மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 65

‘ராஜச சுகம் என்பது புலன்களின் வழியாக உலக விவகாரங்களில் பிழையான விதங்களில் ஈடுபட்டு அனுபவிப்பது. இத்தகைய தவறான சுக அனுபவங்கள் ஆரம்பத்தில் அமுதம் போலவும், இறுதியில் விஷமாகவும் அதாவது அழிவைத் தருவதாகவும் அமைந்துவிடும்”.

மாமிச உணவு, குடிப்பழக்கம், போதைப் பொருள்களைப் பாவிப்பது, தவறான நடவடிக்கைகள், கெட்ட சிந்தனை போன்றவை முதலில் சுகமாக இருக்கும். ஆனால் போகப்போக இவற்றை நினைத்தாலும் விட முடியாது. அதோடுமட்டுமின்றி இவற்றால் அழிவே!

‘தாமஸ சுகம் என்பது தூக்கம், சோம்பல், அறியாமை என்னும் மதி மயக்கம், சரியைப் பிழையாகவும், பிழையைச் சரியாகவும் புரிந்துகொள்கின்ற முட்டாள்தனம். இத்தகைய சுகத்தினால் விடிவே ஏற்படாது. அறியாமையுடன் செயல்படுபவர்கள் தாங்களும் சுகப்படுவதில்லை. அடுத்தவர் சுகத்தையும் கெடுத்து விடுவார்கள். துன்பங்களே தொடர் கதையாகிவிடும்”.

இத்தகைய விளக்கத்தைக் கீதாச்சாரியன் அளித்ததும், அர்ச்சுனன் அடுத்த கேள்வியை எழுப்புகிறான். இதுவும் மிக நல்ல கேள்விதான். அறிவார்ந்த சீடனும், ஆற்றல் மிகுந்த குருவுமாக இங்கு இருவரும் உரையாடுகின்றனர். அதனால் அல்லவோ நமக்குத் தெரியாத வாழ்க்கையின் இரகசியங்கள் எல்லாம் தெரிய வருகின்றன. இல்லையா? கீதை புரிகிறதோ, புரியவில்லையோ அதுபற்றிப் பிரச்னை இல்லை. இப்படியெல்லாம் இருக்கிறது என்பதே தெரியாமல் அல்லவா இத்தனை நாள் நாம் இருந்தோம். பகவத்கீதையைக் கையில் எடுத்ததால் இப்போது ஓரளவு தெரிந்து கொண்டோம். இனிமேல் தான் இவற்றைப்பற்றி மெதுவாக சிந்தித்துப் பார்த்துத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். சரி, சரி! அடுத்த கேள்வி என்ன? அதைச் சொல்லுங்கள்! என்கிறீர்களா!

அர்ச்சுனன் கேட்கிறான் ‘இந்த முக்குணச் சேர்க்கைகளின் பாதிப்பு மனிதர்களிடம் மட்டும் தானா? வேறு எவற்றிற்கும் உண்டா?’ என்று, அதற்கு மதுசூதனன் இப்படி பதில் கூறுகிறார்.

‘அர்ச்சுனா! ஒரு பேருண்மையைப் புரிந்துகொள். இந்த முக்குணங்களின் சேர்க்கையால் பாகுபாடு காணாத பொருள் எதுவும் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்க முடியாது. பூமியிலும், மேல் உலகிலும், மனிதர்களிடமும், தேவர்களிடமும், மற்ற இடங்களிலும், இனங்களிலும், எந்தவொரு பொருளுமே இயற்கை ஏற்படுத்தியுள்ள இம் முக்குணங்களைச் சார்ந்திராமல் தனித்து இருக்க முடியாது. இவை எங்கும், எவற்றிலும், எக்காலத்திலும் வியாபித்திருக்கின்றன.”

இந்த குணங்களிலிருந்து விடுபட என்ன வழி? இது அர்ச்சுனனின் அடுத்த கேள்விக் கணை. ‘இந்த உலகத்தில் படைக்கப்பட்ட மனிதர்களின் இயல்பான குணங்களை அடிப்படையாகக் கொண்டுதான் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு வகை இனங்கள் வகுக்கப்பட்டன. இந்த நால்வகையினரும் தத்தம் இனத்திற்குரிய கர்மங்களை சரிவர செய்து வருவது தான் முக்குண பாதிப்பிலிருந்து விடுபட வழி வகுக்கும்.”

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு இனத்தாரும் செய்ய வேண்டிய, அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகள் யாவை எனப் பரந்தாமன் விவரிக்கின்றார்.

