மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 42


5. உடல், மனம், வாக்குகளில் எளிமை:

ஞானத்தை அறிவதற்கும் அதைத் தன்வயமாக்கி வாழ்க்கை முறையாக மாற்றுவதற்கும் இந்த மன எளிமை மிக அவசியம். மன எளிமை கொண்டவரிடம் கர்வம் இருக்காது. ஏனெனில் நான் என்பது அப்படிப்பட்டவர்களிடம் இருக்காது. மாறாக நான் என்பது அவனே என்ற ஞானம் இருக்கும். பணிவு, அடக்கம், இன்சொல், கருணை, அன்பு போன்ற நற்பண்புகளெல்லாம் இந்த எளிமை என்ற ஒரு செயற்பாட்டிலேயே இணைந்து விடுவதுதான் சிறப்பு. மேலும் இந்த எளிமைப் பண்பு வாழ்க்கையை வளமுடையதாக்கி விடும். எளிமை இருக்கும் இடத்தில் ஆடம்பரம் இருக்காது. வீண் செலவு இருக்காது. தற்பெருமை இருக்காது. குறிப்பாகக் கடன் இருக்காது. வெளிஉலகத் தொடர்பும் அநாவசியமாக இருக்காது. ஞானம் பெற முயற்சி செய்பவருக்குத் தேவையான தனிமையும் நேரமும் தாராளமாகக் கிடைக்கும். மக்கள் மனதில் மிக ஆழமாக இடம் பிடித்தவர்களைப்பற்றி நினைத்துப் பார்த்தால் அவர்களில் பெரும்பாலோர் மிக எளிமையானவர்களாக இருந்ததை உணரலாம். மேலும் உடல் சார்ந்த பழக்க வழக்கங்களில் எளிமையைக் கடைப்பிடித்தல், பேசுகின்ற வார்த்தைகளில் அன்பையும், பணிவையும், இனிமையையும் கலந்து பேசுதல் போன்றவையும் இதில் அடங்கும்.

6. குருவிற்குப் பணிவிடை:

குருவின் மகிமையை உண்மையான சீடனால்தான் அறிய முடியும். குரு சிஷ்ய உறவு சமுதாய உறவல்ல. குரு சிஷ்ய உறவு ஞானத்தால் ஏற்படுகின்ற ஆத்ம உறவு. எங்கு சுயநலமற்ற சிந்தனையும், செயல்களும் வெளிப்படுகின்றனவோ அங்கு ஒரு குரு இருப்பார். ஒருவன் தன்னை உணர்வதற்கும் குரு மிக மிக அவசியம். கீதை ஒரு சீடனை உருவாக்குவதற்காகக் கூறப்பட்டது.guru-shishaya

உண்மையை உணர்ந்தவர்கள் உபதேசிக்கிறார்கள். நீ பகுத்தறிந்த வினாவோடும், மிகுந்த பணிவுடனும், உரிய பணிவிடைகளோடும் குருவிடம் சென்று ஞானத்தைப் பெற்று உய்வாய்! என்று கிருஷ்ணர் கூறுகின்றார். இறைவன் அருளால் மட்டுமே ஒருவன் தகுந்த குருவைச் சென்றடைய முடியும். யாரிடமிருந்து அறிவுரைகளைப் பெறுகின்றோமோ, தெளிந்த ஞானத்தைப் பெறுகின்றோமோ, அவரே நம் குரு. ஆச்சார்ய தேவோ பவ! என்கிறது வேதம். மூர்த்தி, தலம், தீர்த்தமாடி வரக் குரு கிடைப்பார்! என்கிறது சாஸ்திரம்.

சீடனின் தகுதியறிந்து உபதேசிக்கக்கூடியவரான குருவின் அருகிலிருந்து, அவருக்குத் தேவையான அனைத்தையும் அக்கறையுடன் கவனித்துச் செய்து, அவரது அன்பைப் பெறுவதன் மூலமே ஒரு சிஷ்யன் பெறுகின்ற ஞானம், அவனுக்குப் பயன்படும். இறையிலும் குரு உயர்ந்தவர். ஏனெனில் தன்னைப்பற்றி உணர்த்த இறைவன் குருவையே தேர்ந்தெடுத்தான்.

7. சௌசம் எனப்படும் தூய்மை:

உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருத்தலே உண்மையான தூய்மையாகும். உடல் தூய்மை பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். உடல் தூய்மை நீரால் அமையும் என்றார் திருவள்ளுவர். உள்ளத்தின் தூய்மை ஆத்மாவை அடைவதற்கு இன்றியமையாத சாதனம். உள்ளத்தின் தன்மை மேன்மையுறுவதற்கு மனதைப் பற்றி நன்கு அறிய வேண்டும்.

மனம் என்பது ஒரு கருவி மட்டுமே. எண்ணங்களின் தொகுப்பாக மனம் இருக்கும் வரை, புலன்வழி மனம் செல்லும்வரை இந்த மனம் உயர்வடையாது. தூய்மையடையாது. ஆத்மாவின் ஒளி மனதில் பிரதிபலித்தால்தான் மனம் துhய்மையுறும். மனம் தர்மத் தூண்டலால் இயங்கும் ஒரு கருவி. இது சலனம் கொண்டது. அலை பாயும் தன்மை உடையது. இந்த மனதில் காலங் காலமாகப் படிந்திருக்கும் அழுக்குகளையெல்லாம் ஞான உபதேசத்தால் தான் நீக்க முடியும். மன அழுக்குகளை மும்மலங்கள் என்று கூறினர் ஆன்றோர். ஆணவம், கன்மம், மாயை என்ற இந்த மூன்று மலங்களை நீக்கினால் மனம் தூய்மையுறும். தூய்மையுற்ற உள்ளத்தில் ஆன்ம ஒளி பரவி நிற்கும். ஆத்மாவின் சாரமாகிய அன்பு பெருகும். அதில் மனம் நிறையும்.

