குருவைத் தேடி – 13

கோகர்ணம் என்ற தலத்தின் வரலாறு

எழுதுவதைத் தொடரும் முன் நான் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இந்த விளக்கத்தைத் தந்தால் தான் தொடர்ந்து சுலபமாகப் படித்துக்கொண்டு போக முடியும் என நினைக்கிறேன். நான் சிறிய வயதில், இராமாயணம், மகா பாரதம், விக்ரமாதித்தன் கதை போன்ற பல புராண, இதிகாச சம்பந்தமான கதை நுhல்களைப் படித்திருக்கிறேன். அவற்றில் ஒரு சிறப்பு என்னவென்றால் கதைக்குள் கதை. அதற்குள் இன்னொரு கதை என்ற கிளை கிளைகளான ஏகப்பட்ட கதைகள் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாகப் போய்க்கொண்டே இருக்கும். கடைசியில் எங்கு ஆரம்பித்ததோ அதை மீண்டும் வந்து தொட்டு விடும். பின்னிப் பின்னிப் போகின்ற கதைப் போக்கு சில சமயம் நமக்குக் குழப்பத்தைக் கூடத் தரும். ஆனால் கவனத்துடன் படித்தால் சுவையும் விறுவிறுப்பும் குறையாமல் போவது தெரியும்.

மற்றொரு சிறப்பு என்னவென்றால் இருவர் உரையாடும்போது அவர்கள் பேச்சில் எப்படியும் பல பழைய கதைகள் வெளிப்படும். அந்தக் காலத்தில் இப்படி நடந்தது என்று கூறி விளக்குவார்கள். மேலும் எழுத்துக்கலை வளர்ச்சியடையாத முற்காலத்திலே எல்லாக் கதைகளுமே, ஏன் வேதங்கள், புராணங்கள் போன்ற உயர்ந்த தத்துவங்கள் எல்லாமே கூட, செவிவழிச் செல்லல் என்ற விதத்தில்தான் இன்றுவரை சொல்லப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன என்பது உண்மை. மற்றொன்றையும் இங்கு கூற வேண்டும்.

கடந்து சென்ற யுகங்களில் புண்ணிய உலகங்களுக்கும், பூமிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. தெய்வங்களும் தேவர்களும் தேவதைகளும் பூமிக்கு வருவதும், இங்குள்ள முனிவர்கள், அரசர்கள் போன்றோர் விண்ணுலகங்களுக்குச் சென்று திரும்புவதும், தவ சீலர்கள் தமது அருந்தவத்தால் சகல தெய்வங்களுக்கும் ஈடாக நடந்துகொள்ளக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாக விளங்கினார்கள் என்பதும், இப்படிப்பட்ட கதைகள் மூலம் தெரிய வருகிறது.

எல்லா நாடுகளிலுமே பழங்கதைகள் இதே வகையில் தான் சொல்லப்பட்டு வருகின்றன. எல்லாத் தேசக்; கதைகளிலும் தேவதைகள் உண்டு. அசுரர்களும் உண்டு. மனிதன் இரண்டு வகையினரையும் எதிர்கொள்கின்றவனாகவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றான். தெய்வங்களுடன் மனிதன் பேசக்கூடியவனாகவும், தன் பக்தியினால், குணச் சிறப்பால் தன் வசம் இழுக்கக்கூடியவனாகவும் இருந்திருக்கிறான். தெய்வ அருள் பரிபூரணமாக வெளிப்பட்டு அதை மனிதன் உணர்ந்து வாழ்ந்த வரலாறு தான் நமது சனாதன தர்மத்தின் உயர்வு. ஆனால் நம் பாரதப் புண்ணிய பூமியின் இந்த ஆராய்ச்சி நீண்டு கொண்டே போகக்கூடியது. நான் எழுதிச் செல்கின்ற இந்த குரு சரித்திரம் மேற்குறித்த பல அம்சங்களைத் தன்னுள் கொண்டதாகத் திகழ்வதால் இந்த விளக்கம் தரவேண்டியிருக்கிறது. இனி கோகர்ணம் என்னும் புண்ணிய நகரம் உருவான கதை, அங்குள்ள கோவிலில் அமைந்துள்ள சிவபிரானின் சிறப்பு போன்றவற்றைப் பற்றி நாம் அறிவோம்.

தெய்வ அருள் பரிபூரணமாக வெளிப்பட்டு அதை மனிதன் உணர்ந்து வாழ்ந்த வரலாறு தான் நமது சனாதன தர்மத்தின் உயர்வு. நம் பாரத மண்ணின் உயர்வு.

ஸ்கந்த புராணத்தில் கோகர்ண ஷேத்திரம் பற்றிய வரலாறு சொல்லப்பட்டிருப்பதாக நம் கதையில் வருகின்ற சித்தர் நாமதாரகனிடம் கூறினார். நாமதாரகன் அந்தக் கதையைத் தனக்கும் கூறுமாறு கேட்க, சித்தரும் சொல்லத் தொடங்கினார்.

