மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 45

atman20. சர்வம் பிரம்ம மயம்:
சர்வம் பிரம்ம மயம் என எல்லாவற்றிலும் பரமாத்மனைத் தரிசிக்கும் தகுதி பெறுதலே நன்னெறிகளின் இறுதிப் பயிற்சியாகும். இந்த ஏகத்வம் எனப்படும் சமப்பார்வை நம்மில் ஏற்பட்டுவிட்டால்; எல்லாமே பிரம்மத்தின் வெளிப்பாடு என்கிற உண்மை புலப்பட்டுவிடும். பிறகு பேதபாவம் நீங்கி உலகமே அன்பு மயமாக, ஆனந்தமயமாகப் பிரம்ம வடிவாகக் காட்சியளிக்கும். எதிரில் இருப்பவனும் நானே என்ற அடிப்படை உண்மையைப் புரிந்துகொண்ட பின் நம்மால் யாரையாவது வெறுக்க முடியுமா? பகை கொள்ள முடியுமா? கேவலமாகப் பேச முடியுமா? அவன் நானல்லவா! நடப்பவை எல்லாம் கர்மாவால் அல்லவா இப்படி ஏறுக்கு மாறாக நடக்கின்றன! இப்படி யோசித்தால் எல்லாம் சரியாய்ப் போய்விடுமே!

இப்படி பகவானால் விளக்கப்பட்ட இந்த இருபது தெய்வீகப் பண்புகளை நன்றாகச் சிந்தித்துத் திரும்பத் திரும்பக் கருத்தில்கொண்டு, அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலமே இந்த ஷேத்திரமாகிய சரீரத்தின் உண்மைத் தன்மை தெரிய வரும். சரீரத்தை ‘இது’ என்று, தன்னிலும் வேறுபட்ட ஒன்றாகத் தனக்குத் தரப்பட்ட ஒரு கருவியாகக் காண்பது தான் ஞானம். இதற்கு மாறாக சரீரத்தைத் தன் சொரூபமாக, இது நான் என்று நினைப்பது அஞ்ஞானம்.

இந்த இருபது தன்மைகளை நமதாக நாம் ஏற்பதன் மூலம், நாம் வாழும் முறை செம்மையடைகிறது. மற்றவரைப்பற்றி ஆராய்ந்து குற்றங் குறைகளைத் தேடிக் கண்டுபிடித்துச் சண்டை பிடித்துக்கொண்டிருந்த பழக்கம் போய், என்னிடமுள்ள குறைகளைப் பற்றி ஆராய்ந்து உற்று நோக்கிச் சரிப்படுத்திக்கொண்டு வந்து, நல்லியல்புகள் வாய்க்கப் பெற்றவராக மாறுகின்ற அதிசயம் நம்முள்; நிகழ்கின்றது.

இந்நிலையை எய்துவதால் நம்மில் ஆன்ம முன்னேற்றமும் ஏற்படுகின்றது. அதே சமயம் வெளி உலகத்தில் நம் இயல்புகள் கவனிக்கப்பட்டு மதிக்கப்படுகின்றன. நன்னெறிகளைக் கடைப்பிடித்து வாழ்பவரை இந்த சமூகம் புரிந்துகொள்கிறது. மதிப்பளிக்கிறது. ஷேத்திரக்ஞன் தன்னுள் இருந்து செயல்படுவதை அறிந்த ஷேத்திரம், பிறகு உடல் என்பது மாறிக் கோவில் என்றாகி விடுகின்றது. அதனால் தான் மகான்களை மக்கள் கைகூப்பி வணங்குகிறார்கள்.

ஆத்மாதான் எல்லாவற்றிற்கும் ஒளியூட்டுகின்றது. நம் மனதை, புத்தியை, எண்ணங்களை, ஆசைகளை நமக்கு உணர்த்துவது ஆத்மா. நல்லது கெட்டது எது என்றாலும் அவற்றிற்கு ஆத்மா தான் ஒளி தருகின்றது. ஆனால் அவற்றால் அது பாதிப்படைவதில்லை. இந்த ஆத்மாவைத்தான் நாம் சாதாரணமாக உயிர் என்கிறோம். இந்த உண்மை நம்மால் அறியப்பட்டவுடன் மாயை நம்மிடமிருந்து விலகிவிடும். என்னை இயக்குபவன் எங்கும் நிறைந்த சச்சிதானந்தப் பரம்பொருளே என்பது புரிந்தவுடன் நாம் இந்த வாழ்க்கையை சரியாகக் கையாளத் துவங்கி விடுவோம்.

