மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 68

இப்போது நாம் மீண்டும் மகாபாரதக் கதைக்குச் செல்வோம். குருஷேத்திர யுத்தபூமியிலே கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் யுத்தம் துவங்க இருந்த தருணத்தில் அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட திடீர் மனக்குழப்பத்தால் பார்த்தசாரதியாய் அவனுக்குத் தேரோட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்த கண்ணபிரான், அந்த யுத்த களத்திலே வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தைக் கீதையாக அவனுக்கு எடுத்து உபதேசித்தார்.

அப்படி அர்ச்சுனனுக்கு உபதேசிக்கப்பட்ட கீதையை அஸ்தினாபுரத்தின் அரண்மனையில் இருந்தபடியே சஞ்சயன் என்னும் ஒரு புண்ணிய புருஷனும் அதனைக் கேட்கவும், பார்க்கவும் பாக்கியம் வாய்த்தது. இது எப்படியெனில், கண் தெரியாத திருதராட்டிர மன்னன் தன் புதல்வர்களான கௌரவர்களுக்கும், தன் தம்பியின் புதல்வர்களான பாண்டவர்களுக்கும் இடையில் நடைபெறுகின்ற யுத்தத்தின் போக்கினை அறிய விரும்பி, வியாசரிடம் வேண்டினான். அதன் விளைவாக வியாசர் அவனது தேரோட்டியான சஞ்சயனுக்கு ஞான திருஷ்டியை அளித்து யுத்தகளக் காட்சிகளை நேரடியாகப் பார்த்து விவரிக்கக்கூடிய சக்தியை அவனுக்கு வழங்கினார்.

அப்படி ஞானக்கண் கொண்டு பார்க்கக்கூடிய பாக்கியத்தால் சஞ்சயன் கண்ணன் உரைத்த அருளமுதத்தை உள்ளது உள்ளபடி அப்படியே கேட்கவும், அர்ச்சுனனுக்கு அச்சுதன் வழங்கிய விஸ்வரூப தரிசனத்தைத் தானும் தரிசிக்கும் மாபெரும் பேறும் வாய்த்தது. தன்னைச் சரணடைந்தவர்களுக்குக் கண்ணன் காட்டும் கருணை இது.

அப்படி மிக அற்புதமான, ஒப்புயர்வற்ற கீதை என்னும் வேதாந்த சாரத்தையும், விஸ்வரூப தரிசனத்தையும் பெற்ற பரவச ஆனந்தத்தில் சஞ்சயன், தன் புதல்வர்களின் வெற்றிக்காக ஏங்கிக் காத்திருந்த திருதராட்டிரனிடம் மிகத் துணிவுடன் முடிந்த முடிவாக இவ்வாறு கூறினான்.

‘யோகிகளின் இறைவனான கிருஷ்ணர் எங்கெல்லாம் இருக்கின்றாரோ, அற்புத காண்டீபதாரியான அர்ச்சுனன் எங்கெல்லாம் இருக்கின்றானோ, அங்கெல்லாம் நிச்சயமாகச் செல்வமும், வெற்றியும், அசாதாரணமான வலிமையும், நியாயமும் இருக்கும். இது தான் எனது திடமான தீர்மானம்” என்று.

ஏனெனில் அறம் வெல்லும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையும், பகவானை சரணடைந்தவர்களை அவர் ஒருநாளும் கைவிட மாட்டார் என்ற உண்மையும் பரம பக்தனான சஞ்சயனுக்குத் திடமாகப் புரிந்ததால் ஏற்பட்ட துணிவு அது.

ஓம் தத் ஸத்

காத்திடுக, தர்மநெறி

சோர்வின்றி சிரித்த முகத்துடன்
வென்று வா! என்றான் கண்ணன்
கண் கலங்கி, மனம் குழம்பித்
தளர்ந்து நின்றான், காண்டீபன்

இவர்களா எம் பகைவர்?
இவரிடமா எங்கள் வீரம்?
யாரிவர்கள்? எங்கள் மக்கள்
இவரைக் கொன்றா எங்கள் வெற்றி? என்றே

கண் கலங்கி, மனம் குழம்பித்
தளர்ந்து நின்றான், காண்டீபன்
சோர்வின்றி சிரித்த முகத்துடன்
வென்று வா! என்றான் கண்ணன்

வீணான மனக்குழப்பம்
கொள்வதேன் மைத்துனனே!
உண்மை என்னவென்று
உணராத பிறவியோ நீ?

