மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 62

மோட்ச சந்நியாச யோகம்

அன்பர்களே! நாம் இப்போது பகவத்கீதையின் நிறைவுப் பகுதியை அடைந்திருக்கின்றோம். பாரதத்தின் எத்தனை எத்தனையோ பெரியவர்கள் எல்லாம் அளவிட முடியாத எத்தனையோ அற்புதமான ஆத்மானுபவங்களுடன் கூடிய விதத்தில், இந்த அரிதிலும் அரிய பொக்கிஷமான பகவத்கீதையின் அருளமுதை அள்ளி அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மகாராஜாவான தன் தந்தையைப் போல் தானும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சின்னஞ்சிறு குழந்தையான ஓர் இளவரசன், தன் தந்தையின் கிரீடத்தை எடுத்துத்தான் சூட்டிக்கொண்டு, கையில் குட்டிக் கத்தியை ஏந்திக்கொண்டு, இல்லாத மீசையை முறுக்கிக் காட்டி, சின்னஞ்சிறு விழிகளை உருட்டிக்காட்டி, ராஜ நடை நடந்து காட்டியதைப் போல, அடியேனும் அளவிடமுடியாத ஆர்வத்தில் ஏதோ ஒரு தைரியத்தில் இதனை எழுத முற்பட்டேன்.

கீதையைப் படிப்பதற்குக் கஷ்டம், புரிந்துகொள்ள முடியவில்லை என்றெல்லாம் நினைத்து, சைவ சித்தாந்த நெறிமுறையில் பழகிய தமிழ் மக்கள் இந்த அற்புதமான பகவத்கீதையைப் படிக்காமல் விட்டுவிட்டார்களே, எப்படியாவது இது அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று அடிக்கடி எமது குரு ஸ்வாமி பரமாத்மானந்தா அவர்கள் சொல்வதைக் கவனித்ததால் எழுந்த துணிவு இது.

இறையருள் தூண்ட, குருவின் அருளைத் துணையாகக் கொண்டு ஏதோ ஒரு தைரியத்தில் செலுத்தப்பட்டவளாக இதுவரை எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன். இப்போது இந்த இறுதிப் பகுதியின் ஆழத்தையும், கருத்துச்செறிவையும், சொற் பிரயோகத்தையும் பார்க்கின்றபோது விவரிக்க இயலாத ஒரு பிரமிப்பு திடீரென்று எழுந்து என்னை பலவீனப்படுத்துகிறது என்றாலும் என்னைத் தன் கைக்கருவியாக்கிய கண்ணன் கழலிணையை மீண்டும் பணிந்து, வணங்கித் துவங்குகின்றேன் எளிய சொல்நடையை அந்தப் பிரம்மம் வழங்கட்டும். ஓம் தத் ஸத்!

மோட்சம் என்ற சொல்லுக்கு விடுதலை, முக்தி, பரமபதம், பரமாத்மாவுடன் கலந்து விடுதல், முழுமையான நிறைவு என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். சந்நியாசம் என்பது துறவு, சம்சாரத்தை அல்லது வாழ்க்கையைத் துறத்தல், பற்றறுத்தல், விடுபட்டு விலகுதல் என்றெல்லாம பல பொருள் உண்டு. நான் இந்தப் பிறவி என்ற உணர்விலிருந்து விடுபட்டு, நான் அந்தப் பரம்பொருளின் சிறு பொறி என்ற உணர்வு ஏற்பட்டுவிட்டால், அதுவும் மோட்சம் தான். இந்நிலையில் எதையும் துறக்கத் தேவையில்லை. இருந்த இடத்தில் இருந்தபடி எதிலும் ஒட்டாமல், தன்னை அவனாகவே எண்ணி வாழ முடியும். மோட்ச சந்நியாச யோகம் என்றால் மோட்சத்தையே சந்நியாசம் செய்வது. அதாவது மோட்சத்தையே துறந்து விடுவது என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

பகவத்கீதையில் மொத்தம் 18 அத்தியாயங்கள். அவற்றில் முதல் 6 அத்தியாயங்களில் கடைசி அத்தியாயம் தியான யோகம். அடுத்த 6 அத்தியாயங்களில் கடைசி அத்தியாயம் பக்தியோகம். கடைசி 6 அத்தியாயங்களில் இறுதியாக வருவது மோட்ச சந்நியாச யோகம். தியானம் செய்வது ஞான மார்க்கம். கடமைகளைச் செய்து ஞானம் பெற்று அந்த ஞானத்துடன் கூடிய பக்தி செய்யத் தெரிந்துகொண்டால், பிறப்பு, இறப்பு சுழற்சியிலிருந்து நிச்சயம் விடுபடலாம். இதுவே பகவத்கீதையின் சாரம். அதுமட்டுமல்ல. ஆசை அறுமின்! ஆசை அறுமின்! ஈசரோடாயினும் ஆசை அறுமின்! என்ற பாடலின் உட்பொருள்தான் இந்த மோட்ச சந்நியாச யோகம். அதாவது அனைத்தையும் துறப்பது தான் மனிதப் பிறவியின் இறுதி நிலை.

