மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -32

எவ்வளவு நல்ல உபதேசங்களையும், பரம்பொருளைப் பற்றிய உயரிய தத்துவங்களையும் சத் சங்கத்தில், நாம் கேட்டுக் கேட்டு அறிந்தாலும், எல்லாம் நமக்குள் ஒன்று கலக்காமல், நம் மனதில் தங்காமல், நம் மன ஆசாபாசங்களால் அடித்துக்கொண்டு போய்விடுகின்றனவே. என்ன தான் உயர் ஞானத்தைப் பெற்றாலும், மீண்டும், பழைய குருடி கதவைத் திறடி! என்ற விதத்தில் பழைய போக்கில் தானே நாம் வாழ்கின்றோம்! பேத மனப்பான்மை போய் சமமாகப் பார்க்கின்ற பக்குவம் வந்த பாடில்லையே! போட்டி, பொறாமை போய், விட்டுக் கொடுக்கின்ற தன்மை வரவில்லையே! எல்லாம் அவன் செயல்! என்று வாய் தான் சொல்கிறதே தவிர அந்த உண்மையை மனம் உணர்ந்து ஏற்கவில்லையே! மனம் அப்படி உணர்ந்துவிட்டால், எது வந்தாலும் சரி என்று எவ்வித சஞ்சலமுமின்றி வருவதைப் பிரசாத புத்தியுடன் ஏற்க முடியுமே! ஆனால் இது முடிகிறதா?

இறைவனின் மகிமையை உணர்ந்து நமது இயலாமையையும் புரிந்துகொண்டு வாழ்க்கையில் வருவதையெல்லாம் அவன் தருவதாக எண்ணி ஏற்றுக்கொள்வது தான் பிரசாத புத்தி. நான் அவனே! என்று மனம் பக்குவப்பட்ட பிறகு எதுவும் நமக்குப் பிரச்னையாக, தாங்க முடியாத துன்ப துயரமாக இருக்கக்கூடாது. எதுவாயிருந்தாலும் தாங்கிக்கொள்ளக் கூடிய பொறுமை ஏற்பட வேண்டும். இதைத்தான், சாத்வீகக் குணம் கொண்டவர்களின் அடக்கம் நானே! என்று கூறுகின்றார் கிருஷ்ணர்.

எவ்வளவோ விபரமாகத் தன்னைப்பற்றி விவரித்த பகவான் கடைசியில், “இதற்கு மேலும் விவரிப்பானேன்? எல்லா உயிரினங்களுக்கும் மூல காரணமான வித்தை நான் தான்! அர்ச்சுனா! நானில்லாமல் அசையும் பொருள், அசையாப்பொருள் எதுவுமே உயிர் வாழவோ இருக்கவோ முடியாது. நான் தான் சர்வமும்!” என்று முடித்து விடுகின்றார்.

இப்பொழுது அர்ச்சுனன், “பகவானே! உங்களுக்குள்ள எல்லா விபூதிகளையும் சொல்லிவிட்டீர்களா!” என்று கேட்கிறான். அதற்கு அவர், “இல்லை வீரனே! எனது பெருமைகளுக்கு முடிவே இல்லை. இதுவரை சொன்னதெல்லாம் சுருக்கமான விளக்கம் தான்! என்னாலேயே என் விபூதிகளை முழுமையாகச் சொல்ல இயலாது! அகில உலகிலும் எவையெல்லாம் தெய்வாம்சம் உள்ளவையோ, அழகும் பொலிவும் சார்ந்தவையோ, வலிமை பொருந்தியவையோ, அவை யாவும் எனது ஒளி பொருந்திய ஓர் அம்சத்தால் ஏற்பட்டவையே என்பதை உணர்ந்து கொள்!” என்று சொல்லி விடுகின்றார்.

இவ்வளவையும் பொறுமையாக எடுத்துச் சொன்ன பரம்பொருள் அதன் பின் அர்ச்சுனனிடம், “அர்ச்சுனா! இப்படி அகில உலகத்திலும் எனது ஏதாவது ஓர் அம்சத்தின் மூலமாக வியாபித்திருக்கும் நான்; இப்போது இந்த இடத்தில், உன் வேண்டுகோளை ஏற்றுத் தேரோட்டியாக ஒரு கையில் லகானும், மறு கையில் சாட்டையுமாக அமர்ந்திருக்கிறேன். உன் உத்திரவை நிறைவேற்றுகின்றேன்! இதற்கு மேல் நீ அறிந்துகொள்ள என்ன இருக்கிறது?” என்று மிக அற்புதமான ஒரு வினாவை எழுப்புகின்றார். பார்த்தசாரதியாய் பகவானே தேர்த்தட்டில் அமர்ந்து வழி நடத்த வந்த பிறகு அர்ச்சுனனுக்குக் குழப்பம் எதற்கு? கலக்கம் ஏன்? இதுதான் அவரின் கேள்வியின் சூட்சுமமான உட்பொருள்.

