மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 56

கண்ணனின் தெளிவான பட்டியல்களின் மூலம் நாம் இப்போது தெய்வீகக் குணங்கள், அசுரத்தனமான குணங்கள் எவையெவை என்பதைத் தெரிந்துகொண்டு விட்டோம். இப்போது நாம் நம்மிடம் உள்ள நல்ல, உயர்ந்த குணங்கள் யாவை? கெட்டதான தீய குணங்கள் என்னென்ன? என்று முதலில் சிந்திக்க வேண்டும். அடுத்து, என்னென்ன நல்ல குணங்கள் நம்மிடம் இருக்கிறதோ அவற்றை வளர்த்துக்கொள்ளவும், என்னென்ன நல்ல குணங்கள் நம்மிடம் இல்லையோ அவற்றை ஏற்படுத்திக்கொண்டு ஏற்றுக்கொள்ள முற்படவும் வேண்டும். அதோடு நம்மிடம் என்னென்ன அசுர குணங்கள் இருக்கின்றன என்பதை ஆராய்ந்து அவற்றை வளர விடாமல் கட்டுப்படுத்திப் பின்னர் அவற்றை அறவே அழித்து ஒழித்துவிட சிரத்தையும், அக்கறையும்; கொண்டு கண்காணிப்போம். பகவத்கீதை நமக்குக் காட்டும் உயர்விற்கான உன்னத பாதை இது.

மேலும் கிருஷ்ணர், ‘தெய்வீகக் குணங்களாகிய செல்வம் பிறவிப் பெரும் தளைகளைப் போக்கி வீடுபேறு அளிக்க வல்லது. அசுர சம்பத்து எனப்படும் தீய குணங்கள் பந்தங்களை ஏற்படுத்தி, ஜனன மரணச் சுழலில் சிக்க வைக்கிறது” என்று அர்ச்சுனனை எச்சரிக்கின்றார். அதோடு அவர், “அர்ச்சுனா! நீ கவலைப்படாதே! நீ தெய்வீக சம்பத்தைப் பெற்றிருப்பவன்!” என்று அவனை ஆசுவாசப்படுத்துகிறார். மேலும் தொடர்ந்து அவர் அசுரத்தன்மை கொண்டவர்களின் நடவடிக்கை பற்றி இவ்வாறு விவரிக்கின்றார்.

“இந்த உலகில் நல்லவர்கள், கெட்டவர்கள் என இருவகை மனிதர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் அசுரர்களைப்பற்றி விரிவாகக் கேட்டுக்கொள். அசுர குணம் கொண்டவர்கள் எதில் ஈடுபட வேண்டும், எதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்னும் முறையை அறிந்துகொள்வதில்லை. அவர்களிடம் தூய பக்தி, தூய வழிபாடு, தூய நடத்தை ஆகியவை இருப்பதில்லை. அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை.”

“அவர்களின் பார்வையே விபரீதமானது. அவர்களது கருத்து, இந்த உலகம் பொய், இதில் உள்ள சாஸ்திரம், அறநெறி, தர்மம் எதுவும் உண்மையில்லை; இவ்வுலகில் தர்மம், அதர்மம், புண்ணியம், பாவம் முதலிய நெறிகளுக்குச் சிறிதும் மதிப்பு கிடையாது; இந்த உலகைப் படைத்தவன் கடவுள் இல்லை; ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பினார்கள்; அவர்களின் சேர்க்கையால் இந்த மானிட சமூகம் பிறந்தது; உலகம் உருவாயிற்று. ஆகையால் உலக உற்பத்திக்குக் காரணம் காம இச்சைதான்; இதைத் தவிர வேறு எதுவும், எவரும் காரணமில்லை போன்ற விபரீத எண்ணங்கள் கொண்டவர்களாகவே அவர்கள் திகழ்கின்றனர்.”

