மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 35

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு நேரடி அனுபவத்தைத் தருவதற்காகத் தம் விஸ்வரூபத்தைச் காட்டியருளினார். விவரிக்க இயலாத அந்தப் பேருருவின் எழுச்சியை அர்ச்சுனன் நன்றாகப் பார்த்தான். உலகம் முழுவதையும், பற்பல பிரிவுகளுடன் கூடிய நிலையில் பகவானின் சரீரத்தில் ஒரு பகுதியாகக் கண்டான் அர்ச்சுனன்.

இப்படிப்பட்ட அகண்ட மண்டலாகார ஸ்வரூபனான விஸ்வரூபத்தைத் தரிசித்ததும் அர்ச்சுனன் பேராச்சரியத்தில் திகைத்துப் போனான். அவனது உடல் சிலிர்த்துப் புளகாங்கிதம் அடைந்தது. மிகுந்த பக்தியுடன் தலை குனிந்து இரு கரங்களையும் குவித்து அப்பேருருவை வணங்கினான்.

“ஏ பரந்தாமா! தங்களது சரீரத்தில் எல்லாத் தேவதைகளையும், பிராணிகளையும் கொண்ட பூத சமுதாயங்களைப் பார்க்கிறேன். கூடவே தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மாவையும் கைலாயத்தில் வீற்றிருக்கும் சங்கரரையும், எல்லா மகரிஷிகளையும், உத்தமமான சர்ப்பங்களையும் தரிசிக்கிறேன். உங்களுடைய ஆரம்பம், மத்தி, முடிவு எதையும் என்னால் ஒருசேரப் பார்க்க முடியவில்லை.

உங்களது சிரத்திலே மணிமகுடம், கைகளில் கதை, சக்கரம் முதலான பலவகை ஆயுதங்கள். முகத்தில் ஒளி வெள்ளம் . நாலா பக்கங்களிலும் ஜொலிக்கும் அக்கினிப் பிழம்புகள். என்னால் சரியாகப் பார்க்கவும் முடியவில்லை. தங்களின் விஸ்வரூபம் என் பார்வைக்கு அடங்கவும் இல்லை. நீங்கள் அழியாத அஷரப் பிரம்மம். அகில உலகிற்கும் மூலாதாரம். நீங்கள் தர்மநெறி காக்கும் சனாதன புருஷர். சர்வ வியாபி!” எனத் துதித்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் “அர்ச்சுனா!நீ பார்க்கிறாயா? அல்லது இப்படியெல்லாம் சிந்தித்து உணர்கிறாயா?” என்று கேட்டார்.

அதற்கு அவன், ஹே மகாத்மா! நான் உங்களைத் தரிசிக்கிறேன். சுவர்க்கத்திற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளியும், பத்துத் திசைகளும் உங்களாலேயே நிரம்பியிருக்கின்றன. இந்த அற்புதமான உக்கிர விஸ்வரூபத்தைப் பார்த்து மூன்று உலகங்களும் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. சகல தேவதைகளும் பயபக்தியுடன் கரங்குவித்து வணங்கி ஜய ஜய! என முழங்கிக் கொண்டும், தங்கள் புகழைப் பாடிக்கொண்டும் உங்கள் திருமேனியில் நுழைகின்றனர். மகரிஷிகள் சித்த பருஷர்கள் கூட்டங் கூட்டமாக உங்களைத் தரிசித்த வண்ணம் இருக்கிறார்கள். அவ்வளவு பேரும் பேராச்சர்யத்துடன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

பரம்பொருளே! தங்களின் அதிசய விஸ்வரூபத்தைக் கண்டு எல்லாப் பிராணிகளும் நடு நடுங்கிப் போயிருக்கின்றன. தங்கள் அரிதிலும் அரிதான விஸ்வரூபம் எவரைத்தான் பயப்படுத்தாது? நானும் பயந்து நடுங்கிக்கொண்டே இருக்கிறேன். நிம்மதியாக என்னால் இருக்க முடியவில்லை. பிரளயகால அக்கினியைப்போல ஜொலிக்கிறீர்கள். பெரும் கோரைப் பற்கள் காரணமாகத் தங்களின் மாபெரும் முகங்கள், உயிரினங்கள் முழுவதையும் பயப்படுத்துகின்றன.

பகவானே! எப்படி நதியின் நீர்ப்பெருக்குகள் தாமாகவே கடலை நாடிப் போகின்றனவோ அதுபோல இந்த மானுட உலகைச் சார்ந்த பீஷ்மர், துரோணர் முதலான மாவீரர்கள் உங்களுடைய ஒளி மிகுந்த வாய்க்குள் தாமாகவே நுழைந்து மறைகிறார்கள். விட்டில் பூச்சிகள் எப்படி மோக வசப்பட்டு எரியும் தீயை நாடி விரைந்து தம் அழிவைத் தாமே தேடிக்கொள்கின்றனவோ, அதைப்போல துரியோதனன் முதலானவர்கள் தங்களின் பயங்கரமான வாய்க்குள் புகுந்து ஓடுகிறார்கள். நீங்களே எல்லோரையும் கபளீகரம் செய்கிறீர்கள், நான்கு புறமும் உள்ள எல்லோரையுமே தொடர்ந்து விழுங்குகின்றீர்கள்.

