மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 36

பக்தியோகம் – அத்தியாயம் 12

மிக அற்புதமான விஸ்வரூப தரிசனத்தை, பரமாத்மா, ஜீவனுக்குத் தன்னைப் பற்றிய அடிப்படைப் புதிர்களை வெளிப்படுத்திக் காட்சிக்கு உட்படுத்தி விவரித்த அரியதான ஒரு விளக்கத்தை நாமும் இன்று ஓரளவிற்குப் புரிந்து கொண்டோம். இந்த மகா பாக்கியம் நமக்குக் கிடைத்ததற்காக அந்த விஸ்வரூபனுக்கு, எல்லாமாய்க் காட்சியளிக்கின்ற பரப்பிரம்மத்திற்கு நன்றி தெரிவித்துத் தலை வணங்குவோம்.

அளவிட முடியாத பேராற்றலுடன் வெளிப்பட்ட நமது பேரூருவை, அர்ச்சுனன் வேண்டிக்கொண்டதால் மறைத்துக்கொண்டு, கையில் சாட்டையுடன் கண்ணபிரானாகக் காட்சியளித்த பரந்தாமன் புன்னகையுடன், “அர்ச்சுனா! இப்போது நான் உன் அன்பிற்குரிய நண்பனாகக் கண்ணனாகவே உனக்குக் காட்சியளிக்கின்றேன். இப்போது உன் பயம் விலகிவிட்டதா? நீ நிம்மதி அடைந்தாயா?” என்று கேட்கிறார். அவனும் முகம் தெளிந்து கண்ணனை வணங்கி அவர் சொன்னதை ஒப்புக்கொண்டான்.

அத்தருணத்தில் கண்ணபிரான் அவனிடம், “அர்ச்சுனா! நீ இந்த எனது தோற்றத்திற்கு முன் பார்த்த திருமாலின் சொரூபத்தை, நான் நான்கு கைகளுடன், சங்கு சக்கரதாரியாகக் காட்சியளித்த நிலையை சாதாரணமாக யாரும் தரிசித்துவிட முடியாது. அப்படிப்பட்ட அரிய தரிசனம் தான் அதுவும். தேவதைகள் கூட எனது அந்த ரூபத்தைக் காண ஏங்கிக் காத்திருக்கிறார்கள். மேலும் எனது விஸ்வரூபத்தை வேதங்களைக் கற்றறிந்து விடடதாலோ, தவ சித்திகள் பெற்றுவிட்ட நிலையிலோ, ஏராளமான தான தர்மங்கள் செயவதனாலோ கூடத் தரிசிக்க முடியாது. மாறாக யாரிடம் உண்மையான பக்தி இருக்கின்றதோ அவர்களால் தான் என்னைத் தரிசிக்க முடியும். அதோடு மட்டுமின்றி அப்படிப்பட்ட தூய பக்தர்களால் தான் தத்துவ ஞானம் பெற்று என்னை உணர்ந்து கொள்ளவும், என்னை அடையவும் முடியும்!” என்றுரைத்தார்.

அப்படிப்பட்ட பரிசுத்தமான திட பக்தி என்பது எப்படி இருக்கும் என்பதையும் அவர் விவரிக்கின்றார். “பாண்டு புத்திரனே! எல்லாச் செயல்களையும் எனக்காகவே செய்ய வேண்டும். எப்பொழுதும் என்னையே நினைத்துக்கொண்டு, என்னைப் போற்றித் துதித்துப் பூஜித்துக்கொண்டு இருக்க வேண்டும். என்னிடம் மட்டுமே பக்தி செலுத்தி வாழ வேண்டும். என்னைத் தவிர வேறு எதன் மீதும் பற்றோ பாசமோ கொள்ளக்கூடாது. எல்லாவற்றையும் நேசிக்க வேண்டும். அன்பு செலுத்த வேண்டும். இது தான் உண்மையான பக்தி நெறி. இது தான் பரிசுத்தமான திடபக்தி!” என்கிறார் பரமன்.