“இப்படிக் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட அவர்கள் ஆத்மாவை ஒப்புக்கொள்வதில்லை. அவர்களின் அறிவு கீழ்த்தரமானது. அவர்களது செயல்கள் உக்கிரமாக, அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. அசுரர்கள் இவ்வுலகிற்கே எதிரிகள். இத்தகைய அசுரத்தன்மை கொண்டவர்களின் திறமை, வலிமை எல்லாம் பிறரை அழிப்பதற்காகவே ஏற்பட்டிருக்கிறது.”

“மேலும் அந்த அசுரர்கள் எப்போதுமே நிறைவேறாத பேராசைகளுக்கு அடிமையாகின்றார்கள். பகட்டு, செருக்கு, மமதை வெறி நிறைந்து செயல்படுகின்றார்கள். மிக மோசமான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் மதி மயக்கம் காரணமாகப் பல தீய கருத்துக்களைப் பிடிவாதமாக மேற்கொண்டு சமூகத்தைச் சீர் குலைத்து வருகின்றார்கள்.”

இப்படி ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் மேலும் அசுரர்களின் குணக் குறைபாடுகளை அர்ச்சுனனுக்குச் சொல்லிக்கொண்டே வருகிறார். ‘அவர்கள் சாகும்வரை நிம்மதியை இழந்து பெரும் கவலைகளுக்கும், குழப்பங்களுக்கும் அடிமையாகின்றனர். உலகத்தில் வாழ்வது உண்டு, உறங்கி, சுகித்திருப்பதற்கே என்று தீர்மானித்து, சுயநலப் போக்குடன் பொருள்களைச் சேகரிப்பதிலும், அவற்றைச் சேமிப்பதிலும், அனுபவிப்பதிலேயுமே ஈடுபட்டு விடுகின்றனர்.”

‘ஏராளமான ஆசைகளில் சிக்கிய அவர்கள் காமம், குரோதம், மதம், மாச்சர்யம் முதலிய தீய இயல்புகளை மேற்கொள்கின்றனர். சுகபோக வாழ்க்கையை உண்மையென நம்பி அநியாய வழிகளில் பொருள்களை ஈட்டுகிறார்கள். இதற்காகப் பல முறைகேடுகளை மேற்கொள்கிறார்கள். பணப் பித்து பிடித்தவர்களாகச் செயல்படுகிறார்கள். மேலும் தாம் எல்லாமே மிகச் சரியாகச் செய்வதாக மமதை கொண்டு, தம் மனம் போன போக்கில் அறியாமையுடன் கூடிய நிலையில் யாகங்களைச் செய்தும், தான தர்மங்களைச் செய்தும், கேளிக்கைகளில் மூழ்கியும் தம்மைத் தாமே நல்லவர்கள் என்று எண்ணிக்கொண்டு மதி மயங்கி பயங்கர நரகத்தில் வீழ்கின்றனர்.”

‘இவர்கள் நற்காரியங்களைச் செய்தாலும், பகட்டாகவும், போலித்தனமாகவும் செய்கின்றாகள். தம் பெருமையைப் பறைசாற்றிக்கொள்ளவே இவற்றைச் செய்கின்றார்களே தவிர உள்ளம் தோய்ந்து, முறைப்படி ஒழுங்காகச் செய்வதில்லை. பெயரும், புகழும் பெற்றால் போதும் என்ற எண்ணத்தில் எல்லாவற்றையும் செய்கிறார்கள்.”

‘இவர்கள் இவ்வாறு செயல்படுவதற்குக் காரணம் அகந்தை, வீண் பிடிவாதம், கர்வம், பேராசை, வெஞ்சினம் ஆகியவற்றின் பிடியில் அகப்பட்டு அவற்றால் இயக்கப்படுவது தான். மேலும் இந்தத் தீயவர்கள் தம்மிடம் உள்ள அந்தர்யாமியாக விளங்குகின்ற என்னை மதிப்பதில்லை. மாறாக வெறுக்கின்றனர். என்னிடமும், என் பக்தர்களிடமும் உள்ள பண்புகளை அவர்கள் குற்றமாக, தீமையாகக் கருதுகிறார்கள்”.

