மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 63

ஞானயோகத்திற்கு சந்நியாசம் என்றும், கர்மயோகத்திற்கு தியாகம் என்றும் பரந்தாமன் சொற்களைப் பயன்படுத்திப் பேசுகின்றார். ஞானம், கர்மம் ஆகியவை பற்றி மீண்டும் வினவிய அர்ச்சுனனிடம் தம் கருத்தென எதையும் வெளிப்படுத்தாமல், முதலில் முன்னோர்களான சான்றோர்களால் சொல்லப்பட்ட நான்கு விதக் கருத்துக்களை விவரிக்கின்றார்.
அக்கருத்துக்கள் பின்வருமாறு:
1 பல வித்துவான்கள், தாம் விரும்பிச் செய்து வரும் காரியங்களைத் துறப்பது சன்னியாசம் என்கிறார்கள்.
2 சிலர் எல்லாக் காரியங்களுக்கும் உள்ள பயனைத் துறப்பது தியாகம் என்கிறார்கள்.
3 சிலர் காரியங்களைக் குற்றமாகக் கருதி விட்டுவிடுவது தியாகம் என்கின்றனர்.
4 வேறு சிலரோ வேள்வி, தானம், தவம் இவற்றைத் துறக்கக்கூடாது என்று கூறுகின்றனர் – என்கிறார் அவர்.
அதாவது பலன் விளைவிக்கும் எல்லாவிதமான செயல்களும் துறக்கப்பட வேண்டும் என்று சிலரும், ஆனால் யாகம், தானம், தவம் என்னும் தியாகச் செயல்கள் என்றுமே துறக்கப்படக்கூடாது என்று சில முனிவர்களும் கூறுகின்றனர். அர்ச்சுனனோ அந்தக் கருத்துக்களை ஒதுக்கிவிட்டு, ‘பக்தவத்சலா! இவை வேதாந்த வித்தகர்களின் கருத்துக்கள். இதில் உங்கள் கருத்து என்ன? என்று கேட்கிறான்.

அதற்குக் கண்ணபிரான், முதலில், தியாகம் எனப்படும் ‘பயன் கருதா செயல்படு யோகம்’ பற்றிக் கூறுகின்றார். கடமையாற்றுபவர்கள் மூன்று கடமைகளைக் கட்டாயம் செய்தேயாக வேண்டும் என்கிறார் அவர்.

“யக்ஞம், தானம், தவம் என்னும் மூன்று கடமைகளையும் யாரும் தவற விடக்கூடாது. இதுவரை செய்யாமலிருந்தால், இனி கட்டாயம் செய்ய வேண்டும். காரணம் இம்மூன்றுமே நம் பிறப்பின் நோக்கத்தை அடைவதற்கு உதவுபவை”.

“யக்ஞம், தானம், தவம் ஆகியவை உலக சம்பந்தமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும், சுயநலத்திற்காகவும் என்று செய்யப்படாமல், உலக நன்மைக்காக, ஆத்ம முன்னேற்றத்திற்காக, பரிணாம வளர்ச்சிக்காக, இறைவனின் விருப்பத்திற்காக என்று செய்யப்படும்போது சிறந்தவையாக அமைகின்றன. இப்படி அவற்றைச் செய்கின்றபோதும் பலனை எதிர்பார்த்துச் செய்பவையாக இவை இருக்கக்கூடாது.”

இதனை இப்படியும் பொருள் கொள்ளலாம். யக்ஞம் என்பது குருவின் உதவியுடன் செய்யப்படுகின்ற ஞான வேள்வி. தானம் என்பது ஆன்மீக வளர்ச்சிக்காக அளிக்கப்படுகின்ற நன்கொடை. தவம் என்பது நம்மை நாம் அறிதலாகிய தியானம். இவை மூன்றுமே எந்தவித அயர்ச்சியுமின்றித் தொடர்ந்து நம்மால் செய்யக்கூடிய முயற்சிகள். இவையல்லாத பிற சடங்குகளான யாகங்களும், தானங்களும், தவமும், ரஜோ, தமோ குணங்களுக்கு உட்பட்டவை. உடலுக்காகவும், பெருமைக்காகவும் செய்யப்படுபவை.

இதைத்தான் “பார்த்தனே! ஒரு கடமையாக இவையெல்லாம் செய்யப்பட வேண்டும் என்பதே என்னுடைய முடிவான அபிப்ராயம். எந்தவிதப் பயனையும் எதிர்பார்க்காமல் இச்செயல்கள் எல்லாம் செய்யப்பட வேண்டும். இவற்றோடு சேர்த்து நாம் அன்றாடம் ஆற்ற வேண்டிய விதிக்கப்பட்ட காரியங்களையும் கட்டாயம் செய்ய வேண்டும். அவற்றையும், பற்றின்றிப் பயன் கருதாமல் செய்வது தான் மிகச் சிறந்த தியாகம்” என்று தெளிவாக உரைக்கின்றார், கோவிந்தன்.

அவர் மேலும் தொடர்ந்து மனிதர்களுக்கு உரிய முக்குண இயல்புகளோடு இவற்றை இணைத்துக் கடமைகளையும் அவற்றைச் செய்கின்ற விதத்தில் ஏற்படுகின்ற வேறுபாடுகளையும் பற்றி விவரிக்கின்றார்.

“அர்ச்சுனா! மனிதன் தனக்கென உரிய கடமைகளை மதிமயக்கம் எனப்படும் அறியாமை காரணமாக செய்யாமல் விட்டுவிடுவது தவறு. இப்படிச் செய்வது தாமஸ குண இயல்பாகும். அது தீமையில் சென்று முடியும்’ என்கிறார். சில தருணங்களில் அறியாமல் நாம் விடுகின்ற பிழைகள் தாம் நம்மைச் சரிவிற்குக் கொண்டு செல்கின்றன”.

