மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 58

கடந்த சில அத்தியாங்களில் மூன்று குணங்கனைப் பற்றியும், அதனைத் தொடர்ந்து தெய்வீக இயல்புகள் யாவை, அசுர குணங்கள் யாவை என்பனவற்றையும் பரந்தாமன், பார்த்தனுக்கு விளக்கிக் கூறினார் அல்லவா! அவற்றைக் கேட்டபின் அர்ச்சுனனுக்கு ஓர் ஐயம் எழுகின்றது.

‘தர்மநெறியால் அமைக்கப்பட்ட இந்த சாஸ்திர நெறிகளைப் பின்பற்றாமல் மனம் போன போக்கில் தர்மத்தை விட்டு விலகிச் செல்பவர்களுக்கு என்ன கதி கிடைக்கும்? அப்படிப்பட்டவர்களின் நிலை என்ன? ஞானமில்லாதவர்களான அவர்களின் பக்தியும், சிரத்தையும், அவர்கள் செய்கின்ற வழிபாடுகளும் எப்படிப்பட்டவை? அவை சாத்வீகமானவையா? ராஜஸமானதா? அல்லது தாமஸமானதா?” என்று அவன் கண்ணனிடம் கேட்கின்றான்.

மேலும் அவன், ‘சாத்திரங்களின் சட்டதிட்டங்களைப் பின்பற்றாமல், சத்தியத்தை உணராத நிலையில் தெய்வ உருவங்களையும், தேவர்களையும், தேவதைகளையும், மனிதர்களையும் வழிபடுபவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றியடைவார்களா?” என்றும் கேட்கிறான். அந்த வினாக்களுக்குரிய விடையாகவே இந்த சிரத்தா த்ரய யோகம் என்ற அத்தியாயம் அமைகிறது.

ஒருவன் தன்னைப்பற்றிய உண்மைகளை அறியாத நிலையில் அதாவது ஞானம் பெறாத நிலையில் செய்கின்ற பக்தி வழிபாட்டு முறைகள் எந்த விதத்தில் அமைய வேண்டும் என அறியவே அர்ச்சுனன் விரும்புகின்றான். இதைப் புரிந்துகொண்டவராய்க் கண்ணன், ‘அர்ச்சுனா! மனிதர்களின் குண இயல்புகளுக்கு ஏற்ற விதத்தில் சாத்வீக, ரஜோ, தமோ முறைகளில் சிரத்தையும், ஈடுபாடும், வழிபடும் முறையும் அமைகின்றன.” என்று பதிலுரைத்தார்.

மேலும் அவர், ‘தன் மனதைச் சுத்தப்படுத்தவும், இறைவனை அடையவும் செய்யப்படுவது சாத்வீக வழிபாடு. தான் உயரவும், பணம், பட்டம், பதவிகளை அடையவும், விரும்பியதைப் பெறவும் செய்வது ரஜோ குண வழிபாடு. பிறருக்குத் தீங்கு விளைய வேண்டும் என்பதற்காகச் செய்யப்படுவது தமோ வழிபாடு.” என்று தொடர்ந்தார்.

அது வேண்டும், இது வேண்டும்; என்று கேட்பது வழிபாடல்ல. பிரச்னைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படுவதல்ல பிரார்த்தனை. உலக நன்மைக்காகவும், தான் பெற்றவைகளுக்காக நன்றி செலுத்தவும், மனத்துhய்மைக்கும், இறைவனை அடைவதற்குமாகச் செய்வதே உண்மையான வழிபாடும், பிரார்த்தனையும் ஆகும். அதோடு மட்டுமின்றி அவரவரின் உள் மன உணர்விற்கு ஏற்றவாறு வழிபாடுகளில் சிரத்தையும், அக்கறையும் ஏற்படுகி;ன்றது.

