குருவைத் தேடி – 4

swami santhanandaஇந்நிலையில் சுவாமி சாந்தானந்தரைத் தரிசிக்க வந்திருந்த அவரது பக்தர்களில் ஒருவரான திரு அனந்தராவ் என்பவர் சுவாமிகளிடம் ஒரு தகவலைக் கூறினார். அனந்தராவ் திருச்சியைச் சேர்ந்தவர். அவர் திருச்சிக்கு அருகிலுள்ள பொன்மலையில் வசிக்கின்ற ஒரு தத்ததாசரைப் பற்றிக் கூறினார். அவரது பெயர் வெங்கோஜி ராவ். அவர்கள் மராட்டிய ராயர் வம்சத்தில் வந்துத் தமிழ்நாட்டில் குடியேறியவர்கள். அவர்கள் மகான் ஸ்ரீ தத்தாத்ரேயரின் தீவிர பக்தர்கள். அவரது வீட்டில் ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீ தத்தகுரு ஆராதனை, அவரைப் பற்றிய குரு சரித்திர சப்தாகம் போன்றவை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவதாகவும், விரிவாக எடுத்துச் சொல்லி அவரை அணுகினால் சுவாமிகளின் விருப்பம் ஒரு வேளை நிறைவேறக்கூடும் என்று அனந்தராவ் சொல்லியிருக்கிறார்.

அதைக்கேட்டு உள்ளம் குளிர்ந்த தவத்திரு சாந்தானந்த அடிகள் திரு வெங்கோஜிராவை அழைத்து வரச்செய்து அவரிடம் உரையாடிய போதுதான், தேடிய பொருள் கிடைத்த நிம்மதி அவருக்கு ஏற்பட்டது. ஏனெனில் இந்த வெங்கோஜிராவின் தந்தை திரு வெங்கோபராவ் ஓர் உத்தம புருஷர். சிறந்த பக்திமான். அதிக வேத சாஸ்திரங்களில் பாண்டித்தியம் பெற்றவர். ஸ்ரீ தத்தரின் பூரண அருள் பெற்றவர். குருவின் நேரடித் தொடர்பினால் தம் வாழ்க்கையில் பலவித உயர்ந்த அனுபவங்களைப் பெற்ற பாக்கியசாலி போன்ற விபரங்கள் அப்போது சாந்தானந்த அடிகளுக்குத் தெரிய வந்தன.

அதோடு மட்டுமின்றி அந்த தத்த பக்தரான வெங்கோபராவ் தன் வீட்டிலேயே வருடந்தோறும் தமது குருதேவரான ஸ்ரீதத்தாத்ரேயரின் ஜயந்தியை வெகு விமரிசையாகப் பக்தி பூர்வமாக நிகழ்த்தி வந்திருக்கிறார். ஏழு நாட்கள் தொடர்ந்து குரு சரித்திரம் என்னும் தலைப்பில் சப்தாகம் என்னும் உபன்யாசம் (சொற்பொழிவு) செய்வது அவரது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அச்சமயங்களில் அவற்றில் பங்குகொண்டு வழிபாடுகளையும், பிரார்த்தனைகளையும் மேற்கொண்ட பக்தர்களின் வாழ்க்கையில், அவர்கள் குரு தத்தர் மீது கொண்ட நம்பிக்கையின் பயனாகப் பலப்பல நல்ல காரியங்கள் நிகழ்ந்திருக்கின்றன. வேண்டுகோள்கள் நிறைவேறியிருக்கின்றன போன்ற விபரங்களை அந்த பக்தரின் மகனான வெங்கோஜிராவ் அடிகளாரிடம் எடுத்துரைத்தாராம்.

அப்போது சாந்தானந்த அடிகளார் மேலும் அவரது தந்தையாரைப்பற்றி விரிவாகச் சொல்லுமாறு வெங்கோஜிராவிடம் கேட்டுக்கொள்ளவே, அவரும் தம் தந்தையின் வாழ்க்கையில் நடந்த அதிசயங்களை எடுத்துக் கூறினார்.

