குருவைத் தேடி – 9

பிரம்மதேவன் மூன்று யுகங்கள் முடிவுற்றதும் கலிபுருஷனை அழைத்து, பூவுலகிற்குச் சென்று கலியுகத்தைத் துவங்குமாறு கட்டளையிட்டார். கலிபுருஷன் பிரம்மனிடம், “நான் பூவுலகம் சென்றால் முதலில் தர்மத்தை அழித்து விடுவேன். பிறரது செல்வத்தை அபகரிப்பதும். அந்நியப் பெண்களிடம் சல்லாபிப்பதுமான குணங்கள் என் சகோதரர்கள். பொறாமை, ஆடம்பரம் முதலிய குணங்கள் என் நண்பர்கள். போலி சந்நியாசிகள் எனக்கு மிகவும் வேண்டியவர்கள். புண்ணியமான நல்ல செயல்களைச் செய்து பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் என் விரோதிகள்” என்றான்.

அவன் பேச்சை இடமறித்து பிரம்மா, “முன் சென்ற யுகங்களில் மனிதர்களுக்கு நீண்ட ஆயுள் இருந்தது. அதனால் அநேக கஷ்டங்களையும் சுகங்களையும் அனுபவித்தபிறகு ஞானம் பெற்றார்கள். ஆனால் கலியுகத்திலோ ஜனங்களுக்கு ஆயுள் குறைவு. ஆகையால் அவர்கள் சிறிதளவு புண்ணியம் செய்தாலும் சீக்கிரம் ஆத்மபலம் பெற்று ஞானிகளாகி விடுவார்கள். அதனால் நீ கவனத்துடன் உன் வேலையைக் காட்ட வேண்டும்!” என்றார்.

மேலும் அவர், “நீ தமோ குணத்தை உன்னுடன் அழைத்துச் சென்றால், புண்ணிய ஆத்மாக்களுக்கும், பாப புத்தி ஏற்படும். தர்ம சிந்தனை நசித்துப் போகும். அதனால் தமோ குணத்தை அழைத்துக்கொண்டு பூமியில் பிரவேசி!” என்றார். கலிபுருஷன் பிரம்மனிடம், “ஹரியையும் சிவனையும் வழிபடுபவர்களும், தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களும், கங்கைக் கரையில் வசிப்பவர்களும்,வாரணாசி என்னும் காசி சேத்திரத்திற்குச் சென்று தர்மம் செய்பவரும், கால்நடையாக தீர்த்த யாத்திரை செய்பவரும், சத் சங்கத்தில் சென்று சேர்ந்து புராணங்கள் கேட்பவரும், தானம் செய்பவர்களும், மனதில் சாந்தம், பொறுமை குடிகொண்டவர்களும், ஜபம், தியானம் செய்கிறவர்களும் எனக்குப் பகைவர்கள்!” என்று கூறினான். அவன், தன் மனைவி குழந்தைகளிடம் ஆசை வைத்து, தாய் தந்தையரை அவமதிக்கும் பாமரர்களும், வேதம், சாத்திரம் எல்லாம் பொய் என்று பழிப்பவர்களும், சிவன் விஷ்ணு இருவர்களில் பேதம் ஏற்படுத்தி சண்டை இடுபவர்களும், அவர்களை நிந்திப்பவர்களும் எனக்கு வேண்டியவர்கள் ஆவார்கள்!”என்று சொன்னான்.

“உன்னைக் கண்டு எவன் பயப்படுகிறானோ, அவன் உன் வசமாகி மறுபடியும் ஜனன மரணமென்னும் சுழலில் சிக்கி விடுகிறான். இறைவனை வழிபடும் சாதுக்கள் கலியில் சீக்கிரம் விடுதலை அடைவார்கள். பாபம் செய்பவன் உன் நண்பன். புண்ணியசாலி உன் விரோதி!” என்றார் பிரம்மன்.

“அப்படிப்பட்ட சாதுக்கள் எப்படி இருப்பார்கள் என்றுசொல்லுங்கள்!” என்று கலிபுருஷன் கேட்க, பிரம்மன் ‘கலியுகத்திலும் தைரியத்தைக் கைவிடாமல் சுத்த சித்தத்துடன் இருப்பவர்கள், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் போன்ற குணங்களைக் கைவிட்டவர்கள், ஹரிஹர தியானம் இடைவிடாமல் செய்பவர்கள், காசி சேத்திரத்தில் வசிப்பவர்கள், பெற்றோரைக் காப்பவர்கள், பிராமணர், பசு, காயத்ரி ஆகியவற்றை ஆதரிப்பவர்கள், துளசியைப் பூஜிப்பவர்கள், குருபக்தி செய்பவர்கள் ஆகியோர் சாதுக்கள் ஆவார்கள். அவர்களை நீ எந்த விதத்திலும் துன்புறுத்தக்கூடாது” என்று கட்டளையிட்டார்.

