மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -33

ஸ்ரீ கிருஷ்ணர் தமது மகிமைகளையெல்லாம் மிக விரிவாக அர்ச்சுனனிடம் விபூதியோகமாக எடுத்துரைத்துத் தனது சர்வ வியாபகத்தை விளக்கிக் கூறினார். அவற்றைக் கேட்டு வியந்து ஸ்ரீ கிருஷ்ணரின் ரூபத்தில் தன்னிடம் பேசிக்கொண்டிருந்த பரம்பொருளிடம், உங்களது உண்மையான தோற்றத்தை, மகிமை பொருந்திய, அந்தத் திருஉருவை நான் முழுமையாகத் தரிசிக்க வேண்டும்! என்று அர்ச்சுனன் பணிந்து வேண்டுகிறான்.

தன்னைச் சர்வ வியாபியாகத் தரிசனம் செய்ய விரும்பிய அர்ச்சுனனின் விருப்பத்தை ஏற்று ஸ்ரீ கிருஷ்ணர், “அர்ச்சுனா! உனது பௌதீகக் கண்களால் என் நிலை எதையுமே நீ பார்க்க இயலாது! நான் உனக்குத் தெய்வாம்சம் பொருந்திய திவ்ய பார்வை என்னும் அகக்கண்ணை அளிக்கிறேன். அதன் மூலம் என் சர்வேஸ்வர வல்லமையைப் பார்! என் பரம்பொருள் நிலையை உணர்ந்து கொள்!” என்று கூறி மகா யோகேஸ்வரனாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனனுக்குத் தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டியருளினார்.

விஸ்வரூபம் என்பது பரப்பிரம்மத்தின் விரிவு. படைப்பின் தன்மையை முழுமையாகக் காட்டுவது. அனைத்தையும் ஒன்றாக்கி ஓருருவாய்ச் சுருக்கிக் காட்டுவது. அதைப் பார்க்கும்போது, அக்காட்சி பிரம்மாண்டமாகத் தெரிகின்றபோது, அதில் எல்லாக் காலமுமே தெளிவாகத் தெரிகின்ற நிலையில், உலகத்தில் இருப்பதான எல்லாமே கிருஷ்ணரின் பேருருவில் அடங்கி விரிக்கப்பட்டதைப் பார்த்தபோது அர்ச்சுனனுக்குப் பயம் ஏற்பட்டது.

எந்த ஒன்றையும் சாதாரணமாகப் பார்த்தால் அதை ஏற்கின்ற மனதிற்குப் பிரம்மாண்டத்தைப் பார்க்கும்போது பயம் ஏற்படும். பிரமிப்பு ஏற்படும். அதி உயரமான கட்டிடத்திலிருந்து கீழே எட்டிப் பார்க்கின்றபோது, நயாகரா நீர்வீழ்ச்சியில் கொட்டுகின்ற பேரருவிக்குப் பின்புறத்தில் குடைந்து அமைக்கப்பட்டுள்ள குகைப்பாதையில் நின்று ஹோ வென்ற பேரிரைச்சலுடன் அருவி சீறிப் பாய்வதைப் பார்க்கின்றபோது, முதலில் ஒரு பயம் வெளிப்படும். பழக்கத்திற்கு மாறான விரிவும் உயரமும் பயத்தை அளிக்கின்றன. எல்லாமே இறைவன் படைப்பு! என்று நினைத்துப் பார்ப்பவர்களுக்குப் பயம் வராது. ஞானிகளுக்கு அச்சமில்லை.

ஆனால் அர்ச்சுனன் நம் சார்பில் அல்லவா அங்கு செயல்படுகின்றான்! அவன் கண்களுக்கு முன்னால் மூன்று காலங்கள், மூன்று உலகங்கள், பஞ்சபூதங்கள், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் என எல்லாவகை உயிரினங்களுமே அப்பொழுது அங்கு ஸ்ரீ கிருஷ்ணரின் விஸ்வரூப வடிவத்தில் விரிந்த நிலையில் காட்சியளித்தன. அவனுக்கு பயத்தை அளித்தன.

இதை எழுதுகின்றபோது பிரம்மம் எனக்குள் ஒரு சுய விளக்கத்தைத் தந்து அதனை எழுதத் துhண்டியது. தானாகவே வெளிப்பட்ட அந்த விளக்கத்தை இங்கு எழுத்தாக வடிக்கின்றேன். இதன் மூலம் விஸ்வரூப தரிசனம் நன்கு விளங்க உங்களில் இருக்கும் பிரம்மம் உதவட்டும்!

இந்த உலகத்தில் காணப்படுகின்ற எல்லாமே பூமியை அடித்தளமாகக் கொண்டு அதன் மேல் எழுந்து நிற்கின்றன. மலைகள், காடுகள், நதிகள், பள்ளத்தாக்குகள், கடல், மனிதர்கள், விலங்கினங்கள், கட்டிடங்கள், தாவரங்கள் என்று இப்படி எல்லாப் படைப்புகளுமே பூமிக்கு மேல் நிற்பவையே.

