மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 57

சாஸ்திர முறைகள் பற்றி ஒன்றும் தெரியாவிட்டால், தக்க பெரியவர்களான சான்றோர்களைச் சென்றடைந்து அவர்கள் கூறுகின்ற நல்லுரைகளின்படி செயல்பட முற்பட வேண்டும். சத் சங்கத்தை சார்ந்த விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

“உனக்கு மற்றவர் என்ன செய்ய வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாயோ அதை நீ மற்றவருக்குச் செய்!” என்று அனேகமாக எல்லா மகான்களுமே சொல்லியிருக்கின்றனர். இந்த நெறியை மட்டும் நாம் நம் இயல்பாக ஏற்றுக்கொண்டு நடந்தால் மற்ற எல்லா தெய்வீகப் பண்புகளுமே இதனைப் பின்தொடர்ந்து நம்மிடம் வந்து சேர்ந்துவிடும். ஏனெனில் எதிரில் இருப்பவரை நாமாக நினைக்கின்றபோது அவர்களிடம் அவமதிப்பாக, அன்பின்றி, அசுரத்தனமாக நடந்துகொள்ள நம்மால் முடியாது.

மேலும் பார்த்தசாரதி அருளிய தெய்வீக நெறிகளை முறையாக நாம் பின்பற்றி வருகின்றபோது நம்மிடம் உள்ள இயலாமை, ஆற்றாமை போன்ற குறைபாடுகளுக்கும் அது ஒரு அன்பான சிகிச்சை முறையாக அமையும். மேலும் தெளிந்த அறிவும், பகுத்தறிகின்ற தன்மையும் கொண்டவர்களாக நாம் இருந்தால், ஏதாவது ஒரு கட்டத்தில் நான் செய்வது பிழை, நான் செல்கின்ற பாதை தவறான பாதை என்ற உண்மை புரிந்துவிடும். krisha_says

எனவே அசுர இயல்பு கொண்டு இதுவரை வாழ்ந்தவர்கள் கீதை சொன்ன உண்மைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு உடனடியாக ஆன்மீக வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அன்புள்ளம் கொண்டவர்களாக மாற வேண்டும். பக்தி நெறியில் ஈடுபட வேண்டும். சாத்வீகமான சைவ உணவையே உண்ணப் பழக வேண்டும். சத் சங்கத்திற்குச் சென்று அதில் சேர்ந்து பயனடைய வேண்டும். ஆன்மீக நூல்களைப் படிப்பதையும், ஞானிகள், மகான்கள் ஆகியோரின் வாழ்க்கை முறைகளைப் படித்து அறிவதையும், பகவத்கீதை, இதிகாசங்கள் ஆகியவற்றைப் படிக்கவும் ஆர்வம் கொள்ள வேண்டும். நல்ல மனிதர்களிடம் நட்புகொள்ள விருப்பம் ஏற்பட வேண்டும். அதோடுமட்டுமின்றி நம்மிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களைப் படிப்படியாகக் கைவிட வேண்டும்.

தெய்வ அருளும், பூர்வஜென்மப் புண்ணியப் பலனும் இருந்தால் அசுர குணங்கள் கொண்டவர்களாக வாழ்ந்தாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் அந்தத் தீய மனிதன் மனம் திருந்தி ஆண்டவனை வழிபட்டு, மேன்மையைப் பெற முயன்றால் அவனுக்கு நிச்சயம் நற்பலன் கிட்டும். அப்படிப்பட்டவர்கள் தங்களின் மன மாற்றத்தால் விரைவிலேயே அறநெறிச் செல்வர்களாக மாற முடியும். திருந்தி மேம்பட்ட அத்தகையவர்களிடம் நற்பண்புகளாகிய இறையருட்செல்வம் வளரும்.

பகவத்கீதையைப் படிப்பதற்கும், யாராவது உபதேசமாக சொல்வதைக் கேட்பதற்குமே இறையருள் இருந்தால் தான் முடியும் என்று எம் குருநாதர் அடிக்கடி சொல்வார். எல்லோராலும் இதனைத் தொடர்ந்து கேட்கவோ அல்லது வாசிக்கவோ முடியாது. எத்தனையோ தடைகள் வரும் என்பார் அவர். அப்படி எழுகின்ற தடைகளையெல்லாம் மீறி இக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து வாசித்து வருகின்ற பெருமக்கள் நிச்சயமாகத் தெய்வீக இயல்புகளைத் தம்மில் நிறைத்துக்கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்; அசுரத்தன்மையிலிருந்து விடுபட வேண்டும் என்னும் விருப்பம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