இந்த பக்திநெறி பற்றியும், பக்தர்களின் நான்கு வகைகள் பற்றியும், இவர்களில் அடியார்களிடம் கண்ணன் காட்டுகின்ற கருணையைப் பற்றியும் விளக்குகின்ற பகுதியே பக்தியோகமாகக் கீதையில் விரிந்து நிற்கின்றது. புற வழிபாடுகள், பூசனைகள் எல்லாம் நம் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வைத்துக் கொள்வதற்காகத்தான். ஒரு கஷ்டம் வந்து அதைத் தாங்கமுடியாமல் அழுது புலம்பும்போது மனம் இறைவனைத் தேடும். தன்னைக்காப்பாற்றும்படி கெஞ்சும். கஷ்டங்கள் அடுத்தடுத்து வருவதே நாம் இறைவனைச் சரணடைவதற்காகத்தான் என்பது பக்தர்களின் கருத்து.

ஸ்ரீமத் பாகவதத்தில் குந்திதேவி கண்ணனிடம், “எனக்கு மேலும் மேலும் எவ்வளவு துன்பங்கள் கொடுத்தாலும் நான் அவற்றை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வேன் கண்ணா! ஏனெனில் நான் துன்பப்படும் நேரங்களில் தான் நீ எனக்கு மிக அருகில் இருப்பதாக நான் உணர்கிறேன்!” என்று மன உருக்கத்துடன் சொல்கிறாள்.

நாம் வாழும் வகை தெரியாமல் அல்லல்பட்டு என்ன செய்வது என்று திகைக்கின்ற வேளையில் பகவத்கீதை நமக்குப் பக்குவமான பக்திநெறியைக் காட்டுகின்றது. பரம்பொருளே நமக்காக எடுத்துரைத்த உன்னத நெறி இது.

திருவண்ணாமலையில் வாழ்ந்த பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியிடம் ஒரு பக்தர், “ஸ்வாமி! நான் எவ்வளவோ காலமாக பகவத்கீதையைத் தினமும் படித்துப் பாராயணம் செய்து வருகின்றேன். இருந்தாலும் எனக்கு எதுவும் மனதில் தங்கமாட்டேன் என்கிறது. கவலையும் சஞ்சலமும் சதா இருந்துகொண்டே இருக்கிறது. இதற்கு நான் என்ன செய்வது?” என்று கேட்டாராம். அதற்கு ஸ்ரீ ரமணர், கீதையை சும்மா படித்தால் மட்டும் போதாது. அது சொல்;கிறபடி நடக்க வேண்டும். அப்படி நடக்க ஆரம்பித்தால் கவலையும் சஞ்சலமும் இருக்காது! என்று பதில் கூறினார். அந்த பக்தர் அதோடு சரி என்று போகாமல், ஸ்வாமி! இந்த கீதை அப்படி என்னதான் சொல்கிறது? என்று கேட்டார். கீதை என்ன சொல்கிறதா? என்று கேட்டு சிரித்த ரமணர் அந்த பக்தரிடம், நீ கையில் பிடித்துக்கொண்டு படிக்கிறாயே கீதா புத்தகம்! அது என்ன சொல்கிறது தெரியுமா? ‘நீ உன்னைப் பார்! என்று நான் சொல்கிறேன். ஆனால் நீ இன்னும் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாய் என்று தான் கீதை சொல்கிறது!’ என்றாராம். வேதங்களும் இதைத்தான் சொல்கின்றன. எனது உண்மையான சொரூபத்தை நான் அறியும் வழியைத் தான் கீதை சொல்கிறது.