இந்தப் பூமியோ அண்ட வெளியில் ஒரு சூரியக் குடும்பத்தின் சிறு பகுதியாக இருக்கின்றது. சூரியனோ பல நுhறு சூரியக் குடும்பங்களில் ஒன்றாகப் பால்வெளியில் மிதக்கிறது. அந்தப் பால்வெளியோ பல நுhறு! இதுபோல் ஈரேழு பதினான்கு லோகங்கள் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

ஒரு மனிதன் கருநிலையில் கர்ப்பத்தில் ஒடுங்கி சிறிது சிறிதாக வளர்ந்து சிசுவாகத் தோற்றம் பெற்று, வெளிப்பட்டுப் பிறந்து, வளர்ந்து, வளர்சிதை மாற்றங்கள் ஏற்படும் நிலையில் ஒரு வரலாறு எழுதுகின்ற அளவிற்கு வாழ்ந்து பிறகு தளர்ந்து சுருங்கி இறந்து விடுகின்றான். பகலெல்லாம் ஓடியாடி செயல்படுகின்ற மனிதன், இரவானால் உடல் மறந்து உயிரில் ஒடுங்கி உறங்கி விடுகின்றான். மறுநாள் மீண்டும் விழிப்புற்று எழுகின்றான்.

எல்லாப் படைப்புகளுமே இதே நியதியில் தான் தோன்றி வெளிப்பட்டு, தேய்ந்து, வாடி, வதங்கி, விழுந்து விடுகின்றன. இதற்கெல்லாம் காரணம் என்ன? எது எங்கிருந்து இவ்வாறு செயல்படுகின்றது என்று ஆராய்ந்த நமது சனாதன தர்மச் சான்றோர் அதற்குப் பிரம்மம் என்று பெயரிட்டனர். பிரம்மம் என்பது அளவிடற்கரிய மாபெரும் சக்தி. அறிய இயலாததான இந்த சக்தி தன் விருப்பத்தால் தன்னிலிருந்து வெளிப்படுகிறது. இந்த வெளிப்பாடு பிரபஞ்சமாக அதாவது ஈரேழு பதினான்கு லோகங்களாக விரிந்து இந்த வெளிப்பாட்டில் தான் பஞ்சபூதங்கள், பால்வெளி, சூரிய குடும்பங்கள், கிரகங்கள், தேவர்கள், அசுரர்கள், கணங்கள், ரிஷிகள், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், நான், எனது உடல், மனம், புத்தி என எல்லாமே படைப்புகளாகப் படைப்புகளை இயக்கும் சக்திகளாக வெளிப்பட்டன. இவை அத்தனைக்கும் ஆதார சக்தி பிரம்மமே.

பிரம்மமே இவை அத்தனையுமாக வெளிப்பட்டு அதாவது மலர்ந்து, எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு ஒவ்வொரு படைப்பின் வாயிலாகத் தன் சக்தியை உச்சகட்ட அளவிற்கு வெளிப்படுத்திப் பிரகாசித்துவிட்டுப் பிறகு ஒரு கால கட்டத்த்pல் இந்தப் படைப்பின் இயக்க சக்தியை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் அதனைச் செயலிழந்து விழச் செய்துவிடுகிறது. அதுவே மரணம் என்று சொல்லப்படுகிறது.

ஒரு செடி கிளை விட்டு வளர்ந்து மரமாகி, பூக்களையும், கனிகளையும் தந்து முதிர்ந்து வேரோடு சாய்கிறது. இது மரத்தின் மரணம். ஒரு குழந்தை பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, வாலிபனாகி, முதியவனாகி, உடல் தளர்ந்து, கட்டையாகிக் காய்ந்து விடும் நிலை மனித உடலின் மரணம். விலங்குகளின் வாழ்வும் இத்தகையதே. மலை மண்ணாகிறது. நதி கடல் நீராகிறது. நெருப்பு சாம்பலாகிறது.

இப்படித் தன்னிலிருந்து தானே பலகோடி, பலகோடிப் படைப்புகளாகப் பிரம்மம் வெளிப்பட்டுப் பல்வேறு விதமான அனுபவங்களுடன் வாழ்ந்து, சாதனைகள், தோல்விகள், அழிவுகள் என சகல விதத்திலும் பிரகாசித்து, உலகைக் கவர்ச்சியுள்ளதாக ஆக்குகின்றது. மறுபுறம் சொல்லொணாத் துன்பங்களைத் தந்து, கசக்கிப் பிழிந்து, சக்கையாக்கித் துhக்கிப்போட்டு விளையாடுகிறது.

மூன்று காலங்களும் அதனிடத்தில் தான், ஆரம்பமும், நடுவும், முடிவும் எல்லாமே அதுதான். இப்படி யுகம் யுகமாக விளையாடி, விளையாடி ஒரு காலகட்டத்தில் அது தன்னில் தானே ஒடுங்கிவிடுகின்றது. தானே விரித்த சக்தியைச் சுருக்கித் தன்னில் தானே இழுத்துக்கொண்டு விடுகிறது. இது தான் பிரபஞ்ச இயக்கம். இது தான் பிரம்ம விருப்பம். இது தான் அறிய வேண்டிய சத்தியம். இதன் சுருக்கம் தான் மனிதனின் உறக்கமும் விழிப்புமான தினசரி வாழ்க்கை. இதன் விரிவு தான் மனிதனின் பிறப்பும் இறப்பும். எல்லாமே இதற்குள்ளேயே தான். பிரம்ம வெளிப்பாடு பிரபஞ்ச விரிவும், யுகங்களும், வாழ்க்கையும். பிரம்ம ஒடுக்கம் பேரழிவும், பிரளயப் பெருக்கும்.

இங்குப் பேரழிவு என்பது பிரம்மம் மட்டுமே திகழ்ந்து மற்ற அனைத்தும் இல்லாமல் போய் விடுகின்ற நிலை. இதற்குச் சிறந்த உதாரணம் நமது ஆழ்ந்த உறக்க நிலை. மிக நன்றாகத் தூங்குகின்றபோது அங்கு இருப்பது யார்? விழித்து எழுந்ததும் விரிவது என்ன? இதைச் சிந்தியுங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s