மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -30

மரண காலத்தில் இறைவனையே இடைவிடாது ஜபித்து அந்தப் பரமாத்மாவையே பற்றியிருக்கின்ற உணர்வில் உயிரை விடுபவர்களுக்கு மறு பிறப்பில்லை. மற்ற அனைத்து வகையான ஜீவன்களும் பிறக்க வேண்டியவைதான். பரவெளியில் பிரம்மலோகம் வரை பலவகையான உலகங்கள் சூட்சுமமான விதத்தில் இருக்கின்றன. அவையெல்லாம் மறு பிறப்பிற்குரிய ஜீவன்களுக்கு உரியவை. மரணத்திற்குப் பின் தாம் செய்த கர்மப் பலன்களுக்கு ஏற்ப அந்த உயிர்கள் தமக்கேற்ற உலகங்களுக்குச் சென்று அங்கு தங்கிப் பலன்களை அனுபவித்துவிட்டுப் பிறகு மீண்டும் பூமியில் பிறக்கின்றன. பூமியில் பிறந்தவர்கள் எவ்வாறு உயர் உலகங்களைச் சென்று சேர்கின்றனரோ அதுபோலவே பிரம்ம லோகம், சந்திரலோகம், இந்திரலோகம் போன்ற இடங்களிலிருந்து மீண்டும் பூமிக்குத் திரும்ப வருகின்றனர்.

இந்த இடத்தில் இந்தப் பிரபஞ்ச இயக்கம் எவ்வித காலக்கணக்கின்படி தோன்றி சுழன்று முடிவுக்கு வருகிறது என்பதையும், எப்பொழுது மகா பிரளயம் ஏற்பட்டு பிரபஞ்சம் மறைந்து மீண்டும் தோன்றுகின்றது என்ற விவரத்தையும் சற்று விளக்க முற்பட்டிருக்கின்றேன். இது நான் படித்ததில்; அறிந்ததே அன்றி வேறில்லை. மேலும் ஈடு இணையற்றதான நமது சனாதன தர்மம் எவ்வளவு ஆழமாக இந்தப் பிரபஞ்ச ரகசியத்தை ஆராய்ந்திருக்கிறது என்னும் அதன் உயர்வுத் தன்மையை இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

அன்பர்களே, மதம் மாறி உயிர் வாழ நினைப்பதை விட, பிறந்த மதத்தின் பெருமையை அறிந்து அதன் பெருமையை மதித்துப் போற்றி தர்மவழியில் வாழப் பழக வேண்டும். வேற்று மதத்தினர் நம்மைப்பற்றி இழிவாகப் பேசுகின்ற விஷயங்கள் எல்லாம் உண்மையில் இழிவானவையல்ல. இறை சக்தியுடன் உள்ளுணர்வால் ஆழமாகத் தொடர்புகொண்ட நம் முன்னோர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எழுதி வைத்து விட்டுச் சென்ற அருமையான அறிவியல் உண்மைகள் இவை. இன்று நவீன விஞ்ஞானிகள் ஒவ்வொன்றாகக் கண்டு பிடிக்கின்ற பிரபஞ்ச உண்மைகள் எல்லாம் நம் வேதங்களில், புராணங்களில் என்றோ மிக விரிவாக வெளிப்படையாக எழுதி வைக்கப்பட்டுவிட்டன. எமது குரு சொல்வார், உண்மை எப்போதும் இருக்கிறது. அதை மனிதன் இப்போதுதான் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றான் என்று. விஞ்ஞான உலகம் எவ்வளவு விந்தைகளைக் கண்டு பிடித்து நம்மை வியக்க வைத்தாலும், ஆன்மீக உலகம் கண்டு சொன்னவையில் ஆயிரத்தில் ஒன்று என்ற விதத்தில் தான் அவை இருக்கின்றன என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டு நம் முன்னோர்களுக்குத் தலை வணங்க வேண்டும். நம் பெருமையும் உயர்வும் நமக்குத் தெரியாமல் நமக்குள் நாமே சண்டையிட்டு இழிவுபடுத்திக்கொண்;டு உறுதியற்ற உண்மைகளைக் கொண்ட மற்றவரைப் பெரிதாக மதிக்கின்றோம். வியக்கின்றோம். இதைத்தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொன்னார்களோ?

