மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -29“இறக்கும் தருவாயில் பிராணனைப் புருவ மத்தியில் நிறுத்தி வைத்து ஒளிமயமான என்னை தியானிப்பவன் என்னையே வந்தடைகின்றான். எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனதை உள்ளத்தில் நிறுத்தி உயிரைத் தலையின் உச்சியில் நிலை நிறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று, ஓம் என்ற ஒற்றைப் பிரம்ம எழுத்தை ஜபித்துக் கொண்டு என்னையே துதித்துக் கொண்டிருக்கும் நிலையில் உடலைத் துறப்பவன், பரமகதி பெறுகின்றான்”

“என்னைத் தவிர வேறு எந்த ஒன்றிலும் தன் சித்தத்தைச் செலுத்தாத பக்தன் நித்திய நிரந்தரமான என்னையே சிந்தித்து வாழ்வதால், என்னிடமே எப்போதும் ஈடுபட்டிருக்கின்ற இந்த யோகிக்கு நான் எளிதில் கிட்டுகிறேன்.”

“இப்படி எந்த மகாத்மாக்கள் என்னிடம் பேரன்பு கொண்டு என்னையே புகலாகக் கொண்டு என்னோடு இணைகிறார்களோ அவர்களுக்கு அழிவுள்ளதும், துயரங்களுக்கு இருப்பிடமானதுமான மறுபிறவி ஏற்படுவதில்லை!” என்றெல்லாம் ஸ்ரீ கிருஷ்ணர் அழியாத பிரம்ம தத்துவத்தின் சிறப்பையும், அதைத் தானாக அறிவதனால் உண்டாகும் நன்மையையும் அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கின்றார். இந்நிலையில் அர்ச்சுனன் அத்தகைய யோகத்தைச் சாராத ஜீவனின் நிலை என்ன? என்று வினவுகின்றான்.

“என்னில் சித்தத்தை வைக்காமல் உலக நினைவுகளுடன் ஆசாபாசங்களுடன் உடலை விட்டுப் பிரிகின்ற ஜீவன் என்னை அடையாமல் தங்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப வேறு வேறு உலகங்களை அடைந்து பிறகு மீண்டும் மழை மூலமாக பூமியை அடைந்து பிறக்கின்றன.”

ஜீவன் என்னென்ன ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமற் போனதோ அதற்குரிய பிறப்பையே அவை அடைகின்றன. உடலின் மிருக இச்சையைத் தீர்க்கின்ற அந்த வாழ்க்கைக்காகக் கீழ் மட்ட நிலைப் பிறப்பிற்கே போய்விடும். இப்படிப் புலனின்பங்களில் ஆசை இருக்கும் மட்டும் பிறப்பு இருந்துதான் தீரும். மாறி மாறி, மாறி மாறிப் பிறந்து இறக்கத் தான் வேண்டும்.”

இந்த உண்மையை அறிந்து, ஏற்பட்ட சிந்தனை மாற்றத்தால் நான் அவன் என்பதையே தொடர்ந்து தியானித்துக் கொண்டிருந்தால் இறக்கும் தருவாயில் நமக்கு இயல்பாகவே அந்த இறை சிந்தனை ஏற்பட்டு, அவனையே அடைந்து விடுவோம். இதை அறிந்தவராய்த்தான் நம் முன்னோர், நான் மறக்கினும் என் நா மறக்காத நாமம் நமசிவாயவே! என்று சொல்லியிருக்கின்றனர். மூச்சுக் காற்றின் ஓட்டத்தையே ஸோஹம்! என்ற ஒலியாகக் கேட்கப் பழகி நான் அவன்! என்ற உணர்வைத் தமக்குள் உருவேற்றியிருக்கின்றனர். இவ்வாறு மிகப்பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

ஆயிரம் சிக்கல்களுடன் வாழ்ந்த போதும் தெய்வீக உணர்விலேயே தொடர்ந்து சிந்தையைச் செலுத்தியிருப்பவன் சாதனை படைக்கிறான். தொடர்ந்து அந்தப் பரம்பொருளைத் தியானிப்பவருக்கு ஒரு தனி சக்தி உருவாகி மனவலிமை அதிகரிக்கும். இதுவரை அடையாளம் காணப்படாத ஒரு சூட்சும சக்தி நமக்குள் தியானத்தால் திறக்கப்படும். தெய்வீக சக்தியான அது அறிவின் ஒரு பகுதியாக விரிந்து ஒளிவீசி வழிகாட்டும்.

