மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 43

10. ஸ்திரத் தன்மை என்னும் தன்னைக் கட்டுதல்:

தன்னைப்பற்றி அறிதலாகிய ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபடுகின்ற ஒருவன், இனிப் புலன் வழி சென்று உலக விவகாரங்களில் தீவிர விருப்பம் கொள்வதில்லை என்னும் வைராக்கியத்தை மேற்கொள்வதே ஸ்திரத் தன்மை எனப்படுகிறது. புலன் அடக்கம் என்னும் ஸ்திரத்தன்மை ஆன்மீக சாதகனுக்கு மிக மிக அவசியம்.

ஒரு கதையின் மூலம் இதை ஆராயலாம், வாருங்கள். ஓரிடத்தில் ஆன்மீகச் சொற்பொழிவைக் கேட்ட ஒருவன், நான் இனி இந்த உலக இன்பங்களையெல்லாம் அறவே துறந்துவிட்டுத் தவம் செய்யப் போகிறேன்! என்று சொல்லிக்கொண்டு மலை சார்ந்த ஒரு கோவிலுக்குச் சென்று அதன் பிரகாரத்தில் ஒரு பக்கமாக அமர்ந்தான். பிறகு அவன் தனக்குள், ‘என்னால் ஐம்புலன்களையும் அடக்கி ஆள முடியும். எனக்கு மன உறுதி மிக அதிகம். எனவே நான் கண்களைத் திறந்துகொண்டே தியானம் செய்யப் போகிறேன்! என்று கண்களைத் திறந்தபடி அசைவின்றி மௌனமாக அமர்ந்திருந்தான். அரை மணி நேரம் சென்றது. அந்த மலைக் கோவிலுக்கு சாமி கும்பிட ஓர் அழகான பெண் வந்தாள். அவள் நடந்து வருவதைப் பார்த்தவன், அவள் கோவில் சன்னதிக்குள் நுழைகின்றவரை தன் கண்களைத் திருப்பவில்லை. அவள் மறைந்த பிறகு தான் இவனுக்குச் சுயநினைவு வந்தது. “சேச்சே! என்ன முட்டாள்தனம் செய்துவிட்டேன். அவளையே வெறித்துப் பார்த்து என் தவத்தை வீணாக்கிவிட்டேனே! என்று தன்னையே கடிந்துகொண்டு, சரி! கண் திறந்திருந்ததால் தானே பார்க்கும்படியாயிற்று. இனிக் கண்களை மூடியே தவம் செய்வோம்! என்று திரும்பி உட்கார்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டு இருந்தான். சற்றுநேரம் சென்றது. அமைதியைக் குலைக்கும் வண்ணம் ஜல் ஜல் என்று கொலுசு சப்தம் கேட்டது. அந்தப் பெண்தான் வருகிறாள்! என்று அவன் நினைத்தான். அடுத்த நிமிடம், அடச்சே! கண்களை மூடியும் காது இப்படிப் பழி வாங்குகிறதே! என்று அவன் தன் காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டான். பிறகு சத்தம் எதுவுமில்லை. அந்தப் பெண் பிரகாரத்தை வலம் வந்துவிட்டு இவனைக் கடந்து சென்றாள். அப்பொழுது அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை மலரின் வாசனை காற்றில் மிதந்து வந்தது. அட! அவள் இப்பத்தான் பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வருகிறாள் போலிருக்கிறது! என்றது அவன் மனம். உடனே அவன் திடுக்கிட்டான். ஏதேது! புலன்களை அடக்கிச் சும்மா இருந்து தவம் செய்வது இவ்வளவு கஷ்டமா? இந்த மனம் சும்மா இருக்க மாட்டேன் என்கிறதே! என்று தலையில் அடித்துக்கொண்டான்.