இந்த இடத்தை எழுதுகின்றபொழுது கடோபநிஷத்தில் ஒரு காட்சி நினைவிற்கு வருகின்றது. நசிகேதன் யமதர்மராஜனிடம் தனது மூன்றாவது வரமாக அத்யாத்ம வித்தையைத் தனக்கு உபதேசிக்கும்படி கேட்கின்றான். எமதர்மன் சிறுவனான அவனுக்கு அந்த ரகசிய வித்தையைத் தன்னால் உபதேசிக்க முடியாது. தேவர்களால் கூடச் சரியாக விளங்கிக்கொள்ள முடியாத சிக்கலான ரகசியம் அது! என மறுக்கிறான். ஆனால் நசிகேதன் ஒரே பிடிவாதமாக ஆத்மாவைப் பற்றிய அறிவையே வரமாகக் கேட்கிறான்.

கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தர்மதேவதையான யமன் அதைப்பற்றி படிப்படியாக விளக்கிக் கூறுகின்றான். அதில் ஓரிடத்தில், உடலைத் தேராகவும், ஐம்புலன்களைத் குதிரைகளாகவும், மனதைக் கடிவாளமாகவும், புத்தியை சாரதியாகவும் கொண்ட ஜீவன், உயர் உணர்வு நிலையால் அமைக்கப்பட்ட ஒளிப்பாதையில் பயணிக்கிறான்! என்று தர்மத்தின் தலைவன் கூறுகின்றான்.

எந்த ஜீவன் தன் பிறப்பின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, தனது ஐம்புலன்களாகிய குதிரைகளை மனமெனும் கடிவாளத்தின் மூலம் இறுக்கிப் பிடித்து அடக்கிப் புத்தியென்ற சாரதியை ஆத்மாவின் ஒளியில் இயங்க வைக்கின்றானோ அல்லது ஆத்மாவாகிய பரம்பொருளிடம் யார் சரணடைகின்றார்களோ அத்தகைய உண்மையான பக்தனுக்கு உதவ அந்தப் பரந்தாமனே, தன் அம்சத்தால் புத்தியாக அவனது இதய பீடமாகிய தோ;த்தட்டில் அமர்கின்றார். அவர் இந்த உடலாகிய வாகனத்தை (தேரை) ஒரு கையில் லகானும், மறு கையில் சாட்டையுமாகக் கொண்டு செலுத்துவார்.

இந்த உண்மையைத்தான் ஸ்ரீ கிருஷ்ணர், தன்னைச் சரணடைந்து உதவி கேட்ட அர்ச்சுனனுக்குத் தானே தேராட்டியாக இருந்து பணிபுரிவதாகக் கூறியிருக்கின்றாh;. சரணாகதியின் பெருமை புலப்படுகின்றதல்லவா!

இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உன்னிடமுள்ள சிறப்பு அம்சங்கள் எவையோ அவையெல்லாம் நானே! என்று கிருஷ்ணர் அறிக்கை விட்டபின் , நம்மிடம் தற்பெருமை இருக்குமா? “நான்” என்னும் அகந்தை இருக்குமா? தந்தவர் அவர்! என்ற எண்ணத்துடன் செயல்பட்டால், கர்மா ஏறுமா?

வாழ்க்கையில் கர்மாவை அனுபவிப்பதற்காகப் பிரச்னைக்குள் போக வேண்டியிருக்கிறது. இருந்த போதிலும், இவற்றையெல்லாம் நீ தான் செய்கிறாய்! என்ற தெளிவு புத்தியில் ஏற்பட்ட பிறகு, வருவது எது என்றாலும் அவற்றை ஏற்றுச் சரியான விதத்தில் தீர்வு காண முற்படுகின்ற மனப்போக்கு எழ வேண்டும். அப்படி அந்தப் பிரச்னையை ஏற்கின்றபோது “தண்ணீருக்குள் மிகச் சுலபமாக இழுபடுகின்ற அம்மி” போல மிக இலேசாக அது தீர்ந்துவிடுகின்றது. கருவி நான், என்னை இயக்குபவர் அந்தப் பரம்பொருளே! என்பதை நன்றாகத் திரும்பத் திரும்ப சிந்தித்து மனதில் பதித்துக்கொள்வதோடு, இங்கு எல்லாமே அவன் தான்! என்னிடம் எதிர்த்து நிற்பதும் நானே! என்ற உண்மையையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும். இந்த முயற்சியால் வாழ்க்கை சிறக்கும்.