இதைக் கேட்ட கலி, குரு என்றால் யார்? அவருடைய மகிமை என்ன? என்று கேட்டான். “குரு என்பவர் அறியாமையை நீக்கிப் பாபங்களை அகற்றுபவர். அவரே ஈஸ்வரன். அவரே நாராயணன். மனிதனுக்கு தெய்வத்தைக் காட்டித் தருபவர் குருவே ஆவார். மாதா, பிதா, தய்வம் எல்லாமே ஒருவனுக்குக் குரு தான். நமக்குக் குரு, தரிசனம் ஆனார் என்றால் தெய்வங்கள் நம் வசமாவார்கள். வித்தை, வேதம், ஞானம், விரதம், யாகம், சாஸ்திரம் முதலியவற்றை அறியக் குரு இல்லாமல் முடியாது. பக்தி, வைராக்கியம், விவேகம், தர்ம மார்க்கம் இவற்றைக் காட்டக் கூடியவர் குருவே. அவரை ஜோதி வடிவமாகக் கருத வேண்டும். குரு நமக்குக் காதுகளின் வழியாக அதாவது சிரவணத்தின் மூலமாக எல்லாவித சாஸ்திரங்களையும் கற்றுக் கொடுக்கிறார். அதனால் நாம் அறியாமை அகன்று ஞானம் பெற்றுக் கடைசியில் சம்சாரமென்ற கடலைத் தாண்டுகிறோம்!” என்று குருநாதரின் பெருமையை விவரித்தார்.

அப்போது கலிபுருடன், “தெய்வங்களை விட மேலானவர் குரு என்று எவ்வாறு கூறுகின்றீர்கள்? எனக்கு அதைப்பற்றி விபரமாகக் கூற வேண்டும்!”என்று கேட்டான். அதற்குப் பிரம்மன் தீபகன் என்னும் ஒரு சிஷ்யனின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

முன்னொரு காலத்தில் கோதாவரி நதி தீரத்தில் ஆங்கிரஸ் என்ற பிரம்மரிஷி தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு பைரவர் என்ற பிராமணரின் மகனான வேதவர்மன் என்ற சிஷ்யன் இருந்தான். அவன் ரிஷியிடம் வேத சாஸ்திரங்களை நன்கு பயின்று சிறந்த முறையில் ஞானம் பெற்றுத் திகழ்ந்தான். சிறிது காலம் கழித்து அந்த வேதவர்மன் ஒரு குருகுலம் ஆரம்பித்து அவனுக்கு அனேக சிஷ்யர்கள் அமைந்தனர். அவர்களில் ஒருவன் தான் தீபகன்.

ஒருநாள் வேதவர்மன் எல்லா சிஷ்யர்களையும் கூப்பிட்டு, ‘போன ஜன்மத்தில் நான் சில பாபங்கள் செய்ததால் அதை இந்த ஜன்மத்தில் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அதன் பொருட்டு நான் காசி சேத்திரத்திற்குச் சென்று அவைகளை ஒழிக்க வேண்டும். எனவே என்னை உங்களில் ஒருவன் காசிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். காசிக்குச் சென்றபின் நான் முன்செய்த வினையினால் எனக்கு இருபத்தொரு வருடங்கள் கண்பார்வை இழந்தும், முடவனாகியும் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படக்கூடும். அந்த சமயத்தில் எந்த சிஷ்யன் திடசித்தத்துடனும் தைரியத்துடனும் எனக்கு உடனிருந்து சேவை செய்ய முடியும்?’ என்று வினவினார்.

theepakan

அதற்கு அந்த தீபகன், இதில் என்ன இருக்கிறது? தடை எதுவும் இல்லை. குருவை நான் கடவுளாகவே மதிக்கிறேன். தங்களின் உத்திரவு கிடைத்தால் நான் உங்களுடன் இருந்து குரு சேவை செய்யச் சித்தமாக இருக்கிறேன். முடியுமென்றால் அந்த இருபத்தோரு வருடங்களும் குருவிற்குப் பதிலாக நான் குருடனாகவும், முடவனாகவும் இருந்து அப்பாபத்தை அனுபவிக்கிறேன்! என்று கூறி முன் வந்தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s