மஹாவிஷ்ணு தேவா! எங்கும் நிறைந்திருப்பவரே! உங்களிடமிருந்து வெளிப்படும் மிக உக்கிரமான ஒளி வெள்ளத்தின் செம்மையால் இந்த உலகம் பரிதவிக்கிறது.”

இப்படித் துதித்த அர்ச்சுனன் பிறகு, இந்த பயங்கரமான உக்கிர சொரூபம் கொண்ட நீங்கள் யார்? இங்கு எதற்கு வந்திருக்கிறீர்கள்? ஆதிரூபமாகிய இந்த விஸ்வரூபத்தின் தத்துவத்தை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்! என்று வணங்கிக் கேட்கிறான். அதற்கு பகவான், “எல்லா உலகங்களையும் நாசம் செய்வதற்காகவே வியாபித்திருக்கும் காலதேவன் நான்! இப்போது இந்த மனிதர்களையெல்லாம் சம்ஹாரம் செய்ய இங்கு வந்திருக்கிறேன்!”

“எதிர்தரப்பில் உன்னுடன் போராட நின்றிருக்கும் வீரர்கள் அனைவரும் என்னால் முன்னதாகவே கொல்லப்பட்டு விட்டவர்கள். அவர்கள் உன்னிடம் சண்டையிடாமல் ஒதுங்கினாலும் உயிர் பிழைக்க மாட்டார்கள். எனவே நீ அஞ்சாமல் யுத்தம் புரிய ஆயத்தமாகு. போரிட்டு வெற்றி பெற்றுப் புகழைத் தேடிக்கொள். இங்கு எல்லாவற்றையும் செய்து முடிப்பவன் கால தேவனான நானே. நீ இந்தப் போருக்கும் வெற்றிக்கும் துணைக்காரணமாக இருந்து செயல்படு. போதும்! நான் ஏற்கனவே கொன்றுவிட்டவர்களைத்தான் நீ இனி கொல்லப்போவதாய்க் காட்டுவாய். நீ வெறும் கருவி. செயல்படுபவன் நான் தான்!” என்றார்.

பரம்பொருளின் இந்த சத்திய வாக்கினைக் கேட்டதும் அர்ச்சுனனின் உடல் மேலும் பயத்தால் நடு நடுங்கியது. மீண்டும் அவரைத் தொழுது குரல் தழுதழுக்க அவரைப் போற்றித் துதிக்க ஆரம்பித்தான் அவன். எல்லாவற்றிற்குமே மூல ஆதாரமான, ஆதி மூலமான பரம்பொருளின் சகல பெருமைகளையும், சகல கல்யாண குணங்களையும் ஒவ்வொன்றாகச் சொல்லிச் சொல்லி மீண்டும் மீண்டும் அவரை நமஸ்கரிக்கின்றான். அதிசயிக்கின்றான். அவரைப் புரிந்துகொள்ளாமல் நடந்துகொண்ட தன்னையே அவன் நொந்துகொள்கின்றான்.

“பகவானே! தங்களின் அளவிடமுடியாத மகிமைகளையும் சொரூபங்களையும் அறியாமல் நான் உங்களை சாதாரண நண்பனாகவும் உறவினனாகவும் கருதியிருந்தேன். பெயர் சொல்லிக் கூப்பிட்டும், பலமுறை பரிகாசம் செய்தும் இடையர் குல நண்பன் என்ற விதத்தில் பலர் முன்னிலையில் விமர்சித்தும் விளையாடி இருக்கிறேன். எத்தனையோ முறை உங்களை மதிக்காமலும் இருந்திருக்கிறேன். இதற்கெல்லாம் நான் இப்போது வருந்துகிறேன். அடிபணிந்து உங்களிடம் மன்னிப்பை வேண்டுகிறேன்.”

“கிருஷ்ண பரமாத்மா! நீங்கள் தான் சகல ஜீவராசிகளுக்கும் தந்தை. பூஜிக்கத் தகுந்த மகான் நீங்கள். ஆதி குரு. தங்களின் வைபவ மகிமைகள் எல்லையற்றவை. மூவுலகிலும் உங்களுக்கு நிகரானவர்; இல்லை. யாராலும் உங்களை விஞ்ச முடியாது.உங்களை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிப் பேரருளாளரான தங்களின் கருணையை வேண்டுகிறேன். என் பிழைகளைப் பொறுத்தருளுங்கள்!

மகன் செய்த பிழைகளைத் தந்தையும், சிறிய நண்பனைப் பெரிய நண்பனும், மனைவியைக் கணவனும் எப்படிப் பெருந்தன்மையுடன் மன்னிக்கிறார்களோ, பொறுத்துக்கொள்கிறார்களோ, அதைப்போல் என் தவறுகளையும் நீங்கள் பொறுத்தருள வேண்டும்!” என்று அர்ச்சுனன் மனம் உருகிக் கசிந்து மிகப்பணிவுடையவனாய் நமஸ்கரித்துக் கேட்டான்.

