குருவைத் தேடி – 11

தீபகன் குருவைச் சென்றடைந்து வைகுண்ட நாயகன் தனக்கு வரம் அளித்த வரலாற்றையும், தான் குருபக்தியையே வரமாகக் கேட்டதையும் சொல்ல, வேத வர்மன் மிகவும் மகிழ்ந்து தீபகனைப் பாராட்டினார். அடுத்த கணம் அவரது உடலிலிருந்த நோய்க்குறிகள் எல்லாம் மறைந்து தேகம் பிரகாசத்துடன் காட்சியளித்தது. தீபகனின் நிச்சய புத்தியையும், குருபக்தியையும் பரிசீலனை செய்யவே தான் இவ்வாறாகக் கஷ்டப்பட்டதாக அவர் கூறி, அவனுக்கு எல்லா சித்திகளும், நவநிதிகளும் கிடைக்கவேண்டுமென வரமளித்தார். தீபகன் உள்ளம் நெகிழ்ந்து குருவின் சரணங்களில் பக்தி பூர்வமாக நமஸ்காரம் செய்தான்.

இவ்வாறு பிரம்ம தேவர் கலி புருஷனுக்குக் குருவின் பெருமையும் சிறப்பும், தெய்வங்களாலும் போற்றத்தக்கது என்பதை விளக்கிக் கூறினார் என்று மேற்குறித்த அனைத்துச் செய்திகளையும் சித்தர் நாமதாரகன் கேட்ட கேள்விக்கு விடையாகக் கூறினார். மேலும் சித்தர் இந்தக் கதை பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான பிரம்ம வைவர்த்த புராணத்தில் வருகிறது. இது துவாபர யுகத்தில் வியாசரால் உபதேசிக்கப்பட்டது என்றும் சொன்னார். எனவே எவ்வித சலனமும் சஞ்சலமும் இல்லாமல் பூரண திட சித்தத்துடன் முழு நம்பிக்கையுடன் குருவைச் சரணடைந்தால் பெரும் பேறு என்று வேறு எதுவுமே கிடையாது.

அம்பரீஷன் கதை

அற்பமான பலனைக் கொடுக்கின்ற தேவர்கள் பதினாயிரக் கணக்கில் இருக்கின்றார்கள். அவர்களை வழிபட்டு அவர்கள் கொடுக்கும் பயனை அடையக் கனவிலும் கருதமாட்டேன். ஸத்குருவே! பிரும்மா, விஷ்ணு, மகேஸ்வரா! பரப்பிரம்ம ஸ்வரூபா! மங்கள சொரூபனே! தேவர்களுக்கும் அரியவரான ஸத்குருவே! அறியாமை என்னும் காரிருளில் சிக்கிக் குருடனாய்த் திரிந்தவனுக்கு ஞானமென்னும் மையைத் தடவிப் பார்க்கச்செய்த கருணைக் கடலே! நீங்கள் தான், எமக்கு எல்லாமே. உம்மை விட வேறு உயர்வானது என்று எதுவுமில்லை.

குருவின் மகிமையையும் குரு பக்தியின் மேன்மையையும் ஸித்தர் விவரிக்கக் கேட்டுப் பரவசமடைந்த நாமதாரகன், மேற்குறித்தவாறு குருவைப் போற்றி வணங்கினான். மேலும் அவன் சித்தரிடம், சுவாமி! தீயகுணங்கள் என்னும் நெருப்பால் தகிக்கின்ற நிலையில் சம்சாரமென்னும் கடலில் மூழ்கித் தத்தளிக்கும்போது ஞானமென்ற ஓடத்தில் ஏறிக் குருகிருபை என்ற காற்றினால் தள்ளப்பட்டால் தான் ஒருவனால் கரை சேரக்கூடும்! என்பதை நான் அறிந்துகொண்டேன்” என்றான்.

அதைக் கேட்ட சித்தர், உண்மைதான், ஆனால் திடபுத்தி இல்லாதவர்கள் சந்தேகப்பட்டு, கஷ்டப்பட்டுப் பழியைத் தெய்வத்தின் மீதும் குருவின் மீதும் சுமத்துகின்றார்கள். குருவினால் என்ன செய்ய முடியும் என்று ஏசுகின்றனர். கற்பக மரம் நாம் நினைத்ததைத் தான் கொடுக்கும். ஆனால் காமதேனுவாகிய குருவோ நாம் நினைக்கும் முன்பே அருள் புரிவார்! என்றார்.

