குருவைத் தேடி – 7

நானோ சிறுவன். காவியமோ கற்பனையோ எனக்கு இல்லை. குருநாதன் எப்படி விரும்புகிறாரோ அப்படி நான் எழுத முற்படுகின்றேன். என் மழலைச் சொற்களை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன்.
என் வம்சத்தில் எல்லோருக்கும் சத்குருவின் அருள் இருந்தது. அதன்படி எனக்கும் ஸ்ரீ குரு நரசிம்ம சரஸ்வதியின் சரித்திரத்தை எழுதும்படி குருவின் ஆணை கிடைத்தது. அமிர்தம் போன்ற இதனை எழுதுவதால் உனக்கு நான்கு விதமான நன்மைகளும் சித்திக்கும் என்று அவர் கூறினார்.

ShriNarasimhaSaraswatiகுரு ஸ்ரீ நரசிம்ம ஸரஸ்வதி மும்மூர்த்திகளின் அவதாரம். அவரது சரித்திரத்தை வர்ணிக்க ஆதிசேஷனாலும் முடியாது. அச்சரித்திரத்தைக் கேட்டால் அல்லது வாசித்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். யார் இதனைப் பக்தியுடன் பாராயணம் செய்கிறார்களோ அவர்களது வீட்டில் அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்வார்கள். நோய்கள் பாதிக்காது. இந்த சரித்திரம் இருக்கும் வீட்டில் எப்போதும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். அப்படிப்பட்ட புண்ணிய கதையை நான் சொல்ல முற்படுகிறேன். என் சொல் மீது நம்பிக்கை வைத்து எல்லோரும் இதை அறிய வேண்டும்.

எப்படி தேனீ என்னும் சின்ன பூச்சியை வெறுக்காமல் அது சேகரித்துத் தரும் தேனை விரும்புகிறோமோ, முத்துச் சிப்பியை இகழாமல் அதில் உண்டாகின்ற முத்துக்களை மதிக்கின்றோமோ, அரச மரம் முளைத்திருக்கும் இடத்தைக் கருதாமல் எங்கு முளைத்தாலும் அதனை வணங்குகிறோமோ, அதுபோல நான் ஒரு அற்பன் இதனை எழுதுகிறேன் என்று அவமதிக்காமல் இதிலிருக்கும் அமிர்த தத்துவத்தைக் கிரகிக்கும்படி வேண்டுகிறேன். இதை சிரத்தையாய் படித்தால் அல்லது கேட்டால் பிரம்ம ஞானம் உண்டாகும். நினைத்ததெல்லாம் கைகூடும்.

முன்னொரு காலத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள குல்பர்கா என்ற பெருநகரில் காணகாபூர் என்னும் பிரசித்தி;பெற்ற ஊரில் ஸத்குரு ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி என்ற மகான் வசித்து வந்தார். அவர் மக்களுக்கு எல்லா விதத்திலும் நல்லருள் புரிந்தார். அவரது மகிமையை அறிந்தவர்களாய் நாலா திசைகளில் உள்ள ஊர்களிலிருந்தும் பக்தர்கள் அவரை நாடி வந்து தரிசித்து, அவரவர் விரும்பிய வரங்களைப் பெற்றனர். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் புத்திர சந்ததியையும், செல்வத்தை விரும்பியவர்கள் செல்வத்தையும் மற்றவர்கள் நான்குவித புருஷார்த்தங்களையும் வேண்டிப் பெற்று மகிழ்ச்சியடைந்தனர்.

அப்படிப்பட்ட ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி என்னும் குருநாதரின் பெருமைகளைப்பற்றி வேறு ஒரு ஊரில் வசித்து வந்த நாமதாரகன் என்னும் பக்தன் கேள்விப்பட்டான். அவன் பல்வேறு காரணங்களால் உலகின் மீது ஒரு வெறுப்பும், மனதில் வாழ்க்கையைப் பற்றிய பல்வேறு சந்தேகங்களையும் கொண்டிருந்தான். மனம் கலங்கிய நிலையில் அவன் குரு நரசிம்ம ஸரஸ்வதி பற்றிய அற்புதங்களைப் பலர் பேசக் கேட்டான்.

யாருக்குத் தெய்வ பலமில்லையோ அவனுக்குக் குருபலம் அவசியம் வேண்டும். எப்படி சிந்தாமணி என்னும் ரத்தினம் தன்மீது பட்டவுடன் இரும்பு தங்கமாக மாறுகின்றதோ அப்படி குரு சரணத்தின் சம்பந்தத்தால் பக்தனின் பிறவித் துயர் தானாய் விலகும் என்று சிந்தித்த நாமதாரகன், அந்த மகானை எப்படியும் தரிசிக்க வேண்டும் என்ற ஓரே ஆவலுடன் தன் ஊரைவிட்டு காணகாபூரை நோக்கிப் புறப்பட்டான்.

அப்படி அவன் ஒவ்வொரு ஊராகக் கடந்து செல்லும் போது, சதா சர்வ காலமும் குருவருளின் உயர்வைப் பற்றிய ஒரே சிந்தனையாகவே நடந்து சென்றான். இந்த கலியுகத்தில் நம்மை ரட்சிக்கக்கூடிய மகான் – நரசிம்ம ஸரஸ்வதி ஒருவரே என்றும், அவர்தான் ஒருவருக்குத் தாய், தந்தை எல்லாம் என்றும், எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இருப்பவரும், முத்தொழிலைச் செய்பவருமாகிய பரம்பொருள் அவரே என்றும், எப்படி ஒரு தாய் தன் குழந்தையைக் காப்பாற்றுவாளோ அப்படி குரு தேவர் அனைவரையும் ரட்சிப்பார் என்றும் பலவிதமாக யோசித்துக்கொண்டே அவன் வழி நடந்தான்.

