மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 66

‘ஆத்மாவை அடைவதைத் தன் லட்சியமாகக் கொண்டு ஞான மார்க்கத்தில் ஈடுபடுகின்ற ஆத்ம சாதகர்கள் நைஷ்கர்ம்ய சித்தி அதாவது செயல் ஒழிந்த பிரம்ம நிலையை அடைகின்றார்கள். இதன் பொருள், இத்தகையவர்கள் செயலைத் தாம் செய்வதாக எண்ணுவதில்லை. அது நடைபெறுகின்றது என்றே கருதுகிறார்கள்.”

இங்கு ஞானிகளின் தன்மை சொல்லப்படுகின்றது. ‘அந்த மனிதன் சாத்வீகப் புத்தி கொண்டவன். வைராக்கிய சித்தம் உள்ளவன். தனிமையில் தன் வயத்தில் வாழப் பழக்கப்பட்டவன். ஆகார நியமம் கொண்டவன். துணிவுடன் புலன்களை அடக்கி வைக்கும் சாதகன். உள்ளம், சொல், செயல் இவற்றைக் கட்டுப்படுத்தியவன். விருப்பு, வெறுப்பைக் கடந்து பரமாத்ம தியானத்தில் அவன் லயிக்கின்றான். அகங்காரம், பிடிவாதம், செருக்கு, காமம், வெஞ்சினம், பொருள் சேர்க்கும் பேராசை ஆகியவற்றைத் துறந்து மமதை இல்லாமல் அமைதியாக வாழ்ந்து பிரம்ம நிலையை அடையத் தகுதி பெறுகிறான்.”

‘இப்படிப்பட்ட நிலையில் வாழப் பழகுகின்ற ஆத்ம சாதகன் எதற்காகவும், யாருக்காகவும், வருத்தமோ, மகிழ்வோ, விருப்பமோ கொள்வதில்லை. எல்லாப் பிராணிகளையும் அவன் நேசிக்கின்றான். பரமாத்மாவான என்னிடமே அவன் உள்ளம் பக்தியால் நிலைத்திருக்கிறது.”

‘இப்படிப்பட்ட உத்தம பக்தியால் சாதகன் என் சத்திய சொரூபத்தை உள்ளபடி தத்துவ ஞானத்தின் துணை கொண்டு உணர்கிறான். இதன் பயனாக என்னுள் ஐக்கியம் அடைகின்றான்.”

கண்ணனின் இந்த விளக்கத்தைக் கேட்டதும் அர்ச்சுனனின் உள்ளம் உருகுகிறது. கரங்கள் கூப்பிய நிலையில் அவன் மேலும் இப்படிக் கேட்கின்றான். ‘எம் பெருமானே! உங்களை அடைவதற்கு வேறு ஏதும் சிறந்த உபாயம் இருக்கிறதா?”

ஆம்! இந்தக் கேள்வி நமக்கும் மிகப் பயனுள்ள ஒரு கேள்வி. ஏனெனில் இன்றைய ஓட்டம் நிறைந்த வாழ்க்கையில், குருகுலத்தைத் தேடிச் சென்று தத்துவ விசாரணை மூலம் ஆத்ம வித்தையை அறிந்து, கற்று, அதனை சாதனை செய்து உய்வது என்பது எத்தனை பேரால் முடியும்? ஆயிரம் பிரச்னைகளுடன் நேரமே இல்லை என்று புலம்பிக்கொண்டு அறியாமையுடன் வாழும் நம்மை அந்த இறைவன் தான் அளவில்லாக் கருணையுடன் வந்து ஆட்கொள்ள வேண்டுமே தவிர நம்மால் அவனைத் தேடிப் போக முடியுமா?அர்ச்சுனனின் கேள்விக்குக் கண்ணபிரானின் பதில் என்ன?

‘இருக்கிறது! மிகச் சிறந்த வழி இருக்கிறது!” அடடா! எவ்வளவு ஆதரவான பதில் இது. நம்மீது எத்தனை கருணை இருந்தால் இப்படி ஒரு பதில் அவரிடமிருந்து வெளிப்படும்!

