மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 40

காருண்ய மூர்த்தியான, தன் படைப்பின் மீது தான் கொண்ட பேரன்பால் சகல விதத்திலும் அன்பைப் பொழிபவரான அந்த பக்தவத்சலன், அர்ச்சுனனிடம் மிகக் கனிவாக, மிகுந்த பிரியத்துடன், “எவர் மிகுந்த ஈடுபாட்டோடு பேரன்பு கொண்டு என்னையே போற்றிப் பணிந்து வழிபடுகிறார்களோ, இதுவரையில் கூறியிருக்கின்ற உன்னதமான உத்தம பக்தர்களின் இலக்கணங்களைத் தாமும் விருப்பத்துடன் கடைப்பிடித்து வருகிறார்களோ, அத்தகைய தலை சிறந்த பக்தர்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்”! என்று நம்மையும் ஆசீர்வதிக்கின்றார்.

பார்த்தசாரதியான அவர் நமக்கு வழிகாட்டும் சாரதியாகத் திகழ்கின்றார். நம்மை நாம் அவரிடம் சரணடையச் செய்துவிட்டால் அவர் நம் அகத்தில் அமர்ந்து நம்மையும், நமக்குத் தரப்பட்ட உடல் என்னும் தேரையும் ஏற்றுக்கொண்டு அவரே நம்முள் அமர்ந்து இதனைச் செலுத்துகின்றார்.

அன்பைச் செலுத்துகின்றவனும் அன்பைப் பெறுகின்றவனும் ஒன்றாகி விடுகின்ற அந்நிலையில் அன்பே பிரவாகமாகப் பெருகி வழிந்து அங்குச் சுற்றுச் சூழலையே அன்பு மயமாக்கிவிடுகின்றது. இப்படி அன்பால் பூரணமாக நிறைந்துவிடும் பக்தர்களை வாழ்க்கைப் பிரச்னைகள் என்ன செய்துவிட முடியும்?

பக்தியோகத்தினால் பரமனைப் பற்றும் பாங்கு நம்மவர்களுக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை. பக்தி பிறந்தது தமிழ் நாட்டில் தான் என்றே எல்லா நூல்களும் பகர்கின்றன. ஆழ்வார்களும், நாயன்மார்களும், சித்தர்களும், யோகிகளும், மகான்களும், வேதாந்திகளும் அனுபவித்துப் பாடி வைத்த அற்புதப் பக்திப் பனுவல்கள் பக்தியையும், ஞானத்தையும் அப்படியே அள்ளித் தருபவை. அவற்றின் அழகும் ஆழமான பொருள் சுவையும் லட்சக்கணக்கான பக்தர்களைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி அழ வைக்கின்றனவே. எனவே பக்தி நமக்குப் புதிதல்ல. ஆனால் பொருள் புரியா மூட பக்தியாக அதனை வைத்து வளர்க்காமல் ஞானம் பெற்று, ஞானத்துடன் கூடிய ஆத்மார்த்த பக்தியாக அமைக்க வேண்டியது தான் நாம் செய்ய வேண்டியது. பக்தி வேறு, வாழ்க்கை முறை வேறல்ல. அன்பே பக்தி! எனவே தன்னலமற்ற அன்பே இனி நமது வாழ்வாக அமையட்டும். அஹிம்சை நெறியே நமக்குத் துணையாகட்டும்.