நம் இந்து மதத்தில் மிகச் சிறப்பான இடத்தில் வைத்துப் போற்றப்படுகின்ற ஓம் என்னும் பிரணவ ஒலி உயிர் சக்தியாக, சுத்த சைதன்யமாக நம் உள்ளே நிற்கிறது. மூல மந்திரமாக அந்த ஒலியைப் போற்றி வழிபடுகின்றோம் நாம். அந்த ஓம் என்னும் உயிர் சக்தியானது நமது கர்மப்பதிவுகளுக்கு ஏற்றபடி கர்மப்பதிவின் வழியாகப் புத்தியாக, மனமாகப், புலன்களாக வெளிப்படுகின்றது.

உடல், மனம், புத்தியோடு கலந்து நிற்கின்ற நிலையில் இந்த ஒலி நமக்குப் புலப்படாது. இவை எல்லாவற்றிலிருந்தும் விலகி இவை எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு சுத்த சைதன்மாகிய இந்த ஓம்காரத்துடன் இணைய வேண்டும். இதற்குத் தியானம் ஒன்றே வழி. நாம் அனைத்தையும் கடந்து அதற்கு அப்பாலும் சென்று தியானத்தில் அதை அணுகுகின்றபோது, ஓம் என்ற அந்தப் பிரணவ ஒலி நமக்குள் ஒலிப்பதைக் கேட்க முடியும். அகமாகிய வெளியிலே ஓங்கார நாதம் அலையலையாக எழும். இந்த இடத்தில் படிப்பதை சற்றே நிறுத்திக் கண்களை மூடி, உள்முகமாக உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். தியானம் தானாக முகிழ்க்கின்ற தருணம் இது. உள்ளே நிறைந்திருக்கின்ற அமைதியை இயன்ற மட்டிலும் அனுபவியுங்கள். பிறகு படிப்பதைத் தொடரலாம்.

நம் உள்ளத்தினுள்ளே மூலமாக இருந்து அந்தப் பரப்பிரம்மம் ஒலியாகவும் ஒளியாகவும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. முழு அர்ப்பணிப்புடன் அதனை அணுகுகின்றவர்கள் ஒளியைத் தரிசிக்கலாம். ஓங்கார ஒலியைக் கேட்கலாம். இதற்கு நாம் அல்லாதன எல்லாம் அடங்கி மௌனத்தில் ஆழ்ந்து விட வேண்டும். அந்த மௌனத்தில் தான் இதைப் பார்க்கவும் கேட்கவும் முடியும். அதனோடு ஐக்கியமாகி இருக்கின்ற நிலை இது.

இந்த நிலையை அடைவதற்குரிய வழியையே தான் எடுத்துக் கூறுவதாகக் கிருஷ்ணர் அர்ச்சுனனிடம் கூறுகின்றார்.

“பார்த்தா! என்னிடம் தீவிர ஈடுபாடுகொண்டு, என்னையே புகலாகக்கொண்டு என்னைப் போற்றி வருபவர்கள் நிச்சயம் என்னையே வந்து சேருகின்றனர். அதற்கான வழிமுறைகளையும் நானே எடுத்துக் கூறுவேன். அதை அறிந்த பிறகு உனக்கு இனி அறிய வேண்டியது என்று வேறு எதுவும் இருக்காது.”

இப்படி கிருஷ்ணர் கூறியதும் அர்ச்சுனனுக்கு மீண்டும் ஒரு மனக் குழப்பம் ஏற்பட்டது. உடனே அவன், அப்படியானால் ஏன் எல்லா மனிதர்களும் உங்களைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்வதில்லை? என்று கேட்கிறான்.

