குருவைத் தேடி – 3

அவதூதர் என்றால் ஆடைகள் ஏதுமின்றித் திகம்பரராக எங்கும் சுற்றித் திரிகின்ற சந்நியாச முறை. திகம்பரர் என்றால் திசைகளை ஆடைகளாக அணிபவர் என்று பொருள், இப்படி ஒரு சந்நியாச முறை அந்தக் காலத்தில் இருந்தது. ஏன்? இப்போது கூட ஜைன மதத்தில் இப்படிப்பட்ட சந்நியாசிகள் இருக்கிறார்களே!

Koli hills Swayamprakasha Bhremendra Saraswathiஇப்படி அவதூதராக மாறிய கிருஷ்ணமூர்த்தியாகிய பிரம்மேந்திரர், திகம்பரராக இமயம் முதல் குமரி வரை பாதசாரியாக சுற்றித் திரிந்து தவ ஞானியாய்த் திகழ்ந்தார். இவரது சிறப்பையும், தவ நிலையையும் அறியாத அஞ்ஞானிகள், ஆடையின்றியும், இவ்வுலக சிந்தனை ஏதுமின்றியும் வாழ்ந்த இவரைப் பலவாறாக இழித்துப் பேசியும், துரத்தியும், அடித்தும், கயிறுகளால் கட்டித் துன்புறுத்தியும், சூட்டுக்கோலால் சூடு வைத்தும், அவரது சடையில் தீ வைத்தும், எலும்பு முறிய அடித்தும் பலவாறாகத் துன்புறுத்தினர் – ஆனால் ஸ்வாமிகளோ இவை எவற்றாலும் பாதிப்படையாதவராய் சிரித்துக்கொண்டே இருப்பாராம்.

ஒரு முறை காசியில் கடைத்தெருவில் ஆடையின்றி இவர் திரிவதைக் கண்ட போலீஸார், இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு அதே போலீஸார் கங்கைக் கரையில் காவலுக்காகச் சென்றபோது, அங்கு அதே கோலத்தில் ஆறடி உயரமாகத் திகழ்ந்த சுவாமிகள் கம்பீரமாக உலாவிக் கொண்டிருந்ததைப் பார்த்து வியந்து, ஓடிப்போய் சிறைச்சாலையில் பார்த்தால் அங்கும் அவர் சாதுவாக வீற்றிருந்தாராம். திகைத்துப் போன அதிகாரிகள் இவர் மகா ஞான சித்தர் என்பதை உணர்ந்து, கால்களில் விழுந்து வணங்கிப் பிழை பொறுக்கும்படி மன்னிப்பு கேட்டனர். கருணாமூர்த்தியான சத்குருவும் சிரித்துக்கொண்டே அவர்களுக்கு விபூதி வழங்கி, ஆசியளித்துச் சென்றாராம்.

அதன் பின் இமாலய யாத்திரை சென்று, பத்ரிகாசிரமத்தில் உள்ள ஸ்ரீ தத்த குகையில் யோக சமாதியில் ஆழ்ந்து விட்டார். அச்சமயத்தில் பகவான் ஸ்ரீ தத்தர் அவர் முன் தோன்றி நீ தென்பகுதிக்குச் சென்று அங்கு குரு பக்தியைப் பரவச்செய்து மேலும் குருபக்தி பரவ வேண்டும் என்பதற்காக எமக்கு ஓர் ஆலயத்தை அங்கு நிர்மாணிக்க வேண்டும் என்றுரைத்தார்.

இறைவன் சொல் ஏற்று உடனடியாகத் தென்திசை நோக்கிப் புறப்பட்டார் பிரம்மேந்திரர். அவர் கொல்லிமலைப் பகுதியை அடைந்து அங்குள்ள சிற்றுார்களில் உள்ள மக்களுக்குப் பலவித நன்மைகளைச் செய்தார். என்றாலும் அவ்வூர்களிலும் ஆடையின்றித் திரிந்த சுவாமிகளை ஏளனமாக எண்ணி, மண்ணை வாரி இறைத்தும், கற்களால் அடித்தும் துன்புறுத்தியிருக்கின்றனர். மூட, மந்த புத்தியுள்ள அஞ்ஞானிகளால் அவர் பட்ட துன்பங்கள் அளவிட முடியாதது. என்றாலும் எதையுமே பொருட்படுத்தாத சுவாமிகள் சேலத்தில் உள்ள சேந்தமங்கலம் என்ற ஊரை அடைந்து அவ்வூரை அடுத்த குன்றின் கீழ், ஒரு குகையில் நுழைந்து, அங்கு யோக சமாதியில் அமர்ந்துவிட்டார்.