இதை வாசிப்பதோடு நிறுத்தி விடாமல் நன்றாக இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். தங்களுக்குத் தாங்களே அடிக்கடி சுய பரிசோதனை நடத்தி மதிப்பீடு செய்ய வேண்டும். தமது அறியாமையை உணர்ந்துகொள்ள வேண்டும். குறை நிறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற நற்குணங்களை மேலும் வளர்த்து, வேண்டாத தீய குணங்களைப் படிப்படியாகப் போக்கிக்கொள்ளவும் வேண்டும். அதாவது இதுவரை இருந்த தமது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நான் மாறமாட்டேன்! நீ உன்னை எனக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டு, என்னை அனுசரித்து நடந்துகொள்! என்று பிறரை வற்புறுத்தாமல், தமது தவறான போக்கை உணர்ந்து பிறர் விரும்பும்படி, பிறர் மதிக்கும்படி இனி நாம் நடந்துகொள்ள வேண்டும். பிறரைத் திருத்த முற்படாமல் அல்லது குறை கூறாமல் நாம் திருந்த முயல வேண்டும். இப்படியெல்லாம் தொடர்ந்து நம்மை நாமே கவனித்து வரவும், அருள்நெறியில் அனைத்தையும் செய்யப் பழகவும் ஆரம்பித்தால், நிச்சயம் கண்ணன் காட்டிய வழி நமக்கு மேன்மையைத் தரும். நிம்மதியைத் தரும். மதிப்பைக் கொண்டு வரும் என்பது உறுதி.

அத்தியாயம் 17:

சிரத்தா த்ரய யோகம்

சிரத்தை என்ற சொல் தான் இங்கு சிரத்தா என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிரத்தை என்றால் நம்பிக்கையும், அக்கறையும் ஆகும். த்ரயம் என்ற சொல்லுக்கு மூன்று என்று பொருள். ‘சிரத்தாவான் லபதே ஞானம்” என்கிறது கீதை. அக்கறையும், நம்பிக்கையும் கொண்டவருக்குத்தான் ஞானம் ஏற்படும். அதாவது சாத்திரங்கள் சொல்கின்ற உண்மைகளின் மீதும், அவற்றை எடுத்து போதிக்கின்ற குருவின் மீதும் நம்பிக்கை கொண்டு, அவர் உபதேசிக்கின்ற, நம்மைத் திருத்தி உயர்த்தக்கூடிய ஞான நல்லுரைகளை நாம் ஏற்று, கேட்டதோடு விட்டுவிடாமல் அக்கறையுடன் அவற்றை நமதாக்கி நம் வாழ்க்கையைச் செம்மையுற வாழ வேண்டும்.

இந்த சிரத்தை என்பது தெய்வீகமானது, தெய்வீகமல்லாதது, அரக்கத்தனமானது என மூன்று வகைப்படும். அக்கறையுடனும், நம்பிக்கையுடனும் நாம் கற்கின்ற சாத்திர அறிவு உடல் உபாதைகளிலிருந்து, மன உணர்ச்சிகளின் பிடியிலிருந்து, புத்தியின் சிக்கல்களிலிருந்து நம்மை விடுவிக்கிறது. இது தர்மம், இது அதர்மம் என நமக்குக் கற்பிக்கப்படுகின்ற நெறிமுறைகளே சாத்திர தர்மம் ஆகும். இதைத்தான் நாம் நமது கலாச்சாரம் என்று போற்றிப் பாதுகாத்து வருகிறோம்.

இராமாயணம், மகா பாரதம் போன்ற இதிகாசங்களிலும், புராணங்களிலும் இந்த தர்மநெறிகள் மிக விரிவாகவும், தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் நாமோ அந்தக் கதைகளில் வருகின்ற முரணான கருத்துக்களில் மட்டும் கவனத்தைச் செலுத்தி வீண் விவாதம் புரிந்துகொண்டிருக்கின்றோமே தவிர அப்படிச் சொல்லப்பட்டுள்ள தர்மநெறிகளை மனதில் பதித்துக்கொண்டு அதன்படி நடக்க முயல்வதில்லை. இதைத்தான் ‘படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்” என்ற பழமொழி சுட்டி நிற்கிறது போலும். ஆயிரம் புத்தகங்கள் படிப்பதால் பயனில்லை. உள்ளம் பண்பட வேண்டும். பக்குவப்பட்ட மனம்தான் தெய்வீகமாக மாறும். மலரும்..
(தொடரும்..)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s