மேலும் இன்றைய நிலமை என்னவென்றால் நமது வேத உண்மைகளை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தம்மோடு சேர்த்துத் தமதாகப் பிரச்சாரம் செய்து இந்து மதத்தை அழிக்கவும் பலவிதமான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சரி, நண்பர்களே! இது சற்று உணர்ச்சிகரமான விஷயம். இதைப் பிரம்மம் பார்த்துக்கொள்ளும். பிற மதமும் நமதே என்பது நம் கொள்கையாக இருக்கட்டும். பாருங்களேன்! பிரபஞ்ச ரகசியக் கணக்கை வெளியிட முற்படும்போதே மாயை எவ்வளவு பலமாகக் குறுக்கிடுகிறது என்று? நாம் கண்ணனின் கரம்பற்றி அவர் வழி சென்று உண்மையை அறியலாம், வாருங்கள்!

பரமாத்மாவின் விருப்பத்திற்கிணங்க உயிர்களைப் படைப்பவரான பிரம்மாவிற்கு ஆயிரம் யுகங்கள் என்பது ஒரு பகல், அதுபோன்றே ஆயிரம் யுகங்கள் என்பது ஓர் இரவு. ஜட உலகின் வாழ்வு, அதாவது இந்தப் பிரபஞ்ச வாழ்வு ஓர் எல்லைக்குட்பட்டது. கல்பங்கள் என்னும் சுழற்சியில் அது காலங்களாகக் கணக்கிடப்படுகின்றது. (கல்பகோடி வருடங்கள் என்னும் சொல் வழக்கை நினைவு கூர்ந்தால் இது விளங்கும்.)

ஆயிரம் யுகம் என்பது ஒரு கல்பம். அது பிரம்மாவிற்கு ஒரு பகல். அந்த ஒரு பகல் என்பதுதான் நமக்கு சத்ய, திரேதா, துவாபர, கலி என்னும் நான்கு யுகங்களாகும். பிரபஞ்ச ஆரம்பத்தில் வருகின்ற சத்ய யுகம் 17,28,000 வருடங்கள் நீடிக்கும். இந்த சத்ய யுகம் நற்குணம், அறிவு, தர்மம் இவற்றைக் கொண்டதாக, அறியாமையும், தீய குணமும் சற்றும் இல்லாததாக அமைந்திருக்கும்.

இரண்டாவதாக வருகின்ற திரேதா யுகத்தில்தான் தீய குணங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. இந்த யுகம் 12,96,000 வருடங்கள் வரை நீடிக்கும். மூன்றாவதான துவாபர யுகம் 8,64,000 வருடங்கள் கொண்டது. இந்தத் துவாபர யுகத்தில் குண நலன்கள் மேலும் சீரழிகின்றன. தீய குணங்கள் மேலோங்குகின்றன. இறுதியாக வருகின்ற கலியுகத்தைத் தான் நாம் கடந்த 5000 வருடங்களாக அனுபவித்து வருகின்றோம்.

இந்தக் கலியுகத்தில் அறியாமை, சிரமம், அதர்மம், பாவங்கள் ஆகியவை ஏராளம். நற்குணங்கள் ஏறக்குறைய அழிந்தே போய்விட்டிருக்கின்றன. இந்த யுகம் 4,32,000 வருடங்கள் நீடிக்கும். இந்தக் கலியுகத்தில் மேலும் மேலும் பாவங்கள் அதிகரித்து, எல்லை மீறிப்போய்விடுமாதலால், இறுதியில் பரமாத்மா தானே கல்கி அவதாரமாக வந்து துஷ்டர்களை அழித்துப் பக்தர்களைக் காத்து, மீண்டும் ஒரு சத்ய யுகத்தைத் துவங்குவார்.

