குருவைத் தேடி – 10

சிஷ்யனுடைய வார்த்தைகளைக் கேட்டு குரு மகிழ்ச்சி அடைந்து, பாபம் செய்தவன் தான் தண்டனையை அனுபவிக்க வேண்டும். அவருக்குப் பதிலாக புத்திரனோ, சிஷ்யனோ அதனை அனுபவிக்க முடியாது.  உடல் நலிவுற்றவருக்கு உடனிருந்து பணிவிடை செய்வது தான் மிகமிகச் சிரமமான காரியம். அதை அவன் ஏற்றுக்கொண்டாலே போதும்! என்று பதில் கூறினார்.

தீபகன் குருவை வணங்கி 21 வருடங்கள் அவருக்குப் பணிவிடை செய்ய ஒப்புக்கொண்டு தகுந்த ஏற்பாடுகளுடன் குருவைக் காசி நகரத்திற்கு யாத்திரையாக அழைத்துச் சென்றான். காசியை அடைந்து மணிகர்ணிகையின் வடக்கு திசையிலுள்ள கம்பனேஸ்வரர் சந்நிதியில் இருவருமாகத் தங்கி, தினமும் கங்கையில் நீராடி விஸ்வநாதரை ஆராதித்து வந்தனர்.

பிராரப்தம் (பழைய கர்மவினை) விடாததால் முன் சொன்னபடி குரு வேத வர்மனுக்குக் குஷ்டரோகம் உண்டாகிக் கண் பார்வையை இழந்தார். உடம்பில் புண்கள் ஏற்பட்டு, மிக மோசமான நிலையை  அவர் அடைந்தார். அவரால் நடக்கவும் இயலவில்லை. தீபகன் குருவை விஸ்வேஸ்வரன் என்று பாவித்துக் கடும் சேவை செய்து வந்தான். தினமும் பிட்சை வாங்கி வந்து குருவிற்கு ஊட்டுவான். சில நாள் இந்த அல்ப உணவு எனக்கு எப்படிப் போதும்? என்று கோபத்தினால் சீறி விழுந்து, உணவை வீசி எறிந்து விடுவார். அடுத்த நாள் கொஞ்சம்  அதிகமாகப் பிச்சை வாங்கி வந்தால், ஏன், இவ்வளவு வாங்கி வீணாக்குகிறாய்? என்று கோபித்துக் கொள்வார். சில நாள் ருசியான ஆகாரம் கொண்டு வருவதில்லை என்று கூச்சலிடுவார். மற்றொரு வேளையில் நீ தான் உத்தம சிஷ்யன் என்று பாராட்டுவார். உடனே அடுத்தநொடி என் அழுக்குகளை நீ சரியாகக் கழுவித் துடைத்து சுத்தம் செய்து விடுவதில்லை, என்ன சேவை பெரிதாக நீ செய்து விடுகிறாய்? என்பார்.

இப்படியாகப் பாபம் செய்து அதன் கஷ்டத்தை அனுபவிப்பவர்களிடம் நல்ல வார்த்தைகளை எதிர்பார்க்க முடியாது என்பதை நிரூபிப்பது போல, தீபகன் அனேக கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது.  இருந்தபோதிலும் அவன் தன் குருவான வேதவர்மனை சிவபெருமான், ஸ்ரீமந் நாராயணன் என்றே நினைத்து, மதித்து அளவிடமுடியாத பொறுமையுடன் குருசேவையில் ஈடுபட்டிருந்தான்.

