மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 38

“மன ஒருமைப்பாட்டின் மூலம் என்னை அடையலாம். இப்படி என்னை அடைந்தவன் அகங்காரத்தில் அகப்படுவதில்லை” என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். “ஒரு முனைப்புடன் என்னையே சிந்தித்து உபாசித்து வருகின்ற உத்தம பக்தர்களை நான் இந்த அழியும் உலகத்திலிருந்து விடுவித்து சாசுவத நிலைக்கு இட்டுச் செல்கின்றேன்!” என்கிறார் அவர்.

இந்த இடத்தில் அர்ச்சுனன் பகவானிடம், “பரந்தாமா! பல்வேறு வடிவங்களில் பல்வேறு குணங்களுடனும், பெயர்களுடனும் கூடியதான விதத்தில் தங்களை வழிபடுகின்ற பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இஷ்டதெய்வ உபாசனை செய்து உங்களை வணங்கி பக்தி செய்கின்றார்கள். வேறு பலர் தங்களைப் பரப்பிரம்ம ரூபமாக, எந்தவித உருவமும் குணமும் இல்லாத அவ்யக்த நிலையில் வைத்து உபாசனை செய்கின்றார்கள். இவர்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்கிறான்.

இந்தக் கேள்விதான் இன்றுவரை புரிபடாத ஒன்றாக இருந்து வருகின்றது. இது தான் பல மத ஆச்சார்யர்கள் வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தக் காரணமாகவும், சர்ச்சைகள் எழவும் அடிப்படையாக இருக்கின்றது. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் போன்ற பல வழிகள் உண்டாவதற்கும், பல வழிபாட்டு முறைகள் தோன்றுவதற்கும் காரணமாக இருக்கிறது. மதத்தின் பெயரால் அர்த்தமற்ற சண்டைகள் போடுவதற்கும் இது தான் காரணம். ஆதி சங்கரர் ஏகம் என்ற அத்வைதக் கொள்கையை உருவாக்கியவர். த்வைதம் என்றால் இரண்டு. இரண்டற்றது – ஒன்றேயானது என்பது சங்கரரின் கொள்கை. இதை மாயா வாதம் என்றும், பகவான் வேறு, படைப்பு வேறுதான் என்றும் முரண்பட்டு சண்டை பிடிப்பவர்கள் மற்ற வகையினர்.

இது மிகப் பெரிய விவாதத்திற்குரிய ஒரு விஷயம். இதற்குள் நுழைந்து விளக்க முனைந்தால் பக்தி உணர்வு பெருகுவது போய், அறிவின் சாமர்த்தியத்திற்குள் போய் விடுவோம். இதில் ஆர்வம் உள்ளவர்கள் என்னிடம் வாதத்திற்கு வந்து விடுவார்கள். யார் யார் எந்தெந்த கொள்கை வழிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களோ அந்தந்த வழியிலேயே போய் இறுதி உண்மையைப் பிடித்துவிட்டால் சரி! ஏனென்றால் தன் தெய்வம், உன்; தெய்வம் என்பதெல்லாம் இறைவனும் நானும் ஒன்று என்ற ஒரு நிலையை அடைகின்ற வரையில் தான். மேலும் மத ஆச்சார்யர்கள் பரம்பொருளோடு நாம் ஐக்கியமாக வேண்டும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் கொள்ளவில்லை.

அவன் பரமாத்மா நான் படைப்பு. நான் அவனைச் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான் எல்லாக் கொள்கைகளின் இறுதி நோக்கம். அந்தப் பரமனை அடைவதற்குக் கீதை சொல்லும் வழிகள் மூன்று. அவை,. கடமைகளைச் சரியாகச் செய்து அவனிடம் சரணடைந்து வாழ்கின்ற கர்ம யோகம். இரண்டாவது நான் யார்? நான் ஏன் பிறந்தேன் போன்வற்றை அறிந்த நிலையில் எல்லாம் அவன் செயல் என்று அவனை ஏற்றுக்கொண்டு வாழ்கின்ற ஞானயோகம். மூன்றாவது நிலை சந்நியாச யோகம். இந்நிலையில் பக்தர்கள் வாழ்க்கையையே துறந்துவிட்டு அவனில் கலந்து, நான் என்பதே இல்லை, என்னில் அவன் தான் வாழ்கிறான் என்று உணர்ந்து வாழ்வது. ஆனால் இது மிக எளிதாக சித்தித்து விடாது. நமது கர்மபலனும், அவனது அருளும் சரியாக அமைய வேண்டும். அந்தப் பூரண நிலையில் வாழ்பவர்கள் தான் மகான்கள்.