விபூதி யோகம் நிறைவு

விஸ்வரூப தரிசனம் – அத்தியாயம் 11

மிக மிக அற்புதமான அத்தியாயத்திற்குள் நாம் இப்பொழுது நுழைகின்றோம். எதையெதையோ பெருமையாக நினைத்துக்கொண்டு மண்டை வீங்கிக் கனத்து அகந்தையுடன் செருக்குற்றுத் திரிந்துகொண்டு வாழ்கின்ற நாம், உண்மையில் ஒன்றுமே இல்லை என்ற சத்தியத்தை சுள்ளென்று, உரைக்கின்ற அத்தியாயம் இது. இங்கு எல்லாம் நானே! என்பதை மீண்டும் அந்தப் பரப்பிரம்மம் பளாரென்று கன்னத்தில் அறைந்து புரிய வைக்கின்றது. இதை உள்ளுணர்வுடன் ஒன்றுகலந்த நிலையில் இருந்து படித்துப் பார்த்து நம் நிலை உணர்ந்து, பொய் களைந்து வாழ முற்படுவோம். பரிசுத்தமான பக்த நெறியில் ஈடுபட்டுப் பரமனை அடைவோம்.

வித்தைகளில் நான் ஆத்ம வித்தையாக இருக்கிறேன்! என்று விபூதியோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனனிடம் கூறினார். இப்படிப்பட்ட இந்த ஆத்ம வித்தையை அறியும் பயிற்சியில் ஈடுபட்டுக் குருவினது ஞான உபதேசத்தைக் கேட்பதன் மூலம் தங்களைப் பற்றிய உண்மைகளை அறிபவர்கள் ஆன்ம சாதகர்கள். தானல்லாதவை எவை என்பதை இவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டு, நான் இறை சொரூபம்! நான் என்பது அந்தப் பரம்பொருளே! என்று சத்தியத்தில் ஒன்றுகின்றபோது, எனக்குள் அணுவிற்கணுவாய், உயிர்சக்தியில் இருக்கின்ற அது தான் இந்தப் பிரபஞ்சப் பேருருவாகவும் விரிந்து திகழ்கின்றது! என்பதையும் புரிந்துகொள்கின்றனர்.

இப்படி இந்த ஒருமையை மீண்டும் பன்மையாகப் பார்ப்பது தான் விசுவரூப தரிசனம். இதைப் பார்ப்பதற்கு அறிவுக் கண் வேண்டும். தத்துவார்த்தக் கண் வேண்டும். வெளிமுகமாக அலைந்து திரியும் புலன்களை அடக்கி ஆத்மாவை நோக்கி உள் முகமாகக் கவனத்தைத் திருப்பித் தொடர்ந்து அந்த ஆத்மாவே நான் என்னும் தியானத்தில் மூழ்கி உள்ளுணர்வில் கலந்தால் தான் இந்த ஞானக்கண் திறக்கும்.

உலக உயிரினங்களின் கண்களுக்கெல்லாம் ஒளி தருகின்ற தெய்வீகக் கண்கள் சூரியனும், சந்திரனும். பிரம்மத்தின் கண்களாக இவை திகழ்கின்றன. பகலில் சூரியனும் இரவில் சந்திரனும் இவையன்றி அக்கினியும் நமது கண்களுக்கு ஒளியைத் தருகின்றன. இவற்றின் துணையின்றி நம்மால் பொருட்களைப் பார்க்க முடியாது. ஒரு பொருளை வெறுமனே பார்ப்பதால் அதன் உட்பொருள் விளங்குவதில்லை. உள்ளொளியாகிய அறிவுக் கண்ணால் ஆராய்கின்றபோது தான் அதன் உண்மைத் தன்மை புலப்படும். இதைத்தான் நம் முன்னோர் ஞான திருஷ்டி என்றனர். வியாச மாமுனிவர் தம் ஞானதிருஷ்டியால் தான் நமக்கு அளவற்ற ஞானப் பொக்கிஷங்களைத் தேடி எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s