மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 39

ஞானமும், வைராக்கியமும் கலியுகத்தில் தம் பலத்தை இழந்துவிட்ட நிலையில் பக்தியின் மூலமாகத் தான் அவற்றை மீண்டும் மனித மனதில் எழுப்ப முடியும் என்பதை நாரதர் உணர்ந்தார். அதனால் தான் அவர் பக்தி மார்க்கத்தைப் பரப்ப வேண்டும் என்பதற்காகப் பாகவத புராணத்தை எழுதும்படி வியாசரிடம் கூறினார் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. நாம சங்கீர்த்தனமும், பஜனை சம்பிரதாய முறைகளும் இந்தக் கலியுகத்தில் பக்தி செய்வதற்குரிய எளிய வழிகளாக அமைந்து மக்களை இறை சிந்தனையில் செலுத்துகின்றன என்பது உண்மை.

krishna advices arjuna
“அத்தகைய உத்தம பக்தனாவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அர்ச்சுனன் கேட்கிறான். அவன் மீது மிகுந்த அன்பு கொண்டவரான ஸ்ரீ கிருஷ்ணர், “அர்ச்சுனா! நீ என்னிடம் உன் மனதை இணைத்து விடு. புத்தியையும் என்னைச் சார்ந்தே சிந்திக்கச் செய். இப்படிச் செய்வதன் மூலம் நீ என்னுள் இருப்பதை உணர்வாய். இதில் சந்தேகமேயில்லை.

இவ்வாறு நீ உன் மனதையும், புத்தியையும் என்னில் நிலைக்க வைக்க முடியாமற் போனால், தீவிரமான பயிற்சியின் மூலம் என்னை அடைய விரும்பு. அதுவும் முடியாமற் போனால், எனக்காகவே உன் செயல்களைச் செய்து வா. இப்படி ஈஸ்வர அர்ப்பணமாகச் செயல்படுவதன் வாயிலாகவும் நீ என்னைப் பெற முடியும்.”

“உன்னால் இதுவும் முடியாமற் போனால் பக்தி யோகத்தைப் பின்பற்று. என்னிடமே தீவிரமாக, திட ஈடுபாட்டுடன் பக்தி செலுத்து. மனம், புத்தி இரண்டையும் உன் வசத்திலேயே வைத்துக்கொள். எல்லாச் செயல்களையும் எனக்காகவே செய்து அவற்றின் பலன்களையும் எனக்கே அர்ப்பணித்து விடு!” என்று பக்திக்கான வழிமுறைகளை மிக அழகாகச் சொல்லித் தருகின்றார்.

செய்கின்ற செயல்களின் பலன்களைத் துறந்துவிடுவது தாழ்வான வழி இல்லையா? என அர்ச்சுனன் வினவுகின்றான். அதற்குக் கிருஷ்ணர், “இல்லை அர்ச்சுனா! யோகம் இல்லாத பயிற்சியை விட சாஸ்திர ஞானம் சிறந்தது. யோகம் இல்லாத சாஸ்திர ஞானத்தை விடத் தியானம் சிறந்தது. யோகம் இல்லாத தியானத்தை விடக் கர்ம பலன்களைத் துறக்கும் தியாகம் மிகச் சிறந்தது. ஏனெனில் தியாகத்தால் உடனடியாகப் பேரமைதி கிடைக்கிறது!” என்று விளக்குகிறார்.

கண்ணன் சொல்வது என்ன என்பது புரியாதவர்களுக்காக இந்தச் சிறு விளக்கம். யோகம் இல்லாத பயிற்சி என்பது, நாம் செய்கின்ற சடங்குகளின் பொருள் புரியாமல் செயல்படுவது. அதாவது நம் குடும்ப வழக்கப்படி நாம் நமது வழிபாட்டு முறைகளைச் சம்பிரதாய முறைப்படி என்று சொல்லிச் செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றை ஏன் செய்கிறோம், எதற்குச் செய்கிறோம் என்று கேட்டால் சொல்லத் தெரியாது. முன்னோர்கள் சொல்லித் தந்ததை நான் செய்கிறேன் என்பதே பதிலாக இருக்கும். இது தான் நாம் செய்வது என்ன என்பதைப் புhpந்து கொள்ளாமல் மனம் தோய்ந்து பரம்பொருளுடன் யோகமாக இணையாமல் செய்யப்படுகின்ற வழிபாட்டு முறை. எனவேதான் இது யோகம் இல்லாத பயிற்சி.