இந்த அத்தியாயத்தில் அர்ச்சுனன் தனது ஐயம் தெளிவுறா நிலையில் ஜகத்குருவாகிய கண்ணனிடம் மீண்டும் ஞானத்தைப் பற்றியும், கர்மாவைப் பற்றியும் பல கேள்விகளைக் கேட்கிறான். இரண்டாவது, மூன்றாவது அத்தியாயங்களில் நாம் கற்றவற்றை மீண்டும் சிந்திக்கவும், தெளிவு பெறவும் இந்த மீள் பார்வை உதவுகின்றது. அதனால் நம்மைப் போன்றவர்களையும் கடைத்தேற்றும்படியாக, வேறு ஒரு கோணத்தில் மீண்டும் ஒருமுறை மிக நுட்பமான விளக்கங்களுடன் தனது உபதேசத்தை அகில குரு வழங்குகிறார்.

பரந்தாமன் கூறுவதைக் கேட்கப் புகுமுன் இங்கு ஒரு சிறு விளக்கம் தேவைப்படுகிறது. பொதுவாக சந்நியாசம் என்பது ஒருவர் அதுவரை தமது வாழ்க்கையில் நடைமுறையாகக் கடைப்பிடித்து வந்த நித்திய குல தர்மத்தை, குடும்பக் கடமைகளைத் துறந்துவிட்டு, குடும்பத்தை விட்டு விலகி, இறைவனுக்குரிய செயல்களை மட்டும் செய்துகொண்டு போவது. இது எல்லோராலும் செய்யக்கூடியதல்ல. பல பிறவிகளில் மேற்கொண்ட ஆன்மீக முயற்சிகளால் பெற்ற பரிணாம வளர்ச்சியால், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாலேயே இந்தத் துறவு நிலையை மேற்கொள்ள முடியும்.

அப்படி உள்தூண்டலால் உண்மையான துறவை நாடுபவர்களின் வாழ்க்கையில் பந்தம், பாசம், உறவு நெருக்கம், குடும்பத்தைக் காப்பாற்ற அவர்களுக்காக உழைப்பது, சம்பாதிப்பது போன்ற வினைகள் எதுவும் இருக்காது. துறவை நாடுபவர்கள் வீட்டை விட்டு விலகித் தனிமையை நாடி, ஒரு குருவைத் தேடி அடைந்து, தியானம், யோகம், தவம், ஞானப்பயிற்சி என்று இறை சிந்தனையில் லயித்து, இறைவனுக்குரிய செயல்களிலேயே ஈடுபடுவார்கள்.

குடும்ப பாரம் தாங்காமல் வீட்டை விட்டு ஓடிவிடுவது, ஏதோ ஒரு தோல்வியால், அவமானத்தால் அல்லது ஏதோ ஒரு பேரிழப்பால் உணர்ச்சி வசப்பட்டு ஓடுவதெல்லாம் உண்மையான துறவல்ல. அவர்கள் புறத்தால் துறந்தவர்களேயன்றி, அகத்தில் ஆயிரம் கவலைகள் அலை மோதும். விட்டுவிட்டு வந்தவைகளைப் பற்றிய கவலை அலைக்கழிக்கும். கர்மா விடாது. அதோடு மட்டுமின்றிப் பக்குவம் அடையாதவர்கள் மேற்கொள்கின்ற துறவு தவறுகள் செய்யவும், துறவு நெறியிலிருந்து நழுவவும், பெயருக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு ஆசாபாசங்களில் சிக்கித் தவிக்கவும் நேரிடும்.