மேலும் இந்த மனம் அடங்கினால் புலன்கள் அடங்கும். மனம் அலைபாய்ந்தால் கர்மா அதிகரிக்கும். உணவுத் தூய்மை உடலையும் மனதையும் சுத்தமாக்கும். சாத்வீக சைவ உணவு சாத்வீகக் குணத்தை வளர்த்து மனதை சாத்வீக நிலையில் வைக்கும். உடல் உள்ளத் தூய்மைக்கு சாத்வீக உணவு மிக முக்கியமானது. எனவே உப்பு, உறைப்பு, புளிப்பு ஆகிய சுவைகளைக் குறைத்து சாத்வீக உணவு முறையைக் கடைப்பிடித்தல் உடல் நலத்திற்கும், உள்ள அமைதிக்கும் நல்லது. சாந்த புத்தி, சாத்வீக புத்தி, பிரசாத புத்தி, அர்ப்பணிக்கும் புத்தி ஆகியவை மனத்தூய்மைக்கு உதவக்கூடியவை.

8. உறுதி:

நாம் கொண்ட லட்சியத்திலிருந்து பிறழாமல் திடமாக செயலாற்றுதல் என்னும் தகுதியே உறுதி அல்லது திட சித்தம் எனப்படுகிறது. நம் வாழ்வின் எல்லா வசதி வாய்ப்புக்களையும், நமது ஆன்மீக வாழ்வின் உயர்விற்காகவே பயன்படுத்திக்கொள்கின்ற உறுதியில் மாறாமல் செயல்படுகின்ற தன்மை இது. எது நடந்தாலும் மனம் தடுமாறாமல் நோக்கத்திலிருந்து மாறாமல் உறுதியோடு இருத்தலே ஆன்மீக வளர்ச்சிக்கு மிக அவசியமான ஒரு தகுதியாகும். அதாவது இந்த உடலும் மனமும் புத்தியும் ஆத்மாவை அடைந்து ஒன்றாகி விடுவதற்குத் தான் தரப்பட்டிருக்கின்றன. அந்த நோக்கத்தை அடைவதற்காகவே இவற்றைப் பயன்படுத்துவேன் என்ற உறுதியுடன் செயல்படுபவனே சாதகன் எனப்படுகின்றான். தான் அல்லாதவற்றைப் பற்றிய அக்கறையை ஒதுக்கித்தள்ளி, தானாகிய ஆத்ம நிலையிலேயே ஒன்றியிருந்து ஆனந்தத்தை அனுபவித்து அமைதி காண்பதே ஒரு சித்தனின் இலக்கணம்.

9. மன அடக்கம்.

இதன் பொருள், மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது. மனதையும் தன்னையும் வேறு வேறாகப் பிரித்துப் பார்க்கப் பழகியவர்களால் தான் ஆன்மீகத்தில் முன்னேற முடியும். மனம் சூட்சுமமானது. எண்ணங்களாலும், ஆசைகளாலும் நிரம்பிய கர்மப் பாத்திரம். கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகளைப்பற்றிக் கவலைப்படுவதும், எதிர்காலத்தைப்பற்றி ஏதாவது திட்டம் போடுவதும் மனதின் இயல்பு. இந்த மனதிற்கு ஞானத் தொடர்பான எண்ணங்களையும், அனுபவங்களையும் தொடந்து கொடுத்துக்கொண்டே இருந்தால், இது முரண்படாமல் நிறைவாக, அமைதியாக அடங்கி இருக்கும். வெளியில் சுற்றித்திரிய விரும்பும் மனதைத் திசை திருப்பி உள்முகமாக, ஆத்மாவைப் பார்ப்பதற்குப் பழக்க வேண்டும்.

பேராசை, பொறாமை, சுயநலம் போன்ற கெட்ட குணங்களால் மனதை அலைக்கழித்தால் இது கவலையும், சஞ்சலமும் கொண்டதாக ஆகிவிடும். தெளிவில்லாத சிந்தனையும் மனதை சஞ்சலப்படுத்தும். கவலை, மகிழ்ச்சி எல்லாமே மனம் நமக்குத் தருவதுதான். இந்த மனதைச் செயல்படாமல் நிறுத்தி இல்லாமற் செய்துவிட்டால் கவலையோ சந்தோஷமோ இல்லை. இந்த மனம் நானல்ல. ஆத்மாவை அடைவதற்காக எனக்குத் தரப்பட்ட கருவி என்ற ஞானத்துடன் மனதை இயக்கினால் இது அடங்கும். நாம் விரும்பிய வண்ணம் செயல்படும்.

ஏ மனமே! ஆனந்தமும் சுகமும் புறப்பொருள்களில் இல்லை. அவை எனக்குள்ளேயே தான் இருக்கின்றன. இனியும் அவற்றை வெளியில் தேடி அலைந்து அவதிப்படாமல் என்னுடனேயே நீ இரு! என்று சொல்லிச் சொல்லி மனதை ஆத்மாவுடன் இணைத்து அமைதியை அனுபவிப்பது தான் நாம் மேற்கொள்ள வேண்டிய தகுந்த பயிற்சி. எனவே புலன் வழி செல்கின்ற மனதிற்கு உண்மையை உணர்த்தி, அறிவு வழி சென்று ஆத்ம சுகத்தை அடைவதற்கான வழிமுறைப் பயிற்சிகளை மேற்கொள்ள வைப்பதே சாதகரின் ஆத்ம சாதனைக்கு வழி வகுக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s