மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 64

பற்றின்றிச் செயல்படுவதன் சிறப்பை அறிந்துகொண்ட நாம் இப்பொழுது, செய்கின்ற செயலின் பலன்கள் எப்படி மூன்று விதங்களில் நமக்குக் கிடைக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வோம். கர்மப்பலன்கள் மூன்று வகைப்படும். அவை, நாம் விரும்புகின்ற விதத்தில் பலனைத் தருவது, நாம் விரும்பாத விதத்தில் தோல்வியில் அல்லது ஏமாற்றத்தில் முடிவது, இரண்டு விதத்திலும் கலந்து வருவது ஆகியவை ஆகும். அதாவது சில சமயம் விரும்பியபடியும், சிலசமயம் விரும்பாததுமான பலன்கள் கிடைப்பது.

இதில் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் என்னவெனில் நாம் பலனை எதிர்பார்த்துச் செய்தால் அவை நம்மைச் தேர்ந்ததாகி, அடுத்த பிறவியிலும் நாம் செய்ததன் பலனாக அவை நம்மைத் தொடரும். ஆகவே தான் நாம் அடிக்கடி இது என் கர்மா! என்கிறோம். இத்தகைய கர்ம விளைவுகளால் தான் வாழ்க்கைப் பயணம் தொடர்கின்றது. விருப்பு வெறுப்பின்றி, பலனைப் பற்றிய அக்கறை கொள்ளாமல் இது என் கடமை என்று மட்டும் செய்பவர்களுக்குக் கர்மபலன் ஒட்டுவதில்லை. செயலின் விளைவு அவர்களில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

செயல்களும், அவற்றின் விளைவுகளும் பிறவியோடு சம்பந்தப்பட்டவை. யாரிடத்தில், நான் செய்கிறேன் என்னும் அகம்பாவம் இல்லையோ, யார் கர்மப்பலன்களில் சிரத்தை இல்லாதவர்களோ, அந்தப் பயன்களை அடைவதில் ஆசை கொள்வதில்லையோ அவர்கள் கர்மபந்தத்தில் சிக்குவதில்லை. செய்பவன் நானில்லை என்ற பாவத்தில் அவன் செயல்படுவதால், அவன் கொலையே புரிந்தாலும் கொலையாளி இல்லை. அதன் விளைவோ, பாதிப்போ அவனைக் கட்டுப்படுத்துவதில்லை. அவனை வேதனைப் படுத்துவதுமில்லை. இந்த இடத்தில் இதைப்பற்றி நாம் நன்கு சிந்தித்துச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். பிழையாகப் பொருள் கொள்ளக்கூடாது.

இங்கு பரந்தாமன் அர்ச்சுனனிடம் ஞானத்தைப் பெற்று, சாத்வீக குணத்தில் நிலைபெற்றுப், பற்றின்றி, தர்ம நியாய அடிப்படையில் செயல்படுகின்ற மனிதப்பிறவி கர்மபந்தத்தில் சிக்குவதில்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றார். தன்னைப்பற்றிய உண்மையை அறியாத நிலையில், இந்த உடலே நான் என்றும், இந்தச் செயலைச் செய்பவன் நான் என்றும் நினைத்துச் செய்பவரைப் பாவ புண்ணியங்களாக, பிறவி தோறும் வினைகள் பின்தொடர்கின்றன.

அதே பிறவி எப்பொழுது நான் அழியக்கூடிய இந்த உடல் அல்ல. நான் செய்கின்ற செயல்களும் என்னுடைய செயல்கள் அல்ல. அழிவற்ற ஆத்மாவாகிய நான் செயல்படுபவன் அல்ல. நடப்பவை எல்லாம் என் முந்தைய கர்மாக்களின் தொடர்பே என்பதை ஞானத்தால் புரிந்துகொள்கிறானோ அப்பொழுது, கர்மாவால் செயல்பட்டுக்கொண்டிருந்த அவனது மனமும், புத்தியும் அடங்கிவிடுகின்றன. நான் ஆத்மா! நான் செயல்படுபவனல்ல! என்ற ஞானம் அவனில் முகிழ்த்துவிடுவதால் செய்ய வேண்டிய செயல்கள் அவனால் செய்யப்படும். ஆனால் அவற்றால் கர்ம பாதிப்பு இருக்காது. புரிகின்றதா?

இதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஞானமில்லாத நிலையில், தன்னை ஆத்மாவாக உணராத நிலையில், கீதையின் இந்தச் சொற்றொடர்களை சொந்த லாபத்திற்காகப் பிழையாகப் பயன்படுத்தி பேசக்கூடாது. அப்படிச் செய்தால் நிச்சயம் அது கெட்ட கர்மாவாக மாறும்.

இவ்வாறு, தான் செயல்பட வேண்டிய விதத்தை நன்றாக விளங்கிக் கொண்ட பிறகு தகுந்த விவேக, வைராக்கியத் தன்மையுடன் ஒருவன் செயல்பட வேண்டும். அதாவது ஆத்மாவின் ஒளியில் செயல்படும் புத்தியின் துணை கொண்டு தளரா உறுதியுடன் அவன் செயல்பட வேண்டும். ஏனெனில் கர்மாவின் பிடியிலிருந்து ஒருவன் விடுபட, இயற்கையும், மாயையும் லேசில் விடாது. இதற்கு அவனில் ஊறிய மூவகைக் குண இயல்புகளும் உதவி செய்யும்.

ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம்! நம் ஒவ்வொருவரின் செயல்பாட்டிற்குமே நாம் பெற்றிருக்கின்ற ஞானத்தின் இயல்பு, நம்மிடம் மறைந்துள்ள சத்வ, ரஜோ, தாமச குண இயல்புகள், நமது கொள்கைப் பிடிப்பு ஆகியவையும், நமது கர்மப் பலனும் தான் முக்கிய காரணம். இவற்றைப்பற்றியெல்லாம் ஓரளவிற்கேனும் தெரிந்துகொண்ட பிறகு, இறைவனிடம் முழுத் தொடர்பு கொண்ட நிலையில், ஞானத்துடன், சாத்வீக முறையில் முயன்றால் வாழ்வை வெல்லலாம். மீண்டும் மீண்டும் கர்மத்தளையில் சிக்குதல் தோல்வி. கர்மத்தளையிலிருந்து விடுபடுதல் வெற்றி.

இனி நமக்குத் தரப்பட்டிருக்கும் புத்தி எத்தகையது என்று ஆராய்வோம். இதுவும் கீதாச்சார்யன் சொன்னது தான். “ஒரு செயலில் ஈடுபடுதல், செய்யாமல் விடுவது, செய்யத்தக்க செயல், செய்யத் தகாத செயல், அச்சம், அச்சமின்மை, பந்தம், விடுதலை போன்றவற்றைச் சரியாக உணர்ந்துகொள்ளும் அறிவு தான் சாத்வீக புத்தி”.

“எந்த ஓர் அறிவு செய்யத்தக்கது, செய்யத் தகாதது ஆகியவற்றைச் சரியாக அறிவதில்லையோ அது குழப்பமான ராஜச புத்தி. இவை தவிர தர்மத்தை அதர்மமாகவும், அதர்மத்தைத் தர்மமாகவும் மாற்றிப் புரிந்துகொண்டு செயல்படுவது தாமஸ புத்தி.”

இதற்கு நல்லதெல்லாம் தீயதாகவும், தீயவை நல்லவையாகவும் தோன்றும். எடுத்துச் சொன்னாலும் புரியாது. தொடர்ந்து தவறாகச் செயல்படவே தூண்டும். இவற்றில் சாத்வீக புத்தியுடன் செயல் புரிபவனுக்கு ஆத்மாவாகிய நான் வேறு, இந்த உடல் வேறு என்ற ஞானம் ஏற்பட்டுவிடுவதால், அவனுக்குத் தெளிந்த அறிவு வாய்த்துவிடுகின்றது. அவன் பிறகு தனது பாத்திரத்திற்குரிய நடிப்பை நடிப்பவனாக ஆகிவிடுகின்றான; நடிப்பு என்று தெரிந்துகொண்டு விட்டவனுக்கு செய்பவை எல்லாம் அவனுடையதல்ல என்று ஆகிவிடுகின்றன. சொல்வது புரிகின்றதா?

இதனை அடுத்து பகவான், “மனிதன் ஏன் கீழ்நிலைக் குணங்களை விடாமல் இருக்கின்றான்?” என்ற அர்ச்சுனனின் வினாவிற்கு விடையாக விஷயசுகம் பற்றி விளக்குகிறார். மனிதன் மிகவும் விரும்புவது சுகத்தையே. இந்த சுகத்தை எல்லா விதத்திலும் அடைகின்ற முயற்சியாகத்தான் மனிதரின் வாழ்க்கையே அமைந்திருக்கிறது.

இப்படிப்பட்ட சுகமும் மனிதரிடையே முக்குண பேத அடிப்படையில் தான் அனுபவிக்கப்படுகிறது என்கிறார் கிருஷ்ணர். ‘எதனால் மனநிறைவு ஏற்படுகின்றதோ, எதனால் துக்கங்கள் விலகுகின்றனவோ, பரமாத்மாவின் மீது பற்று கொண்ட அறிவின் மகிழ்ச்சியோடு எந்த சுகம் கிடைக்கின்றதோ, எது உலகியல் வாழ்வில் ஈடுபாடு கொண்ட நிலையில் நஞ்சைப் போலவும், அந்த உலகப்பற்று நீங்கிய நிலையில் அமுதம் போலவும் அமைகின்றதோ அதுவே சாத்வீக சுகம்” என்கிறார்.

இதை மிக எளிமையாகச் சொல்லப் போனால் அழியக்கூடிய உலக இன்பங்களால் கிடைக்கின்ற சுகத்தை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு நித்திய நிரந்தர சுகத்தை அனுபவிக்க முற்படுகின்ற நிலை சாத்வீக சுகம் ஆகும். ஆன்மீகம் என்றாலே அலறி ஓடுபவர்களையும், ஆன்மீகத் தேடலிலேயே சதா மூழ்கியிருப்பவர்களையும் நினைத்துப் பார்த்தால் இதன் பொருள் விளங்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s