ஒருநாள் நீண்ட தூரம் நடந்து பின்பு ஓரிடத்தில் ஓய்வு எடுக்கின்றபோது நாமதாரகன், ‘நமக்கு இந்த மானுடப் பிறவியைத் தந்த கடவுளுக்கு நாம் கைம்மாறு செய்ய முடியுமா? பரம்பொருள் பக்தர்களிடம் காட்டும் பரிவிற்கு அளவு உண்டா? தான் கேட்டபடி எல்லாவற்றையும் தானம் செய்த பலி சக்கரவர்த்தியை அவன் பாதாளலோக அதிபதியாக்கினானல்லவா! தனக்கு உதவி செய்த விபீஷணனுக்குத் தங்க மயமான இலங்கையையே அளித்து மன்னனாக முடி சூட்டவில்லையா? குழந்தை துருவனுக்கு அழியாத துருவ பதத்தை அளித்தானே! அவர்களெல்லாம் அவனுக்கு என்ன கைம்மாறு செய்தார்கள்?

தாயும் தந்தையுமாய் இருந்து என்னைக் காக்கும் உங்களுக்குப் பிரதி உபகாரமாக என்னால் என்ன செய்ய முடியும்? அப்படியே நான் எதையாவது ஒன்றைக் கொடுத்து, அதற்குப் பதிலாக வேறு ஒன்றைக் கேட்டுப் பெற்றால் அது வியாபாரமாகி விடாதா? அப்படிச் செய்வதால் தயாநிதி என்ற உமது பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டுவிடுமே. மேலும் பதினான்கு உலகங்களுக்கு நாயகனாய் விளங்குகின்ற உங்களுக்கு நான் எதைத்தான் கொடுக்க முடியும்?

மழையானது எதையாவது விரும்பியா பூமியின் மீது பொழிகின்றது? கருணையாலல்லவா அது செயல்படுகின்றது? நீங்கள் கருணா மூர்த்தியாயிற்றே. என்னை ரட்சிக்கக் கூடாதா? என் முன்னோர்கள் குரு பக்தி செலுத்தவில்லையா? அப்படி அவர்கள் செய்த குருபக்தியின் பலன் எனக்குக் கிடைக்கக்கூடாதா? நான் நினைத்தால் உங்களோடு சண்டை போட்டு உங்களது தரிசனத்தைப் பெற முடியும். ஆனால் அப்படிச் செய்வது தவறல்லவா? குழந்தை தவறு செய்தாலும் அதைத் திருத்திக் காத்தருள வேண்டியது தந்தையின் கடமையல்லவா? நீங்கள் தான் என் தாய், தந்தை, குரு என்று நினைப்பவனைக் கை விடலாமா? எனது வேண்டுகோள்கள் தங்கள் காதில் விழவில்லையா?” என்றெல்லாம் நாமதாரகன் குரு கிருபையை வேண்டிப் பலவாறாக சிந்தித்து மனம் வருந்தினான்.

அவ்வாறு துயரத்துடன் இருந்தவன், உடற் களைப்பினாலும் மனச் சோர்வினாலும் ஒரு மரத்தடியில் அமர்ந்து அப்படியே தூங்கி விட்டான். அப்பொழுது கனவு ஒன்றைக் கண்டான். அக்கனவில் ஜடாதாரியாக, பீதாம்பரத்தை ஆடையாக அணிந்து, புலித்தோலைக் கையில் வைத்துக்கொண்டு உடல் முழுவதும் விபூதியைப் பூசியவராய் ஒரு யோகீஸ்வரர் தோன்றி தனது நெற்றியில் விபூதி பூசுவதுபோல் காட்சி தென்பட்டது.

உடனே அவன் சட்டென்று கண் விழித்துத் தான் கனவில் கண்ட யோகியைச் சுற்றுமுற்றுமாகத் தேடினான். அத்தருணத்தில் ஒரு பசு தன் கன்றினை எப்படித் தேடி ஓடி வருமோ, அதுபோல் ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி குரு மகான் ஒரு சித்தரைப் போல வடிவம் கொண்டு நாமதாரகனின் முன் தோன்றினார்.

திகைத்துப்போன நாமதாரகன் சட்டென்று எழுந்து சித்தரை வணங்கி அவரது சரணக் கமலங்களைத் தனது கேசத்தால் துடைத்து ஆனந்தமடைந்தான். தனது இதயத் தாமரையில் அவரை அமர்த்தி மானசீகமாகப் பதினாறு விதமான பூஜைகளைச் செய்து தொழுதான். அவனது பக்தி பூர்வமான சேவையைக் குருநாதரும் ஏற்றுக்கொண்டு அவனை ஆசீர்வதித்தார்.

அப்பொழுது நாமதாரகன் மீண்டும் அவரது பாதங்களில் விழுந்து வணங்கி, ‘சத்குருவே சரணம். தாங்கள் தான் எனக்குத் தாயும் தந்தையும் ஆவீர். என் அஞ்ஞானத்தை அழித்து சுயம் ஜோதியைக் காண்பிக்க வேண்டும். தங்களின் தரிசனத்தால் என் பாவமெல்லாம் அழிந்தது. என்னைக் காத்து ரட்சிக்க வந்த தவ முனிவராகிய தங்களின் பெயர், ஊர் முதலியவற்றை எனக்குச் சொல்ல வேண்டும்” எனப் பணிவுடன் வேண்டினான்.
(தொடரும்..)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s