மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 60

இனி முக்குணத்தில் இருப்பவர்கள் செய்கின்ற யாகம் எப்படி அமைகின்றது என்பது பற்றிக் கண்ணபிரான் அர்ச்சுனனுக்கு சொல்வதைப் பார்ப்போம்.

‘அர்ச்சுனா! வேள்வி செய்வது நம் கடமை என்னும் உணர்வோடு, மனப்பக்குவத்தோடு, பயனைப் பற்றி சிந்திக்காமல், சாஸ்திர விதி முறைப்படி செய்யப்படுகின்ற வேள்வி சாத்வீகமானது”.

‘பயனை எதிர்பார்த்துச் சுயநலத்திற்காகச் செய்யப்படுவதும், பிறர் பாராட்ட வேண்டும் என்னும் நோக்கத்தில் தற்பெருமையுடன் பகட்டாகச் செய்யப்படுவதும் இராட்சத வேள்வியாகும்”.

‘சாஸ்திர விதிகளுக்குப் புறம்பானதும், அன்னதானம் இல்லாததும், மந்திர உச்சரிப்பு அற்றதும், தட்சிணை வழங்கப்படாமலும், நம்பிக்கை இல்லாமலும் செய்யப்படும் யாகம் தமோகுண அடிப்படையில் அமைந்தது. இப்படிச் செய்யப்படுகின்ற யாகங்களால் மனித சமுதாயத்திற்கு எவ்விதப் பயனுமில்லை”.

இதனை அடுத்து அர்ச்சுனன் மூவகைத் தவங்களைப்பற்றிக் கேட்கின்றான். பகவானும் அவற்றைப் பற்றி இவ்வாறு விளக்குகின்றார். ‘அர்ச்சுனா! தவம் மூன்று வகைப்பட்டது. உடலால், வாக்கால், மனதால் செய்யப்படுவது. பிரம்மம், தெய்வங்கள், தேவதைகள், தாய்தந்தையர், பிராமணர்கள், குருமார்கள், ஜீவன் முக்தர்களான மகா புருஷர்கள் ஆகியோரைப் பூஜித்து வணங்குவதும், நீர், மண் முதலியவற்றால் உடலைத் தூய்மை செய்துகொள்வதும் (அதாவது தினமும் குளிப்பது) உடலை எளிமையாகவும், நேர்மையாகவும் கையாளுவதும், பிரம்மச்சர்யத்தைக் கடைப்பிடித்தலும், இந்த உடலால் பிறருக்குத் தீங்கு செய்யாதிருத்தலும் ஆகிய இவையெல்லாம் உடம்பால் செய்கின்ற தவமாகும்”.

மாத்ரு தேவோ பவ! பித்ரு தேவோ பவ! ஆச்சார்ய தேவோ பவ! அதிதி தேவோ பவ! என்ற மந்திரத்தின் உயர்வுதான் இங்கு சொல்லப்படுகிறது. பெற்றோரையும், குருவையும் வணங்குபவன் உணர்ந்த கதியை அடைகின்றான் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. யாரையும் கேவலமாக நினைத்து அலட்சியம் செய்யக்கூடாது. எல்லா உடல்களும் இறைவனின் தோற்றங்களே என்று நினைத்து தக்க மதிப்பு தரவேண்டும். பெரியவர்களையும், நன்மக்களையும் அன்புடன் மரியாதையாக நடத்த வேண்டும்.

உடலைத் தூய்மையாகப் பேணிப் பாதுகாத்து உடல் நலத்துடன் நல்ல பொலிவுடனும் திகழ்வதும், தீய செயல்களில் உடலை ஈடுபடுத்தாமல் இருப்பதும் உடல் தவமாகும். தினமும் குளிப்பது என்பது உடல் தூய்மைக்கு மிக மிக அவசியமான நல்ல பழக்கம். இல்லற வாழ்வில் ஈடுபட்டு முறையான விதத்தில் உடலுறவு அளவாக அமைய வேண்டும். வானப்பிரஸ்த ஆஸ்ரமத்தில் பிரம்மச்சர்யம் காக்கப்பட வேண்டும். காம இச்சையினால் ஒழுக்கம் தவறக்கூடாது. போதைப் பழக்கம், குடிப்பழக்கம், புகை பிடித்தல் போன்றவை உடல் தூய்மைக்கும், தவத்திற்கும் எதிரானவை. எளிமையான நல்ல பழக்க வழக்கங்கள், துhய்மையான எளிய ஆடை அணிகள் போன்றவை மதிப்பைத் தரும்.