இந்தக் கதை இராமாயண காலத்தில் நடைபெற்றது. இலங்கையின் அரசனான இராவணனின் தந்தை புலஸ்திய முனிவர். தாய் கைகயா என்னும் சிவபக்தி நிறைந்த பெண்மணி. அவள் தினமும் ஒரு புது லிங்கம் செய்து அதற்கு பூஜை செய்தபின் தான் உணவு உண்பாள். ஒரு நாள் புதிய லிங்கம் கிடைக்காததால் மண்ணினால் சிவலிங்கம் செய்து பூஜை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்தாள். அந்த சமயத்தில் இராவணன் தாயை தரிசிக்க வந்தான். வந்தவன், எதற்காக இந்த மண் லிங்கத்தைச் செய்து பூஜை செய்கிறாய்? என்று கேட்டான். அதற்கு அவள், இவ்விதமாக சிவபூஜை செய்தால் கைலாயத்தை அடையலாம்.! என்றாள். அதைக்கேட்ட இராவணன், திரிலோக சக்கரவர்த்தியான இராவணனின் தாய், மண் லிங்கத்தையா பூஜை செய்வது? நான் உடனே சென்று நீ அடைய நினைக்கின்ற கைலாசத்துடன் சேர்த்து அந்த உமா மகேஸ்வரனையே இங்கு கொண்டு வருகிறேன் பார்! என்று தாயிடம் சபதம் செய்து விட்டு மனோ வேகத்துடன் கைலாய பர்வதத்தை அடைந்தான்.

week13a

கைலாயமலையின் முன் மண்டியிட்டு இருபது கைகளினாலும் பத்துத் தலைகளினாலும் வெண்மை நிறமான கைலாசத்தை ஆட்டிப் பெயர்க்க ஆரம்பித்தான். தேவர்கள் அச்சத்தால் நடுங்கினார். பார்வதியும் பயந்து, என்ன இது? கைலாயம் இப்படி ஆடுகின்றதே, ஏதாவது விபரீதமாக நடக்கப்போகிறதா? நீங்கள் சாவதானமாக உட்கார்ந்திருக்கிறீர்களே! என்ன நடக்கிறது! ஏதாவது செய்து எல்லோரையும் காப்பாற்றுங்கள்! என்று சிவனைப் பிரார்த்தித்தாள்.

சிவனோ நிதானமாக, என் பக்தன் இராவணனின் விளையாட்டு இது! என்று சொல்லித் தன் இடது கையினால் கைலாயத்தை கொஞ்சம் அழுத்தினார். அதனால் இராவணனுடைய கைகளும், தலைகளும் மலை நடுவில் சிக்கிக் கொண்டன. இராவணன் உடனே பரமசிவனைத் துதிக்க ஆரம்பித்தான். “அபயம்! அபயம்! ஜகத்ரட்சகனாகிய பினாகபாணிக்கு சரணம். சிவ சிவா என்று சொன்னவர்க்கு மரணம் ஏது?” என்று கதற, சிவன் தனது கையை எடுத்தார். இராவணன் ஆபத்திலிருந்து விடுபட்டான். ஆனால் அவன் அதோடு திரும்பிப் போகவில்லை. சிவனின் கிருபையை எப்படியாவது பெற்றுவிடவேண்டுமென்று தன் தலையைத் தானே வெட்டி, அந்த நரம்புகளால் தந்திரி என்னும் வாத்தியம் செய்து, சாம வேதத்தை வர்ணக்கிரமமாக, ராக பாவத்துடன் பாடலானான். அதன் வரலாறு பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது.

இலங்கைபதியான ராவணன் ஒன்பது ரஸங்களுடன் சப்த ஸ்வரங்களுடன் சாம வேதத்தை, சிவனைக் குறித்து ஆலாபனை செய்து பாடினான். இந்த இடத்தில் எட்டு கணங்கள், ஒன்பது ரசங்கள், முப்பத்தாறு ராகங்கள் ஆகியவற்றின் பெயர்கள் ஒன்றுவிடாமல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் எடுத்து எழுதுவது என்றால் மிக நீண்டதாகப் போய்விடும். ஆகவே அந்தப் பட்டியலை விடுத்து மேலே தொடர்கிறேன். ஸ்ரீ ராகம் முதல் வசந்தா என்ற இராகம் வரை 36 இராகங்களையும், ஸ்வரபேதமில்லாமல், சந்திரமௌலியை நினைத்துப் பக்தியுடன் பாடி மகிழ்வித்தான்.