இந்தப் பூரண நிலையை அடையாதவர்கள் பல சித்திகள் பெற்றாலும், பரமஹம்சர்கள் என்று தம்மைக் கூறிக்கொண்டாலும், பக்திநெறியைப் பரப்பினாலும், சந்நியாச நெறியைக் கடைப்பிடித்தாலும் அவர்கள் போலிகளே! இதற்கு மேல் இதைப்பற்றிப் பேசிக்கொண்டு போகாமல் நாம் பக்தியோகத்திற்குத் திரும்பிக் கண்ணன் கனிமொழியைக் கேட்போம். அர்ச்சுனன் உருவ வழிபாட்டினை மேற்கொள்ளும பக்தர்கள் சிறந்தவர்களா? புரவெளியை உபாசிப்பவர்கள் சிறந்தவர்களா? என்று வினா எழுப்பினான். அதற்குத்தான் பகவான், “யாராக இருந்தாலும் எனக்கு ஒன்றுதான். என்னிடத்திலேயே மனதைச் செலுத்தி எப்போதும் இடைவிடாமல் என்னையே தியானித்து பக்திச் சிரத்தையுடன் உபாசிக்கும் பக்தனைத் தான் நான் தலை சிறந்த உபாசகனாகக் கருதுகிறேன்”! என்கிறார்.

“புலன்களுக்குப் புலப்படாத தங்களின் அவ்யக்த ரூபத்தை உபாசிப்பவர்களை நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள்?” என்று அர்ச்சுனன் மீண்டும் ஒரு வினாவை எழுப்புகிறான். ஏனெனில் கோவில்களுக்குச் சென்று ஒரு தெய்வ வடிவத்தைக் கண்ணுக்கு நேராகக் கண்டு, அந்த உருவத்தையே வீட்டிலும் வைத்து, அதையே தன் மனதில் நிறுத்தி அதைப் பிடித்துக்கொண்டு அதனோடு தன்னைக் கலந்து வழிபடுவது இயலக்கூடிய ஒரு வழி. ஏனெனில் மனம் வெளியைப் பிடிப்பது கடினம். மனதிற்குப் பற்றுக்கோடு தான் தேவைப்படுகின்றது. ஒன்றுமில்லாத ஒரு நிலையை சாதாரணமாகப் பிடித்துவிட முடியாது. அந்நிலையை அடைவதற்குக் குருவின் உதவி வேண்டும்.

அவர்தான் நம்மை உருவ வழிபாட்டிலிருந்து உருவமற்ற அவ்யக்த நிலைக்கு உபதேசத்தால் கொண்டு செல்ல முடியும். அவர் நமக்கு ஞானத்தின் மூலமாக ஆத்மாவிற்குச் செல்லும் வழியைக் காட்டித் தருகிறார். ஜீவன் ஆத்மாவை சேர்ந்தால், ஆத்மா நம்மைப் பரமாத்மாவுடன் இணைத்து விடும். அந்த ஞானத்துடன் கூடிய பக்தி நிலையில் நம்மால் பார்க்கின்ற அனைத்தையுமே பரம்பொருளாகப் பார்க்க முடியும். அவரை அவ்யக்த நிலையில் உருவமற்றவராய், குணங்கள் அற்றவராய், எல்லாமாய் இருப்பவராய் உணர முடியும்.