அடுத்தது யோகம் இல்லாத சாஸ்திர ஞானம். பிராமணர்கள் தம் பிள்ளைகளை வேத பாடசாலைகளில் சேர்த்து முறையாக வேதங்களைக் கற்பித்து அவர்களை சாஸ்திர ஞானம் பெற்றவர்களாக ஆக்க வேண்டும். அப்படி வேதம் கற்கின்றவர்கள் தம்மையும், தம் பிறப்பின் நோக்கத்தையும் நன்றாகப் புரிந்துகொண்டு, தம்மைப் பரம்பொருளுடன் இணைத்துக் கொண்டுவிட்ட நிலையில் அந்த சாஸ்திர ஞானத்தை வாழ்க்கையில் பயன்படுத்திப் பிறருக்கு உயர்ந்த வழிகாட்டிகளாகத் திகழ வேண்டும். அதுபோலவே பிற வகுப்பினரும் தத்தம் சாஸ்திர அறிவிற்கேற்ப தர்மநெறியில் வாழ்க்கையை நடத்த வேண்டும். ஆனால் பெற்ற சாஸ்திர ஞானம் வாழ்க்கைக்கு உதவுகின்ற அறிவாக மட்டுமே இருக்கிறதே ஒழிய அது பரம்பொருளுடன் அவர்களைக் கொண்டு சேர்க்கவில்லையென்றால், யோகமில்லாத சாஸ்திர ஞானமாக மட்டுமே அது இருக்கின்றது.

அடுத்து யோகமில்லாத தியானம் என்பது, தியானத்தை வெறும் உடல் நலம் பெறுவதற்காக என்று செய்வது. இன்று எத்தனையோ இடங்களில் தியானப் பயிற்சி முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேல் நாட்டினர் மருத்துவ ரீதியான பலன்களைப் பெறுவதற்காகவே பெரும்பாலும் தியானத்தை மேற்கொள்கின்றனர். நான் ஆத்மா. என் கர்மாவால் ஜீவனாக இந்த உடலை எடுத்திருக்கின்றேன். தியானத்தின் மூலமாகத்தான் எனது கர்மாவை அழித்து, ஜீவனாகப் பிரிந்து நிற்கின்ற நான், பரம்பொருளின் ஒரு துளியாகிய ஆத்மாவுடன் கலக்க முடியும் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் இணைகின்றவர்கள் மிக அரிதானவர்கள். கண்ணை மூடி உட்கார்ந்திருப்பது தியானமல்ல. என்னைத் துறந்து அதனோடு இணைதலே உண்மையான தியானம். இதை அறியாமல் செய்யப்படுகின்ற தியானம் யோகமில்லாத தியானம்.

இப்படி ஆத்ம சாதனைகளாகச் செய்யப்படுகின்ற இவை எதுவுமே எனக்குத் தெரியவில்லை என்ற நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. நாம் எதைச் செய்தாலும் அதை ஈஸ்வர அர்ப்பணம் என்று நினைத்துச் செய்தால், அந்த நினைவும் இயந்திரத்தனமாக இல்லாமல், உள்ளத்தால் உணர்ந்து சிரத்தையாக செய்யப்பட்டால் அது யோகமாகிவிடுகின்றது. பகவானே! நீ இதைச் செய்ய வைத்தாய், நான் செய்கிறேன். இதைச் செய்வதால் வருவது எது என்றாலும் அதையும் உனக்கே சமர்ப்பணம் செய்கின்றேன்! என்று மனதார நினைத்து ஒவ்வொரு சிறு செயலையும் செய்யப் பழகினால் அது மிகச் சிறந்த யோகமாகிவிடுகிறது. நான் செய்யவில்லை. நீ தான் செய்விக்கிறாய்! என்று நினைக்கும்போது நாம் நம்மையே தியாகம் செய்து விடுகின்றோம். நான் என்ற உணர்வைத் தூக்கி எறிந்துவிட்டு, அவன் என்ற உணர்வில் கலந்து விடுகின்றோம். பார்க்கப் போனால் இது தான் உண்மை. இது தான் உயர்ந்த ஞானம். இப்போது மீண்டும் அந்தப் பகுதியை ஒரு முறை வாசித்துப் பாருங்கள். தெளிவாகப் பொருள் விளங்கும்.