இராவணனின் அசுரத்தனமான பக்தியைக் கண்டு மகிழ்ந்த பரமசிவன் அவன் முன் தோன்றி, என்ன வேண்டும்? என்று கேட்டார். இராவணன் முக்கண்ணனை வணங்கி, எனக்கு ஒரு குறையுமில்லை. என் வீட்டில் எட்டு நிதிகள் இருக்கின்றன. பிரம்மதேவனை எனது ஜோஸ்யனாக அமைத்திருக்கிறேன். முப்பது முக்கோடி தேவர்களும் எனக்கு வேலைக்காரர்களாக இருக்கிறார்கள். அக்னி எனது சமையல் காரன். எமன் என் உத்திரவு இல்லாமல் எவரையும் கொல்வதில்லை. வீரனான இந்திரஜித்தை மகனாகவும், இணையில்லாத கும்பகர்ணனைத் தம்பியாகவும் பெற்றிருக்கும் எனக்கு, கடல்களால் சூழப்பட்ட நகரத்தை ஆள்கின்ற பேறு பெற்ற எனக்குக் காமதேனுவே என் வீட்டில் வாசம் செய்கின்றபோது எனக்கு இனி வேறு என்ன வேண்டும்? ஆனால் என் தாயார் தினமும் தங்களைப் பூஜை செய்ய ஆசைப்படுகிறாள். ஆகையால் இந்தக் கைலாசத்தை இலங்கைக்கு எடுத்துச் செல்லத் தங்கள் அனுமதி வேண்டும்! என்றான்.

கைலைநாதன் இராவணனிடம், ‘கைலாசத்தைக் கொண்டுபோய் என்ன செய்ய முடியும்? என் பிராணனாக விளங்கும் ஆத்மலிங்கத்தைப் பூஜை செய்தால் தானே நீ கோரிய பலன் கிடைக்கும்! இந்த ஆத்ம லிங்கத்தின் பெருமையைச் சொல்கிறேன் கேள்! ஒருவன் மூன்று வேளையும் நுhற்றி எட்டு தடவை ருத்திரம் ஜபித்து, அபிசேகம் செய்து, பூரண பக்தியுடன் மூன்று வருட காலம் இந்த ஆத்ம லிங்கத்தைப் பூஜை செய்தால் சிவ ரூபத்தை அடைகிறான். மேலும் எந்த இடத்தில் இந்த ஆத்மலிங்கம் இருக்கிறதோ அங்கு யமபயம் கிடையாது. நினைத்ததெல்லாம் கைகூடும். இதனை ஒருவேளை தரிசனம் செய்தாலும் எல்லா தோஷங்களும் நீங்கும்!” என்று சொல்லி தன் பிராணனாகிய ஆத்மலிங்கத்தை இராவணனிடம் அளித்தார். அப்படி அளிக்கும் முன் அவர், ‘இராவணா! இந்த ஆத்மலிங்கத்தை நீ உன் நகரம் சென்று சேரும் வரை எங்கும் தப்பித்தவறிக் கூடக் கீழே வைக்கக்கூடாது!” என்று உத்திரவிட்டார். இராவணனும் அதனை ஏற்று அவரை வணங்கி இலங்கைக்குப் புறப்பட்டான்.

இதற்குள் நாரதர் அமராவதிப்பட்டணம் சென்று தேவேந்திரனிடம், ஏ! இந்திரா! என்ன சர்வ சாதாரணமாக உட்கார்ந்திருக்கிறாய்? சிவன் இராவணனின பக்திக்கு வசப்பட்டு தன் ஆத்மலிங்கத்தைக் கொடுத்து, அதை மூன்று வருடங்கள் விடாமல் சிரத்தையோடு பூஜை செய்தால், சிவனாகவே ஆகி விடலாமென்றும் சொல்லிவிட்டார். இனிமேல் அவனுக்கு சாவு கிடையாது. உனது சகல செல்வங்களோடு ரம்பை, மேனகை எல்லோரையும் சேர்த்து அவனுக்குக் கொடுக்க வேண்டியதுதான். உன்னோடு முப்பது முக்கோடி தேவர்களும் இனி அவனிடம் ஆயுள் கைதிகளாக ஆகப்போகிறீர்கள் போ! என்றார்.

நாரதர் சொன்னதைக் கேட்ட இந்திரன் நடுங்கினான். வழி புலப்படாத நிலையில் இருவரும் பிரம்மாவிடம் செல்ல அவருக்கும் எதுவும் சொல்லத் தெரியாமல் மூவருமாக விஷ்ணுவிடம் ஓடி முறையிட்டனர். பிரம்மதேவன் மகா விஷ்ணுவைப் பார்த்து, நீங்கள் ராமாவதாரம் எடுத்து இராவணனை வதம் செய்து தேவர்களை விடுதலை செய்ய வேண்டியிருக்க இப்படி இராவணன் சிவனாரிடம் ஆத்ம லிங்கத்தைப் பெற்றுவிட்டானே, இனி அவதாரம் எடுப்பது எப்படி? பலம் பெற்றுவிட்டால் இந்த இராவணனை வதம் செய்வது எப்படி? என்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s