இவ்வாறு மீண்டும் யுகங்களின் சுழற்சி தொடங்கும். இந்த நான்கு யுகங்கள் திரும்பத் திரும்ப ஆயிரம் முறை வந்து சென்றால் அந்தக் கால அளவுதான் படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கு ஒரு பகல். இதுபோல நீண்ட இரவும் உண்டு. பிரம்மாவின் பகல் பொழுது ஆரம்பமாகும் சமயம் அவரது சூட்சும சரீரத்திலிருந்து எல்லாப் பிராணிகளும் வெளிப்படுகின்றன. பிரம்மாவின் இரவு தொடங்கும்போது அவரது சூட்சும சரீரத்தில் எல்லாப் பிராணிகளும் ஒடுங்கி விடுகின்றன. இப்படி வருகின்ற ஆயிரம் யுகங்கள் கொண்ட ஒரு பகலும், ஆயிரம் யுகங்கள் கொண்ட ஓர் இரவும் சேர்ந்த நூறு வருடங்கள் வரை பிரம்மா வாழ்ந்து பின் இறக்கிறார். இப்படி இந்த நூறு வருடங்கள், இவ்வுலகக் கணக்கின்படி முந்நூறு ஆயிரம் கோடி வருடங்களுக்கு மேல் ஆகின்றன. இதிலிருந்து பிரம்மாவின் வாழ்நாள் முடிவில்லாததும் வினோதமானதாகவும் தோன்றினாலும் கூட, பரப்பிரம்ம ஸ்வரூபமாகிய பரமாத்மாவுடன் இதனை ஒப்பிடுகின்றபோது அந்த நிலையில் இது ஒர் மின்னல் போன்று மிகச் சிறிது நேரமே ஆகின்றது. ( நன்றி: “பகவத்கீதை:உண்மையுருவில்”).

அர்ச்சுனனிடம் பிரம்ம தத்துவம் பற்றியும் தன்னை அடைவதற்கான வழியைப் பற்றியும் சுட்டிக்காட்டிய பரந்தாமன் அந்த இரண்டுவழிகளை பற்றி இந்த இடத்தில் விளக்கமாக எடுத்துரைக்கின்றார். “எந்த மார்க்கத்தில் ஒளிமயமான அக்னி, பகல், வளர்பிறை (சுக்லபட்சம்) உத்தராயண புண்ணியகாலம் ( தை மாதம் முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம்) இவற்றுடன் தொடர்புள்ள தேவதைகள் இருக்கிறார்களோ, அப்படிப்பட்ட இந்த மார்க்கத்தில் உடல் நீத்து இவ்வுலகைவிட்டுச் செல்லும் பிரம்மஞானிகள் மறுபிறவி இல்லாத சாசுவதமான நிலையை அடைந்து பிரம்மத்திடம் சேர்ந்து விடுகின்றனர்.”

“எந்த மார்க்கத்தில் புகை, இரவு, தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) தட்சிணாயன புண்ணியகாலத்த்pல் (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை) அவற்றிற்குரிய அதிதேவதைகள் உள்ளனவோ, அந்தப் பாதையில் செல்லும் ஆசாபாசம் கொண்ட மனிதர்கள் சுவர்க்கம் முதலான உலகங்களுக்குச் சென்று சுகங்களை அனுபவித்தபிறகு திரும்பி வருகின்றனர்.”