துறப்பது மிக எளிதான செயலல்ல. முதலில் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையில் தர்மநெறிப்படி வாழத் தெரிய வேண்டும். படித்து, வேலை பார்த்து, கல்யாணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, அவர்களுக்குரிய கடமைகளைச் செய்து முடித்து, பிள்ளைப் பருவம் முதலே தெய்வ பக்தி கொண்டு ஒழுகி, முதுமை அடைந்தவுடன் அனைத்திலிருந்தும்; விடுபட்டுப் பொறுப்புகளை இல்லாமற் செய்து கொண்டு, வெளி விவகாரங்களை அறவே நீக்கி விட்டு, அமைதியாக இறை வழிபாட்டில் முழுமையாக ஈடுபடுவதே சம்சாரிகளின் முறை சார்ந்த துறவு நெறியாகும்.

இந்தப் படிமுறைக்கு ஏற்பத் தான் நமது சனாதன தர்மம் பிரம்மசர்யம், இல்லறம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்று வாழ்க்கையை வகைப்படுத்தித் தந்திருக்கின்றது. இதைப் புரிந்துகொண்டு குல தர்மத்தை மீறாமல் வாழ்ந்து வந்தாலே போதும். மற்றவற்றைப் படைத்தவன் பார்த்துக்கொள்வான். தனக்குரியவனைத் தானே அது தேர்ந்தெடுத்துக் கொண்டு செல்லும். தான் யார் என்பதை அறியாமல் தன்னை மறந்து வாழ்ந்தாலும் அவனுக்குத் தடைகளைப் போட்டுத் தன்னிடம் இழுத்துக்கொள்ளும். இதை அனுபவித்தவர்கள் உணர்வார்கள். வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகின்ற இழப்புகள், தோல்விகள், ஏமாற்றங்கள் எல்லாமே அவன் செய்கின்ற லீலைகளே. அவனை நோக்கிச் செல்வதற்காக அவனால் போடப்பட்ட படிகளே அவை.

அடுத்தது, தியாகம். இங்கு தியாகம் என்பது விட்டுவிடுதல் என்ற பொருள்படும். அதாவது நமக்கு விதித்த கடமைகளைச் சரிவரச் செய்தல். ஆனால் அவற்றிற்குரிய பலனைப் பற்றிய கவலையை விட்டுவிடுதல். எது வந்தாலும் சரி என்று ஏற்கின்ற மனப்பக்குவமே இது. இதைத்தான் ஸ்ரீ கிருஷ்ணர், கடமையைச் செய்! பலனை எதிர்பார்க்காதே! என்கிறார். இதன் பொருள் நன்றாகப் புரிகின்றதா? ஆனால் நாமோ ஒன்றைச் செய்ய முற்படும்போதே இதனால் எனக்கு என்ன வரும்? என்று தான் எண்ணத் தொடங்குகிறோம். இது ஊறிப்போன ஒரு குறை தான். இருந்தாலும் இனி இந்தக் குறையைக் கறையாகப் புரிந்து நம்மிலிருந்து நீக்குவோம்.

இதே போல விட்டுவிடுவது என்பதையும் நாம் பிழையாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். நமக்குப் பிடித்ததைச் செய்வது, பிடிக்காததை விட்டு விடுவது என்று பழகியிருக்கின்றோம். ஒரு செயல் நல்லதா, கெட்டதா என்று பார்ப்பதில்லை. பிடிக்குமா, பிடிக்காதா என்று தான் மனம் பார்க்கிறது. இதுவும் பிழையே. நமக்கு எவையெல்லாம் கடமைகளாக விதிக்கப்பட்டிருக்கின்றனவோ அவற்றையெல்லாம் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், கஷ்டமாய் இருந்தாலும், பயன் கருதாமல் செய்யத்தான் வேண்டும். அப்படிச் செய்கின்றபோதே அவற்றைப் பற்றற்ற நிலையில் நமது பரிணாம முன்னேற்றத்திற்குத் தடை ஏற்படா வண்ணம் செய்ய வேண்டும்.
இந்த விளக்கத்துடன் பகவத்கீதையைக் கையில் எடுப்போம்.

Advertisements

2 thoughts on “மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 62

  1. நான் உங்கள் கருத்துகளை வேறிடத்தில் பதிவிட அனுமதிக்க வேண்டுகிறேன். அருமையான சாரம்சம் கொண்ட தெளிவுரை இது.

    • வணக்கம்.உங்கள் ஆவலை வரவேற்கிறேன். நீங்கள் என் பெயருடன் இணைத்துத்தான் அவற்றை வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம். அதோடு உங்களுக்கு வரும் பதில்களை நாங்களும் பார்க்க வேண்டும்.உங்கள் எண்ணத்தைத் தெரிவிக்கவும். நட்புடன், விஜயா ராமன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s