மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 41

படைப்பு சேத்திரம். இதனை இயற்கை என்றும் பிரகிருதி என்றும், சரீரம் அல்லது உடல் என்றும் கீதை குறிப்பிடுகின்றது. படைத்தவனும் படைப்பின் உள்ளே இருப்பவனும் சேத்ரக்ஞன் என அழைக்கப்படுகின்றது. இதனை ஆத்மா என்றும் புருஷன் என்றும் கீதை கூறுகின்றது.

மற்றொரு விதமாகவும் இதனைப் பார்க்கலாம். உடல் என்பது இயற்கையின் மாறுபாடு. ஆத்மா என்பது இறைவனின் அம்சம். இதைப்புரிய வைக்கத்தான், “சரீரம் இயற்கையின் பகுதி. ஆகையால் உடலைப்பற்றிக் கவலைப்படாதே. இதனிடம் ஆசை பாசம் வைக்காதே, நீ என்னுடைய அம்சம். ஆதலால் நீ முற்றிலும் என்னையே சார்ந்திரு!” என்று அர்ச்சுனனிடம் அச்சுதன் கூறுகின்றார்.

மேலும் அவர் உடல் வேறு, உண்மையான நான் என்பது வேறு. இதைச் சரியாக உணர்வது தான் ஞானம். இந்த சரீரம் உலகத்தோடு இணைந்தது. உயிர்ச் சக்தியான ஆத்மா என்னுடன் இணைந்தது. இதையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்! என்கிறார்.

இந்த உடலைப்பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள இந்த உடல் என்பது எப்படிப்பட்டது? எதிலிருந்து பிறந்தது? இதில் ஏற்படும் மாறுதல்கள் என்னென்ன? என்ற விபரங்கள் எல்லாம் தெரிய வேண்டும். இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக்கொண்டிருக்கின்ற பஞ்சபூத சக்திகள் தான் நம் உடலிலும் அடிப்படை இயற்கைச் சக்திகளாக இருக்கின்றன. எங்கும் பரவியிருக்கின்ற ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் ஆகிய ஐந்து சக்திகள் தான் நம் உடலிலும் இருக்கின்றன. அடுத்து இந்த உடலில் கர்மேந்திரியங்கள் எனப்படும், வாய், கை, கால்கள், எருவாய், கருவாய் என்னும் ஐந்து செயற்கருவிகளும், மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் அறியும் கருவிகளும் (ஞானேந்திரியங்கள்) புலன்களாக அமைந்திருக்கின்றன. இந்தப் புலன்கள் ஐந்து விதங்களில் இயங்குகின்றன. அவை கேட்டல், பார்த்தல், தொடுதல், ருசித்தல், மணத்தல் என்னும் ஐவகைச் செயல்பாடுகள். அடுத்தது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு செயல்பாடுகள். இந்த 24 விதத் தத்துவங்களைக் கொண்டது இந்த உடல். மேலும் இது விருப்பம், பகைமை, சுக துக்கம், பிராணசக்தி, தாரண சக்தி, அமைப்பு ஆகிய ஏழு மாறுதல்களைக் கொண்டது என்று இந்த உடல் பற்றிய அடிப்படை விஷயங்களைக் கூறினார் கண்ணபிரான். இவைபற்றி இன்னும் விவரமாகத் தெரிய வேண்டுமெனில் குருவின் உபதேசத்தின் மூலமாகத் தான் விளங்கிக்கொள்ள முடியும். முக்கியமாக நாம் இப்போது அறிய வேண்டியது, நான் என்று நாம் கருதுகின்ற உடல் உண்மையில் நான் அல்ல; இது எனக்குத் தரப்பட்டது; உண்மையான நான் என்பது இந்த உடலுக்குள் இருக்கின்ற உயிர்ச்சக்தி. அது பிரம்மத்தின் ஒரு துளியாகிய ஆத்மா. அடுத்தது எல்லாப் படைப்புகளாகவும் இருக்கின்ற பரமாத்மாதான் இந்த உடலுக்குள் உயிர்ச் சக்தியாகிய நானாகவும் இருக்கிறது. அவ்வளவுதான்!