இதுபற்றி பகவான் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். “எல்லா இடங்களிலும் சம புத்தி கொண்டவர்களும், உயிரினம் முழுவதும் நலமாக வாழ வேண்டும் என்று விரும்பி அதற்காகவே பாடுபடுகின்றவர்களுமான மனிதர்கள் சிறந்த பக்தர்கள். அவர்கள் தான் யோகிகள் என்றும் ஞானிகள் என்றும் மகான்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் நடைமுறை வாழ்க்கையை விட்டு விலகிப் புலன்களை அடக்கித் தமக்குள் தாம் மூழ்கி, எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பவரும், சிந்தனைக்கு அடங்காதவரும், திட சத்திய சொரூபமானவராகவும், அழியாத ஓங்கார ரூபமாகவும், வெளிப்படாதவருமான பரம தத்துவமான பரமாத்மாவையே தியானிக்கின்றனர். அந்த விடா முயற்சியான தியானத்தால் என்னையே அடைந்து விடுகின்றனர்” என்று மறுமொழி உரைக்கின்றார்.

உடனே அர்ச்சுனன், “பரந்தாமா! உங்களிடம் இடையறாது பக்தி செலுத்துபவர்களைத் தலை சிறந்த பக்தர்கள் என்று சொன்னீர்களே! இப்போது தியானத்தால் இணையும் யோகிகள் என்னை வந்தடைகின்றனர் என்கிறீர்களே! இதை இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் கூறினால் நான் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்!” என்று வினவுகின்றான்.

அதற்குக் கண்ணபிரான், “அர்ச்சுனா! ஞானிகளை நான் போற்றுவதற்கான காரணத்தை நீ சரியாகப் புரிந்துகொள். உடல் நான் என்ற எண்ணத்துடன் என்னை வேறாக வைத்து வழிபடுபவர்களை விட, இந்த உடல் நானல்ல, மனம் நானல்ல என்று தான் அறிந்த அனைத்தையும் அழியக்கூடியவை என்று உணர்ந்து, அவற்றை வேறாக ஒதுக்கித் தம் உள்ளத்தில் தன்னை இணைத்து ஆத்மாவில் ஒளியாக என்னைத் தியானிப்பவர்கள் சிறந்தவர்கள். ஏனெனில் உடலின் மீது பற்று வைத்து, நான் இந்த உடல் என்ற அபிமானத்துடன் வாழ்கின்ற மனித இயல்பில், உருவமில்லாததும், எளிதில் அறிய முடியாததுமான ஆத்மாவைத் தான் என்று உணர்ந்து அந்த அவ்யக்த நிலையை வெற்றிகரமாக தியானிப்பது என்பது மிகக் கடினமானது. அவர்களுக்குத் தமது சாதனையில் அதிகக் கஷ்டமும் இடையூறுகளும் ஏற்படும். அவை அத்தனையையும் மீறி ஞான சாதனையில் அவர்கள் தம்மைத் தொடர்ந்து செலுத்துவதால் சிறந்து விளங்குகின்றார்கள்.

என்றாலும், அன்றாட வாழ்க்கை முறையிலேயே எந்த பக்தர்கள் எல்லாச் செயல்களையும் என்னிடமே அர்ப்பணித்து விட்டு, என்னிடம் முழு ஈடுபாடு கொள்கிறார்களோ, உன்னைத் தவிர வேறு கதி இல்லை என்னும் ஒரே முனைப்புடன் என்னையே சிந்தித்து உபாசித்து வருகிறார்களோ, அத்தகைய உத்தம பக்தர்களை நான் இந்த அழியும் உலகிலிருந்து விடுவித்து சாஸ்வத நிலைக்கு இட்டுச் செல்கிறேன்!” என்று இருவகை பக்தர்களையும் தாம் பார்க்கின்ற விதத்தை பக்தவத்சலன் விளக்குகின்றார்.

எல்லோராலும் ஞானிகளாகி விட முடியாது. பரிணாம வளர்ச்சியின் மூலம் தான் அந்நிலையை அடைய முடியும். சாதாரண மனிதர்களுக்குப் படிப்படியான பக்தியோகமே எளிதானது. எனவே தான் பரமன் ஞானிகளைப்பற்றி உயர்வாகக் கூறினாலும், தன்னையே கதியென்று எண்ணி வாழ்கின்ற பக்தர்களைத் தலை சிறந்தவர்களாகக் கூறுகின்றார். அவர்களின் இதயத்தில் தான், தான் குடியிருப்பதாகக் கூறுகின்றார். இந்தக் கலியுகத்தில் பக்தியோக முறைதான் நடைமுறைப்படுத்தக்கூடியதாக அமைந்திருக்கிறது.
(தொடரும்..)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s