குருவைத் தேடி-2

14ம் நூற்றாண்டில் மத்திய இந்திய மாநிலங்களில் மிகப் பிரசித்தி; பெற்றிருந்த ஸ்ரீ தத்தகுருவின் அவதாரங்கள் பற்றித் தமிழ்நாட்டில் அறியப்படவில்லை. 18ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த அவதூதரான மகான் ஸ்ரீ ஸ்வயம் பிரகாசப் பிரம்மேந்திர அவதூத சரஸ்வதி என்பவரால், அவரது அரும் முயற்சியால் தான் தமிழ் நாட்டில், சேலம் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலத்தில் முதன் முதலாக ஸ்ரீ தத்தாத்ரேயருக்குக் கோவில் அமைந்தது.

முதலில் ஸ்ரீசத்குரு ஸ்வாமிகள் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்ற பிரம்மேந்திரரின் வரலாற்றை நான் படித்த நூலில் உள்ளபடி இங்கு எடுத்துரைக்கின்றேன்.

பகவான் ஸ்ரீ தத்தாத்ரேயரின் வழிவந்த பெரியோர்களின் பரம்பரைக்கு அவதூத ஆஸ்ரமம் என்று பெயர். எத்தனையோ அவதூதர்கள் இந்தப் பரம்பரையில்; தெய்வாம்சம் நிறைந்தவர்களாய் அவதரித்து, அறியாமையாலும், கர்மவினைப் பயனாலும் துன்பத்தில் சிக்கித் தவித்த சாதாரண மக்களுக்குக் கலங்கரை விளக்கமாய், வழிகாட்டியாய் இருந்து பலவிதத்திலும் துயர் நீக்கி அருள் வழி காட்டியிருக்கின்றனர். அவர்களின் பரம்பரையில் வந்து பிறந்த மகானாகிய ஸ்வயம்பிரகாசப் பிரம்மேந்திர அவதூத சரஸ்வதி சுவாமிகளால், அந்தப் பரம்பரையின் மூல புருஷரான ஸ்ரீ தத்தாத்ரேயருக்குத் தமிழ்நாட்டில் ஆலயம் அமைந்தது.

ஆங்கிலேயரின் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்தில் இந்தியத் திருநாட்டில் எண்ணிலடங்கா ஆன்மீகப் பெரியோர் பல்வேறு இடங்களில் அவதரித்திருக்கின்றனர். இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகாநந்;தர், லாஹிரி மகா ஸாயர், நாமதேவர், கபீர்தாஸர், ஷீரடி சாயி பாபா, பகவான் ஸ்ரீ ரமணர், சேஷாத்ரி சுவாமிகள், விட்டோபா, சத்குரு ஞானானந்தர், குழந்தை யானந்த சுவாமிகள், அரவிந்தர், காஞ்சி பரமாச்சார்யார் போன்ற எத்தனையோ அவதார புருஷர்கள் புண்ணிய பூமியாம் பாரதத்தில் நடமாடிய காலம் அது. இத்தகையதொரு காலகட்டத்தில் தான் தத்தாரேயரின் அம்சமாக பிரம்மேந்திர சத்குரு அவதரித்தார்.

அவர் பிறந்த ஊர், தாய் தந்தையர் பெயர் போன்ற எந்த விபரமும் அந்த நூலில் குறிப்பிடப்படவில்லை. அவரது இளம் பருவப் பெயர் கிருஷ்ணமூர்த்தி என்பது, அவரது மூத்த சகோதரர்களில் ஒருவர் பிரம்மஸ்ரீ குருசுவாமி கனபாடிகள் என்றும் அதில் எழுதப்பட்டிருக்கிறது.

சிறு வயதில் கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் சேர்ந்து ஆங்கிலக் கல்வி கற்றிருக்கிறார். அதோடு சேர்ந்து குலதர்மத்திற்கேற்ப வேத சாஸ்திரங்களையும் முறைப்படி கற்றிருக்கின்றார். மேற்படிப்பை முடித்த இளைஞனாகக் கிருஷ்ணமூர்த்தி சென்னையில் அரசாங்க வேலையில் சேர்ந்து பணியாற்றத் துவங்கினார்.

அந்நிலையில் அவரது குடும்பத்தினர் கிருஷ்ணமூர்த்திக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினர். ஆனால் அவருக்குத் திருமண வாழ்க்கையில் நாட்டம் இருக்கவில்லை. இதைப் புரிந்துகொண்ட அவரது அண்ணன் சென்னைக்குச் சென்று தன் தம்பியிடம் திருமணம் செய்துகொள்ளும்படி நயமாகவும், வற்புறுத்தியும், கோபமாகப் பேசியும், அறிவுரை கூறியும் பலவாறு முயன்றார்.

மரியாதை காரணமாக அண்ணனிடம் எதுவுமே மறுத்துப் பேசி, விவாதிக்க விரும்பாத கிருஷ்ணமூர்த்தி அன்றிரவே யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அதன் பிறகு ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து நடந்தே காசிக்குச் சென்று விட்டார்.