அது என்ன வழி என்று அர்ச்சுனன் கேட்கிறான். ‘ எந்த உத்தமமான பக்தன் என்னையே சரணமென்று அடைகிறானோ, என்னையே எண்ணி, எனக்கே சமர்ப்பணமாக எல்லாக் காரியங்களையும் செய்து வருகிறானோ அவன், என் அருளால் நித்ய நிரந்தரமான உத்தம நிலையான பரமபதத்தை அடைகிறான்.” என்கிறார், கருணைக்கடல்.

மேலும் அவரே, ‘அர்ச்சுனா! நீ என்னிடமே முழு ஈடுபாட்டுடன் இரு! நீ செய்யும் எல்லாக் காரியங்களையும் எனக்கே அர்ப்பணித்து விடு. உன் செயல்களிலும், பொருள்களிலும் நீ கொண்டிருக்கும் பற்றுதலை அகற்றிக்கொள். சம நிலையில் செயலாற்று! எப்பொழுதும் என்னிடமே சிந்தையைச் செலுத்தி வாழ். என் சார்பில் செயலாற்றுவதாகக் கருது.”

‘இப்படி என்னிடம் கருத்தைச் செலுத்தி வாழ்வதால் என் அருள் உனக்குக் கிட்டுகிறது. இதனால் உனக்கு ஏற்படும் இன்னல், இடையூறுகளிலிருந்து நீ விடுபடுவாய். ஒரு வேளை மமதை காரணமாக என் பேச்சை நீ மதிக்காவிட்டால் வீழ்ச்சி அடைவது நிச்சயம்.” உடனே அர்ச்சுனன் ‘ அது எப்படி” என்று கேட்கிறான்.

அதற்குக் கண்ணன், ‘ நீ சற்று முன், நான் போர் புரிய மாட்டேன் என்று அகங்காரத்துடன் காண்டீபத்தை வீசி எறிந்தாயே! உன் தீர்மானம் பொய். ஏனெனில் ஏதோ ஒரு பொருந்தாத தயையினால் நீ போர் புரிய மறுத்தாய். ஆனால் உன் இயல்போ சத்திரியர்களுக்கே உரிய வீரம். அது உன்னைப் போரில் தான் ஈடுபடுத்தும்.”

‘குந்தியின் மைந்தனே! ஏற்கப்பட்ட கருமத்திற்குக் கட்டுப்பட்டவன் நீ! அப்போது மதிமயக்கம் காரணமாக அப்படிப் பேசினாய். ஆனால் நீ போர் புரியத்தான் போகிறாய். ஏனெனில் எல்லா உயிர்களின் உள்ளேயும் அந்தர்யாமியாக இருந்து அவரவர் இயல்புப்படி அந்த சர்வேஸ்வரன் இயக்குகின்றான். செயல் புரிய வைக்கிறான். ஆட்டிப் படைக்கிறான். அவன் விருப்பப்படியே எல்லாம் நடக்கிறது. அப்படி நடப்பவையெல்லாம் அவரவரின் கர்மப்பலன்படி நடக்கின்றன.”

‘இந்தக் கர்மப்பிடியிலிருந்து விடுபடுவது எப்படி கிருஷ்ணா?”

‘பரத வம்சத்தின் வீரப் புதல்வனே! நீ எல்லாமே அவன்தான் என்னும் நம்பிக்கையுடன், அந்தர்யாமியாகிய சர்வேஸ்வரனிடம் சரணடைந்து விடு! அவரது பேரருளால் உனக்கு இந்த உலகத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட நிம்மதியுடன், நித்ய, நிரந்தரமான பரமபதம் கிடைக்கும்.”

‘இது மிக மிக ரகசியமான சரணாகதி தத்துவம். இந்த அரிய தத்துவத்தை இப்போது நான் உனக்கு உபதேசித்திருக்கிறேன். இனி நீ இதுபற்றி நன்கு சிந்தித்து உன் விருப்பப்படி முடிவு செய்!”

(தொடரும்..)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s