என்னையே நிழலாகப் பற்றி நின்றாய்
என்றாலும் நீ இன்று குழம்பி விட்டாய்
தன்னைத் தான் உணர்ந்து விட்டால், பின்
தளர்வின்றித் தாழாது செயல் படுவாய்

உன்னை நான் உணர்த்தி விட்டால் – விஜயா
உன் குழப்பம் தீர்ந்திடுமோ?
தன்னிலை தெளிந்த பின்னால் – நீயும்
தர்மநெறி காத்திடு வாயோ?

பதறி நின்ற பார்த்திபனும்
பரமனைப் பணிந்து சொன்னான்
‘பாதகம் செய்து விட்டேன் – கண்ணா!
பார் பழிக்கும் செயல் புரிந்தேன்.

என்னை நீ விட்டு விடு
எங்காயினும் போய் ஒழிவேன் – அன்றி
என் துயரம் தீர்த்து விடு
நின் தாளிணை தஞ்சம்;!” என்றான்

கண்ணன் களிநகை புரிந்தான்
கருணையுடன் வாய் மலர்ந்தான்
மாயையாம் உறவுகளைக் கணமே
உதறி விடு, குந்தி புத்ரா! நீ
உணர்ந்தவை யாவையுமே
உண்மையில்லை, புரிந்துகொள்வாய்!

உறவுமில்லை, பகையுமில்லை
பாச பந்தம் உண்மையில்லை
நன்மையில்லை, தீமையில்லை
நல்லதென்றும் கெட்டதென்றும்
நானிலத்தில் எதுவுமில்லை
உயர்வதுவும் தாழ்வதுவும்
புகழ் என்றும் இகழ் என்றும்
துள்ளுதலும் துவளுதலும்
ஆடுவதும் அழுகின்றதும் – எல்லாமே
உள்ளத்தின் வேலையன்றி
உள்ளபடி உண்மையில்லை

மாயையாம் உறவுகளைக் கணமே
உதறி விடு, குந்தி புத்ரா! நீ
உணர்ந்தவை யாவையுமே
உண்மையில்லை, புரிந்துகொள்வாய்!

மண்ணும் நானே! விண்ணும் நானே!
இயற்கையாயும், செயற்கையாயும்
செயல்படும் பொருளும் நானே!
உன்னுள் உறையும் நானே – இங்கு
எல்லாம்! என்றான், கண்ணன்

இந்த உண்மை புரிந்து விட்டால்
என்னை நீ உணர்ந்து கொள்வாய்
தெளிந்திடுக, தனஞ்சயனே!
காத்திடுக, தர்ம நெறி

காண்டீபன் தெளிந்து விட்டான்
கணப்பொழுதில் தேரில் நின்றான்
கண்ணன் காட்டிய நெறியினிலே
கடமையை ஆற்றச் சென்றான்

கண்ணனவன் சொன்னதெல்லாம்
மண்ணுலகில் வாழ்ந்திருக்கும்
மானிடராம் நமக்கும் கூட
என்றென்றும் பொருத்தமாகும் – மண்ணில்

வாழ்ந்திருக்கும் காலமெல்லாம்
வாழும் நெறி அறிந்து கொள்வோம்
சூழும் வினை நீக்கி நாமும் – கண்ணன்
கழலிணை பற்றி வாழ்வோம்!

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – முயலுங்கள்! வெற்றி நிச்சயம்!!


ஹரி ஓம்

நிறைவாக உங்களுடன் நான்

என் அன்பிற்குரிய இனிய வாசகர்களே!

உங்கள் அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நீங்களும் நானுமாகக் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலமாக ஒன்றிணைந்து இந்த கீதா உபதேச அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டோம். முகமறியா இனிய நண்பர்களான உங்கள் அனைவரின் மனம், இத்தொடரை வாசித்து வந்ததன் வாயிலாக ஓரளவிற்காவது தெளிவும், நிம்மதியும், துணிவும் பெற்று உயர்ந்தது என்றால் அது தான் இப்படைப்பிற்குக் கிடைத்த வெற்றியாக நான் கருதுவேன்.

