குருவைத் தேடி – 5

அவரைத் திரும்பக் கண்ட மனைவி ஆனந்தக் கண்ணீருடன் குருவிற்கு நன்றி தெரிவித்தாள். ஒருவருக்கொருவர் பேசி, மன ஆறுதல் பெற்ற பின் இனி வேலை என்னவாகுமோ? என்ன பிரச்னை ஏற்படுமோ? என இருவரும் கவலைப்பட்டனர். பிறகு கவலைப் பட்டு என்ன பயன்? ஆவது ஆகட்டும் என்று மனம் தேறி ஒரே நாளில் குரு சரித்திரத்தைப் பூர்த்தியாகப் பாராயணம் செய்து முடித்து, ஸ்ரீ குரு சரணங்களைக் கெட்டியாகப் பிடித்த வண்ணம், நீ அறியாதது ஒன்றுமில்லை என்று குருவைத் தியானித்துப் பிறகு குரு பிரஸாதத்தை உண்டு விட்டு உறங்கி விட்டனர்.

மறுநாள் காலை கம்பெனிக்குப் புறப்பட்டுச் சென்று தனது முதலாளியான டாக்கரைப் பணிவுடன் வணங்கி, நடந்த தவல்களை எடுத்துரைத்தார். எல்லாவற்றையும் கேட்ட திரு டாக்கர் வெங்கோபராவிடம் குறையாக எதுவுமே சொல்லாமல், ‘உன் பக்தியின் உயர்வை நான் அறிவேன். இப்போது எல்லா விபரங்களையும் நீயே கூறிவிட்டாய். பரவாயில்லை. குரு பக்தி நிறைந்த, கண்ணியமான பணியாளனாகிய உன் மீது எனக்கு வருத்தமோ, கோபமோ எதுவுமில்லை. நீ உன் வேலையைத் தொடர்ந்து செய்யலாம்!” என்று ஆதரவாகப் பேசியதோடு மட்டுமின்றி, அவர் பணியில் இல்லாத ஆறு மாத காலத்திற்குரிய சம்பளத்தையும் அளித்து விட்டார் என்றால், குரு அருளின் மகிமையை என்னவென்று சொல்வது?

இத்தகைய பக்திமானாகிய வெங்கோபராவ் என்னும் ராயர், இடைவிடாமல் குரு சரித்திரம் பாராயணம் செய்து, குரு சரித்திரத்தைக் கதைகளாக ஏராளமான பக்தர்களுக்கு எடுத்துரைத்துக் குருபக்தி ஊட்டியிருப்பதை இன்றும் சென்னையிலுள்ள திருவல்லிக்கேணியில் பல இடங்களில் காணலாம். மேலும் ராயர் அவர்கள் பஜனைமாலா என்ற மராட்டிய பஜனை முறையை எழுதிப் பிரசுரித்திருக்கின்றார். தம் வாழ்க்கை முழுவதையும் குருபக்தியைப் பரப்புவதற்காகவே செலவழித்த பக்தரான வெங்கோபராவ் 1946ல் மறைந்தார்.

இப்படிப்பட்ட உத்தமரான திரு வெங்கோபராவின் சத் புத்திரனான வெங்கோஜிராவ் என்பவர் தான் தன் வீட்டில் மராட்டிய மொழியில் எழுதப்பட்டிருந்த குரு சரித்திரம் என்ற நூலை தவத்திரு சாந்தானந்த அடிகளாரின் வேண்டுகோளை ஏற்றுத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதி தான் என் சகோதரி வீட்டில் எனக்குக் கிடைத்தது.

வெங்கோஜிராவ் அடிகளாரிடம், ‘சிறு வயதிலிருந்தே எனது தந்தையார் நடத்தி வந்த பஜனை, சப்தாஹம், குரு ஆராதனை அனைத்திலும் பங்கு பற்றும் பெரும்பேறு எனக்குக் கிடைத்தது. எங்கள் வீட்டில் தினமும் குரு தேவருக்குக் குரு ஆராதனையும், பாராயணமும், மேலும் பக்தர்கள் முன்னிலையில் ஏழு நாட்கள் தொடர்ந்து குருவின் கதைகளை எடுத்துரைக்கின்ற ஸப்தாஹங்கள் ஆண்டு தோறும் மிகச் சிறப்பாக நடைபெறும். 32 வருடங்களாக நான் அவற்றில் ஈடுபட்டு எல்லாம் செய்து கொண்டு வந்தாலும், இப்படி ஒரு புத்தகத்தைத் தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணமே தமக்கு உதிக்கவில்லை” என்று கூறினார்.