இந்தக் கதையை நான் இங்கு ஏன் எழுதினேன் என்றால் மனிதன் என்பவன் தெய்வமாகும் முயற்சி என்பது சாதாரண விளையாட்டுக் காரியமல்ல. கடல் நீரை செம்பினால் அள்ளிச் சேகரிப்பது போன்ற அரிய செயல் இது. மாயையும், இயற்கையும் அவற்றைக் கடக்க நம்மை அனுமதிக்காது. வெளி உலக இன்பங்களை மனதிற்குக் காட்டி, ஐம்புலன்களும் வெளியிலிருந்து, விடாமல் மனதைக் கட்டி இழுக்கின்ற நிலையில் நாம் உள்முகமாகத் திரும்ப அதிகம் போராட வேண்டும். அதற்கு மனம் அடங்க வேண்டும்.

மன அடக்கம் இல்லாவிட்டால் ஐம்புலன்களின் வழியாக சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து வகையான அனுபவங்களைப் பெற மனம் ஓடிவிடும். அந்த அனுபவ சுகத்தை உண்மையென நம்பி மனம் அதில் லயித்துப் பழகிவிடுகின்றது. அதன் பிறகு அவற்றை விட முடிவதில்லை. தீய பழக்கங்களுக்கு மனம் மேலும் அதி விரைவில் அடிமையாகி விடுவதை நாமே கண்கூடாகப் பார்க்கின்றோமே. இந்த நிலை ஞான மார்க்கத்திற்கு உதவாது. எனவே தான் இந்தப் புலன் அடக்கத்தையும், மன அடக்கத்தையும் உள்ளடக்கிய ஸ்திரத்தன்மையை மிக முக்கியமான ஓர் அம்சமாகக் கீதை வலியுறுத்துகின்றது.

11. அகங்காரம் இல்லாமை:

நாம் சாதாரணமாக என்ன சொல்கின்றோம்? எதற்கெடுத்தாலும் நான், நான் என்றும், எனது, என்னுடையது என்றும் தானே நினைப்பதும் சொல்வதுமாக இருக்கின்றோம்! இந்த நான் என்பதும் என்னுடையது என்பதும் தான் அகங்காரத்தின் ஆணிவேர். நான் அல்லாதவற்றை என்னுடையது என்றும், என்னுடையதல்லாததை, இயற்கைக்குச் சொந்தமானவற்றை, என்னுடையது என்;றும் அறியாமையால் சொல்லிச் செருக்குடன் செயல்படுகின்றோம். இனி இந்த எண்ணம் நம்மிடம் எழக்கூடாது. ஆன்மீகவாதிகளுக்கு அகங்காரம் இருக்கக்கூடாது.

நாம் செய்கின்ற சாதனைகளுக்கு நாம் மட்டுமே பொறுப்பல்ல. இறையருள், இயற்கை, சூழ்நிலை, மற்றவரின் உதவி என்று எத்தனையோ மறைமுக உதவிகளால் தான் நம்மால் ஒரு சாதனையைச் செய்ய முடியும். இந்த உடல், மனம், புத்தி எல்லாமே எனக்குத் தரப்பட்டவை. இவை நானல்ல. இவை செய்தவற்றை நான் செய்ததாக நினைத்துப் பெருமிதமடைவது அறியாமை. இந்த உண்மையை உணர்ந்ததனால்தான் ஆன்மீகப் பாதையில் வாழ்கின்ற பெரியோர்கள் தங்களது உயர்வுச் சிறப்பை எண்ணி அகந்தை கொள்ளாமல் அடக்கத்துடன் எல்லாப் புகழும் இறைவனுக்கே! என்று சொல்லிப் பணிவை வெளிப்படுத்துகின்றார்கள். அறியாமை நீங்கினால் அகங்காரம் இருக்காது.

12. வைராக்கிய உணர்வு :

பிறப்பு, இறப்பு, நோய், முதுமை, துக்கம், சந்தோஷம் போன்றவற்றைப் பற்றி அக்கறை கொள்ளாமல் அவற்றைப் பெரிதாக எண்ணி சஞ்சலப்படாமல், அவற்றை ஏற்றுக்கொள்கின்ற தன்மை நமக்கு இருக்க வேண்டும். இந்த உடல் சம்பந்தமான மேற்குறித்த விஷயங்களையெல்லாம் நமதாக எடுத்து, அவை தருகின்ற இன்ப துன்பங்களை ஏற்று வருந்துவது மனித சுபாவம். ஆனால் நாம் உண்மையை அறிகின்ற பயிற்சியில் ஈடுபடுகின்ற நிலையில் இவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக் கவலைப்படக்கூடாது.