இனி அடுத்ததாக நாம் அறிய வேண்டியது, இந்த சரீரத்தில் இருக்கின்ற நான் எப்படி தெய்வீகக் குணங்களுடன் இறைத்தன்மையுடன் வாழ்வது என்பதைப் பற்றித்தான். அதனால்தான் இறைத்தன்மையுடன் நாம் வாழ்வதற்கு நம்மிடம் இருக்க வேண்டிய 20 தெய்வீக இயல்புகளைப்பற்றி நமக்குப் பரந்தாமன் சொல்லித் தருகின்றார்.

ஒருவன் தன்னைப்பற்றி சுய ஆராய்ச்சி செய்து கொள்ளவும், ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபடுகின்றவர்கள் கடைப்பிடிக்கவும் வேண்டிய உயர்ந்த இயல்புகள் இங்குக் கீதாசாரியனால் விளக்கப்படுகின்றன. மறுபக்கத்தில், நம்மிடமிருக்கும் குறைகளைப்பற்றி விளக்கி அவற்றை எப்படி சாpசெய்து கொள்ளலாம் என்பதும் கூறப்படுகின்றது.

1. கர்வம்:
ஆத்மாவே நான் என்பதை அறியாமல், நான் இந்த உடல் என்ற கர்வத்தில் மூழ்கி இருக்கும் தன்மை. தனக்குக் கிடைத்திருக்கும் உடல், அதன் அழகு, குலப்பெருமை, கல்வித்தகுதி, செல்வம், பதவி, குடும்பம், சமுதாயத்தில் தனக்கிருக்கும் மதிப்பு போன்ற பல காரணங்களால் ஒருவனுக்குத் தன்னுள் மேன்மை சார்ந்த ஒரு கர்வம் ஏற்படுகின்றது. இந்த கர்வத்தில் மூழ்கியிருக்கும்வரை தனக்குள் இருந்து செயலாற்றும் தன்னைப்பற்றி இந்த ஜீவன் அறியாது. அதாவது ஆணவக்காரன் ஆன்மாவை அறிய மாட்டான்.

தனக்கு இருக்கும் திறமைகள் எல்லாம் அந்தப் பரமதயாளனின் கருணை என்பதை அறிந்தவனுக்குக் கர்வம் இருக்காது. ஆனால் இந்த உண்மையை அறியக் கர்வம் அனுமதிக்காது. இந்தப் பெருமிதம் அதிகரித்துக்கொண்டு போனால் ஏதாவது ஒரு கட்டத்தில் அடி வாங்கும். அந்த அடி அந்தச் செருக்கை ஒடுக்கும். எனவே நான் என்னும் கர்வம், ஆணவம் இனி நமக்குள் இருக்கக்கூடாது. நான் என்னும் ஆணவத்தால் அழிந்தவர்களின் வரலாறுகளை நாம் அறிவோம்.

2. செய்கைத்தன்மை இல்லாமை:இதுவும் அகங்காரத்தின் அடிப்படையில் எழுகின்ற குணம் தான். ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்வதற்கு முன்னின்று நிகழ்த்தும் ஒருவன் இந்த வெற்றி என்னால்தான் கிடைத்தது என்று பெருமைப்பட்டுக் கொள்கின்றபோது அது பொய்யான ஒரு தகுதி என்றாகிவிடும். ஏனெனில் ஒருவன் ஒரு சாதனை செய்வதற்கு அவன் மட்டும் காரணமில்லை. அதன் பின்னணியில் எத்தனை எத்தனையோ உதவிகள் அவனுக்குக் கிடைத்திருக்கின்றன. நான் செய்யவில்லை, எனக்குள் இருந்து அவன்தான் என்னைச் செய்ய வைத்திருக்கிறான் என்ற உணர்வு இருக்க வேண்டும். நான் கருவி, அவன் கர்த்தா என்ற உண்மையைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இதை நான் செய்தேன் என்ற கர்வமோ, எண்ணமோ இனி எழக்கூடாது. அவனருளால் இதைச் செய்யக்கூடிய சக்தி எனக்குக் கிடைத்தது. நான் வெறும் கருவி மட்டுமே என்னும் அடக்க உணர்வு இருக்க வேண்டும்.