‘இப்படி அவர்கள் தூய்மையற்று நீசத்தனமாகத் திகழ்வதால் அவர்களை நான் மீண்டும் மீண்டும் நாய், கழுதை, புலி, காக்கை, ஆந்தை, கழுகு, பாம்பு, தேள் முதலிய அசுரத்தன்மை கொண்ட இனங்களில் பிறந்து மடியும்படி செய்து விடுகிறேன். இப்படிக் கீழ் நிலையிலேயே கிடந்து உழல்வதால் அந்த மூடர்கள் என்னை அடைய முடியாமல் அசுரப் பிறவிகளாகவே பிறக்கிறார்கள். பிறகு அவற்றை விட மோசமான, பயங்கர நரகங்களில் வீழ்கிறார்கள்.”

‘இவ்வாறு அவர்கள் கீழ்நிலைப் பிறப்பிலும், நரகத்திலும் மாறி மாறி உழல்வதற்குக் காரணம் அவர்களிடம் உள்ள தீவிர இச்சை, குரோதம், பேராசை ஆகியவையே. இந்த மூன்று தீய குணங்கள் யாரிடம் உள்ளனவோ அவர்கள் ஒருநாளும் உயர்வடைய முடியாது. எனவே இம்மூன்று தீய குணங்களையும் விட்டுவிட வேண்டும்.”

மேலும் பரந்தாமன் புகல்கின்றார், ‘குந்தியின் புதல்வனே! எந்த மனிதன் நரகத்தில் கொண்டு சேர்க்கக்கூடிய அந்த மூன்று தீய பண்புகளையும் தன்னிடம் சேர விடாமல், தன் ஆத்ம நலனுக்காக அறநெறியுடன் வாழ்கிறானோ அவன் மேலான நற்கதியை அடைகின்றான். சாஸ்திரங்களுக்குப் புறம்பான செயல்களை ஒதுக்கித் துறந்துவிட்டுத் தனது மேல் நிலை அடைவதற்கான முயற்சியில் பற்றுதல், பேராசை இல்லாமல் கடமைகளைச் செய்து வருபவன் நன்னெறியாளனாக மதிக்கப்படுகின்றான்.”

‘எந்த மனிதர் சாஸ்திர விதிகளைப் புறம் தள்ளித் தம் மனம் போனபடி நடக்கிறார்களோ, தம் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றபடி செயலாற்றுகின்றார்களோ, நல்லவைகளை ஒதுக்கியும், தீயவைகளை மேற்கொண்டும் வாழ்கிறார்களோ அவர்களுக்கு நற்கதி கிடைப்பதில்லை. மேலும் அவர்களுக்கு அந்தக்கரண சுத்தி ஏற்படுவதில்லை. (அதாவது உள்ளத்தில் துhய்மை ஏற்படாது). அவர்களுக்கு உண்மையான ஆத்ம சுகம் கிட்டுவதில்லை. நற்கதி ஏற்பட வாய்ப்பே இல்லை.”

இவ்வாறு பகவான் அருளிய நல்லுரைகளைக் கவனத்துடன் கேட்ட அர்ச்சுனன், ‘நல்ல செயல், தீய செயல் ஆகியவற்றை எவ்வாறு அறிவது கண்ணா?” என்று வினவுகின்றான். அதற்குக் கிருஷ்ணர், ‘சாஸ்திரங்களில் சொல்லப்படுகின்ற அறநெறிகளை நன்றாகத் தெரிந்துகொண்டு அவற்றை முறையாகச் செய்து வர வேண்டும். சாஸ்திரங்களால்; மறுக்கப்பட்ட செயல்களைத் தீயவை என அறிந்து செய்யாமல் விட்டுவிட வேண்டும். செய்யத்தக்கன, செய்யத்தகாதன என அனைத்துச் செயல்களுக்கும் சாஸ்திரப் பிரமாணம் தான் எடுத்துக்காட்டு” என்று கூறி முடிக்கின்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s