எனவே கர்மாவின் வழி நம் வாழ்க்கையைச் செலுத்தாமல் ஆத்மாவைச் சரணடைந்து, தெய்வீக அம்சங்களாகக் கீதையில் சொல்லப்பட்டிருக்கும் இருபது நன்னெறிகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் கா;மாவின் பிடியிலிருந்து நம்மால் விடுபட முடியும்.

இதுவரை இந்த உடலைப்பற்றி, இந்த உடலில் உறையும் ஆத்மன் பற்றி அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்த்து, நாம் மேற்கொள்ள வேண்டிய இருபது நன்னெறிகளைப் பற்றியும் விரிவாகத் தெரிந்துகொண்டுள்ளோம்.

இனி ஷேத்திரக்ஞனின் தன்மைகளைப்பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் விவரிக்கின்றார். ஆத்மாவின் விரிவே பரம்பொருள். பரம்பொருளின் சிறு அணுவே ஆத்மன். நாம் அறிய வேண்டிய அரிய தத்துவம் இது. இதை அறிவதால் இனி பிறவா நிலையினை நாம் அடைய முடியும். இதைப்பற்றிக் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்குச் சொல்வது, “தொடக்கமும், முடிவும் இல்லாத பரப்பிரம்மம் அது. அதை உள்ளது என்றோ இல்லாதது என்றோ சொல்ல முடியாது. அது இல்லாத இடமோ, பொருளோ கிடையாது”.

பரமாத்மன் எல்லா இடங்களிலும் நீக்கமறப் பரவி நிறைந்திருக்கிறது. புலன்களுக்கு அப்பாற்பட்ட அது எல்லாப் புலன்களுக்கும் ஒளியூட்டி செயல்பட வைக்கிறது. அதற்கு எதிலும் பற்றுதல் இல்லை. ஆனால் உலகம் முழுவதையும் பேணிக் காப்பது அது தான். அதற்கென்று தனிக் குணங்கள் இல்லை. ஆனால் அது குணங்களை ஆண்டு அனுபவிக்கும் திறன் பெற்றது. உயிர் இருப்பதால்தானே உடல் செயல்படுகின்றது. உயிரில்லாத உடல், கட்டையாக விழுந்துவிடும் அல்லவா!

பல எதிரிடையான தன்மைகள் ஒரே பரமாத்ம தத்துவத்தில் கலந்துள்ளன. ஆனால் பிரம்மமாகிய அதில் இதனால் இந்த எதிர்விளைவும் ஏற்படுவதில்லை. ஏனெனில் அசையும் பொருள், அசையாப் பொருள் என்று எல்லாவற்றிலும், அப்பொருள்களின் உள்ளேயும் வெளியேயும் அதுதான் நிரம்பியுள்ளது. எல்லாப் பொருள்களாகவும், பிராணிகளாகவும் அதுதான் விளங்குகிறது. எங்குமே அதைத் தவிர வேறு எதுவுமே இல்லை. மிகத் தொலைவிலும் அதுதான் இருக்கிறது. மிக அருகிலும் அது தான் இருக்கிறது. இங்கு அது எனப்படுவது பிரம்மம்.

நேற்று, இன்று, நாளை என்னும் மூன்று காலங்களிலும் அது இருக்கிறது. பொருள்களுக்கு முன்பும்; அது தான் இருந்தது. பொருள்களுக்குப் பிறகும் அது தான் இருக்கும். பொருளாக இருப்பதும் அதுதான். அது இல்லாத இடமே இல்லை.

