மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 67

அன்பர்களே! ஆழ்ந்த ஈடுபாட்டுடன் தன் பக்தன் மீது கொண்ட கருணையால் ஓர் அருமையான வழியை இப்படிச் சொல்லித்தந்த பரந்தாமன், கடைசியில் என்ன சொல்கிறார் பாருங்கள்! நீ உன் விருப்பப்படி முடிவு செய்! அற்புதம்! பரமாத்மாவாகத் தன்னை முன் ஓர் அத்தியாயத்தில் பிரகடனப்படுத்திய அந்த பக்தவத்ஸலன் இப்போது இங்கு தன்னை மறைத்துக்கொண்டு, சாதாரணமாக சொல்வதுபோல், நான் உனக்கு சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். நீ அரசகுமாரன், நான் உன் தேரோட்டி! நீயே முடிவெடு! என்று சடாரென்று தன்னை எளிமைப்படுத்திக் கொண்டு விட்டான். நாம் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமல்லவா இது!

அற்புதச் சீடனான அர்ச்சுனனும் மாறி விடவில்லை. சாதாரண உபதேசமா நடைபெற்றது? பிறப்பின் அடிவேரையே அசைத்துப் பார்த்துவிட்ட உபதேசமாயிற்றே! இனி இது மாறுமா?

அவன் சொன்னான், ‘பகவானே! தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம், நின்னைச் சரணடைந்தேன்! கண்ணா! நான் என்ன செய்யட்டும்? அதை நீங்களே கூறுங்கள்! என்று.

அதற்குக் கண்ணன், ‘அர்ச்சுனா! நீ எனக்கு மிகவும் பிரியமானவன். ஆதலால் உன் நன்மைக்கு உகந்ததைச் சொல்கிறேன், கேள்! நீ என்னையே போற்றி ஆராதிக்கும் பரம பக்தனாகி விடு. என்னிடமே உன் மனதைச் செலுத்து. இப்படி இருப்பதால் நீ என்னைப் பெறுவாய். இதை நான் உனக்கு சத்தியப் பிரதிக்கினையாகக் கூறுகிறேன்!” என்றான் மிகுந்த அன்புடன்.

அதைக்கேட்டவுடன், தன்னால் அப்படிச் செய்ய இயலாமற் போனால் என்ன செய்வது என்ற கவலை அர்ச்சுனனை சூழ்கின்றது. இந்த இடத்தில் தான் கீதாச்சார்யன், சரணாகதி தத்துவத்தைக் கூறுகின்ற புகழ் பெற்ற கீதா ஸ்லோகத்தைத் தன் மதுரமான வாயால் இசைக்கின்றார்.

‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மா மேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோட்ச யிஷ்யாமி, மாஷூச:!”

‘ஏ அர்ச்சுனா! எல்லாவிதமான தர்மங்களையும் விட்டுவிட்டு என்னையே சரணமென்று பற்றிக்கொள். நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன். நீ கவலை, கலக்கம் இல்லாமல் தெளிவாகப் பூரண நம்பிக்கையோடு இரு! வருந்தாதே!”

தன்னைப் பரமபுருஷனாகப் பிரகடனப்படுத்தி அதை வெளிப்படுத்திக் காட்டிய பரம்பொருள் வெளியிட்டுள்ள உறுதி மொழிப் பத்திரம் இது. அதோடு கவலைப்படாதே என்றும் கூறித் தன் பக்தனை அவர் அரவணைக்கின்றார்.

கண்ணனைத் தன் உறு துணையாய், உற்ற தோழனாய், நெருங்கிய உறவுக்காரனாய், தன் கட்டளையை ஏற்றுப் பணிபுரியும் பார்த்தசாரதியாய் இன்னும் பல்வேறு வகைகளிலும் அவரது உதவிகளைப் பெற்ற அர்ச்சுனன் தான் எத்தனை பாக்கியம் செய்தவன்? பரமாத்மா ஜீவனிடம் காட்டுகின்ற பரிவு அல்லவா இது!