மனிதன் முயன்றால் நிச்சயம் தெய்வமாக முடியும். நல்லியல்புகள், தீய பண்புகள் இரண்டுமே நமக்குள்ளே தான் இருக்கின்றன. பிறப்பால் நாம் எப்படிப் பிறந்திருந்தாலும், அதற்கேற்ப நாம் இதுவரை வாழ்ந்திருந்தாலும், நம்மை அறியாமல் எத்தனையோ பிழைகள் புhpந்திருந்தாலும், வாழ்க்கை பற்றிய உண்மைகளைக் கண்ணனே உபதேசிக்க, நாம் அவற்றை இப்போது கேட்டு விட்டோம். அவன் அருளால் கிடைத்த அற்புதப் பேறு இது. கேட்டது கேட்டதாகவே போகட்டும், நாம் நடப்பது பழைய மாதிரி தான் என்று இருக்காமல் உங்கள் நடவடிக்கைகளை மேம்படுத்துங்கள். உங்களின் அந்த முயற்சியில் தான் உங்களின் பரிணாம உயர்வு அடங்கியிருக்கிறது.

உண்மையில் சொல்லப்போனால் தெய்வம் தான் மனிதனாகப் பிறந்திருக்கிறது. ஆனால் நமது செயல்களின் விளைவாகிய கர்மப் பிணைப்பு, மாயையுடன் சேர்ந்து ஒவ்வொருவரையும் ஆட்டிப் படைக்கிறது. அதற்கு இயற்கையும் துணை செய்கிறது. அவ்வளவுதான்! இந்த உண்மை ஞானத்தால் தான் புரியும்.

குருவின் உபதேசத்தால் இந்தத் தெளிவு அடியேனுக்குக் கிடைத்தது. எத்தனை பிரச்னை இருந்தாலும் அவை பாதிக்காமல் நிம்மதியாகச் செயல்படக் கூடிய தன்மை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்த நிம்மதியை நீங்களும் பெற வேண்டும் என்ற விருப்பத்தாலேயே இத்தொடரை எழுதத் துணிந்தேன். பரம்பொருளே செய்த உபதேசம் இது. எனவே எந்த வித ஐயமுமின்றி இதனை ஏற்று வாழ்க்கையில் உயர்வும் நிறைவும் பெறலாம்.

கூடிய விரைவில ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்” புத்தக வடிவில் வெளிவர இருக்கின்றது. அந்தப் புத்தகம் எங்களுக்குக் கட்டாயம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்போதே என்னைத் தொடர்பு கொண்டு, உங்கள் பெயரையும், தொலைபேசி எண்ணையும் தெரிவித்துக்கொண்டால், நான் இந்நூலை வெளியிடும் தருணத்தில் மறக்காமல் உங்களை அழைத்து, அந்நிகழ்வில் அதனை நீங்கள் பெற முடியும். உங்கள் ஆதரவு எனக்குத் தேவை.

அடுத்து இக்கட்டுரைத் தொடரைப் பல்வேறு தடங்கல்கள், தாமதங்கள் ஆகியவற்றிற்கு இடையேயும் தொடர்ந்து வெளியிட்ட சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர் திரு எஸ்.ஞானச்செல்வன் அவர்களுக்கும், நண்பர் திரு சுகந்தன் அவர்களுக்கும், கதிர்ஒளி பத்திரிகை பிரதம ஆசிரியர் திரு பால்ராஜ் பாண்டியன் அவர்களுக்கும், வாசகர்களாகிய உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எத்தனையோ வாசகர்கள் என்னைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பலவிதமான சந்தேகங்களையும், பிரச்னைகளையும், மகிழ்வையும் தெரிவித்து உரையாடினார்கள். அவர்களின் ஆர்வத்திற்கும், அன்பிற்கும் நன்றி!

கண்ணன் அருளால் அனைவரும் நல்லுயர்வு பெற்று நலமுடன் வளமாக வாழ வேண்டும். வையம் வாழ்க!

ஓம் தத் ஸத்.

என்றும் நட்புடன்.
விஜயா ராமன

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s