அவற்றைக் கேட்ட கிருஷ்ணர், உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்கிறார். அதற்கு அவன், “அதி ஆச்சர்யமான இந்த ஒப்பற்ற தரிசனம் மகிழ்ச்சியைத் தந்தாலும்கூடப் பயமாகவும் இருக்கிறது. ஆகையால் பக்தவத்சலனான தாங்கள் மனம் குளிர்ந்து மகிழ்ச்சியுடன் திருமாலின் திருஉருவத்தில் தரிசனமளிக்க வேண்டுகிறேன்.

சென்னியில் கிரீடம், திருக்கரங்களில் கதை, சங்கு, சக்கரம், பத்மம் என்னும் திருச்சின்னங்கள், மந்தஹாசம், நீலமேக சியாமள வண்ணம், பட்டுப் பீதாம்பரம் இப்படிப்பட்ட திவ்ய திருக்கோலத்தில் தங்களைத் தரிசிக்கவே விரும்புகிறேன். ஆயிரம் ஆயிரம் கரங்களைக் கொண்டவராகக் காட்சியளிக்கும் விசுவ மூர்த்தியே! சதுர்புஜ ரூபத்தில் காட்சியளியுங்கள்!” என்று வணங்கினான்.

மேலும் அவன் சர்வேசா! தங்களின் அற்புதமான விஸ்வரூபத்தை மனிதன் எப்படித் தரிசிக்க முடியும்? என்றும் கேட்டான். அதற்குக் கிருஷ்ணர், “வேதம் பயின்றாலும், யாக யக்ஞங்கள் செய்தாலும், தான தர்மங்கள் செய்தாலும், மிகக் கடுமையான தவம் புரிந்தாலும், செயற்கரிய சாதனைகள் செய்தாலும், என் விஸ்வரூபத்தைத் தரிசிக்க முடியாது. என் அருள் பாலிப்புக்குப் பாத்திரமான உன்னைப் போன்றவர்களைத் தவிர வேறு யாரும் இந்த நிலையில் என்னைத் தரிசிக்க முடியாது” என்று பதிலுரைத்தார்.

பிறகு அவரே, என் உக்கிர சொரூபத்தைக் கண்டு நீ பயப்படக்கூடாது. உன் மனதில் மோக மயக்கம், மூடத்தனம், பேதமை என எதையும் கொள்ளக்கூடாது என்றும் எச்சரித்தார். அதனை அடுத்து அர்ச்சுனனின் அச்சத்தைப் போக்கும்படியாக நான்கு கைகளுடன் திருமால் வடிவமாகக் காட்சி தந்து அருளினார். அதன் பின் தனது கிருஷ்ண வடிவமான சுயரூப நிலையில் பார்த்தசாரதியாகக் காட்சியளித்தார். அந்த வடிவத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்ததும் தான் அர்ச்சுனன் அச்சம் தவிர்த்துத் தனது இயல்பான நிலையை அடைந்தான்.

புன்னகை பூத்த முகத்துடன் அர்ச்சுனனை நோக்கிய பகவான், பரிசுத்தமான பக்தி மூலமாகத்தான் என்னைத் தரிசிக்க முடியும்! கூடவே தத்துவ ஞானம் பெற்று என்னை உணர்ந்து அடையவும் முடியும்! என்றார்.

அப்படிப்பட்ட பரிசுத்தமான பக்தியைப் பற்றி விவரிக்கும்படி அர்ச்சுனனன் கேட்கவும், “பாண்டுபுத்திரனே! எல்லாச் செயல்களையும் எனக்காகவே செய்ய வேண்டும். என்னையே சிந்தித்துத் துதித்தும், பூஜித்தும் இருக்க வேண்டும். என்னிடம் மட்டுமே பக்தி செலுத்தி வாழ வேண்டும்! எதிலும் ஆசாபாசம் கொள்ளக்கூடாது. எந்தப் பிராணியிடமும் பகைமை பாராட்டக்கூடாது. இவ்வாறு பக்தி நெறியுடன் என்னையே புகலாகக்கொண்டு சரணடைந்து வாழும் பக்தன் என்னைப் பெறுகிறான். நான் அந்தத் துhய பக்தனை ஆட்கொள்கிறேன்.” என்று பக்தன் தன்னை அடையக்கூடிய எளிய வழியை மிக இனிமையாக எடுத்துரைத்து நின்றார், கீதையின் நாயகனான ஸ்ரீ கண்ணபிரான். அப்படிப்பட்ட அற்புதமான அந்த பக்தியோகத்தைப் பற்றி மேலும் மேலும் விளக்கமாகக் கேட்டறிய அர்ச்சுனன் விரும்பினான். எனவே அடுத்த அத்தியாயம் பக்தி யோகமாக மலர்கிறது.

விஸ்வரூப தரிசனம் நிறைவு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s