மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 61

அடுத்ததாகத் தானம் செய்கின்ற விதத்தில் முக்குணங்கள் வெளிப்படும் தன்மை பற்றிக் கிருஷ்ணர் விளக்குகிறார். ‘தானம் கொடுப்பது நம் கடமை என்னும் கருத்துடன், பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல ஒருவர் தானம் செய்ய வேண்டும். மேலும் இடம், காலம், தகுதி அறிந்து நல்லவர்களுக்கு தானம் அளிக்க வேண்டும். இதுவே சத்வ குணத்துடன் இருப்பவர்கள் தானம் செய்கின்ற விதமாகும்.”

‘ஏதேனும் எதிர்பார்த்துக்கொண்டோ, விளம்பரங்களுக்காகவோ, பலன்களுக்கு இச்சை பட்டுக்கொண்டோ, அல்லது விருப்பம் இல்லாமலோ கொடுக்கப்படும் தானம் ரஜோ குணத்துடன் செய்யப்படுவது.”

‘எந்த தானம் மரியாதை இல்லாமல், அலட்சியமாக, அவமதிப்புடன் அல்லது, தகுதியற்றவர்களுக்குத் தகாத இடத்தில், தகாத காலத்தில் அளிக்கப்படுகிறதோ அது தாமச தானம்.”

தர்மநெறி அல்லாத தீய செயல்களுக்காக உதவி செய்வதும், தானம் கொடுப்பதும் உண்மையான தானம் அல்ல. அதே சமயம் உண்மையான தேவையுடன் ஒருவன் நம்மை நாடி வந்து கேட்கின்றபோது அவனிடம், இல்லையென்றும், போ போ என்றும் விரட்டி அடித்துவிட்டுப் பிறகு அர்த்தமற்ற பூஜை, கோவில் வழிபாடு என்று போனால் அது துரோகச் செயல். உண்மையான இறைவன் நம் எதிரில் வரும் மனிதனே. இதை நன்றாகப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

இதற்குப் பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனனிடம், ‘நீ எதைச் செய்தாலும் அதைப் பரம்பொருளுக்கு உரியது என்று நினைத்து அந்த உணர்விலேயே செய்” என்று கூறி அதற்குரிய விளக்கத்தையும் அளிக்கின்றார்.

‘ஒருவன் சிரத்தையுடன் செய்கின்ற யாகம், தவம், தானம் ஆகிய மூன்று செயல்களையும் “ஓம் தத் ஸத்” என்று சொல்லியே செய்ய வேண்டும். ஓம் தத் ஸத் என்பதன் பொருள், பிரணவ ஸ்வரூபமான பரமாத்மா தான் உண்மையில் நிலையானது! என்பதே ஆகும்.’

இந்து மதத்தில் இறை சம்பந்தமான செயல்களையும், சாதனைகளையும் செய்கின்றபோது ஓம் என்னும் பிரணவ மந்திரத்தைச் சொல்லியே துவங்குகின்றனர். ஓம் என்னும்போது பரம்பொருளைத் தியானிக்கிறோம். தத் என்னும்போது எங்கும் பரவி நிற்கின்ற பரம்பொருளை அழைக்கின்றோம். ஸத் என்னும்போது பார்ப்பதற்கும், உணர்வதற்கும், நினைப்பதற்கும் உரியதான, எல்லாவற்றிற்கும் அடிப்படையாய் இருக்கின்ற, தன்னை எல்லா விதத்திலும், எல்லாவற்றிலும் வெளி;ப்படுத்த்pக்கொண்டிருக்கின்ற மாறாத உண்மைப் பொருளான சத்தியத்தை நமக்கு உதவி செய்யும்படி வேண்டுகின்றோம்.

பரந்தாமன் சொல்கிறார், ‘அர்ச்சுனா! ஓம் தத் ஸத் என்னும் மூன்று சொற்களால் குறிக்கப்படும் பரமாத்மாதான் படைப்பின் தொடக்கத்தில் வேதங்களையும், பிரமாண, சாஸ்திர கிரந்தங்களையும், வேள்விகளையும் படைத்தது. வேத உச்சாடனங்களின் போதும், யாகங்களின் போதும் பரமனின் திருப்திக்காக அந்தணர்களால் ஆதியிலிருந்தே இவை உச்சரிக்கப்பட்டன. ஆகையால் பரமாத்மாவின் பெயரை இவ்வாறு போற்றியே வேள்வி முதலான பணிகளைத் தொடங்க வேண்டும்.”

வேதப் பதங்களிலே ஓம் என்ற சொல் எப்பொழுதுமே காணப்படுகின்றது. பரம்பொருளின் விருப்பத்தால் முதன் முதலில் படைக்கப்பட்ட படைப்பாகிய பிரம்மா யாகங்களைச் செய்தபோது, முழுமுதற் கடவுளின் இந்த மூன்று பெயர்களைக் கூறினார். அதுவே தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்தப் பதம் மிக முக்கியமானது. இந்த மூன்று சொற்களுடன் எப்போது ஒருவன், தவம், தானம், யாகம் இவற்றைச் செய்கிறானோ அப்போது அவன் பரம்பொருளின் துணையை நாடியவன் ஆகிறான். எல்லாம் அவன் செயல் என்று நினைத்துச் செய்கின்ற அந்தச் செயல் அவன் அருளுடன் கூடியதாகவே முடிகிறது. மேலும் நான் செய்கிறேன் என்னும் அகங்காரம் அடியோடு அழிந்து போகிறது.