இந்த உண்மையைத்தான் நாமும் புரிந்துகொள்ள வேண்டும். நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நம் உறவுகளாக, நண்பர்களாக, பகைவர்களாகப் பங்காளிகளாகப் பழகுபவர்கள் எல்லோருமே அந்தப் பரமாத்மாவின் வெளிப்பாடுகள் தான். கண்ணனே எல்லாமாகிப் புரிந்து கொண்டிருக்கின்ற லீலை இது. இந்த உண்மை புரிந்து விட்டால் நம் மனப்போக்கு முற்றிலுமாக மாறி அன்பு மயமாக மலர்ந்துவிடும் அல்லவா!

கண்ணனின் அருள் மழையில் மூழ்கித் திளைத்த அர்ச்சுனன், ‘ஐயனே! தாங்கள் எனக்குச் சொன்ன இந்த உத்தமமானதும், மிகச் சுலபமானதுமான தத்துவத்தை நான் மற்றவர்களுக்கெல்லாம் தெரிவிக்கலாமா?” என்று கேட்கிறான்.

கூடாது! கூடாது! என உடனே அதனை மறுத்த கோவிந்தன், ‘அர்ச்சுனா! இது மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ரகசியமாகும். சகிப்புத் தன்மை இல்லாத, நம்பிக்கை இல்லாத எவருக்கும் இதைச் சொல்லிவிடாதே. என்னிடம் எவர் பக்தி கொள்ளவில்லையோ, இந்தத் தத்துவத்தைக் கேட்க விரும்பவில்லையோ, குற்றமுள்ள நெஞ்சும், பிழையான போக்கும் யார் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த அரிய ரகசியத் தத்துவத்தைச் சொல்லிவிடாதே!” என்று அர்ச்சுனனை அவர் தடுக்கிறார்.

மேலும் அவரே தொடர்ந்து, ‘சரணடைதலாகிய இதைத்தவிரப் பிற விஷயங்களைப் பற்றி நீ என்னிடம் பக்தி கொண்டவர்களிடம் சொல்”. முதலில் இப்படிச் சொன்னவர் கூடவே, ‘யார் என்னிடம் ஆழ்ந்த பக்தி சிரத்தை கொண்டு, ஆர்வத்தால் உந்தப்பட்டு, மிக அரிய ரகசிய தத்துவங்கள் நிரம்பிய இந்த பகவத்கீதையைப் பிறருக்கு எடுத்துச் சொல்கிறார்களோ அவர்கள் என்னைப் பெறுகிறார்கள். மேலும் அப்படிப்பட்ட ஞானவானைப்போல் எனக்குப் பிரியமானவன், எனக்கு உவந்த நற்பணி செய்பவன் வேறு எவனும் இல்லை. இப் பூ மண்டலத்திலேயே அவனுக்கு நிகரான அன்பன் வேறு எவனும் இல்லை” என்றும் சொல்கிறார்.

‘அப்படி இதனை எடுத்துச்சொல்ல முடியாதவர்கள், எனக்கும் உனக்குமிடையில் நடந்த உரையாடல்களைக் கவனத்துடன் பயின்றால் போதும். அவன் ஞானவேள்வியில் ஈடுபட்டு என்னைப் பூஜித்துப் போற்றியவன் ஆகிறான். இதுவே எனது கொள்கை.”

‘மேலும் இதைப் பயிலவும் முடியாமல் போகின்றவர்கள், பிறர் சொல்ல அதனை ஒருமுறை கவனத்துடன், சிரத்தையாகக் கேட்டாலே போதும். பொருள் புரியாவிடினும் காதால் கேட்டாலே, கேட்பவன் பாவ, பந்தங்களிலிருந்து விடுபடுகிறான். புண்ணியசாலிகளின் மேலான உலகில் அவன் இடம் பெறுகிறான்.”

