மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -37

ஒரு மனிதனின் வளர்ச்சி அவன் தனக்கு வருபவற்றை எப்படி எதிர்கொள்கிறான் என்பதைப் பொறுத்து அமைகின்றது. சாதாரண வாழ்க்கை முறையில், வருகின்ற பலனை ஏற்றுக்கொள்வதில் ஒருவரது விருப்பும் வெறுப்பும் கலக்கின்றன. விருப்பு வெறுப்பு இல்லாவிடில் நமக்கு வருவதை அப்படியே ஏற்றுச் செயல்படும்போது சமநிலை கெடுவதில்லை. ஏனெனில், மனச்சமநிலை இருந்தால் தான் பக்தி செலுத்த முடியும். அறியாமையால் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இறைவனை வணங்குவது உண்மையான பக்தியல்ல. எனக்குத் தரப்பட்டவையெல்லாம் என்னுடையவை என நாம் நினைக்கிறோம். இது என்னுடையது என்ற எண்ணம் நமக்குள் இருக்கின்றவரை அகங்காரம் அகல்வதில்லை. இது இறைவன் தந்தது என்று பிரசாதமாக ஏற்பதும், எல்லாம் இறைவனுடையது என்று நினைத்து வாழ்வதும் சிறந்தது. அந்த நிலையில் நம்மில் பெருகுகின்ற அன்பும், கருணையும் தான் உண்மையான பக்தியாகும்.

பக்தி என்பது கனிந்த அன்பு. அகங்காரம், மமகாரம் (நான் – என்னுடையது) என்ற இரண்டும் இருக்கும் வரை, உண்மையான பக்தி ஏற்படாது. இவை இரண்டும் இருக்கும் வரை வீண் கோப தாபங்கள், மனக்கசப்பு, பிரச்னை என எல்லாமே இருக்கும். உறவின் இரண்டு பக்கங்களிலுமே இவை இருப்பதால் மனச்சமநிலை கெட்டுப்போகிறது. வாழ்க்கையில் வரும் பிரச்னைகள், மன முரண்பாடுகள் ஆகியவை மனச் சமநிலையைக் குலைத்து விடுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் பக்தி செய்ய இயலாது. எதிர்பார்ப்பும், ஏக்கமும், ஆசையும் இருந்தால் பக்தி செய்ய முடியாது. பசி இருந்தாலும் பக்தி பண்ணமுடியாது.

அர்த்தமற்ற சடங்குகளையும், வழிபாட்டு முறைகளையும் உண்மையான பக்தி என்று சொல்ல முடியாது இறைவா! என்று நினைக்கும்போதே இந்த உள்ளம் கரைந்து உருக வேண்டும். அவன் கருணையை உணர்ந்து கண்கள் பெருக்கெடுக்க வேண்டும். ஒருவர் எந்த தெய்வத்தை வழிபடுகிறார் என்பது முக்கியமல்ல. எவ்வளவு பக்தியுடனும் உள்ளன்புடனும் பகவானிடத்தில் தன்னை அர்ப்பணம் செய்து கொள்கிறார் என்பதுதான் முக்கியம்.

நானும் இறைவனும் ஒன்று என்பதை அறிந்து அவனையே தியானிப்பதே சிறந்த பக்தி. “தைல தாரைபோல் உனது உணர்வு முழுவதையும் ஊடுருவி, உனது ஆத்மாவில் சென்று கலப்பதே முழுமையான பக்தி” என்கிறார் ஆதி சங்கரர். காதலாகிக் கசிந்து உருகி இறைவனுடன் ஒன்று சேர்ந்து கலக்கின்றபோது உலகத்திற்கே உன்னத நன்மை ஏற்படும். பக்தியின் சிறப்பு இது.

பக்தியில் அன்பு கலக்க வேண்டும். அன்புதான் உலக மகா சக்தி என்றார் புத்தர். எல்லாம் இருந்தும் நம்மீது ஒருவர் அன்பு செலுத்தவில்லை என்றால் நமக்கு வாழ்க்கையே வெறுக்கும். இறைவன் நம்மீது அன்பு செலுத்துவதனால் தான் நாம் மூச்சு விட்டுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்திலுள்ள எல்லாமே அன்பு என்னும் பசையினால்தான் ஒட்டப்பட்டிருக்கிறது. இயற்கைச் சக்திகள் அன்பாலேயே இயங்குகின்றன.

நமது கலாச்சாரத்தில் பழக்கப்படுத்தி வைத்திருக்கின்ற, கோவிலுக்குச் செல்லுதல், பூசை செய்தல், ஆராதித்தல், விளக்கு ஏற்றிக் கும்பிடுதல், நைவேத்தியம் செய்தல் போன்ற எல்லாச் சடங்குகளுமே நமது பக்தி உணர்வை வெளிப்படுத்துவதற்காகத்தான். இவற்றைச் செய்வதன் மூலம் நமது எண்ணம், சொல், செயல் போன்ற அனைத்தும் அவன்பால் நம்மை இணையச் செய்கின்றன. இந்த இணைப்பில் இருந்துகொண்டே நமது வாழ்க்கைக் கடமைகளைச் செய்துகொண்டு போவது நலத்தை அளிப்பதாக இருக்கும். அதனால் தான் சிறு வயது முதலே கடவுளை மையமாக வைத்துக் குழந்தையின் ஒவ்வொரு செயலையும் செய்யப் பழக்குவது நமது குடும்ப மரபாக இருக்கிறது. கடவுளைப் பற்றிய ஒரு விதமான புரிந்துணர்வை சிறிய வயதிலேயே ஏற்படுத்துவது நம்மவரின் பொறுப்பாகவும் இருக்கின்றது. பிறகு வளர வளர அவரவரின் தகுதிக்கும் போக்கிற்கும் ஏற்ப இந்த உணர்வு உயர்கின்றது அல்லது தாழ்கின்றது. அதனால் தான் பலரும் வெறும் சடங்கை மட்டும் செய்து விட்டு உள்ளம் அதில் தோயாமல் நாட்டத்தை வெளி உலகில் வைத்திருக்கின்றோம்.