பிறகு நாமதாரகன் ஸித்தரிடம், “சுவாமி! தெய்வங்களான மும்மூர்த்திகளும் மனிதர்களாகப் பிறக்க என்ன காரணம்?” என்று வினவினான். அதற்கு ஸித்தர், ‘நாமதாரகா! பிரம்மம் ஒன்றுதான், ஆனால் பிரபஞ்ச சிருஷ்டியின் காரணமாக அது பலவிதமான ரூபங்களை எடுக்க வேண்டியதாயிற்று. ஒன்றான அதுவே இரண்டாகி, மூன்றாகிப் பின் பலவாய், நூறாய் அதற்கும் மேலாய்ப் பரந்து விரிந்து எல்லாமாய் விகசித்து விளங்குகின்றது. இதுதான் உண்மை. இந்த உண்மையை நமது வேதங்கள் உரைக்கின்றன. மனித நிலையில் தான் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் மனிதப் பிறவிக்குத் தான் சிந்திக்கும் ஆற்றலாகிய பகுத்தறிவு தரப்பட்டிருக்கிறது. இந்த பகுத்தறிவைச் சாதாரண மனிதர்கள் விஞ்ஞான முன்னேற்றத்திற்கும், விதண்டா வாதங்களுக்குமே பயன்படுத்துகின்றனர். அதற்குக் காரணம் இப்பிறவிக்குத் தரப்பட்டிருக்கின்ற மூன்று குணங்கள்; கர்மவினை, தபோ, ரஜ, சத்வமாகின்ற மூன்று குணங்கள், பரிணாம வளர்ச்சி இவற்றின் பின்னணியில் தான் மனித வாழ்க்கை அமைந்திருக்கிறது. மனித உடலின் நுட்பமான அமைப்பு எவ்வளவு அதிசயமோ அவ்வளவு அதிசயம் மனித வாழ்க்கை.

மனிதன் தான் சுதந்திரமானவன் என்று நினைத்துத் தன் விருப்பப்படி வாழ்வதாக நினைக்கின்றான். ஆனால் நியதி என்று ஒன்று இருக்கின்றது. அதைத்தான் இயற்கை என்று சொல்கின்றனர். அந்த நியதியையும், இயற்கையையும், எல்லாமாய் இருக்கின்ற பிரம்மத்தையும் அறியும் ஆற்றல் பெற்ற பிறவியே குரு எனப்படுபவர்.

பிரம்மம், தானே பிறவி எடுத்து, குருவாய் வந்து தனக்கே உபதேசித்துத் தன்னை உணர்கின்ற விந்தைதான் ஆத்ம வித்தை. இந்த வித்தையை உபதேசிக்கவே மூன்று சக்திகளான மும்மூர்த்திகளும் ஒன்றாய்ச் சேர்ந்து குருவாக அவதரிக்கின்றார்கள். பிரம்மத்தைப் பற்றி பிரம்மத்தால் அன்றி வேறு யாரால் உணர்த்த முடியும்? இந்தத் தத்துவத்தைச் சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது என்பதால் தான் நமது முன்னோர்கள் தத்துவங்களை உள்ளடக்கிப் புராணங்களையும், இதிகாசங்களையும் இயற்றி மனித குலத்திற்கு மாபெரும் தொண்டு செய்திருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு புராணம் மூலமாக உன் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன் என்றார் சித்தர்.

பிறகு அவரே தொடர்ந்து பேசினார். பிரம்மம் தான் பிரம்மதேவனாகவும், விஷ்ணுவாகவும், சிவனாகவும் மூன்று ஆற்றல்களாக வெளிப்பட்டது. படைப்புத் தொழிலை மேற்கொண்ட பிரம்மதேவன் ரஜோ குணமுடையவராகவும், காத்தல் தொழிலுக்குரிய விஷ்ணு சத்வ குணம் நிறைந்தவராகவும், அழித்தல் தொழிலைச் செய்கின்ற சிவன் தமோ குணம் கொண்டவராகவும் செயல்படுகின்றனர். இம்மூவரும் வெவ்வேறு விதங்களில் செயல்பட்டாலும் இவர்களை வேறு வேறாக நினைக்கக் கூடாது. பிரம்ம ஏற்பாடு இது.

நான் சொல்லப்போகும் அம்பரீஷன் வரலாற்றைக் கேள்! தெய்வம்மனிதனாக அவதரிக்க நேர்ந்த காரணம் உனக்கு விளங்கும்! ஒரு சமயம் பாரதத்தின் ஏக சக்கரவர்த்தியாக விளங்கிய அம்பரீஷன் என்ற மகா புருஷர், ஏகாதசி விரதத்தை விடாமல் அனுசரித்துக்கொண்டு வந்தார். ஒரு ஏகாதசி தினத்தன்று அவரது பக்தி சிரத்தையையும், திட சித்தத்தையும் சோதிப்பதற்காக துர்வாசர் என்ற கோபக்கார முனிவர் தன் சீடர் கூட்டத்துடன் அவரது அரண்மனைக்கு வந்தார்.