பக்தி யோகம் நிறைவு

சேத்ர – சேத்ரக்ஞ விபாக யோகம்

பக்தி என்பதன் உண்மையான பொருளையும், பக்தி செலுத்துகின்ற சரியான முறையையும், பக்தியோகம் என்ற பகுதியின் வாயிலாகச் சிறிது தெரிந்துகொண்டோம். பூரண சரணாகதியே உண்மையான பக்தனுக்குரிய லட்சணம் என்று பகவான் சென்ற அத்தியாயத்தில் கூறிவிட்டார். இறைவனிடம் பரிபூரணமாகத் தன்னை ஒப்படைத்துவிட்டு அவனையே தனக்கு எல்லாமாக நினைத்து வாழ்வது தலை சிறந்த பக்தர்கள் வாழ்ந்த முறை. தம் விருப்பப்படி மனம் போன போக்கில் வாழ்ந்துகொண்டு உள் விவரம் அறியாமல் கோவிலுக்குப் போய்த் தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டி அர்ச்சனை செய்து, உரிய பரிகாரங்களைச் செய்து, நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிவிட்டுப் பிறகு திரும்பவும் தனக்குத் தோன்றியபடி நடந்து கொள்வதுதான் நடைமுறையில் நாம் அறிந்த பக்தியாக இருக்கிறது. விரதம் இருப்பார்கள். அந்த விரதத்தை அனுசரிப்பதற்காகத் தமது வேண்டாத குணங்களையெல்லாம் வெளிக்காட்டாமல், பல்லைக் கடித்துகொண்டு விருப்பு வெறுப்புகளை அடக்கிக்கொண்டு இருப்பவர்கள் விரத பூர்த்தி முடிந்தவுடன் அடக்கி வைத்தவற்றைத் திறந்து விட்டுக்கொண்டு ஓடுவார்கள். இது தன்னைப் பற்றி அறியாமல் வாழ்கின்ற வாழ்க்கை முறையால் செய்கின்ற தவறு. எனவே இங்கு பக்திக்கு ஞானம் அவசியம் என்பதால் பரந்தாமன் அடுத்ததாக ‘சேத்ர-சேத்ரக்ஞ விபாக யோகம்’ என்னும் பொருள்பற்றிப் பேசுகின்றார்.

‘சேத்ர-சேத்ரக்ஞ’ – என்னும் இந்தச் சொற்கள் வடமொழியில் அமைந்திருப்பதால் மிரட்டுவதைப் போல் இருக்கின்றன. வார்த்தைக்காகப் பயப்பட வேண்டாம். மிக எளிதான பொருள் கொண்டவை தான் இச்சொற்கள். புனித இடங்களுக்குப் பயணம் செய்வதைத் தீர்த்த யாத்திரை என்று சொல்கிறார்கள் அல்லவா! இதையே முற்காலத்தில் சேத்ராடனம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். சேத்திரம் என்றால் இடம், ஊர், புண்ணியபூமி என்று பொருள். மகா பாரதத்திலேயே குரு ஷேத்திரம் என்று வருகின்றது.

இந்த சேத்திரம் என்ற சொல்லுக்கு உடல் என்றும் ஒரு பொருள். இந்த உருவமான சரீரம் தான் சேத்திரம். இந்த உடலுக்குள் இருந்துகொண்டு இதனை வாழ்நாள் முழுவதுமாக அறிந்து இயக்குகின்ற உயிர்ச்சக்திக்கு சேத்ரக்ஞன் என்று பெயர். கீதையில் கண்ணபெருமான், எல்லா இடங்களிலும் சேத்ரக்ஞனாக அதாவது உடலுக்கு உரியவனாக நானே இருக்கிறேன், இதைப் புரிந்துகொள்! என்று கூறுகிறார்.

இதுதான் ஆன்மீகம். தனக்குள் இருந்து தன்னை இயக்குபவனாகிய, ஆத்மா என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்ற, சேத்ரக்ஞனைப் பற்றியும், நான் என்று நினைத்துக்கொண்டு வாழ்கின்ற இந்த உடல் என்னும் சேத்திரம் பற்றியும் சரியாக அறிந்துகொள்வது தான் ஆன்மீகம். இந்தச் சாதனையில் ஈடுபடுபவர்கள் ஆன்மீக சாதகர்கள். அந்தக் கல்விக்குப் பெயர் ஆத்ம வித்தை. இப்படிப்பட்ட ஆன்மீக சாதகர்களுக்கு, இங்கு உடல் வேறு, இதனுள் இருந்து இதனை இயக்குபவன் வேறு என்பதையும், ஆத்மாவை நான் என்று ஒருவன் அறிந்துகொள்கின்ற வரை அது ஜீவன் என்ற பெயரில் இயங்குகிறது. பிறந்து, வாழ்ந்து உடல் மரணமடைந்ததும் அந்த ஜீவன் உடலை விட்டுப் பிரிந்து வேறு வேறு நிலைகளுக்குச் சென்று தான் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக மீண்டும் பிறக்கிறது. எந்தப் பிறவியில் அது தன்னைப் பற்றிய உண்மைகளை அறிய முற்படுகின்றதோ அப்பொழுதுதான் அது ஞானம் பெறுகின்றது. இது போன்ற விபரங்களை ரிஷி பரம்பரையில் வேத உண்மைகளை அறிந்த குரு, இறைவனுக்கும் ஜீவனுக்கும் இடையில் நின்று உபதேசிக்கின்றார். எனவே தான் நம் நாட்டில் குருவிற்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

