப்படி அவன் செய்ய முற்படும்போது லிங்கத்தைக் கையில் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய இயலாது. அந்த சமயத்தில், அவன் நம்பிக்கையைப் பெற்று எப்படியாவது ஆத்ம லிங்கத்தை நீ அவனிடமிருந்து வாங்கிக் கீழே வைத்துவிட வேண்டும். ஏனெனில் உன் தந்தை, இந்த லிங்கத்தை எக்காரணத்தைக் கொண்டும் கீழே வைக்கக்கூடாது என்று எச்சரித்திருக்கிறார்! அதோடு இராவணனுக்கு இடையூறு செய்ய நாரதரையும் அனுப்பியிருக்கிறேன்” என்று சொல்லி, விநாயகருக்கு மோதகம், சர்க்கரை, நெய், பால், ஊற வைத்த கடலை, தேங்காய், கரும்பு, அவல், அரிசி, பொரி முதலியவற்றைக் கட்டுசாதமாகக் கட்டிக் கொடுத்தார்.

அதற்குள் முன்னே சென்ற நாரதர் இராவணனை ஒரு நதிக்கரையில் சந்தித்து அவனுடைய பயணம் பற்றி விசாரித்தார். பிறகு அந்த ஆத்மலிங்கத்தைக் காட்டும்படி கேட்க, இராவணன் பயந்து அதை நாரதர் கையில் கொடுக்காமல் தூரத்திலிருந்தே காண்பித்தான். உடனே நாரதர் அந்த விங்கத்தின் சிறப்பைப் பற்றி இராவணனுக்கு எடுத்துக் கூறினார். அதே சமயத்தில் விஷ்ணுவால் அனுப்பப்பட்ட சுதர்சன சக்கரம் சூரினை மறைத்தது. “மாலை வேளை வந்துவிட்டதே!” என்று கூறிய நாரதர், “என்ன இலங்கேஸ்வரா! இலங்கைக்கு புறப்பட்டுவிட்டாயே! சந்தியா வந்தன நியமங்களை நீ செய்யாமற் போனால் தோஷம் ஏற்படுமே!” என்றார். அவர்கள் அப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போது விநாயகர் பிரம்மச்சாரி உருவத்துடன் நதிக்கரையில் தர்ப்பைப் புல் சேகரிப்பதுபோல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

சந்தியா காலத்தில் சந்தி செய்யாவிட்டால் விரத பங்கம் ஏற்படுமே என்று இராவணன் நினைத்து, அந்த பிரம்மச்சாரியை அணுகி, அவனைப் பற்றிய விபரங்களை விசாரித்தான். அந்தச் சிறுவன் இராவணனைக் கண்டு பயந்தவனாக நடுங்கிக்கொண்டு, என் தந்தை ஜடாதாரி, அவனது தொழில் பிட்சை எடுப்பது என்றும், எனது தாயார் பெயர் ஜகன்மாதா என்றும் கூறினான். இராவணன் அச்சிறுவனிடம், ‘உன் தந்தை தான் பிச்சை எடுத்துப் பிழைக்கிறாரே, நீ ஏன் என்னுடன் இலங்கைக்கு வரக்கூடாது? சகல வளங்களும் நிறைந்த என் நாட்டில் உனக்கு சகலவித செல்வங்களையும் நான் அளிக்கின்றேன். இந்த லிங்கத்தை வைத்துத் தேவ பூஜை செய்துகொண்டு சுகமாக வாழலாமே! என்று கேட்டான்.

பிரம்மச்சாரி சிறுவனான விநாயகரோ, இலங்கையில் இராட்சசர்கள் இருப்பார்கள், நான் வர முடியாது! என்றும், என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்! என்றும் சொல்லிவிட்டுத் தன் கட்டு சாதங்களை எடுத்துப் புசிக்கத் தொடங்கினான்.

