குருவைத் தேடி – 8

நாமதாரகன் தான் கனவில் கண்ட யோகியைத் தன் கண் முன் கண்டு மனம் நெகிழ்ந்து நெஞ்சார்ந்த பக்தியுடன் பலவாறு துதி செய்து அவரது சரணக் கமலங்களில் நமஸ்கரித்து அவர் யார்? என்று கேட்டான்.

அதற்கு அவர் தான் ஒரு யோகி என்றும் சகல புண்ணிய தீர்த்தங்களையும், புண்ணியத் தலங்களையும் தரிசித்து வருவதாகவும் தமது குரு, மும்மூர்த்திகளின் அவதாரமான ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி என்றும் கூறினார்.

மேலும் அவர் தமது குரு அமரஜா, பீமா என்னும் இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடமாகிய காணகாபூர் என்னும் இடத்தில் வசிக்கின்றார். அவர் வரும் பக்தர்களுக்கு அபயமளித்து இந்த சம்சாரக்கடலிலிருந்து விடுபடுவதற்கான வழிகாட்டவே அங்கு வீற்றிருக்கின்றார் என்று கூறினார்.

அவருடைய பக்தர்களுக்கு வறுமை இல்லை. தனம், தானியம், பசுக்கள் முதலிய எல்லாச் செல்வங்களையும் குறையறப்பெற்று குருவருளால் நிறைவுடன் வாழ்கிறார்கள் என்றும் சொன்னார்.

இதையெல்லாம் கேட்டு நாமதாரகன் மகிழ்ந்தான். யாரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் தான் இவ்வளவு தூரம் பயணப்பட்டானோ அந்த குருவையறிந்த ஒரு யோகி தன்முன் தோன்றி குருவின் பெருமைகளைக் கூறக் கேட்கும்படி அமைந்ததே என மனதிற்குள் நன்றி கூறினான். அவன் அந்த சித்தரை மீண்டும் வணங்கி, தனக்கு எப்போதும் துயரமாகவே இருக்கிறது என்றும் ஏதேதோ சந்தேகங்கள் தன்னை வாட்டுகின்றன என்றும், சித்தர் தான் அவற்றைத் தீர்க்க வேண்டும் என்றும் கூறினான்.

குரு கிருபை எவனுக்கு ஏற்படுகிறதோ அவனுக்குக் கஷ்டங்கள், சந்தேகங்கள் எல்லாம் தீரும். எல்லாத் தெய்வங்களும் அவனுக்கு வசப்படுவார்கள். கலிகாலத்தை அவன் எளிதில் ஜெயித்து விடுவான். குரு என்பவர் மும்மூர்த்திகளின் அவதாரம் என்னும் நிச்சயபுத்தி ஒருவனுக்கு இருந்தால் அவனுக்கு எதுதான் கிட்டாது. ஒருவேளை விஷ்ணுவோ, சிவனோ நம்மிடத்தில் கோபமடையலாம். அவ்வேளையில் குரு தன் சிஷ்யனைக் காப்பாற்றி விடுவார். ஆனால் குருவின் கோபத்தை அந்த விஷ்ணுவாலோ, சிவனாலோ தணிக்க முடியாது, என்று சித்தர் நாமதாரகனிடம் சொன்னார்.

சித்தர் கூறியதைக் கேட்ட நாமதாரகன் பணிவுடன், ‘ஸ்வாமி! நீங்கள் சொன்ன விபரத்தின் பொருள் எனக்குப் புரியவில்லை. சிவன் விஷ்ணு முதலிய தெய்வங்கள் கோபித்துக்கொண்டாலும் அதைக் குருவால் தீர்க்க முடியும், ஆனால் குரு கோபமடைந்தால் அதைத் தணிக்க முடியாது என்று சொல்கிறீர்களே, எந்த சாஸ்திர புராணத்தை ஆதாரமாகக் கொண்டு இப்படிச் சொல்கிறீர்கள்?” என்றான். மேலும் அவன் ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி மும்மூர்த்திகளின் அவதாரம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? ஏன் மும்மூர்த்திகள் இத்தகைய அவதாரத்தை எடுத்தனர்? என்றும் கேட்டான்

சித்தர் அவனிடம், ‘மிகவும் நுட்பமான சில விடயங்களை நான் சொல்ல இருக்கின்றேன். அப்படி நான் சொல்லப்போகின்ற வரலாற்றில் உன் கேள்விக்கான பதில் இருக்கிறது. எனவே ஒருமித்த கவனத்துடன் கேள்! என்றார்.
vishnu creates brahma
ஒரு சமயம் உலகத்தில் பிரளயம் ஏற்பட்டது. அந்த வேளையில் எந்தவிதமான ஒன்றுமே இல்லாமல் பிரம்ம ஸ்வரூபமான ஸ்ரீமன் நாராயணன் மட்டும் ஆலிலை கிருஷ்ணனாகப் பிரளய நீரில் மிதந்தார். அப்போது அவருள்ளத்தில் ‘படைக்க வேண்டும்” என்ற எண்ணம் உதித்தது. உடனே அவரிலிருந்து பிரம்மன் தோன்றினான். தோன்றியவுடன் நான்கு திசைகளையும் நோக்கித் தன்னைத் தவிர வேறு எவருமில்லை. எனவே நான் பெரியவன் என்று எண்ணினான். உடனே மகா விஷ்ணு ‘இதோ நான் இருக்கிறேன்!” என்றார்.

உடனே பிரம்மதேவன் விஷ்ணுவை வணங்கித் தான் என்ன செய்ய வேண்டும்? என்று வினவ, ‘படைப்புத் தொழிலை மேற்கொள்வீர்! எனக் கூறினார். பிரம்மா சிருஷ்டி செய்யும் விதத்தைச் சொல்லும்படி கேட்க, விஷ்ணு தன்னிடத்தில் இருந்த நான்கு வேதங்களையும் பிரம்மதேவனிடம் கொடுத்து, ‘இவை அலாதியானவை. இவற்றைக் கொண்டு ஜகத்தை சிருஷ்டி செய்!” என்று சொன்னார்.

அதன்படி பிரம்மதேவன் வேதங்களை கைக்கொண்டு, அவற்றை அனுசரித்து வரிசையாக இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கினார். பிறகு பஞ்சபூதங்களை அடிப்படையாக வைத்து உயிரினங்களைப் பலவகைகளாய்ப் படைத்தார். வியர்வையிலிருந்து உற்பத்தியாகும் ஜந்துக்கள், முட்டையிலிருந்து உருவாகும் ஜந்துக்கள், விதைகளிலிருந்து உற்பத்தியாகும் உயிரினங்கள், குட்டி போடும் உயிரினங்கள் என்றெல்லாம் படைப்பு அமைந்தது.

பிரம்மதேவன் சனகாதி முனிவர்களையும், மரீசி முதலிய ரிஷிகளையும், தேவர்கள், அசுரர்கள், பிரஜாதிபதிகள் எனவும் உருவாக்கினார். அதற்கு மேல் நான்கு யுகங்களைப் படைத்தார். அவற்றில் முதலாவது யுகம் கிருத யுகம், இரண்டாவது திரேதாயுகம், மூன்றாவது துவாபரயுகம், நான்காவதாக உள்ளது தான் கலியுகம்.

(தொடரும்..)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s