இதற்கு விளக்கம் கூற வேண்டுமென்றால், மகா பாரதக் கதையில் வரும் இரண்டு பாத்திரங்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். திருதராட்டிரனின் மனைவியான காந்தாரி, தன் கணவன் பார்வையற்றவன் என்ற காரணத்தால் தானும் இந்த உலகத்தைக் காண விரும்பவில்லையென்று தன் கண்களை ஒரு துணியால் கட்டி நிரந்தரமாக மூடிக்கொண்டு விட்டாள். அதன் விளைவு தாயாகத் தான் செய்ய வேண்டிய கடமைகளை அவள் துறந்து விட்டாள். தாய் கண்காணித்துக் கண்டித்து வளர்க்காமல் கடமை தவறியதால் நூறு பிள்ளைகளும் நெறிகெட்டு அழிந்தார்கள்.

மாறாகப் பாண்டுவின் மனைவியான குந்திதேவி, தன் கணவன் இறந்தபோது அவனோடு உடன் கட்டை ஏறிவிடாமல், அரச வாரிசுகளான பாண்டவர்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டியது என் கடமை என்று சிந்தித்துத் தன் கடமையைச் சரியாகச் செய்தாள். அவள் கடைசிவரை தன் புத்திரர்களுக்கு உதவியாக நின்றாள். இதனால் என்ன நடந்தது? காந்தாரியின் பதிவிரதா தர்மம் தோற்றது. குந்தியின் தாய்மை உணர்வு ஜெயித்தது.

நமது பொறுப்பு என்ன என்பது நமக்குத் தெரிய வேண்டும். அதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு செய்ய வேண்டியவற்றைச் சரியாகச் செய்யத் தெரிய வேண்டும். மதி மயக்கம் கொண்டு நமக்குரிய கடமைகளை நாம் விட்டுவிடக்கூடாது.

அடுத்து கிருஷ்ணர் சொல்கிறார், “செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வது கஷ்டமாக இருக்கிறது என்று கருதி, உடல் வருத்தம் ஏற்படுமே என்கிற பயத்தில் கடமைகளைச் செய்யாமல் விடுவது ராஜஸ தியாகம். இதனால் அமைதியில்லாமல் போய்விடும்” என்று. நடைமுறை வாழ்க்கையில் இதை சோம்பேறித்தனம் என்பார்கள்.

மேலும் அவர், “நாம் இந்தச் செயல்களைச் செய்ய வேண்டியது நமது கடமை. செய்வதை நாம் சரியாகச் செய்வோம். பிறகு என்ன நடக்குமோ அது அவன் விருப்பம் என்ற மனப்பான்மையில் தோய்ந்து சுயநலமின்றி, ஆற்ற வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்து வருவது சாத்வீகத் தியாகம்” என்கிறார்.

இப்படிப்பட்டவர்கள் பிழையான அதர்மச் செயல்களையோ, சுயநலம் கலந்த செயல்களையோ செய்வதில்லை. மாறாக தர்மநெறிக்கு உட்பட்ட அறச் செயல்களை, இவை கட்டாயம் செய்ய வேண்டியவை என்ற மனநிலையில் செயலாற்றுகின்றனர். எந்தவித ஆசாபாசங்களிலும் சிக்காமல் விருப்பு வெறுப்பு அற்றுச் செயல்படுவதால் இப்படிப்பட்டவர்கள் நிம்மதி கெடாமல், எவ்வித சந்தேகமும், தயக்கமும் இல்லாமல் திட சித்தத்துடன் செயல்படுகின்றனர்.

இந்த இடத்தில் அர்ச்சுனன் கிருஷ்ணரிடத்தில் “இவ்வளவு தொல்லையை ஏன் மேற்கொள்ள வேண்டும்? கருமமே செய்யாமல் இருந்துவிட்டால் என்ன? ”என்று கேட்கிறான். கேள்வி மிகப் பிரமாதமாக இருக்கிறதே என்று நமக்குத் தோன்றும். ஆனால் ஓர் உண்மை இதில் இருக்கிறது. உடலெடுத்த ஒருவனால் செயல்படாமல் இருக்கவே முடியாது. சற்று நேரம் ஒன்றுமே செய்யாமல் அப்படியே சும்மா ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து பாருங்கள், பிறகு தெரியும்.

செயல்படுவதற்காகவே உடல் படைக்கப்பட்டிருக்கிறது. தன் நினைவிழந்து கட்டையாகக் கீழே விழுந்தாலன்றி இந்த உடலால் சும்மா இருக்க முடியாது. பாயில் படுத்தாலும் மனம் ஏழு கடல் தாண்டி ஓடும். புத்தி வரவு செலவுக் கணக்கு போடும். இதைப் புரிந்துகொண்டு, நம்மால் செயல்படாமல் இருக்க முடியாது: ஆனால் பலனை எதிர்பார்த்துச் செயல்படும் போக்கை மாற்றிக்கொள்ளலாம் என்று தீர்மானிப்பது நல்லது.

ஏனெனில் பலனைத் துறந்து செயல்படுபவன் தியாகி என்றுதானே கிருஷ்ணர் சொல்கிறார். புரிகிறதா? எனவே இனி நாம் முன்போலவே செயல்படுவோம்! ஆனால் சரியாக, முறையாகச் செயல்படுவோம். பலனை அவன் தரட்டும். நாம் எதிர்பார்க்க வேண்டாம். எல்லாவற்றிற்கும் இந்த லாஜிக்கைப் போட்டுப் பார்த்து இனி நாம் செயல்படுவோம், சரிதானே!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s