சில நாட்களில் இவர் ஒரு மகான் என்பதை அறிந்துகொண்ட ஊர் மக்களும், பக்த ஜனங்களும் இவரின் இருப்பிடத்தை நாடி வந்து வணங்கி வழிபட்டு, வேண்டிய பணிவிடைகளைச் செய்ய முற்பட்டனர். சுவாமிகளும் அவர்களின் நிலையறிந்து அருளுரைகள் வழங்கி ஆசியளித்து வந்தார்.

இப்படியே சில காலம் சென்றதும் சுவாமிகள் அவதூத ஆஸ்ரமத்திற்கு ஆதி குருவான ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு அந்த ஊரில் ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார். சிஷ்யர்களும், பக்தர்களும் அவர் சொன்னதை ஏற்று ஆலயப் பணிகளை அவரது ஆசிகளுடன் விரைவாகத் துவங்கினர். சுவாமிகள் தங்கியிருந்த குகைக்கு மேற்புறமாக அமைந்திருந்த குன்றின் மேலேயே ஸ்ரீ தத்தாத்ரேய பகவானுக்கு ஓர் அழகிய ஆலயத்தை அவ்வூர் மக்கள் கட்டி முடித்தனர்.

ஒரு புண்ணிய நன்னாளில் ஸ்ரீ ஸத்குருநாதரான ஸ்வயம் பிரகாச பிரம்மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளால், மகா பயத்தைப் போக்கக்கூடியவரும், நினைத்த மாத்திரத்தில் தடுத்தாட்கொள்ளக் கூடியவரும், முனிவர்களாலும், யோகிகளாலும் வணங்கக்கூடியவரும், அத்தரி மகரிஷிக்கும், அனுசூயா தேவிக்கும் தத்தராக வந்த தவப்புதல்வருமான ஸ்ரீ ஜகத்குரு தத்தாத்ரேயரின் உருவம் சிலை ரூபமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று அவர் உருவாக்கிய ஸ்ரீ தத்தகிரி குகாலயம் இன்று வரையிலும் சேந்தமங்கலத்தில் மிக மிகச் சிறப்பான முறையில் பூசைகள், வழிபாடுகள், தத்த ஜயந்தி விழாக்கள் என்று எல்லாம் நடைபெற்று வருகின்றன.

இந்த ஸ்ரீ ஸ்வயம் பிரகாச பிரம்மேந்திர ஸரஸ்வதி சுவாமிகளின் வழி வந்த சாந்தானந்த ஸ்வாமிகள், சேலத்திலுள்ள அந்த தத்தகிரி குகாலயத்தை நிர்வகித்து வந்தார். ஸ்ரீ தத்த அவதூத பரம்பரையில் வந்துதித்த மகான்களின் வரலாறுகளைத் தமிழில் விரிவாக எழுதிப் புத்தகமாக வெளியிட பெரிதும் விரும்பி அவர் அதற்கான தேடல்களில் ஈடுபட்டார். மேற்குறித்த வரலாறுகள் முன்பே சமஸ்கிருதத்திலும், மராட்டிய மொழியிலும், கன்னடத்திலும் புத்தகங்களாக வெளிவந்திருந்தன. வட மாநிலங்களில் ஸ்ரீ தத்த வரலாறு மிகப் பரவலாகப் புகழ் பெற்றிருந்தது. ஆனால் தமிழ் நாட்டில் அந்த மகானின் மகிமை அதுவரை வெளிப்படவில்லை, தத்தர் என்றால் யார்? என்று கேட்கின்ற நிலையிலேயே தமிழ் மக்கள் இருந்தனர்.
(தொடரும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s