குரு சேவை செய்யும்போது தன் தேக சுகத்தைப் பற்றிக் கருதாமல், கோவில், குளம், கடவுள் எல்லாம் குருவின் பாதங்கள் என்றே நினைக்க வேண்டும். குரு கோபித்தாலும் அவை ஆசீர்வாதங்கள் என்றே கருத வேண்டும் என்று நினைத்து தீபகன் குரு எப்படி நடந்து கொண்டாலும், அவரது விருப்பம் அறிந்து செயல்படுபவனாகவே இருந்தான். இப்படி அவன் குருசேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருந்தபோது, காசி விஸ்வநாதராகிய சிவபெருமான் அவனது குரு சேவையைக் கண்டு, அவன் முன் காட்சியளித்து, உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்! என்று கூறினார். தெய்வமே தன் முன் தோன்றிக் கேட்ட போதும் தீபகன், தன் குருவின் அனுமதி பெறாமல் நான் எந்த வரமும் கேட்க மாட்டேன்! என்று பணிந்து கூறி, மறுத்தான். பின்பு குருவிடம் சென்று நடந்ததைக் கூறி, ‘குருவே! தங்களின் இந்த கொடிய வியாதி குணமாக வேண்டுமென நான் வரம் கேட்கட்டுமா?” என்று வினவினான். குருவோ கோபம் கொண்டு, ‘அவனவன் செய்த வினைகளை அவனவனே அனுபவித்துக் தீர்க்க வேண்டுமென்றும், மீதி இருந்தால் அது வீடுபேற்றை அடைவதற்கு இடையூறாக இருக்கும் என்றும் தர்மசாஸ்திரம் கூறுகிறது. எனவே எனக்காக எந்த வரமும் நீ கேட்கக் கூடாது” என்று கூறினார். தீபகன் சிவபெருமானிடம் திரும்பிச் சென்று குருவின் கட்டளையைக் கூறி, எனக்கு வரம் எதுவும் வேண்டாம் என்று நிராகரித்து விட்டான். பரமசிவன் மிகவும் ஆச்சர்யத்துடன் கைலாயம் சென்று விஷ்ணு மற்றும் தேவர்களை அழைத்து தீபகனுடைய குருசேவையைப் பற்றிப் புகழ்ந்து, குரு பக்தி என்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும்! என்றார். மேலும் சிவனார், கோதாவரி தீரத்திலிருந்து வந்த வேதவர்மனுடைய சிஷ்யனான தீபகனைப் போல் நான் மூன்று உலகங்களிலும் பார்த்ததில்லை. எவ்வளவோ பேர் வரங்களை வேண்டி என்னைக் குறித்து அநேக காலம் தவம் செய்தும் நான் அவர்களுக்குக் காட்சி அளிப்பதில்லை. அப்படிப்பட்ட நான் பிரசன்னமாகிக் கட்டாயப்படுத்திக் கேட்டும், குருவின் உத்திரவில்லாமல் வரங்களைக் கேட்க மாட்டேன் என்று கூறிவிட்டானே! தன் உடல், பொருள், ஆவி மூன்றையும் குருவிற்கு அர்ப்பித்து குருவே தெய்வம் என்று நினைத்து நிச்சய புத்தியுடன் அவன் சேவை செய்கிறான்! என்று தீபகனை மனமாரப் பாராட்டினார். அதன்பின் சிவனும் விஷ்ணுவுமாக தீபகனிடம் வந்தனர். இந்த முறை விஷ்ணு தீபகனிடம், தன்னிடம் வரம் கேட்கும்படி கட்டளையிட்டார். அதற்கு தீபகன், ‘நாராயணா! நான் உங்களை ஒருபோதும் வணங்கி பக்தி செய்யவில்லையே! உங்கள் நாமங்களை என்றுமே நான் சொல்லவில்லை. பஜனை செய்யவோ, பயிற்சி செய்யவோ இல்லை. எத்தனையோ ஆண்டுகளாக உம்மைக் குறித்துத் தவம் செய்பவர்களை விட்டு விட்டு என்னிடம் வந்து என்னை ஏன் வற்புறுத்தி வரங்களைத் தருகிறேன் என்கிறீர்கள்?” என வினவினான். ‘யார் தனது சேவையை மிகுந்த அக்கறையுடன் பிறருக்கு எந்தவிதப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்கின்றானோ அவன் எனக்குப் பிரியமானவன். மாதா, பிதா, கணவன் என்று யாருக்கு சேவை செய்தாலும் அவை என்னையே வந்து சேர்கின்றன. எனவே அதி உன்னத குரு சேவை செய்து வரும் உனக்கு நான் வரங்கள் அளிப்பது தகும்! நீ கேள்!” என்றார் விஷ்ணு. மும்மூர்த்திகளும் குரு வடிவில் இருக்கின்றனர். அவரைத் தவிர வேறு தெய்வமில்லை. ஞானம் என்ற அரிய செல்வத்தை அளிப்பவரான அவரிடம் எந்த வித வரத்தையுமே கேட்டுப்பெற முடியும் என்ற வேதங்கள் கதறும்போது, எனக்கு வேண்டிய வரங்களை எனது குருநாதரிடம், நான் கேட்டுப் பெறலாமே? நான் ஏன் உங்களிடம் யாசிக்க வேண்டும்? என்றான் தீபகன் தீரத்துடன். இந்த வார்த்தைகளைக் கேட்டு சிவனும், நாராயணனும் நிறைவடைந்தனர். நீ தான் உத்தம சிஷ்யன்! என்று பாராட்டினர். மிகுந்த பணிவுடையவனான தீபகன் விஷ்ணுவை வணங்கி, ‘உங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காகவும், அடியேனின் மீது கருணை கொண்டு வரம் தருவதாக வலிய தாமே வந்திருப்பதாலும், இந்த வரங்களை நான் தங்களிடம் கோருகிறேன். எனது குருபக்தி மேலும் அதிகரிக்க வேண்டுமென்ற மேலான ஞானத்தை எனக்குத் தாங்கள் வழங்க வேண்டும்!” என்று வேண்டினான். இதைக்கேட்டு விஷ்ணுவானவர், ‘நீ பிரம்மத்தையே கண்டுவிட்டாய். மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். ஒருவன் எந்த அருள் பெற்றாலும் அதற்கு மூல காரணம் குரு தான். நீ சாத்திரங்கள் புகழும்படி குருவிற்கு சேவை செய்வதால் மூன்று உலகங்களிலும் புகழ் பெறுவாய்! என்று சொல்லி வரமளித்து மறைந்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s