முதலில் அந்தணர்களுக்குரிய கடமைகள்: மனக்கட்டுப்பாடு, புலனடக்கம், சிரமங்களை சகித்துக்கொண்டு அறநெறிகளைப் பாதுகாத்தல். உள்ளும், புறமும் தூய்மையுடன் இருத்தல், பிறர் புரிந்த குற்றங்களைப் பொறுத்தல், அவற்றை மன்னித்தல், உடல், உள்ளத்தில் எளிமையைக் கடைப்பிடித்தல். வேத சாஸ்திர நுண்ணறிவு. யாக, யக்ஞங்களை விடாமல் தொடர்ந்து செய்தல். பரமாத்மா, வேதம் ஆகியவற்றில் ஆழ்ந்த நம்பிக்கையும், ஈடுபாடும் கொண்டு நல்ல ஆஸ்திகனாக வாழ்தல். வேதம் ஓதுதலும், ஓதுவித்தலும் ஆகிய இவைதான் அந்தணர்களுக்கு உரிய கடமைகள் என்று கண்ணன் குறிப்பிடுகின்றார்.

சத்திரியரின் கடமைகள்: திறமையும், துணிவும் கொண்ட வீரம், பொலிவு, உறுதி, மக்கள் பராமரிப்பு, ஆட்சியைத் திறம்பட நடத்துகின்ற ராஜ தந்திரம், போர்க்களத்தில் புறம் காணாத தீரம், தான தர்மங்களில் தாராள குணம், நிர்வாகத்திறன் இவையே ஒரு நாட்டின் அரசனுக்குரிய உயரிய கடமைகளாக இருத்தல் வேண்டும்.

வைசியர் கடமைகள்: நிலச்சாகுபடிக்கு உதவுதல், பசுக்களைப் பராமரித்தல், நேர்மையுடன் வியாபாரம், தொழில் முதலியவற்றை நடத்துதல், அரச காரியங்களுக்கு உதவியாய் செயல்படுதல் இவை வைசியர் எனப்படும் வணிகர்களுக்கு இயல்பான கடமைகள்.

சூத்திரர்களுக்குரிய கடமைகள்: தம்மையும் தம் இனத்தவர்களோடு இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மற்ற மூன்று இனத்தவர்களையும் வாழ வைத்தல். அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்படுதல், பயிர்த்தொழில் முதலிய சமுதாயத்திற்குத் தேவையான அடிப்படைத் தொழில்கள் மூலம் மக்களுக்குப் பணி புரிவது ஆகியவை சூத்திரர்கள் எனப்படும் உழைப்பாளிகளுக்கு உரிய கடமைகளாகும்.

‘இப்படி நால்வகை சாதியினரும் தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் சரியாகச் செய்து வரும்போது சமூகமும், நாடும் மேம்படும். இவர்கள் தமக்குரிய பணிகளை சுயநலமின்றி சமுதாய நலனில் அக்கறை கொண்ட நேர்மையுடன் செயல்படுவார்களேயானால் அவர்கள் பிறவிப் பயனை அடைகிறார்கள். தன்னலமின்றி செயலாற்றும் அவர்கள் பரமாத்மாவின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யக் கருவியாகச் செயல்படுவதால் பரமாத்மாவையே சேருகின்றார்கள்.”

இந்த இடத்தில் கோவிந்தன், குலதர்மத்தைக் கைவிடலாகாது, என்கிறார். தன் இனத்திற்குரிய செயலை விடப் பிற இனத்தின் செயல் உயர்ந்ததாக, சிறந்ததாக இருந்தாலும் அதை மேற்கொள்ளக்கூடாது.

தன் குலத் தொழிலைத் தாழ்வானது என்று நினைத்துப் புறக்கணிக்கக்கூடாது என்கிறார்.

ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் இதை எப்படி எடுத்துக்கொள்வது என்பது புரியவில்லை. ஏனெனில் அந்த அளவிற்குக் குலதர்மம் குழம்பிப் போய்விட்டது. இருந்தபோதிலும் இன்று நாம் செய்கின்ற தொழில் எதுவாக இருந்தாலும், அது குலத்தொழில் சார்ந்ததாக இருந்தாலும், இல்லாமற் போனாலும், தர்மநெறி தவறாததாகவும், சுயநலத்திற்காகப் பிழையான வழியில் செயல்படாமலும், மனசாட்சிக்கு விரோதமில்லாமல், அதிக லாப நோக்கமின்றி, சமுதாய நன்மைக்காகவே செயல்படுகின்ற விதத்தில் தரமுள்ளதாகச் செய்தால் அவர்கள் உயர்ந்தவர்களே!

சாதாரண மக்கள் செயல்படும் விதம் பற்றிய சந்தேகம் தீர்ந்ததும் அர்ச்சுனன் புலன் வழிச்சார்ந்த வாழ்க்கை முறையிலிருந்து விடுபட்டு ஆன்ம வழிப் பாதையைத் தேர்ந்தெடுத்து ஞான சாதனை புரிகின்ற ஆன்மீக சாதகனின் அன்றாடக் கடமைகளின் தன்மை பற்றி வினவுகின்றான்.

(தொடரும்..)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s