சும்மா இந்த கீதையைப் படித்துக்கொண்டு இன்னமும் பழைய முறையிலேயே, கோப தாபம், விருப்பு வெறுப்பு, ஆசை பாசம் என்று இருந்துகொண்டு மனதைச் சுத்தப்படுத்தாமல், வாழ்க்கையை உண்மை என்று நம்பி அதிலேயே உழன்றுகொண்டும் அழுதுகொண்டும் இருந்தால் நமக்குக் கீதை புகட்டும் பாடம் பிடிபடாது. மனதை உலக விவகாரங்களிலிருந்து விலக்க வேண்டும். வெளிமுகப் பார்வையை அகமுகமாகத் திருப்ப வேண்டும். பிறர் குற்றங்குறைகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருக்காமல் நம்மையே நாம் நன்றாக உற்று நோக்கிச் சரி பிழைகளைக் கவனித்துத் திருத்திக்கொள்ள வேண்டும்.

பற்று நீக்கிச் செய்ய வேண்டியவற்றைச் செய்துகொண்டு நமக்குள் குடிகொண்டிருக்கும் பரந்தாமனையே நினைத்துத் தியானிக்க வேண்டும். எல்லோருமே அந்தப் பரம்பொருளின் அம்சம் தான் என்று புரிந்துகொண்டு பிறரிடம் அன்பாகப் பழகித் தர்மம், நீதியாக வாழ வேண்டும். எது நடந்தாலும் கண்ணனே கதி என்று அமைதியுடன் ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். இப்படி இருந்தால் வருபவற்றை அவன் பார்த்துக்கொள்வான். நமக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னிடம் சரணடைந்து விடு! என்று தான் பகவான் கூறுகின்றார். கீதையின் பயன் இதுதான். இதை நாம் புரிந்துகொண்டால் போதும்.

பகவத்கீதையின் முதல் ஆறு அத்தியாயங்கள் ஜீவனைப் பற்றிப் பேசுகின்றன. இரண்டாவது ஆறு அத்தியாயங்கள் இறைவனைப்பற்றிப் பேசுகின்றன. கடைசி ஆறு அத்தியாயங்கள் இறைவனுக்கும், ஜீவனுக்கும் உள்ள ஐக்கிய பாவத்தைப் பற்றிப் பேசுகின்றன. இப்படி இறைவனுக்கும் ஜீவனுக்கும் இடையில் ஏற்படுகின்ற பிணைப்பு, பக்தி எனப்படுகின்றது. பக்தி என்பது அதனிடம் ஜீவன் கொள்கின்ற முழு ஈடுபாடு. அவனே எல்லாம் என்று அவனில் கலந்து கரைந்து ஆழ்ந்துவிடுவது.

கீதையின் ஏழாவது அத்தியாயத்தில் மூன்று வகை பக்தர்களைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. முதலாவது வகை பக்தர்கள் அர்த்தன் என்று அழைக்கப்படுகின்றனர். இது, ஜீவன் தான் படுகின்ற துன்பங்களிலிருந்து தன்னை விடுவித்துக் காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கின்ற பக்தி. இரண்டாவது வகை பக்தி அர்த்தார்த்தி. அதைத்தா! இதைத்தா! என்று ஏதாவது ஒரு தேவையைப் பெற இறைவனிடம் வேண்டிக்கொள்கின்ற பக்தி இது. மூன்றாவது வகை ஜிக்ஞாசு. வாழ்க்கையையும் அதன் உண்மையான நோக்கத்தையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்; தாம் வாழ்கின்ற விதத்தை மாற்றி ஒரு குருவை சென்று சேர்ந்து ஆன்மீக சாதகர்களாக ஞானத்தைத் தேடி அலைபவர்கள் இவ்வகை பக்தர்கள். இவை தவிர நான்காவது வகை பக்தர்களாகத் திகழ்பவர்கள் ஞானியர். இவர்களுக்கு இறைவனைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. நானும் இறைவனும் ஒன்று என ஐக்கிய பாவத்துடன் தன்னுள் அவனைத் தியானத்திருப்பவர்கள் இவர்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s