நமது செயல்களை யோகமாக, அதாவது அவன் அருளால் இந்தச் செயலை நான் செய்கிறேன் என்று எண்ணிக்கொண்டு செய்தாலே, அது அவன்பால் நாம் கொண்ட பக்தியால் செய்கிறோம் என்றாகிறது. யோகம் என்பது, தன்னில் உள்ள சகல சக்திகளையும் தன்னுள் மூலமாய், மையமாய் அமைந்துள்ள ஆத்மாவிடம், தொடர்ந்து செலுத்தி இணைந்திருப்பது. இதற்கு மாறாக நமது சக்தி புலன்களின் வழியாக வெளியில் பாய்ந்தால் அது போகம்.

பகவான் சொல்கிறார், “என்னிடத்திலேயே மனதைச் செலுத்தி எப்போதும் இடையறாமல் என்னையே தியானித்து பக்தி சிரத்தையுடன் உபாசிக்கும் பக்தனைத்தான் நான் தலை சிறந்த உபாசகனாகக் கருதுகிறேன்” என்று. இப்படிப்பட்ட பக்தனிடம் பகவான் தன்னையே இழக்கின்றார்.

இந்த உலகில் ஒருவன் கொள்கின்ற உறவுகள் பலவகைப்பட்டவை. அவை மாறக்கூடியவை. எனவே இந்த உறவுகளெல்லாம் நிலையற்றவை. உடல் சார்ந்த உறவுகள் ஏற்படும், மாறும், பிரியும், மறைந்தும் போய்விடும். இறைவனோடு நாம் கொள்கின்ற உறவே அடிப்படை உறவு. இந்த உறவு மறைவதில்லை. நம்மைச் சார்ந்த உறவுகளால் நமக்குப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆனால் இறையோடு கொள்கின்ற உறவால், உடல் சார்ந்த உறவுகள் பிரச்னைகள் தராத விதத்தில் அமைகின்றன. அப்படி பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவை பக்தர்களைப் பாதிப்பதில்லை. ஏனெனில் அந்த அடிப்படை உறவின் இணைப்பால் தெய்வீகக் கருணையும் அன்பும் பக்தனின் உள்ளத்தில்; ஏற்பட்டு விடுகின்றது.

பலனை எதிர்பார்க்காத பக்தி செய்யத் தெரிய வேண்டும். எதையாவது எதிர்பார்த்து பக்தி செய்வது உண்மையான பக்தியல்ல. எப்பொழுதோ ஒரு முறை இறைவனை நோக்கி மனதைச் செலுத்துவது பக்தியல்ல. தொடர்ந்து அதனுடனேயே இணைந்து கலந்து அதுவாகவே ஆகிவிட வேண்டும்.

பக்தி என்பது தண்ணீரில் உப்பு கரைவது போன்றதல்ல. கடலில் எழுகின்ற அலை கடலிலேயே மடிந்து சங்கமமாதல் போல, அவனிலேயே மூழ்கியிருக்கின்ற நிலைதான் உண்மையான பக்தி. எல்லாச் செயல்களுமே அவனுக்கு அர்ப்பணம். அதுதான் பக்தியின் இலக்கணம். நமது வாழ்க்கை, நமது உறவுகள், நாம் எல்லோருமே இறையம்சம் என்று எண்ணி, எல்லாவற்றையுமே இறைவனாகப் பார்த்து அன்புடன் இருக்கப் பழக வேண்டும். உன் கருணை என் வாழ்வு என்று உருகிக் கரைகின்ற பக்தி இது.

நதி கடலைத் தேடி ஓடுவதை யாராலும் தடுத்து விட முடியாது. அப்படியே தடுத்தாலும் கூட அது பொங்கிப் பெருக்கெடுத்து அல்லது வேறு பாதையில் ஓடிக் கடலில் கலந்தே தீரும். அதுபோல வாழ்க்கை எப்படித்தான் கொண்டு சென்றாலும் நாம் இறைவனோடு சென்று கலந்து விடுவதிலேயே நாட்டத்தை வைப்பது தான் பக்தி.

இப்படிச் செய்கின்ற பக்தி சமநிலையைக் கொடுக்கும். திட சித்தத்தைக் கொடுக்கும். மாற்றக்கூடியவற்றை மாற்றுவதற்குரிய வலிமையை எனக்குத் தா! என்னால் மாற்ற முடியாதவற்றை அப்படியே உனது பிரசாதமாக ஏற்றுக்கொள்கின்ற மனப் பக்குவத்தை எனக்குக் கொடு! என்பது தான் உண்மையான பக்தனின் முழுமையான பிரார்த்தனை.

உணர்ச்சி வசப்பட்டால், மனச் சமநிலை தவறினால், விருப்பு வெறுப்புடன் வாழ்க்கையில் செயல்பட்டால், நம் வாழ்வில் நமக்குக் கிடைக்கின்ற அனுபவங்களை அறிவாக ஏற்க முடியாது. வயதுதான் அதிகரிக்குமே தவிர வயதிற்கேற்ற பக்குவம் ஏற்படாது. அன்பு பூரணமாக இருந்தால் பக்தி முழுமையாகி விடும். இவையெல்லாம் பக்திக்கான அடிப்படைத் தகுதிகள்.
(தொடரும்..)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s