இதைச் சரியாகப் புரிந்துகொள்ள இந்த விளக்கம் உதவுமென்று தோன்றுகிறது. குயவன் பானையைச் செய்வதற்கு முன் அந்தப் பானை மண்ணாக இருந்தது. அந்த மண்ணைப் பிசைந்து பானை என்ற வடிவத்தை உருவாக்கியதும் அது பானை என்றாகிவிடுகிறது. அந்தப் பானையை உடைத்துவிட்டால் அது மீண்டும் மண்ணாகி விடுகின்றது. அதுபோல இந்த உடல் உருவாவதற்கு முன் இது வெளியாக இருந்தது. பிறந்தபின் உடல் என்றாகிறது. உடல் கீழே விழுந்துவிட்டால், அதனுள்ளே உறைந்த பிரம்மம் மீண்டும் பரவெளியாகிவிடுகின்றது. இதைத்தான் கிருஷ்ணர், பொருள்களுக்கு முன்பும் அதுதான் இருந்தது. பொருள்களுக்குப் பிறகும் அது தான் இருக்கும். பொருளாக இருப்பதும் அதுதான். அது இல்லாத இடமே இல்லை! என்று கூறுகின்றார். புரிகிறதா?

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நாம் முன்பே ஓர் அத்தியாயத்தில் பரப்பிரம்மத்தைப் பற்றி சப்தப்பிரமாணம் வழியாக மட்டுமே அறிய முடியும் என்று பார்த்திருக்கிறோம். அது, அது என்று நான் எழுதுவதைப் படிக்கும்போது சலிப்படைந்துவிடக்கூடாது. அதைப்பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் விவரித்ததையே நான் இங்கு எழுதிக்கொண்டு வருகிறேன். எனவே, இந்த உண்மையைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வ முனைப்புடன், மிகக் கவனமாகப் படித்துப் பிறகு இதைப்பற்றிச் சற்று நுணுக்கமாக சிந்தித்துப் பாருங்கள்.

மேலாகவும், கீழாகவும், சமீபத்திலும், தூரத்திலும் இருப்பது அதுவே! என்பது கீதா வாக்கியம். இதன் பொருள், இருப்பது அது மட்டும் தான் என்பதே. ஆனால் இவ்வளவு வேறுபாடுகள் நமக்குத் தெரிகின்றதே! என்றால் அது தான் மாயையின் வெளிப்பாடு. பிரம்மம், தானே இத்தனை விதங்களாகத் தன்னை வெளிப்படுத்தி விளையாடுகிறது. அதற்கு மாயை உதவி செய்கின்றது. மாயையும் பிரம்ம விளையாட்டே.

இந்த உண்மையை மிக நன்றாகப் புரிந்துகொண்டு விட்டால், பிறகு இந்த சம்சார பந்தத்தில் சிக்கி உழன்று கொண்டிருந்தாலும் இவற்றால் பாதிப்பு அடையாமல் விலகி நின்று பார்த்து விழிப்புணர்வுடன் செயல்பட முடியும்.

மேலும் பரமாத்மாவைப்பற்றி கீதை இவ்வாறு கூறுகின்றது. “பரமாத்மா ஒன்றே என்றாலும் படைக்கப்பட்ட படைப்புக்களில் வெளிப்படும்போது அவர் பேதங்கள் கொண்டவராய்த் திகழ்கின்றார். படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் புரிபவரும் அவரே!”

உடல், மனம், புத்தி ஆகியவற்றால் நாம் பெறுகின்ற அனுபவங்கள் பரமாத்மாவிடமிருந்தே வெளிப்படுகின்றன. அவர் எல்லா ஜோதிகளுக்கும் ஒளியூட்டும் ஜோதி. பரமஜோதியான அவரிடத்தில் அஞ்ஞானம் கிடையாது. ஞான ரூபமும், அறிய வேண்டிய தத்துவமும் அவரே. எல்லா ஜீவராசிகளின் இதயத்திலும் அவர் குடியிருக்கின்றார்.

ஷேத்திரம், ஞானம், அறியத்தக்கது ஆகிய இம்மூன்றையும் முறையாக அறிந்துகொள்கின்ற பக்தன் இறைத்தன்மையை அடைகின்றான். அந்நிலையில், தான் பரமாத்மனோடு இரண்டறக் கலந்துவிட்ட உணர்வு அவனுக்குள் ஏற்படுகின்றது என்கிறார் கிருஷ்ணர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s