வேதங்கள் தான் இந்த உண்மைகளைப்பற்றி மிகத் துல்லியமாக எடுத்துரைக்கின்றன. அவற்றை நம் நாட்டு ரிஷிகள் தமது உள்ளுணர்வால் உணர்ந்து, அதைப் புரிந்து வேதப் பொக்கிஷங்களாக ஆக்கினர். அவற்றைத் தமது மாணவர்களுக்குப் போதித்தனர். அதனைக் கற்றவர்கள் தமது சிஷ்யர்களுக்கு உபதேசித்தனர். இப்படி வளர்ந்த பரம்பரை ரிஷி பரம்பரை. இந்த ஆத்ம வித்தையை அறிவதோடு வாழ்க்கைக்குரிய வித்தைகளையும் பயிலப் பிள்ளைகள் குருகுலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குருகுலக் கல்விமுறை தான் நம் நாட்டில் நிலவி வந்தது. ஆனால் இடையில் நிகழ்ந்த அந்நியப் படையெடுப்பு இந்துக்களின் வாழ்க்கை முறையையே நிலை குலையச் செய்தது. இதுவும் பிரம்ம விருப்பம் தான் என்று எடுக்க வேண்டும்.

இதைப்பற்றிய ஞானத்தைப் பெற்றவர்கள், தாம் உணர்ந்து மகிழ்கின்ற உண்மைகளைத் தம்மைச் சேர்ந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புவது இயற்கைதானே! ராமானுஜர் காலத்தில் அவரது குரு, வேத உண்மைகளைப் பாமரர்களுக்குச் சொல்லக்கூடாது என்று ராமானுஜரைத் தடுத்தார். ஏனெனில் அந்தக்கால நியதியும் சமுதாய அமைப்பின் கட்டுப்பாடும் சீர்குலையாமல் அப்படி அமைந்திருந்தன. ஆனால் இன்றைய உலகம் நியதிகளிலிருந்து விடுபட்ட நிலையில் சர்வ சுதந்திரமாக, ஆனால் அறியாமையுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அறியாமை அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றது.

தமது பெருமையை, தமது பிறப்பின் உயர்வைத் தமிழ் மக்கள் சரியாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற கருணையினால்தான் எமது குரு ஸ்வாமி பரமாத்மானந்த ஸரஸ்வதி அவர்கள், பகவத்கீதை தமிழ் மக்களுக்குத் தெளிவான விதத்தில் போய்ச் சேரவேண்டும். குறிப்பாக ஈழத்தமிழர்கள் பக்தியின் உண்மைத் தன்மை ஞானமே என்பதை அறிய இந்த பகவத்கீதை மிக எளிமையாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று மிக விரும்பினார். எமது குருவின் விருப்பம் கண்ணனின் விருப்பமாகவும் இருந்ததால்தான் இந்த விஜயா என்னும் சேத்திரம் (உடல்) ஒரு கருவியாக இருந்து இந்த ஞானத் தொண்டினை இறையருளாலும், குருவின் ஆசியாலும் ஆற்ற முடிகிறது.

நமக்கு மிகவும் நன்மை தரக்கூடிய, வாழ்க்கையை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு வாழ உதவக்கூடிய பல முக்கிய தகவல்களை இந்த அத்தியாயம் மிக அருமையாகத் தருகின்றது. கண்ணனின் கருணை பூரணமாய் நம்மைச் சூழ அவனது அருளமுதத்தைப் படித்துப் பயன் பெறலாம். இந்தப் பகுதியில் பெயருடன், உடலுடன் கூடியதான நான் என்பது பற்றியும், உண்மையான நான் என்பது பற்றியும் மிக ஆழமாக, நுணுக்கமாகக் கீதாச்சார்யன் எடுத்துரைக்கின்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s