மேலும் வெங்கோஜிராவ், ‘குருபக்தி செய்வதை என் கடமையாக ஒரு பாக்கியமாக எண்ணி இதுநாள் வரை இதில் ஈடுபட்டு வந்தேன். ஆனால் தற்போது அந்த குருவின் திருஉள்ளத்தாலேயே அவரைப் பற்றித் தமிழ் பக்தர்களுக்கு எடுத்துரைக்கின்ற பாக்கியமும் எனக்குக் கிடைத்துள்ளது. எனக்கு மராட்டிய மொழி மிக நன்றாகத் தெரியாது. தமிழ்மொழியும் ஓரளவிற்குத் தான் தெரியும். இருந்தாலும் தங்களின் ஆசியும், குருவருளும் தான் துணையாக இருந்து இதனை சரியாக எழுதுவதற்குப் பக்க பலமாகச் செயல்பட வேண்டும்” என்று பயபக்தியுடன் கூறினார்.

இத்தனை தகவல்களையும் அந்த குரு சரித்திரம் நூலில், தவத்திரு சாந்தானந்த அடிகளார் தமது முன்னுரையில் மிக விரிவாக எழுதியிருக்கிறார். அவரது முன்னுரையின் அடிப்படையில் தான் நான் தமிழ்நாட்டில் ஸ்ரீ தத்தகுரு குகாலயம் எப்படி ஏற்பட்டது? அதைக் கட்டியவர் யார்? அவரது வரலாறு என்ன? இந்தப் புத்தகம் எழுதப்படக் காரணம் யார்? அவரது கதை என்ன? போன்ற விஷயங்களை எல்லாம் விரிவாக எடுத்தெழுத முடிந்தது.

இதனையடுத்து தமது முன்னுரையில் சுவாமி சாந்தானந்த அடிகள் இந்த குரு சரித்திரம் நூலின் உயர்வையும் மகிமையையும் இவ்வாறு விவரிக்கின்றார்.

கருணாநிதியான பகவான் அதர்மம் மேலிட்டு, தர்மம் குலைவுறும் போதெல்லாம் தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காப்பதற்காகப் பலவித அவதாரங்களை எடுத்துத் தர்மத்தை நிலைநாட்டியிருக்கின்றார். அப்படிப்பட்ட அவதாரங்களில் – தத்தாத்ரேயரின் அவதாரமும் ஒன்று.

அத்திரி மகரிஷியும், மகா பதிவிரதையான அனுசூயா தேவியும், திரிமூர்த்திகளும் சேர்ந்த விதமாக ஒரு மகன் தங்களுக்கு வேண்டுமென்று வரம் கேட்டபடியால் அதனை நிறைவேற்றவும், ரிஷிகளையும், யோகீஸ்வரர்களையும், பக்தர்களையும் காத்து ரட்சிக்கவும் இறைவன் ஸ்ரீ தத்தராக அவதரித்தார்.

அப்படி அவதரித்த ஸ்ரீ தத்தாத்ரேயர் தான் மீண்டும் பதினாறாம் நூற்றாண்டில் குல்பர்க்கா ஜில்லாவில் பிரசித்திபெற்ற காணகாபூர் என்ற ஊரில், ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் என்னும் அவதாரமாகவும், பிறகு மீண்டும் அவரே ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி என்ற பெயர் கொண்டும் அவதரித்தார். அந்த அவதாரங்களின் மகிமைதான் இந்த குரு சரித்திரம் என்னும் நூல்.

அன்பர்களே! இது கட்டுக்கதையல்ல. உண்மையில் நம் நாட்டில் நடைபெற்ற உன்னத வரலாறு. துக்கக் கடலில் மூழ்கியிருந்த மக்களுக்கு நல்வழி காட்டுவதற்காக இறைவன் முன்வந்த வரலாறு. அதர்மம் தலைவிரித்தாடுகின்ற நேரத்தில் குருநாதர் தான் தர்மத்தை உணர்த்தி ஞானத்தை ஏற்படுத்த முடியும். ஞானஒளி தருபவர் குரு. அதனால் இந்த குரு சரித்திரத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் அல்லது பிறர் படிப்பதைக் கேட்பதன் மூலம் ஸத்குரு பக்தி உண்டாகி, அவரவர் தம் குல தர்மத்தை அறிந்து கடைப்பிடிக்கத் துவங்கும்போது, சிரத்தை உண்டாகி தர்மம் காக்கப்படுகின்றது.

குருவருள் இல்லையேல் திருவருள் கிடைக்காது. குருவை அறிந்தவனால்தான் அறிய வேண்டியதை அறிய முடியும். ஜனகர் முதலான முனிவர்களும், ராமரும், கிருஷ்ணருமே சத்குருவை அடைந்து, பக்தி செய்து, பணிவிடைகள் புரிந்து ஞானம் பெற்றார்கள் என்றால் நம் நிலை பற்றிச் சொல்ல வேண்டுமா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s