திரு வெங்கோஜிராவின் தந்தையும், ஸ்ரீ சத்குரு தத்தரின் தாசருமான வெங்கோபராவின் பூர்வீகம், தஞ்சாவூர். மராட்டிய மண்ணின் மைந்தர்களான அக்குடும்பத்தினர் சரபோஜி மன்னர் காலத்தில் தஞ்சைக்குக் குடி பெயர்ந்த பல ராயர் குடும்பத்தினரில் ஒருவராவார். தஞ்சையில் பிறந்து வளர்ந்த வெங்கோபராவ் தமது வேலை காரணமாக சென்னைக்குக் குடி பெயர்ந்தார். அவர் சென்னையில் பிரபல வைர வியாபாரியான டி.ஆர்.டாக்கர் என்பவரின் கம்பெனியில் எழுத்தராகப் பணியாற்றி வந்தார்.

பொறுப்பான பதவியில் இருந்தாலும் சிறந்த பக்தரான வெங்கோபராவ் வடக்கில் இமயமலை முதல் தெற்கில் இராமேஸ்வரம் வரையுள்ள எல்லா புண்ணிய சேத்திரங்களையும் தரிசித்து மகிழ்ந்தார். அதோடு மட்டுமின்றி அல்லும் பகலும் தமது குருவான ஸ்ரீ தத்தாத்ரேயரிடம் கொண்ட குரு பக்தியின் காரணமாகப் பஜனை செய்வதிலும், குரு சரித்திரம், தாஸ போதம் முதலிய நூல்களைப் பாராயணம் செய்வதிலும் ஈடுபட்டு வந்தார்.

இப்படி அவரது வாழ்க்கை பக்திபூர்வமாகச் சென்று கொண்டிருந்தபோது, 1920ம் ஆண்டு ஒரு நாள் கம்பெனியில் அவர் அலுவல்களைச் செய்து கொண்டிருந்தார். அவ்வேளையில் திடீரென அவர் முன் குருவின் உருவம் தோன்றி, “காணகாபுரம் வருக” என்று ஆணையிட்டு மறைந்தது.

உடனே வெங்கோபராவ் தன் நிலை மறந்தார். செயல் மறந்தார். கம்பெனி முதலாளி கணக்கராகிய தம்மிடம் ஒப்படைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்களையும், நகைகளையும் மறந்து, யாரிடமும் எதுவும் சொல்லாமல் மகாராட்டிர மாநிலத்தில் இருந்த காணகாபுரத்திற்குப் புறப்பட்டு போய்விட்டார். அங்கு சென்று அங்கேயே தங்கிக் குருபக்;தியில் தோய்ந்து பிட்சை வாங்கியும், கடலையை உணவாகக் கொண்டும், மனம் மகிழ்ந்து மற்றவற்றை மறந்து இருந்தார்.

ஓர் இரவு குருநாதர் அவர் கனவில் தோன்றி கல்லேச்வரம் என்னும் சேத்திரத்திற்குப் போ! என்று கூறினார். அதையும் ஏற்று வெங்கோபராவ் உடனே அந்த ஊருக்குச் சென்று, அங்கும் முன்போலவே இரந்து உண்டு, பக்திச்சேவை செய்துகொண்டு வேறு எந்தவித சிந்தனையுமின்றி வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் அலுவலகத்திற்குச் சென்ற கணவர் வீடு திரும்பவில்லையே என்ற கவலை அவரது மனைவியை வாட்ட, செய்தி உறவினர்களுக்குப் பரவியது. பலரும் பல இடங்களில் தேடியும் தகவல் எதுவும் தெரியவில்லை. மனம் கலங்கிய அவரது மனைவி சத்குருவை நினைத்துக் கண்ணீருடன் பிரார்த்தனை செய்தாள்.

ஆறு மாதங்கள் குரு சரித்திரத்தை விடாமல் பாராயணம் செய்த வண்ணம் அவரது மனைவி ஏக்கத்துடன் காத்திருந்தாள். சில வாரங்களிலேயே தாமிருக்கும் இடத்தை மனைவிக்குத் தெரிவித்த ராவ் ஆறு மாதங்கள் கழித்து ஊருக்குத் திரும்பினார். ஸத்குரு ஒருநாள் கல்லேச்வரத்தில் இருந்த வெங்கோபராவிற்கும் சென்னையில் வேதனைப்பட்டுக்கொண்டிருந்த அவரது மனைவிக்கும் ஒரே இரவில் கனவில் தோன்றி, ராயரை சென்னைக்குத் திரும்பிப் போகும்படியும், அவரது மனைவிக்கு ஆறுதல் மொழிகள் கூறியும் மறைந்த பின் ராயர் சென்னைக்குத் திரும்பினார்.
(தொடரும்..)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s