முக்தித் தலமாகிய வாரணாசி என்று அழைக்கப்படும் காசியை அவர் அடைந்ததும், புனித கங்கை நதியில் ஸ்நானம் செய்து, காசி விஸ்வநாதரைத் தரிசனம் செய்து தியானத்தில் அமர்ந்து விட்டார். அந்நிலையில் சில நாட்கள் கழித்து, அங்கு மகானாகத் திகழ்ந்த பரமஹம்ச தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் காசியில் தான் இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு, அவரைத் தேடிச் சென்று கைகூப்பி வணங்கித் தொழுதார். பார்த்தவுடனேயே வந்தவரின் தகுதியை உள்ளுணர்வால் உணர்ந்துகொண்ட ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள், அவரை அன்புடன் வரவேற்று, ஆசி கூறித் தம்முடன் தங்கியிருக்கச் செய்தார். கிருஷ்ணமூர்த்தி சில காலம் அவருடனே தங்கி அவர் கற்பித்த வேத பாடங்களைக் கற்றுக்கொண்டார்.

காசியில் அவர் கதை இப்படிப் போய்க்கொண்டிருக்க, அங்கே ஊரிலே அவர் காணாமற் போன செய்தி குடும்பத்திலே பதற்றத்தை ஏற்படுத்திவிட்டது. பெற்றோரும், உற்றோரும், சகோதரர்களும் பல ஊர்களுக்கும் சென்று அலைந்து தேடியும் காணாமல் மன வருத்தத்துடன் வாடி இருந்தனர். அப்போது காசி யாத்திரை சென்று வந்த ஒரு நண்பர் அவர்களிடம் கிருஷ்ணமூர்த்தியைத் தாம் காசியிலே கண்டதாகக் கூறினார். உடனே சகோதரனான குருசாமியும், தாயும் காசிக்குப் புறப்பட்டு விட்டனர்.

காசி விஸ்வநாதரையும், கங்கா பாகீரதி நதியையும் தியானித்தபடி காசியை அடைந்த அவர்கள், தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் இருப்பிடத்தைத் தேடிக் கண்டறிந்து, தாயும் மகனும் அவரை வணங்கி ஆனந்தக் கண்ணீர் சொரிய தாம் வந்த காரணத்தை எடுத்துரைத்தார்கள்.

கிருஷ்ணமூர்த்தியோ அவர்களுடன் செல்ல மறுத்துத் தனக்கு சந்நியாசம் வழங்கும்படி சுவாமிகளிடம் வற்புறுத்தி வேண்டினார். திரிகால ஞானியான தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள், ‘உம்மை நாம் அறிவோம்! உமது குரு நானல்ல, தென்னிந்தியாவிலே அகத்திய மலைத் தொடரிலே உமது குருநாதரை நீங்கள் சந்திக்கலாம். உமது குருவை நீங்கள் சந்திக்கவும், உங்கள் தாய் தந்தை மற்றும்; சகோதரரின் மனதைத் திருப்திப்படுத்துவதற்காகவும் நீங்கள் உங்களைத் தேடி வந்திருக்கும் இவர்களோடு இப்போது உங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று ஆணையிட்டார்.

ஒன்றும் பேச முடியாதவராய் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் ஆணையை ஏற்றுக் கிருஷ்ணமூர்த்தியும் தாய், தமையனோடு ஊருக்குத் திரும்பி, சில காலம் அவர்களோடு தங்கினார். பிறகு அகத்திய மலைக்குச் சென்று, அங்கு தமது குருவைக் கண்டறிந்து உடல், பொருள், ஆவியை அவரது பாதங்களில் அர்ப்பணித்து வணங்கி மௌனமாக நின்றார்.

தமது உத்தம சிஷ்யனை அடையாளம் கண்டுகொண்ட ஸ்ரீ குருவும் அவருக்கு முறையாக ஞானப்பயிற்சியைப் பயிற்றுவித்தார்.  பின்னர் அவருக்கு அவதூத ஆஸ்ரம சந்நியாச முறையை வழங்கி, யாத்திரை செய்து வரும்படி அனுப்பி வைத்தார். அதோடு அவரும் அவ்விடத்தை விட்டுப் போய்விட்டார்.

(தொடரும்)

Advertisements

4 thoughts on “குருவைத் தேடி-2

 1. sir / madam can you please help me in getting ஸ்வயம் ப்ரகாச விஜயம் book .
  I have been searching for this book for long time .
  Thanks in advance

  • வணக்கம்.இப்போது தான் உங்கள் கடிதத்தைப் பார்த்தேன். நீங்கள் சேலம் ஸ்ரீத்தாஸ்ரம நிர்வாகத்திடம் கேட்டுப்பாருங்கள். எனக்குத் தெரியவில்லை.நன்றி.

   • Thank you so much for the response madam . I will update you once I get reply from them .
    Thank you so much once again

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s