‘பொதுவாக சத்வ குணத்தில் நிலைத்திருப்பவர்கள் தெய்வ வடிவங்களை வழிபடுகின்றனர். பரம்பொருளால் படைக்கப்பட்ட பல்வேறு சக்திகளுக்கு உருவங்களை அளித்து, அத்தகைய தெய்வங்களை ஆகம முறைகளின்படி கோவில் போன்ற புனித ஸ்தலங்களில் ஸ்தாபித்து மந்திர, யாக, பூஜை முறைகளால் தமது நம்பிக்கையை அத்தெய்வீக உருவங்களில் நிலை நிறுத்தி வணங்கிப் போற்றுகின்றனர்.’

‘எங்கும், எல்லாமாக விரிந்து வியாபித்து இருக்கின்ற பிரம்மமே எனக்குள்ளும் இருக்கிறது என்னும் உண்மை தெரிய வருகின்றவரை இவர்கள் தங்களின் மேலான பக்தி உணர்வை இத்தகைய தெய்வ வடிவங்களை வழிபடுவதன் வாயிலாக வளர்த்துக்கொள்கின்றனர். மும்மூர்த்திகளையும், பிற மூர்த்தி வடிவங்களையும்,
இந்திரன், சூரியன், சந்திரன், பஞ்சபூத சக்திகள் என தேவர்களையும் உரிய குறியீடுகளின் வெளிப்பாடாக உருவாக்கித் தகுந்த முறையில் அவர்கள் பூரண நம்பிக்கையுடன் வணங்குகின்றனர்.”

‘புனிதமான சூழ்நிலையில் உண்மையான பக்தியில் தோய்ந்த நிலையில், அமைதியாக, எளிமையாக ஒரு தெய்வ வடிவத்தில், அதன் உயர் சக்தியில் மனதைக் குவித்துப் பூஜை செய்து வழிபடுவதே சத்வ குண வழிபாடாகும்.” தானும், தன் தெய்வமும் என்ற நெருக்கமான பக்தி உயர்வுதான் அந்த பூஜையில் நிறைந்திருக்கும்.

‘ரஜோ குணத்தில் இருப்பவர்களும் வழிபாடு செய்கின்றனர். ஆனால் அவர்களது வழிபாடு யட்சர்களையும், ராட்சதர்களையும் சேர்கின்றது. ஆடம்பரமும், தற்பெருமையும், ஆரவாரமும் கொண்டதாக அவர்களது பூஜை முறைகள் அமைகின்றன. அவர்கள் வழிபடும் தெய்வங்கள் அசுர சக்தி கொண்டவைகளாகக் கடுமையான பயங்கரத் தோற்றம் கொண்ட தேவதைகளாக, அல்லது பராக்கிரமத்துடன் வாழ்ந்த மனிதர்களை வழிபடுவதாக அமைகின்றது.”

‘தமோ குணத்தில் இருப்பவர்கள் பூதங்களையும், பேய்களையும், இறந்தவர்களையும் வழிபடுகின்றனர். ஒரு மனிதனைப் புதைத்த இடத்தில், கல்லறையில் மக்கள் பூ வைத்துப் பூசை செய்து வணங்கி வழிபடுகின்றனர். பேய்களையும், பிசாசுகளையும் வழிபடுவோர் இருக்கின்றனர். செத்துப் போனவர்களைக் குலதெய்வமாக வைத்துக் கொண்டாடுவோர் பலர். இவையெல்லாம் உண்மையான தெய்வ வழிபாடு அல்ல. மாறாகப் பரம்பரையான பழக்க தோஷத்தால் ஏற்பட்டவை. விருப்பு, வெறுப்புகளோடு கூடிய வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட சம்பிரதாயச் சடங்குகள் இவை.”