அதன் பின் இலங்கேஸ்வரன் அவரை அணுகி, அந்தி வேளையில் தான் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்றும், தான் தனது நியமங்களை முடித்துவிட்டு வரும் வரை தனது லிங்கத்தைக் கீழே வைத்து விடாமல், கையிலே தாங்கிப் பிடித்து வைத்திருக்கும்படியும் உதவி கோரினான். அதற்கு விநாயகர், இதைப் பார்த்தாலே கனக்கும் போலத் தெரிகிறது. நானோ அசட்டுப் பாலகன். என்னால் அதிக நேரம் லிங்கத்தைத் தாங்கி சுமக்க முடியாது. ஆகையால் இதை வாங்க முடியாது என்று நிராகரித்தார்.

இலங்காதிபதி அவருக்கு நல்ல வார்த்தைகள் பல சொல்லியும் கட்டாயப்படுத்தியும் பேசி லிங்கத்தைக் கொடுத்துவிட்டு, நதிக்கரைக்குச் சென்றான். அப்படி அவன் போகும்போதே விநாயகச் சிறுவன், எனக்கு லிங்கம் கனத்தால் மூன்று தரம் கூப்பிடுவேன். அதற்குள் வராவிட்டால் பூமி மீது வைத்துவிடுவேன்! என்று நிச்சயமாக எச்சரிக்கை செய்தான்.

week14லிங்கத்தைக் கையில் ஏந்தி நின்ற விநாயகர், இராவணன் முதல் அர்க்யம் விடும்போதே கை கனக்கிறதாக எச்சரித்தார். இராவணன் மௌனமாக, வந்து விடுகிறேன்! என்று சைகை செய்தான். அடுத்து அவன் நியாஸம் செய்யும்போது லிங்கம் கனக்கிறது! என்று குரல் கொடுத்தான் சிறுவன். கையை அசைத்து வந்துவிடுவதாகக் கூறி விட்டு இராவணன் தியானத்தில் அமர்ந்தான். அவன் அப்படி அமர்ந்தவுடனேயே விநாயகர் மூன்றாவது தடவையும், வந்து லிங்கத்தை வாங்கிக் கொள்ளும் படி எச்சரித்து, அவன் வராததால் விஷ்ணுவைத் தியானித்து எல்லா தேவர்களும் சாட்சியாக லிங்கத்தை சட்டென்று பூமியில் வைத்து விட்டார். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர்.

தனது நியமங்களை முடித்துக்கொண்டு விரைந்து வந்த இராவணன், லிங்கத்தைப் பூமியில் வைத்துவிட்டதைப் பார்த்துக் கடுஞ்சினம் கொண்டு விநாயகரின் தலையில் பலமாகக் குட்டினான். தரையில் விழுந்து புரண்டு அழுத சிறுவன், தன் தந்தையிடம் சொல்லி அவரை அழைத்து வருவதாகக் கோபத்துடன் கூறி வேகமாகச் சென்றான். அவன் சென்றதும் இராவணன் பூமியில் பதிந்து விட்ட லிங்கத்தைத் துhக்கினான். அது அசையவில்லை. தன் பலமனத்தையும் ஒன்று சேர்த்து இழுத்தான். லிங்கம் அசையாததோடு அவனது பலத்தால் பூமி ஆடியது. எவ்வளவு பலத்துடன் இழுத்தாலும் அது அசையாமல் ஆடாமல் அப்படியே இருந்ததால், அந்த லிங்கத்திற்கு ‘மஹா பலேஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது. இராவணன் லிங்கத்தின் ஆவுடையாரை பலாத்காரமாய் இழுத்துத் திருகியதால் அது பசுவின்; காதுபோல் இருபுறமும் இழுபட்டுவிட்டது. அதனால் அந்த லிங்கத்திற்குக் கோகர்ணம் – பசுவின் காது என்ற பெயரும் அமைந்தது. தன் முயற்சியில் தோற்ற இராவணன் ஒன்றும் செய்ய இயலாமல் புறப்பட்டுப் போனான்.

(தொடரும்..)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s