இறைவனை முன்னிறுத்தி இப்படிச் செய்கின்ற ஒரு செயல் பிழையாகிப் போனாலும் கூட இறைவனின் விருப்பம் அது என்று ஏற்கின்ற மனப்பக்குவம், செயலைப் பரம்பொருளுக்கு ஒப்படைத்துச் செய்பவருக்கு ஏற்படுகிறது. எனவே ஆன்மீகவாதிகள் எப்போதுமே ஓம் என்று ஆரம்பித்துத் தான், பரம்பொருளை அடைவதற்காக, என்று சொல்லி யாகங்கள், தானங்கள், தவங்கள் இவற்றை மேற்கொள்கின்றனர்.

தத்-என்ற சப்தத்துடன் யாகத்தையும், தவத்தையும், தானத்தையும் ஒருவன் செய்ய வேண்டும். ஏனெனில் “தத்” என்னும் பெயரால் கூறப்படும் பரமாத்மாவிற்கு எல்லாமே இருக்கிறது. எல்லாம் அதற்கே உரிமை என்ற எண்ணம் நம்மில் நம்பிக்கையாக அமைய வேண்டும். இந்தத் திட நம்பிக்கையுடன், உலக பந்தங்களிலிருந்து முக்திபெற விரும்பும் மனிதர்கள் பயனைக் கருதாமல் எல்லாம் செய்ய வேண்டும்.

ஸத் – என்ற சொல் பூரணமான சத்தியத்தைக் குறிக்கிறது. இந்த உண்மையை உணர்ந்த நிலையில் சிரத்தையுடன் செய்யப்படும் யாகம், தவம், தானம் ஆகியவை முழுமுதற் கடவுளைத் திருப்தி செய்வதற்காகச் செய்யப்படுகின்றன. அதாவது இறைவனுக்காகவே என்று எல்லாம் செய்வது.

ஆன்மீகப் பரிணாம வளர்ச்சியில் முன்னேற வேண்டுமென்றால் நாம் எந்தவித உலக லாபத்திற்காகவும் செயல்படக் கூடாது. பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட வேண்டும், இறைவனோடு ஒன்று சேர வேண்டும் என்னும் ஒரே நோக்கத்துடன் மட்டுமே செயல்கள் செய்யப்பட வேண்டும் என்பதே இங்கு உணர வேண்டியது.

“ஓம் தத் ஸத்” என்ற சொற்கள் எல்லாச் செயல்களையும் பக்குவப்படுத்துவதற்காக சொல்லப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் முழுமையாக்குகின்றன. நான் என்று நினைத்துச் செய்கின்றபோது கர்மா அதில் குறிக்கிடுகிறது. அவன் என்று நினைத்துச் செய்கின்றபோது அங்குக் கர்மா செயல்படாத நிலை ஏற்படுவதோடு அந்தச் செயல் இறைவனின் விருப்பமாக ஆகிவிடுகின்றது. அந்நிலையில் ஒன்றைச் செய்கின்றபோது நமது எண்ணம் தெய்வீகமாகின்றது. அத்தெய்வீக எண்ணம் நம்மைப் பூரணப்படுத்துகின்றது. இதனால் இனி என்ன நடந்தாலும் அது நம்மைப் பாதிக்காது. ஏனெனில் எல்லாம் அவன் செயல். நாம் அதுவாக மாறுகின்ற நிலை இது.

இத்தகைய பக்குவ நிலையை நாம் அடைய வேண்டுமென்றால் ஒரு முறையான ஆன்மீகக் குருவைத் தேடி அடைந்து, அவரிடம் ஆன்மீக உபதேசங்களைக் கேட்டு, அவற்றைப் பற்றித் திரும்ப திரும்ப சிந்தித்துப் பக்குவமடைந்து உண்மையான ஞானத்தை அடைய வேண்டும். ஞானம் பெற்ற பிறகு தான் இந்த அடிப்படை உண்மைகள் நம்மில் தங்கி நம்மை மாற்றும்.

இங்கு பரந்தாமன் சொல்கின்ற ஒரு தகவல் என்னவென்றால், சிரத்தை இல்லாமல் செய்யப்படும் வேள்வி, கொடுக்கப்படும் தானம், அனுட்டிக்கப்படும் தவம் முதலிய காரியங்கள் ‘அஸத்’ எனப்படும். அஸத் என்ற சொல்லிற்கு இறைத்தன்மை இல்லாத என்று பொருள். அஸத் காரியங்களுக்கான பலன் இந்தப் பிறவியிலும், இறந்த பிறகும் கூட கிடைப்பதில்லை. அதாவது இறைத்தன்மை இல்லாத செயல்களுக்கு எங்கும், எந்தக் காலத்திலும் நல்ல பயன் கிடைப்பதில்லை. சரியான செயல்களையே செய்வோம். சரியான பாதையில் செல்வோம். – ஓம் தத் ஸத்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s