அடுத்து வருவது வாக் தபஸ். வாக்கினால் செய்யப்படும் தவம் என்பது மிக முக்கியமானது. வாக்கை அதாவது சொற்களைப் பண்படுத்தி மேன்மையுறச் செய்வதற்காக, சொல்லால் செய்யப்படும் இந்தத் தவம் வலியுறுத்தப்படுகின்றது. உண்மையாகவும், நன்மை அளிக்கும் விதத்திலும், மனதைப் புண்படுத்தாமலும் பேசப்படும் பேச்சு வாக்குத் தவமாகும்.

‘எரிச்சல்; ஊட்டுவதும், ஆத்திரமூட்டக்கூடியதுமாக இல்லாமல், பிரியமான, நலந்தரும் வார்த்தைகளைப் பேசுவதும் மிகச் சிறந்த பண்பாகும். கல்வி, கேள்விகளில் ஈடுபட்டிருப்பது, ஜபம், மந்திர உச்சாடனம், வேதம் ஓதுதல், இனிய தெய்வீகப் பாடல்களை இசையுடன் பாடுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுதல் நாக்கிற்கு நலம் சேர்க்கும்”.

யா காவாராயினும் நா காக்க! என்று திருக்குறள் சொல்கிறது. ஆறடி மனிதனை ஓர் அங்குல நாக்கு வீழ்த்திவிடும் என்பது ஒரு பழமொழி. நாவினால் சுட்ட வடு எந்நாளும் ஆறாது. மாறாக அது பகையை வளர்க்கவே வழி வகுக்கும்.

திரௌபதி தனது நாவைக் கட்டுப்படுத்தாமல், சந்தர்ப்பம் தெரியாமல் சிரித்து, குருடனின் மகனும் ஒரு குருடன் தானா? என்று ஏற்கனவே பாண்டவர்களின் செல்வாக்கையும், அரண்மனையின் அதிசய அமைப்பையும் கண்டு மனம் பொறாமையால் பொங்கிய நிலையில் இருந்த துரியோதனனைக் கேலி செய்ததால் தானே மகா பாரதக்கதையே சூடு பிடித்தது? நாவடக்கம் நல்லவர்களாகத் திகழ மிக மிக அவசியம். எனவே தான் இந்தப் பொல்லாத நாக்கு உதடுகள், மற்றும் பற்களுக்குள்ளே சிறை வைக்கப்பட்டு சுருண்டு கிடக்கிறது.

‘உயர்ந்த விஷயங்களை, இதம் தரும் விதத்தில், நன்மையையே அளிக்கும்படி பேசுதல் சத்வகுணத் தவமாகும். பிறர் மனம் புண்படும்படி கடுஞ் சொற்களால், பகையை வளர்க்கும் விதத்தில் பேசுவது ரஜோ குண இயல்பு. கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தி, இழிவு படுத்திச் சற்றும் பயனில்லா அர்த்தமற்ற வார்த்தைகளைப் பேசுதல் தமோ குண இயல்பு. மௌனமாக இருக்கப் பழகுவது சிறந்த வாக் தபஸ் ஆகும்”.

அடுத்து வருவது மானசீக தபஸ். மனதை மேன்மையுறச் செய்வதற்காக மானசீக தவம் கீதையில் எடுத்துரைக்கப்படுகிறது. இந்த மனதால் புரியும் தவம் என்பது மனதை எண்ணமில்லாமல் செய்து மனதையே இல்லாமற் செய்துவிடுவது ஆகும். ‘மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது மனத்தவம் ஆகும். இனிதாகப் பழகுவது, சிந்திக்கும் திறன், மன அடக்கம், தூய கருத்து – இவற்றை முறையாகப் பயன்படுத்துவது தான் மானசீகத் தவம்’ என்கிறது கீதை.