இவைபற்றிய விபரங்களையெல்லாம் வேதங்களே சொல்லியிருக்கின்றன. அவற்றையே இங்குக் கண்ணன் தெளிவுபடுத்துகின்றார். நம் பிறப்பின் சிறப்பையும், அதன் உயர்வையும் நாம் புரிந்துகொண்டு நற்குணங்களுடன் நம்மை உணர்ந்தவர்களாய் வாழ்ந்து போவதற்கு இந்த விவரங்கள் எல்லாம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

நமது முன்னோர்களும், பெரியவர்களும் இந்த விபரங்களையெல்லாம் ஓரளவிற்காவது அடிப்படையாக அறிந்து வைத்திருந்ததால் தான் அவர்களது வாழ்க்கை முறை இறை பக்தியைச் சார்ந்ததாகவும், தர்ம வழியில் வாழ்கின்ற விதத்திலும், பிறரையும் மதித்துப் போற்றி அனுசரித்து வாழ்கின்ற அகந்தையில்லாத எளிமையான வாழ்க்கையாகவும் அமைந்திருந்தது. அது சிறப்பையும் தந்தது.

உங்களுக்குத் தெரியுமா? போன தலைமுறை வரையிலுமே கூட நம் பெரியவர்கள், அதாவது ஆன்மீக நெறிமுறையில் பக்திபூர்வமாகப் பற்றற்று வாழ்ந்தவர்கள், தங்கள் இறப்பைப்பற்றி முன்னரே அறிந்து வைத்திருந்தனர் என்பது! மகாபாரதத்தில் துரோணர், பீஷ்மர் போன்ற சான்றோர்களுக்குத் தங்கள் மரணம், அது நிகழும் காலம், நிகழும் விதம் போன்ற எல்லாமே தெரிந்திருந்தது.

ஏன், பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலும் கூட இத்தகைய தீர்க்கதரிசிகள் நம் சமூகத்தில் வாழ்ந்திருந்தார்கள். எனவே நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், வேதங்கள் சொல்லியபடி இவ்வுலகத்திலிருந்து நீங்கிச் செல்லும் வழிகள் இரண்டு. ஒன்று ஒளியின் வழி. மற்றது இருளில் செல்வது. ஒளியில் நீங்குபவன் மீண்டும் வருவதில்லை. இருளில் நீங்குபவன் மீண்டும் வருகிறான். ஆனால் இரண்டுமே நம் விருப்பப்படி அமைவதில்லை என்பதும் உண்மை.

இப்படி இந்த இரண்டு மார்க்கங்களைப் பற்றிய விபரங்களைக் குருவின் வாயிலாக நன்கு அறிந்துகொள்ளும் ஆன்ம சாதகர்கள் பிறகு இவ்வுலக வாழ்வில் மயங்கி ஈடுபடுவதில்லை. உலகியல் வாழ்வில் வாழ்கின்றபோதே எவ்விதப் பற்று, வெறுப்பு, ஒட்டுறவு என்று எதுவுமில்லாத நிலையில் இறைபக்தியிலேயே மனதைச் செலுத்தித் தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்ந்து வருகின்றனர்.

இப்படி ஆன்ம சாதனையில் ஈடுபட்டு இறைவனிடம் பக்தி செலுத்தி, செய்கின்ற செயல் அனைத்தையும் சேவையாகச் செய்பவர்களின் வாழ்வு தவம், யாகங்கள், தானங்கள், தத்துவங்கள் இவற்றிற்கெல்லாம் அப்பால் மேம்பட்ட உயர் உணர்வு நிலையில் அமைகின்றது. இறுதியில் அவர்கள் இருள் பாதையை விலக்கி, ஒளிப்பாதையில் குரு கிருபையாலும், இறையருளாலும் பயணித்து ஆதி நிலையாகிய பரமாத்மாவை அடைகின்றனர்.

இதுவரை கண்ணன் கீதையாக உரைத்த பகுதி அஷரப் பிரம்மயோகம் என்னும் எட்டாவது யோகமாகும். இந்தப் பகுதி முடிந்த இந்நிலையில் இதனை மீண்டும் ஒரு முறை முழுமையாக திரும்பப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும்போதுதான் கண்ணன் நமக்கு அளிக்கின்ற ஓர் உறுதிமொழி இதில் ஒளிந்திருக்கின்ற ரகசியம் தெரியவரும். அது இனிவரும் நம் வாழ்க்கைக்கு உதவும். சரிதானே!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s