இதற்குரிய பதிலைத் தான் இப்போது நாம் யோசிக்க வேண்டும். நமக்குள்ளேயே ஒளிந்திருப்பதான இந்த ரகசியத்தை நாம் முயன்றால் தான் அறிந்து கொள்ள முடியும். நாம் பிறப்பதே இந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ளத் தான். ஆனால் மாயை, அறியாமை என்னும் ரூபத்தில் திரையாக நின்று நம்மைத் தடுக்கிறது. கர்மா பின்னால் நின்று ஆட்டிப் படைக்கின்றது. கர்மப் பிணைப்பில் ஏற்படும் ஆசா பாசங்களிலும் மாயையினால் போடப்படுகின்ற அறியாமைத் தடுப்பிலும் சிக்கித் தடுமாறி, வாழ்க்கையை நாமே துன்பமயமாக்கிக் கொள்ளும்படி ஆகிவிடுகின்றது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த உலகில் தாமே யோக சாதனையில் ஈடுபாடு கொண்டவர்கள் மிக மிகக் குறைவு. மனிதர்களிடையே இதற்கான முயற்சி குறைவு. வெளி விவகார சுகங்களில் ஈடுபடவே மனிதன் விரும்புகின்றான். ஆயிரத்தில் ஒருவர் தான் தன்னை அறிதலாகிய ஆத்ம வித்தையைப் பயில முயற்சி செய்கின்றார். அவர்களிலும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடும் சாதகரே தத்துவ ஞானத்தின் மூலம் பிரம்மமாகிய கிருஷ்ணரைப்பற்றி அறிவதாக பகவான் அர்ச்சுனனிடம் கூறுகின்றார். இந்த இடத்தில் பிரம்மம் எத்தகையது என்பது பற்றிய விளக்கம் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து வெளிப்படுகின்றது.

எந்த விதமான குண இயல்போ, எந்த விதமான உருவமோ இல்லாத, அழிவற்றதாகிய பரமாத்மாவைத் தான் பிரம்மம் என்கிறோம். வரையறைகளுக்கும், காலத்திற்கும் உட்பட்ட படைப்பின் உள்ளே இருப்பதான அதே பிரம்ம சக்தியை ஜீவாத்மா என்கிறோம். அதாவது பரப்பிரம்மத்தின் ஒரு துளி உயிராக, உடலாகப் பிறப்பெடுத்து வெளிப்பட்டிருக்கிறது.

உடனே அர்ச்சுனன் நமக்கு மிக அவசியமாகத் தெரிய வேண்டிய ஒன்றைப்பற்றிக் கிருஷ்ணரிடம் கேட்கின்றான். “கர்மாவால்தான் பிறவி தொடர்கிறது என்கிறீர்களே! இந்தக் கர்மாவைப்பற்றி சொல்லுங்கள்!”.

பரப்பிரம்மத்தின் விருப்பத்தால் பிறவி எடுக்கின்ற சகல ஜீவராசிகளும் மகா பிரளய காலத்தில் அவை செய்த வினைப் பயன்களுடன் பரமாத்மாவாகிய என்னுள் அடங்கி விடுவார்கள். பிறகு மீண்டும் சிருஷ்டி தொடங்கும் காலத்தில் அதே வினைப் பயன்களுடன் உடல்களோடு தொடர்பு படுத்தி ஜீவராசிகளாக உடலெடுத்துப் பிறக்கின்றன” என்று கூறிய கிருஷ்ணர், இதன்பின் மேலும் பல சூட்சுமமான படைப்பு விஷயங்களையும் எடுத்துரைக்கின்றார்.

இதுவரை தன்னைப் போலவே கிருஷ்ணரை நினைத்துத் தனக்குத் தெரியாத விஷயங்களைப்பற்றி அவரிடம் கேட்டு அறிவைப் பெறுவதாக எண்ணியிருந்த அர்ச்சுனன், இந்த அத்தியாயத்திலிருந்து அவரைப் பரமாத்ம பகவத் ஸ்வரூபமாகவே பார்க்கத் துவங்குகின்றான். அதனால் அவனிடம் பணிவும் பக்தியும் பெருக்கெடுக்கின்றன. அதோடு இனி வரும் விஷயங்களைப் பற்றியெல்லாம் ஒரு குருவே மிகத் தெளிவாக, சிஷ்யனின் ஆத்மாவில் கலக்கும்படியான அருளுடன் எடுத்துரைக்க முடியும். மிக மிக அற்ப சக்தியே கொண்டவளான நான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதையில் கூறியதையே எடுத்து குரு அருளால் விவரிக்க முற்படுகின்றேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s