மனதின் வளர்ச்சி, மன அமைதி, பகவானை நினைக்கும் பண்பு, மன அடக்கம், அந்தக்கரணத் தூய்மையில் கவனம் ஆகியவையே மனதால் செய்து பழக வேண்டிய தவப் பயிற்சி ஆகும். சாந்தம், எளிமை, கம்பீரம், சுயக் கட்டுப்பாடு, எண்ணத் தூய்மை ஆகியவையும் இப்பயிற்சியில் பழக வேண்டிய பண்புகள்.

புலன் இன்பங்களிலிருந்து மனதை விடுபடச் செய்வது மனத்தவம். பிறருக்கு நன்மை செய்வதைப்பற்றி எப்போதும் எண்ணும்படியாக மனம் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். புலன் ஈர்ப்பிலிருந்து மனதை விடுவித்துத் திசை திருப்பத்தான் சத்சங்கத்தில் சேர்தல், நல்ல ஆன்மீக நூல்களைப் படித்தல், பஜனை, பிரார்த்தனையில் ஈடுபடுதல், நாம சங்கீர்த்தனம் செய்தல், நல்ல புராணப் பிரசங்கங்களையும், பக்திப் பாடல்களையும், உபதேச உரைகளையும் கேட்டல், இறைப் பிரசாதத்தையே உண்ணுதல், புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லல் என்று ஐம்புலன்களையும் பக்தி வழியில் திருப்ப வேண்டும்.

‘புறம் திரிந்து மனச் சமநிலை கெடாமல் தனிமையில் அமைதியைப் பழக வேண்டும். இப்படி மனதைப் புலன்களிலிருந்து விடுவித்து உள்முகமாகத் திருப்பிப் புத்தியில் சேர்த்து, மனமும் புத்தியும் தியானத்தின் மூலம் ஆத்மாவில் சென்று இணைந்து கலப்பதன் மூலமே பந்தங்களிலிருந்து ஒருவன் விடுபட முடியும்’.

‘இப்படி இந்த உடல், வாக்கு, மனம் ஆகிய மூவகைத் தவங்களையும் மிகுந்த ஈடுபாட்டுடன், பயன் பெறும் ஆசையில்லாமல், பரம்பொருளைத் திருப்திப் படுத்துவதற்காகவே நன்றாகச் செய்து வந்தால் அது தான் சாத்வீகமான தவம் எனப்படும்.”

‘எந்த தவம் சொந்த நலனுக்காகவும், கௌரவத்திற்காகவும், பிறர் போற்றுவதற்காகவும் ஆடம்பரமான முறையில் போலியாகச் செய்யப்படுகிறதோ, பிறரை வியக்க வைப்பதற்காகப் பாசாங்காகச் செய்யப்படுகிறதோ அது ரஜோ குணத்துடன் கூடிய தவமும், விரதமும் ஆகின்றது. இவை நிலையானவை அல்ல.”

‘எந்தத் தவம் அறியாமையும், பிடிவாதமும் கொண்டு தன்னை வருத்திக்கொண்டு, பிறரையும் துன்புறுத்திக்கொண்டு செய்யப்படுகிறதோ அது தாமசத் தவம் எனப்படும்.”

அசாத்தியமான ஏதேனும் ஒன்றிற்காகத் தவங்கள் புரிவது நிச்சயமாக அறியாமையே ஆகும். அரக்கர்களின் அசுரத் தனமான தவத்தினால் என்ன பயன்? நல்ல வரங்களைப் பெற்றும் அகங்காரத்தினால் கொடுமையான வன்முறைகளில் ஈடுபட்டுக் கடைசியில் எந்த வகையிலோ அவர்கள் கொல்லப்பட்டனரேயன்றி, காத்து ரட்சிக்கப்படுவதில்லையே. அவர்களது தவத்தின் விளைவு அழிவு தானே?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s