இந்த இடத்தில் அற்புதமான கீதா உபதேசம் நிறைவு பெறுகின்றது. இப்போது கண்ணபிரான் கேட்கிறார், ‘அர்ச்சுனா! நான் உபதேசித்ததையெல்லாம் நீ மனப்பூர்வமாகக் கவனமாகக் கேட்டுக்கொண்டாயா? அறியாமையால் ஏற்பட்டிருந்த உன் மோக மயக்கம் விலகிவிட்டதா?” உதட்டில் புன்னகையுடன் அவரிடமிருந்து இந்தக் கேள்வி பிறக்கிறது.

arjuna-and-krishna‘எம்பெருமானே! என் மோக மயக்கம் விலகியது. நல்ல, தெளிந்த அறிவு ஏற்பட்டிருக்கிறது. எல்லாம் உம் கருணை. உமது அருள். நான் இப்போது என் குழப்பங்களிலிருந்து விடுபட்டு, ஐயம், திரிபு இல்லாமல் தெளிவாக, திடமாக இருக்கிறேன். அடியேன் தங்களது ஆணையை ஏற்று என் கடமையைச் செய்வேன்!” என்று கூறி அவரைப் பணிந்து வணங்கினான் அர்ச்சுனன்.

புன்னகை பூத்த முகத்தினராய் கீதையின் நாயகன், ‘காண்டீபம் எழுக! நின் கைவண்ணம் எழுக! இக்களமெல்லாம் சிவக்க, வாழ்க! என்று காண்டீபனை வாழ்த்தினார்.

இவ்வாறு, தன் பக்தன் மீது கொண்ட அன்பின் மிகுதியால் பக்தவத்சலனாகிய பத்மநாபன் தனது தேன் மதுர வாய்மொழியால் சத்தியத்தின் நித்ய ஸ்வரூபத்தை, அற்புதப் புதையலாகிய அறிவுச் செல்வத்தை அணுஅணுவாகப் பிரித்துப் பிரித்துச் சொன்னதோடு, ஒரு ஜீவனின் உண்மைத் தன்மையை அந்த ஜீவனுக்கே சுட்டிக்காட்டி, அவனது கடமையையும் தெளிவு படுத்தியதே பகவத்கீதை என்றாயிற்று.

இதனை நன்கு கற்று கர்மாவால் வாய்த்திருக்கின்ற இந்தப் பிறவியில் எல்லாம் பரம்பொருளே என்றும், அவனது விருப்பம் தான் இந்த வாழ்க்கை என்றும், உடம்பின் உள்ளே உறைகின்ற பரம்பொருளின் இயக்கமே இந்தப் படைப்பின் இயக்கம் என்றும் ஒருவன் அறிந்து, முறையாகவும், சரியாகவும் இனி வாழ முற்படுவதே புத்திசாலித்தனம்.

இதுவரை நாம் கர்மத் தூண்டலினால் எப்படித்தான் மாயையில் சிக்கித் தடுமாறி வாழ்ந்திருந்தாலும், பரம்பொருளின் நித்ய, நிரந்தர, சத்தியத் தன்மையைப் புரிந்துகொண்டு, தன்னை அப்படியே முற்று முழுதாக அவனது திருப்பாதக் கமலங்களில் பூரண சரணாகதி செய்து, சர்வமும் நீயே! சகலமும் நீயே! உள்ளும் நீயே! புறமும் நீயே! எல்லாம் நீயே! எதிலும் நீயே! நான் என்பது நீயே! என்று முடிவிலாத் துதி செய்து, கண்கள் நீரைப் பொழிய, மெய்தான் விதிர்விதிர்க்கத் தன்னை மறந்து, அவனில் ஒன்றிய நிலையில், வாழ்க்கையில் இனி வருவது எது என்றாலும் அதை அப்படியே பிரசாதமாக ஏற்றுக்கொண்டு விடுவோம். போகட்டும் கண்ணனுக்கே! என்று அமைதியாக இருந்து விடுவோம். இது தான் கீதையின் சாரம்.

மனிதன் என்பவன் தெய்வம் ஆவதற்கு உரிய பாதை இதுதான். இந்தப் போக்கில் வாழ்ந்து இந்தப் பாதையில் நடப்பவர்களைத்தான் உலகம் மகான்கள் என்று கைகூப்பி வணங்குகின்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s