மேலும் அவரே, “இப்படி என்னையே சரணடைந்தவர்கள் எந்தப் பிராணிகளிடமும் பகைமை பாராட்டமாட்டார்கள். எல்லா ஜீவராசிகளிடமும் அன்பும், கருணையும், பாசமும் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் தான், தனது எனும் செருக்கு இருக்காது. பொறுமையும் மன்னிக்கும் குணமும் அவர்களிடம் நிரம்பியிருக்கும். அவர்கள் இன்ப துன்பங்களில் சமபுத்தி கொண்டவராய் இருப்பர். எல்லாச் சூழ்நிலையிலும், எப்போதும் மகிழ்ச்சியும், மன நிறைவும் கொண்டிருப்பார்கள். மேலும் உடல், உள்ளம், புலன்கள், ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்திருப்பார்கள். அதோடு அவர்கள், தம் மனம், புத்தி, இரண்டையும் எனக்கே அர்ப்பணித்திருப்பார்கள். இத்தகைய திட ஞான உறுதிகொண்ட பரம பக்தர் எனக்கு மிகவும் பிரியமானவர்!” என்றும் எடுத்துரைக்கின்றார்.

மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் உத்தம பக்தர்களின் அடையாளங்களை அர்ச்சுனனுக்குச் சொல்கின்றார். “அர்ச்சுனா! எந்த பக்தர்களால் பிறருக்குக் கோபதாபம் ஏற்படுவது இல்லையோ, எவரிடம் பிறராலும் கோப தாபங்களை ஏற்படுத்திவிட முடியாதோ, அத்தகைய பண்பு மிக்க பக்தர் மகிழ்ச்சி, பொறாமை, பயம், உணர்ச்சி வேகம் ஆகியவற்றால் ஆட்கொள்ளப்பட முடியாதவர். இவர் எனக்குப் பிரியமானவர்.”

“எவர் தமக்கென வாழாமல், எந்தப் பொருளையும், மனிதரையும், தனக்குத் தேவை என்று கொள்ளாமல் இருக்கிறாரோ, எவர் உள்ளும் புறமும் பரிசுத்தமாக இருக்கின்றாரோ, எவர் திறமைசாலியாக மனிதப்பிறவி பெற்றதன் நோக்கமாக, பகவானை அடையும் வழியில் செயலாற்றி வருகின்றாரோ, எவர் உலகியல் அனுபவங்களிலிருந்து ஒதுங்கி இருக்கிறாரோ, எவருடைய உள்ளத்தில் உணர்;ச்சிக் கொந்தளிப்பு இடம் பெறாதோ, எவர் சுகபோகம், சேமிப்பு சார்ந்த செயல்களை முற்றிலும் துறந்திருக்கின்றாரோ, அத்தகைய உத்தமமான பக்தர் எனக்குப் பிரியமானவர்”.

“எவர் நன்மை கிடைத்தால் மகிழ்ச்சி கொள்ளாமலும், தீங்கு ஏற்படும்போது வெறுப்படையாமலும் இருக்கிறாரோ, எவர் துன்பம் ஏற்படும்போது வருந்தாமலும், இன்பத்தில் துள்ளாமலும் வாழ்கிறாரோ, யார் சுபம் அசுபம் என இவ்விரு காரியங்களிலும் விருப்பு வெறுப்பின்றி தியாக உணர்வுடன் இருக்கிறாரோ அத்தகைய நடுநிலையில் வாழ்கின்ற பண்பட்ட பக்தர் எனக்குப் பிரியமானவர்”.

“எவர் பகைவன், நண்பன், மானம், அவமானம், புகழ்ச்சி இகழ்ச்சி, நன்மை தீமை போன்ற இரட்டைகளில் சமபுத்தி கொண்டிருக்கிறார்களோ, எவர் போற்றுதல் துhற்றுதல் இரண்டையும் ஒன்றாக நினைக்கிறார்களோ, எவர் சிந்திக்கும் திறன் பெற்றவர்களோ, எவர் எந்நிலையிலும் திருப்தியாகக் கிடைப்பதைக்கொண்டு வாழ்கிறார்களோ, எவர் தம் இடம், உடல் எதிலும் பற்றுதல் கொள்ளாமல் இருக்கிறாரோ, எவருடைய புத்தி நிலைபெற்றதாக உள்ளதோ, அத்தகைய பக்தர் எனக்கு மிகவும் பிரியமானவர்”.

இவ்வாறு மிக விளக்கமாக ஓர் உத்தம பக்தனின் இலக்கணங்களைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் தெளிவுபடுத்தியிருக்கின்றார். பல்வேறு வகைப்பட்ட பக்தர்களின் சுபாவங்களையும், சாதனை முறைகளையும் தனித்தனியாக எடுத்துரைக்கின்றார் அவர். சிலரிடம் சில தன்மைகள் கூடக்குறைய இருந்தாலும் தியாக புத்தி, திடபக்தி ஆகியவை எல்லாப் பக்தர்களுக்கும் பொதுவானவை.
(தொடரும்..)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s