3. அஹிம்சை:உயிர்வதை செய்தல் மட்டும் ஹிம்சை அல்ல. நாவினால் சுட்டாலும் அது ஹிம்சையே. உடல், உள்ளம், சொல், செயல் இவை எவற்றாலும் எவருக்கும் துன்பம் செய்யாமல் இருத்தலே கொல்லாமை. இந்த உடலை இறைவனைச் சென்று சேர்வதற்கு என்று பயன்;படுத்தாமல் உலக இன்பங்களை அனுபவிப்பதற்காக மட்டும் பயன்படுத்துவதும் கொலை செய்கின்ற பாவம் போன்றதுதான்.

உள்ளத்தில் பகையையும் வெறுப்பையும் வைத்துக்கொண்டு நமக்குப் பிடிக்காதவர்கள் என்று சிலரைப் பட்டியலிட்டுக்கொண்டு அவர்களுக்கு எதிரிடையாக, அவர்கள் வருந்தும்படி செயல்படுவது அவர்களைக் கொல்வது போன்றதுதான். துரியோதனன் பாண்டவர்களை எந்த அளவிற்குத் துன்பத்திற்குள்ளாக்கினான் என்பது நமக்குத் தெரியும். சொல்லால் பிறரைச் சுடுவதும் துன்பப்படுத்துவது தான், உறவுகளுக்கிடையே ஏற்படுகின்ற பகைக்கும், பழி பாவங்களுக்கும், சொல் வன்சொல்லாக மாறி வருத்துவதும் ஒரு பெரிய காரணம் அல்லவா! யாகாவாராயினும் நா காக்க! என்பது ஒவ்வொருவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான தெய்வீகப் பண்பு.

அஹிம்சை மனதிற்குச் சுகத்தைத் தரும். சாந்தியைத் தரும். நம்மிடம் உள்ள அஹிம்சைப் பண்பு நம்மை எதிர்ப்பவரிடமும் மனமாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கு மகாத்மா காந்தியின் அஹிம்சைக் கோட்பாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புலால் மறுத்தல் அஹிம்சையின் சிறந்த பண்பு. மனித வாழ்க்கைக்கு உதவுவதற்காகவே தாவரங்களும் விலங்குகளும் படைக்கப்பட்டிருக்கின்றன. விலங்குகளை அன்பால் அனுசரித்து அரவணைத்துச் செல்ல வேண்டுமே தவிர அவற்றை வெட்டுவதோ, கொல்வதோ மிகக் கொடுமை.

4. மன்னிக்கும் தன்மை.

மன்னித்தல் என்பது மிக அரிய குணம். நீயா நானா என்ற போட்டி மிகுந்த மனதோடு போராடுபவர்கள் தான் அதிகமே தவிர பகைவனுக்கருள்வாய்! என்ற உன்னத கீதம் யாருக்கும் வேலை செய்வதில்லை. தீரனான அர்ச்சுனன் கௌரவர்கள் செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து மன்னித்ததால் தான் அவன் தன் ஆத்திரத்தையும் பகைமையையும் மறந்து போர் செய்ய மறுத்துக் கண்ணனிடம் வாதாடினான். ஆனால் அந்த இடத்தில் தர்ம நியாயங்களுக்கு எதிரான விதத்தில் அவன் மன்னிக்கத் தயாராய் இருந்து செயல்பட முயன்றதால் கண்ணன் அவனைத் தடுத்துக் கீதை உரைத்தார்.

தர்ம நியாயங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களை சட்;டமே தண்டிக்கும்.ஆனால் நம்மைச் சேர்ந்தவர்கள் செய்கின்ற சிறு சிறு பிழைகளைப் பெரிதாக எடுத்துக்கொண்டு அதற்காக வம்பு, சண்டை என்று போகாமல் “தந்தையே! இவர்கள் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியுங்கள்!” என இயேசுநாதர் வேண்டியதைப் போன்று கருணை மிகுந்து சிந்தித்து மன்னித்து விடவேண்டும். இப்படி மன்னிப்பதால் நம் நிலை உயரும். இவர்களிலும் மாற்றம் ஏற்படும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s