இந்த உடல் இயற்கையின் கூறுகளாகப் பஞ்சபூதங்களால் ஆனது. வயது அதிகரிக்கையில் அங்க அவயவங்கள் செயலிழக்கின்றன. புலன்கள் எல்லாம் திறமை குறைகின்றன. பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. நாம் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். எது வருகின்றதோ அதை அப்படியே ஏற்கின்ற தன்மை இது. எதிலுமே பற்றற்ற தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

13. பற்றின்மை :

எதிலும் பற்றுதலும் விருப்பமும் இல்லாமல் இருத்தல் என்பது நாம் கொள்ள வேண்டிய 13வது அம்சமாகக் கீதையில் குறிப்பிடப்படுகிறது. எதிலுமே பற்றற்ற தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்தப்பற்றின்மையை ஸ்ரீ கிருஷ்ணர் தன் உடலில் ஏற்படும் மாற்றங்களால் பாதிப்படையாமல் பற்றற்று இருக்கப் பழக வேண்டும் என்றும், வாழ்க்கையில் ஏற்படுகின்ற நன்மை தீமை சார்ந்த நிகழ்வுகளில் பற்றுதலும் விருப்பமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும், மனைவி, மக்கள், வீடு முதலிய தன்னைச் சேர்ந்த சுகங்களில் பற்று அற்று வாழ வேண்டும் என்றும் வகை வகையாகப் பிரித்து எடுத்துரைத்து இருக்கின்றார்.ஞானிகள் கூட சில சமயம் விட முடியாத பற்றுகளாகக் குறிப்பிடுபவை மண், பெண், பொன் ஆகியவற்றின்மீது கொண்ட ஆசையைத்தான். இவற்றின் மீது கொண்ட ஆசையைத் துறக்க மிகுந்த முயற்சியும் வைராக்கியமும் தேவை. மண்ணாலும் பெண்ணாலும், பொன்னாலும் அழிவுற்ற மனிதர்களைப் பற்றிய ஆயிரம் கதைகள் நாம் அறிந்ததுதானே!

14. உறவுகளில் அதிகப்பற்று வைக்காமல் இருத்தல்:

கணவன் மனைவி என்ற உறவு அத்தியாவசியமான நெருக்கமான உறவு என்றாலும் அவ்வுறவினால்தான் மிக அதிகப் பிரச்னைகள் எழுகின்றன. அமைதியையும் நிம்மதியையும் அதிக அளவில் குலைப்பவை மனைவி, பிள்ளைகள், வீடு இம்மூன்றும் தான் என்றும் சொல்லலாம். பாதுகாப்பிற்காகவும், சுகத்திற்காகவும் பெற்ற இவற்றைப் பராமரிக்கின்ற பொறுப்பு ஏற்படும்போது, அதில் ஏற்படுகின்ற முரண்பாடுகள், பிரச்னைகள் வெறுப்பை உருவாக்கி விடுகின்றன. வேதனையைத் தந்து விடுகின்றன. உறவில் பிளவையும் ஏற்படுத்தி விடுகின்றன.

இந்நிலையில் சிக்கித் துன்புறாமல் அறிவைப் பயன்படுத்தி, எனது கர்மாவைக் கழிப்பதற்கும், அவர்களின் கர்மாவைத் தொலைப்பதற்கும் இந்த உறவு எங்களுக்குள் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, இவற்றின் தொடர்பை ஏற்றுப் பொறுமையாக அன்பால் கர்மாவை வெல்வது என்பதுதான் பற்றின்மையின் உண்மையான பொருள். விட்டு விட்டு ஓடுவதல்ல. இதைப்பற்றி நன்றாகச் சிந்திக்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s