இவ்வாறு ஆசார அனுஷ்டானங்களோடு சத்வ குணத்தில் நின்று செய்கின்ற வழிபாடுகளும், ரஜோ குணத்தோடு கூடிய ஆடம்பர அமர்க்களத்தில் நின்று செய்கின்ற வழிபாடுகளும், அறிவின்மையால், பழக்க தோஷத்தால் தாமஸ குணத்தில் நின்று முறையின்றிக் கீழ் நிலையில் இருந்து செய்யப்படுகின்ற பூஜைகளும் உண்மையானவையல்ல என்பதைக் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு விளக்குகிறார். இவையெல்லாம் தன்னைத் தான் அறியாத நிலையில், தனக்கு வாய்க்கப்பட்ட குண இயலபுகளுக்குத் தகுந்தபடி செய்யப்படுபவையே என்றும் அவர் கூறுகின்றார்.

‘சிரத்தை இல்லாத மனிதர்கள் வீண் பெருமை, கர்வம். பேராசை, தீவிர ஈடுபாடு, பிடிவாதம் உள்ளவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் சாஸ்திர விதிகளுக்குப் புறம்பாகக் கொடுமையான தவத்தில் ஈடுபடுகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் ஐம்பூதங்களால் ஆன தனது சரீரத்தையும், அந்தர்யாமியாக உள்ள ஆத்மாவாகிய என்னையும் அவர்கள் துன்புறுத்துகிறார்கள். இத்தகைய அஞ்ஞானிகளை அசுர சுபாவம் உள்ளவர்களாகத் தெரிந்து கொள்ளலாம்” என்கிறார் அவர்.

புராணங்களில் விவரிக்கப்படுகின்ற அசுரர்கள் இத்தகைய கொடுந் தவங்களைச் செய்வதன் மூலம் தெய்வங்களிடம் வரங்களைக் கேட்டுப் பெறுவதை நாம் படித்திருக்கிறோம். அக்னி மூட்டி அதில் நின்று தவம் செய்தல், ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தல், தம் அங்கங்களை வெட்டித் தீயில் போடுதல், பட்டினி கிடத்தல் போன்ற மிகக் கொடிய விதங்களில் உடலை வருத்தி அவர்கள் தவம் செய்வார்கள்.

இத்தகைய தவங்கள் அகங்காரத்துடன் கூடியவை. மேலும் இவர்கள் அழிவைத் தரக்கூடிய வரங்களையே கேட்டுப் பெறுவார்கள். நான், எனது, எனக்கு என்று தான் இவர்களின் வரங்கள் அமையும். இன்றைய சமூகத்திலும் இத்தகைய அசுர வழிபாடு இருக்கின்றது. அலகு குத்துதல், தீ மிதித்தல், சாட்டையால் அடித்துக்கொள்ளல், கையில் சூடம் ஏற்றுதல், அக்கினிச் சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், பறவைக்காவடி எடுத்தல் எனப் பார்ப்பவர்களைத் துடிக்கச் செய்யக்கூடிய கொடுமையான விதங்களில் தங்கள் பிரார்த்தனையை இவர்கள் செலுத்துவார்கள். இது முறையான வழிபாடு அல்ல. அறியாமையுடன் செயல்படுவது.

இந்தியாவின் வட பகுதிகளில் காளியை வழிபடுபவர்கள் முள் பதித்த சாட்டையால் தம்மை அடித்துக்கொள்வார்கள். குர்பானி என்று வாளினால் உடலைக் கீறிக்கொள்வார்கள். இவையெல்லாம் பிரார்த்தனை என்று சொன்னாலும் கொடூரமானவை.

எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும் மேற்சொன்ன விதங்களில் இன்னும் பல நாடுகளில், பல மதத்தினரும் தமது வெறியை வெளிப்படுத்தும் விதத்தில் தமது பிரார்த்தனையாகப் பலவித கொடுமையான நடவடிக்கைகளில் உடலை வருத்தும் வழக்கம் இருக்கின்றது. எடுத்துச்சொல்லி யாரையுமே திருத்திவிட முடியாது.

ஒவ்வொருவரும் தாமாகவே இதைப்பற்றிச் சிந்தித்து இதிலுள்ள அர்த்தமற்ற தன்மையைப் புரிந்துகொண்டு தமது அறியாமையை நீக்கிக்கொள்ள வேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s