நாராயணனின் நாமத்தை இடைவிடாமல் சொல்லிக்கொண்டு நியதி பூர்வமாக ஏகாதசி விரதத்தை முடித்து, சாதனை நாழிகை முடியும் முன் பாரணை செய்ய வேண்டும் என்ற நிலையில் அதிதியாக வருகை புரிந்த துர்வாச முனிவரை வரவேற்றார் அம்பரீஷன். அவருக்கு உரிய உபகாரங்களைச் செய்தார். பிறகு தம்மோடு பாரணை பண்ணுவதற்கு வருமாறு அழைத்தார்.

ஆற்றிற்குச் சென்று நீராடி, தான் செய்ய வேண்டிய பிரார்த்தனைகளை முறையாக முடித்துவிட்டுப் பிறகு வருவதாகக் கூறித் துர்வாசர் சென்று விட்டார். சீடர்களும் உடன் சென்றனர். தன் நியம நிஷ்டைகளை முடித்த முனிவர் தியானத்தில் அமர்ந்து விட்டார். நேரம் போய்க்கொண்டிருந்தது.

week11அரண்மனையில் அரசன் தவித்தான். இதுநாள் வரை முறை தவறாமல் மிகுந்த அக்கறையுடன் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பவன். மகா பக்தன். சர்வம் விஷ்ணு மயம் என்று வாழ்பவன். சாதனா நாழிகை முடியும் முன் பாரணை செய்து விட வேண்டும் என்பது நியதி. அதிதியை விட்டுவிட்டு உணவு அருந்தவும் கூடாது. தெய்வத்தைப் போற்றுவதா, மனிதனுக்குப் பயப்படுவதா? என்று குழம்பியவன், பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டான். அந்த மூதறிஞர்களும் துளசி தீர்த்தத்தை ஒரு வாய் பருகி, விரதத்தைப் பூர்த்தி செய்து விடலாம் என்றும், தண்ணீருக்குத் தோஷமில்லை: பிறகு முனிவர் வந்ததும் அதிதியுடன் சேர்ந்து உணவருந்தலாம் என்றும் கூறினர்.

அரசன் அம்பரீஷனும் அறிவுரையை ஏற்றுத் துளசி நீரை அருந்தி, முனிவர் வரவை எதிர்பார்த்திருந்தான். துர்வாசர் வந்ததும் உண்மையை உணர்ந்து விட்டார். வந்தது கடுங்கோபம். தாமதமாக வந்த தம் தவறை உணர்ந்து பார்க்காமல், தன்னை இவன் அவமதிப்பதா? என்னும் அகங்காரத்தினால், ‘ஏ! மூட மனிதா! அதிதியை விட்டுவிட்டு நீர் சாப்பிட்டுவிட்டதால் சாபம் கொடுக்கப் போகிறேன்! என்று குதித்தார்.

பக்தனான அம்பரீஷன் கடவுளைச் சரணடைந்து வேண்டினான். அதற்குள் துர்வாசர், என்னை அவமதித்த நீ இந்தப் பூமியில் மீண்டும் மீண்டும் பிறப்பாய்! என்று சாபமிட்டார். அவர் சாபத்தைக் கேட்டு அம்பரீஷன் நடுங்கினான். சிந்திக்காமல் செயல்பட்ட துர்வாசரைத் தண்டிப்பதற்காக ஸ்ரீமந் நாராயணனின் சுதர்சன் சக்கரம் துர்வாசரை துரத்தியடித்தது. மூவுலகுக்கும் ஓடித் திரிந்தவர் கடைசியில் அம்பரீஷனிடமே தன்னைக் காப்பாற்றும்படி தஞ்சம் புகுந்தார். அந்நிலையில் நாராயணன் அங்கு தோன்றி, தன் பக்தனின் திட சித்தத்தையும், பக்தி சிரத்தையையும் பாராட்டினார். அளவிட முடியாத பக்தியுடைய அம்பரீஷனுக்காகத் துர்வாசர் சாபத்தைத் தானே ஏற்றுக்கொண்டு பூமியில் மீண்டும் மீண்டும் தானே அவதரிப்பதாகக் கூறினார்.

எனவே தான் மகா விஷ்ணு பல அவதாரங்களை எடுக்க வேண்டி வந்தது. முக்கியமாக சொல்லப்படுகின்ற பத்து அவதாரங்களைத் தவிர பல்வேறு அவதாரங்களை காரிய காரணமாக நாராயணன் எடுத்திருக்கிறார். அவற்றில் ஒன்றுதான் அத்திரி முனிவருக்கும் அனுசுயா தேவிக்கும் மும்மூர்த்திகளின் அம்சமாகப் பிறந்த ஸத்குரு ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரம்.

தெய்வம் மனிதனாக வெளிப்பட்ட காரணத்தை இவ்வாறு கதையாக நாமதாரகனுக்குச் சொன்னார், அவனைத் தடுத்தாட்கொள்ள வந்த விந்தை சித்தர்.
(தொடரும்..)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s